Site icon சக்கரம்

ஏங்கெல்ஸ் எனும் பேராசான்!

German philosopher and economist Friedrich Engels, a founder of Marxism. Germany, 1845 (Photo by Mondadori PortfolioMondadori via Getty Images)

– அ. அன்வர் உசேன்

காரல் மார்க்சும் பிரெடரிக் ஏங்கெல்சும் பொதுவுடமை தத்துவம் மற்றும் இயக்கத்தின் இருபெரும் ஆசான்கள். மார்க்சின் பெயரை உச்சரிக்கும் போது ஏங்கெல்சின் பெயரும் இணைந்துதான் இருக்கும். அதேபோல ஏங்கெல்சின்பெயரை உச்சரிக்கும் பொழுது காரல் மார்க்சின் பெயரும் இணைந்திருக்கும். சித்தாந்தம் மற்றும் அரசியலில் இரு பெரும் ஆசான்களுக்கும் ஒரே மாதிரியான சிந்தனை இருந்தாலும், நடைமுறை வாழ்வில் சில அம்சங்களில் மார்க்சிடமிருந்து ஏங்கெல்ஸ் வேறுபட்டிருந்தார்.

அந்த காலத்தில் இங்கிலாந்தில் பிரபலமானவர்களிடம் சில கேள்விகளை எழுப்பி பதில்களை வாங்கி ஒப்புதல் வாக்குமூலம் என்ற வடிவத்தில் பதிவு செய்வது வழக்கமாக இருந்தது. உங்களது முதன்மை குணாதிசயம் என்ன என்ற கேள்விக்கு காரல் மார்க்ஸ் “நோக்கத்தில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்துவது” என பதில் தந்தார். இதே கேள்விக்கு ஏங்கெல்ஸ் “ஒவ்வொன்றையும் பாதி அளவு தெரிந்து கொள்வது” என்ற பதிலை அளித்தார். எதையும் எளிதாகவும் நகைச்சுவையாகவும் எடுத்துக்கொள்வது ஏங்கெல்சின் அணுகுமுறையாக இருந்தது.

வாழ்க்கை பற்றிய அணுகுமுறை

ஏங்கெல்ஸ் இருக்குமிடம் எப்பொழுதும் கலகலப்பாகவும் சிரிப்பும் நிறைந்து இருக்கும் என அவரது போராளி நண்பர்கள் பலரும் பதிவு செய்துள்ளனர்.ஏங்கெல்ஸ் கோபத்தை வெளிப்படுத்திய தருணங்கள் மிகவும் குறைவு. எப்பொழுதும் நிதானத்தை வெளிப்படுத்துவது அவரது நிலையான அணுகுமுறையாக இருந்துள்ளது. சில போர்களில் அவர் கலந்துகொண்ட போதிலும், போர்க்களத்தில் பதற்றமடையாமல் எதிரிகளுடன் போராடினார். மரணம் பற்றிய பயம் அவரிடம் சிறிது கூட இருந்திருக்கவில்லை என எலனோர் மார்க்ஸ் குறிப்பிடுகிறார்.

எந்த பின்னடைவும் ஏங்கெல்சிடம் சோர்வு அல்லது அவநம்பிக்கையை விளைவித்தது இல்லை. அவரது நகைச்சுவை உணர்வும் எதையும் எளிதாக எடுத்துக்கொள்ளும் பக்குவமும்தான் இறுதிக் காலத்தில் அவருக்கு ஏற்பட்ட தொண்டை புற்றுநோயின் வலியைக் கூட பெரிதாகப் பாதிக்காமல் தடுத்தது. வெற்றியின் பொழுது தலைக்கனம் கொள்ளாமல் இருப்பதும், தோல்வியின் பொழுது துவளாமல் இருப்பதும் ஏங்கெல்சின் வாழ்விலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடமாகும்.

