
சுதந்திரமான வர்த்தகம், உலகமயமாக்கல் மற்றும் சர்வதேச சட்டங்களைப் பற்றி உலக நாடுகளுக்கு வகுப்பெடுத்து வந்த அமெரிக்கா, இன்றுதனது சுயநலப் பொருளாதார நலன்களுக்காகச் சர்வதேச விதிகளைத் தவிடுபொடியாக்கி வருகிறது. அண்மையில் கனடா மற்றும் ஈரான்மீது டொனால்ட் ட்ரம்ப் எடுத்து வரும் ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளும் அச்சுறுத்தல்களும், உலகையே தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரத் துடிக்கும் “உலகச் சண்டியர்” போக்கைவெட்டவெளிச்சமாக்கியுள்ளன.
ஈரானுடன் தொடர்ந்து பொருளாதார மற்றும்வர்த்தகத் தொடர்பில் இருக்கும் எந்தவொரு நாடும் அல்லது அமைப்பும் அமெரிக்காவின் “இரண்டாம் நிலைத்தடைகளுக்கு” உள்ளாக நேரிடும் எனப் பகிரங்கமாக அச்சுறுத்துவது உலகளாவிய வர்த்தக சுதந்திரத்தைப் பறிப்பதாகும்.
ஐக்கிய நாடுகள் சபையின் அனுமதியின்றி, தனது உள்நாட்டுச் சட்டங்களைக் கொண்டு பிறநாடுகளை அச்சுறுத்துவதும், ஈரானுடன் வர்த்தகம் செய்வோரைத் தண்டிப்பதும் பன்னாட்டுச் சட்டங்களின்படி முற்றிலும் சட்டவிரோதமானது. ஒரு சுதந்திர நாடு யாருடன் வர்த்தகம் செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது அதன் சொந்த உரிமையாகும்.
ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியில் சுமார் 90சதவீதத்தைக் கொள்முதல் செய்யும் சீனா, “எங்கள்வர்த்தகம் சர்வதேச சட்ட திட்டங்களுக்கு உட்பட்டது; இதில் தலையிட அமெரிக்காவிற்கு உரிமையில்லை” என்று நேரடியாகப் பதிலடி கொடுத்துள்ளது. மேலும், தங்கள் மீது தடைகளை விதித்தால், அமெரிக்காவிற்குத் தேவையான முக்கிய ‘அரிதான கனிமங்களின்’ ஏற்றுமதியை முடக்குவோம் என்றும், நிதி மூலதனத்தை விலக்குவோம் என்றும் மறைமுக எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
சீனா தனது தேசிய நலனுக்காக அமெரிக்காவை எதிர்த்து நிற்கும் வேளையில், இந்தியா தனது இறையாண்மை சார்ந்த வெளியுறவுக் கொள்கையில் கடும் தடுமாற்றத்தைச் சந்தித்து வருகிறது.வரலாற்று ரீதியாக மலிவான விலையில் கச்சா எண்ணெய் வழங்கி வந்த ஈரானிடமிருந்து எண்ணெய் வாங்குவதை, அமெரிக்காவின் தடைகளுக்கு அஞ்சி, இந்தியா முற்றிலும் நிறுத்தியுள்ளது. மத்திய ஆசியாவிற்கான இந்தியாவின் நுழைவுவாயிலான ஈரானின் சபஹார் துறைமுகத் திட்டத்தில், அமெரிக்காவின் எதிர்ப்புக்கு அஞ்சி பின்வாங்குகிறது. இந்தியா தனது பணியாளர்களைச் சபஹாரிலிருந்து திரும்பப் பெற்று, 120 மில்லியன் டொலர் முதலீட்டை செலுத்தி, தனது பங்கை ஈரானிய நிறுவனத்திற்கு மாற்றுவதைப் பரிசீலிப்பது வெட்கக்கேடானது.
ஈரானைப் பணிய வைப்பதற்காக உலக நாடுகளைத் தனது அதிகார பலத்தால் அடிபணிய வைக்க நினைக்கும் அமெரிக்காவின் இந்த அராஜகப் போக்கை இந்தியா தீவிரமாகக் கண்டிக்க வேண்டும். சீனா போலத் தனது பொருளாதார மற்றும் எரிபொருள் தேவைகளில் தற்சார்பும் துணிச்சலும் காட்டி, அமெரிக்காவின் தன்னிச்சையான பொருளாதார ஆதிக்கத்திற்குப் பலியாகாமல் தனது தேசிய நலன்களை உறுதியுடன் பாதுகாக்க வேண்டியது இந்தியாவின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கடமையாகும்.

