Site icon சக்கரம்

தேசிய மக்கள் சக்தியின் நவதாராளவாதத் திட்டங்களை முன்னெடுக்கவே 22A திருத்தம்

Pubudu Jayagoda, Education Secretary of Frontline Socialist Party (FSP)

தேசிய மக்கள் சக்தியின் நவதாராளவாதத் திட்டங்களை முன்னெடுக்கவே 22A திருத்தம் என முன்னிலை சோசலிசக் கட்சி தெரிவிப்பு

– ஊழியர் சேமலாப நிதியைப் பாதுகாக்கும் சட்டங்களை நீக்குவதற்கான திட்டம் முன்னெடுப்பு

– நெல் சந்தைப்படுத்தல் சபையைத் தனியார்மயப்படுத்தத் திட்டம்

– விவசாயக் காணிகளைப் பெருநிறுவனங்களின் வசம் ஒப்படைக்கத் திட்டம்

– எதிர்ப்புக் குரல்களை அடக்குவதற்குப் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்

அரசாங்கத்தின் நவதாராளவாதத் திட்டங்களுக்கு இடையூறாக இருக்கும் தடைகளை அகற்றுவதற்காகவே, அரசியலமைப்பின் 22A திருத்தத்தை எப்படியாவது நிறைவேற்ற அரசாங்கம் முனைப்புக் காட்டுவதாக முன்னிலை சோசலிசக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட (Pubudu Jayagoda) குற்றஞ்சாட்டியுள்ளார்.

கொழும்பு விஜேராம மாவத்தையில் ஓகஸ்ட் 23 ஆம் திகதி நடைபெற்ற கருத்தரங்குக்குப் பின்னர், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே ஜயகொட இவ்வாறு தெரிவித்தார்.

தற்போது தேங்கிக் கிடக்கும் வழக்குகளை முடிவுக்குக் கொண்டுவர 22A தேவை என்ற அரசாங்கத்தின் கூற்றுக்கு எந்தவித அடிப்படையும் இல்லை என்று வலியுறுத்திய ஜயகொட, ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் மேல் நீதிமன்றங்களிலும் நீதவான் நீதிமன்றங்களிலுமே விசாரிக்கப்படுகின்றன என்றார்.

உச்சநீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை மாற்றுவதால் அப்படியான வழக்குகளில் எந்தத் தாக்கமும் ஏற்படாது.

‘வழக்குகள் தாமதமாவதைத் தடுக்க வேண்டுமென்றால், நீதவான் நீதிமன்றங்கள், மாவட்ட நீதிமன்றங்கள், மேல் நீதிமன்றங்கள் ஆகியவற்றின் செயற்பாட்டுத் திறனை அதிகரிக்க வேண்டும். நிலுவையிலுள்ள வழக்குகளில் தொண்ணூற்றொன்பது வீதமானவை அந்த நீதிமன்றங்களில்தான் இருக்கின்றன. இந்த விடயங்களைச் சுட்டிக்காட்டும்போது, நீதிமன்றத் தாமதங்களை இல்லாமல் செய்வதற்கான ஒரு திட்டத்தின் ஒரு பகுதிதான் 22A என்று அரசாங்கம் சொல்கிறது. அந்த நடவடிக்கைகள் எல்லாவற்றிலும், ஓய்வுபெறும் வயதை மாற்றுவதற்கு மட்டும்தான் அரசியலமைப்புத் திருத்தம் தேவை. மற்ற எல்லா நடவடிக்கைகளையும் நீதித்துறை சேவைச் சட்டத்தைத் திருத்துவதன் மூலம் இலகுவாகச் செய்யலாம்.’

தொழிலாளர்கள் வரலாறு முழுக்கப் போராடிப் பெற்ற தொழில் உரிமைகளை இல்லாமல் செய்யும் வகையில், ‘ஒற்றை தொழில் சட்டம்’ (Single Labour Law) என்ற புதிய சட்டமூலத்தைக் கொண்டுவர அரசாங்கம் தயாராகி வருவதாக ஜயகொட கூறினார். ஊழியர் சேமலாப நிதியத்தின் நிர்வாகத்தில் பணக்காரப் பெருமுதலாளிகளையும் கொள்ளை இலாபம் ஈட்டுபவர்களையும் ஈடுபடுத்த உதவும் சட்டத் திருத்தமொன்றையும் அவர்கள் தயாரித்து வருகிறார்கள்.

விவசாயக் காணிகளைப் பெருநிறுவனங்களிடம் ஒப்படைத்து, விவசாயக் கூட்டுறவுச் சங்கங்களுக்குப் பதிலாக விவசாயக் கம்பனிகளை உருவாக்குவதோடு, நெல் சந்தைப்படுத்தல் சபையையும் தனியார்மயப்படுத்தும் நீண்டகால இலக்கை அடையவும் அரசாங்கம் முயற்சி செய்கிறது.

ஜயகொட மேலும் தெரிவித்தாவது: ‘புதிய கடற்றொழில் சட்டம் கடலைத் துண்டு துண்டாகப் பிரித்து, மீன்வளம் நிறைந்த பகுதிகளைப் பன்னாட்டு நிறுவனங்களுக்குக் குத்தகைக்கு கொடுத்து, உள்ளுர் மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்கும் வாய்ப்பைப் பறிக்கப் போகுது. இதற்கு இருக்கிற மிகப் பெரிய தடையே மீனவர்கள்தான். தரமற்ற பட்டங்களை வழங்கும் நிறுவனங்களுக்கு அரச அங்கீகாரத்தையும் சட்டபூர்வ அந்தஸ்தையும் கொடுப்பதற்காக, தர உறுதிப்பாடு மற்றும் அங்கீகார ஆணைக்குழுச் சட்டமொன்று தயாரிக்கப்படுகின்றது. மூவாயிரம் பாடசாலைகளை மூடி, பிள்ளைகளுடைய அடிப்படைக் கல்வி உரிமையைப் பறிக்கப் போகிறார்கள். அதைச் செய்வதற்கு, அரசின் ஒவ்வொரு தூணையும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும். வைத்தியசாலைகளின் ஆய்வுகூடச் சேவைகளைத் தனியார்மயப்படுத்துவது, அரச நிறுவனங்களை விற்பது, PSTA எனப்படும் நாட்டைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டம் (Protection of the State from Terrorism Act) போன்ற புதிய அடக்குமுறைச் சட்டங்களைக் கொண்டுவருவது, மக்களுடைய நிதியைப் பறிக்கும் புதிய கூட்டுறவுச் சட்டத்தைக் கொண்டுவருவது என்று இந்தப் பட்டியலை இன்னும் நீட்டிக்கலாம். இப்படிப் பல விடயங்கள் இருக்கின்றன. இவற்றையெல்லாம் நடைமுறைப்படுத்தத் தேவையான தன்னிச்சையான அதிகாரத்தை நிறைவேற்று அதிகாரத்தின் கைகளில் எடுத்துக்கொள்வதுதான் இந்த அரசியலமைப்புத் திருத்தத்தின் உண்மையான நோக்கம்.’

The Island, 24/08/2026

* முன்மொழியப்பட்ட இருபத்திரண்டாவது அரசியலமைப்புத் திருத்தம், உச்ச நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிக்கவுள்ளது.

* 22A திருத்தச் சட்டமூலம், உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயதை அறுபத்தைந்திலிருந்து அறுபத்தேழாகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயதை அறுபத்துமூன்றிலிருந்து அறுபத்தைந்தாகவும் அதிகரிக்கக் கோருகின்றது.

Exit mobile version