இரண்டு வீடுகள்

மான்செஸ்டரில் ஏங்கெல்ஸ் தனது தந்தையின் பஞ்சாலையில் பணியாற்றிய பொழுது பல முதலாளித்துவ வட்ட மனிதர்களிடம் பழக வேண்டியிருந்தது. அவர்களில் பலருக்கு ஏங்கெல்ஸ் முதலாளித்துவத்தின் வீழ்ச்சிக்கு அயராது பணியாற்றுபவர் என்பது தெரியாது. அவரது அறிவு விசாலமும் திறமையும் பலரை வீடு தேடி வரவழைத்தது. அதேசமயத்தில் சாமுவேல் மூர், லெஸ்னர் போன்ற சோசலிசப் போராளிகளும் அவரதுவீட்டுக்கு வந்தனர். இதன் விளைவாக எந்த பாதகமான நிகழ்வும் உருவாகிவிடக்கூடாது என்பதற்காக ஏங்கெல்ஸ் இரண்டு வீடுகளை நிர்மாணித்தார்.

ஒன்று மான்செஸ்டர் நகரத்தின் மையத்தில்! அங்கு முதலாளித்துவ நண்பர்கள் வருகை புரிந்தனர். மற்றொரு வீடு நகரத்தின் வெளிப்புறத்தில் அமைந்தது. அங்குதான் போராளிகள் கூடினர். அது “சோசலிசப் பாசறை”என அழைக்கப்பட்டது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அங்கு பல சோசலிஸ்டுகள் கூடி, தொழிலாளர் வர்க்க இயக்கங்கள் குறித்தும் அரசியல் குறித்தும்நீண்ட விவாதங்கள் நடத்தினர்.

இங்கிலாந்தில் அகதியாக வந்தடைந்த எந்த சோசலிச போராளியும் அல்லது முற்போக்காளரும் ஏங்கெல்சின்வீட்டுக்கு வரலாம்; விவாதிக்கலாம். நடு இரவையும் தாண்டி நடக்கும் இந்த விவாதங்களின் போது அனைவருக்கும் உணவு மற்றும் பானங்கள் தொடர்ந்து பரிமாறப்பட்டுக் கொண்டேயிருக்கும். இத்தகைய விருந்துகள் ஏங்கெல்ஸ் லண்டனுக்குக் குடியேறிய பின்னரும் தொடர்ந்தன. ஜெர்மனியில் கம்யூனிஸ்ட் கட்சி தேர்தலில் போட்டியிடும் போதெல்லாம் தேர்தல் முடிவுகள் வெளிவரும் நாளன்று ஏங்கெல்ஸ் வீட்டில் போராளிகள் கூடுவர். கட்சிக்கு வெற்றி என்றாலும் கொண்டாட்டம், தோல்வி என்றாலும் கொண்டாட்டம்! வெற்றியும் தோல்வியும் சமமாகப் பாவிக்கப்பட வேண்டும் என்பது அவரது நிலைப்பாடாகும்.

பன்மொழி வித்தகர்

“ஏங்கெல்சின் வாய் 20 மொழிகளைப் பேசும்” என சர்வதேச தொழிலாளர் அமைப்பின் பிரதிநிதி நகைச்சுவையாகக் குறிப்பிட்டார். குறைந்தபட்சம் 12 மொழிகளில் பேச்சு மற்றும் எழுத்துத் திறமையை அவர் கொண்டிருந்தார். தனது 70வது வயதில் நோர்வே மொழியைக் கற்றுக்கொண்டார். ஒருமுறை மார்க்சின் மருமகன் பால் லாஃப்ரேயுடன் கடற்கரையில் நடந்து சென்றபோது, பிரேசில் இராணுவ உடை அணிந்த ஒரு உயரம் குறைந்த மனிதரிடம் ஸ்பானிய, போர்த்துகீசிய, ஆங்கில மொழிகளில் பேசிப் பார்த்தார், பதில் இல்லை.

இறுதியாக ஐரிஷ் மொழியில் விசாரித்தவுடன் அந்த மனிதர் கதறி அழுது தனது தாய்மொழியை நீண்ட நாட்களுக்குப் பிறகு கேட்பதாகக் கூறினார். மொழி மனிதர்களிடம் எத்தகைய தாக்கத்தை உருவாக்கும் என்பதற்கு இது சான்றாகும். கம்யூனிஸ்ட் போராளிகள் கற்றுக்கொள்ளும் ஒவ்வொரு மொழியும் அவர்கள் கையில் கிடைக்கும் கூடுதல் ஆயுதம் என்பது ஏங்கெல்சின் நம்பிக்கையாக இருந்தது. மனித குலம் உற்பத்தியில் உழைப்பைச் செலுத்திய பொழுது தமக்குள் தகவல் பரிமாறிக்கொள்ள உருவாக்கியதுதான் மொழி; எனவே மொழியின் அடிப்படை உழைப்பு என்பதே அவரது ஆய்வாகும்.

படைப்புரிமைக்கான தீர்வு

ஏங்கெல்சின் முதுமைக் காலத்தில், அவருக்கு புற்றுநோய் கண்டறியப்பட்ட பொழுது மார்க்ஸ்-ஏங்கெல்ஸ் படைப்பு உரிமை பற்றிய முரண்பாடு எழுந்தது. இரு பேராசான்களும் ஜெர்மனியைச் சேர்ந்தவர்கள் என்பதால் அந்த உரிமை ஜெர்மானிய கம்யூனிஸ்ட் கட்சிக்குத்தான் உண்டு என அதன் தலைவர் அகஸ்ட் பெபல் வாதிட்டார்.

இதனை எலனோர் மார்க்ஸ் ஏற்றுக்கொள்ளவில்லை. மார்க்சும் ஏங்கெல்சும் தம்மை உலக குடிமகன்கள் என அறிவித்துக் கொண்டனர். ஒருவேளை ஜெர்மனி சர்வாதிகாரத்தின் பிடியில் சிக்குண்டு ஆசான்களின் படைப்புகள் அழிக்கப்பட்டுவிட்டால் என்னாவது என்ற நியாயமான கேள்வியை எலனோர் எழுப்பினார். இந்த முரண்பாடுகளைத் தீர்க்க, காரல் மார்க்சின் பெயரில் உள்ள அனைத்து படைப்புகளும் எலனோருக்கும் அவரது தமக்கை லாவுராவுக்கும் சொந்தம் எனவும், தனது பெயரிலும் கூட்டுப் படைப்புகளுமானவை ஜெர்மன் கட்சிக்குசொந்தம் எனவும் ஏங்கெல்ஸ் உயில் எழுதி பிரச்சனையைச் சுமுகமாகத் தீர்த்துவைத்தார்.

மரணத்திற்குப் பிறகு தனது உடல் எரியூட்டப்பட வேண்டும் எனவும், சாம்பலை கடலில் கலக்க வேண்டும் எனவும் ஏங்கெல்ஸ் விரும்பினார். அதனை எலனோர் மார்க்சும் லெஸ்னரும் நிறைவேற்றினர். ஏங்கெல்ஸ் மறைந்தபொழுது “என்னுள் இருக்கும் ஒரு பகுதி இறந்துவிட்டது போல் நான் கருதினேன்” என அகஸ்ட் பெபல் கூறினார். உழைப்பாளிகளுக்காக தமது வாழ்வை அர்ப்பணித்தவர்கள்தான் எவ்வளவு துன்பங்கள் வந்தாலும் வாழ்வைஆழமாக நேசிக்க முடியும் என்பதை ஏங்கெல்சின் வாழ்வு நிலைநாட்டுகிறது.

ஓகஸ்ட் 5, 2026: தோழர் ஏங்கெல்சின் 131வது நினைவு தினம்

Exit mobile version