
உலகெங்கிலும் பருவநிலையைத் தீர்மானிப்பதில் பசிபிக் பெருங்கடலின் வெப்பநிலை மாற்றங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இதில் ஏற்படும் எல் நினோ (El Niño) மற்றும் லா நினா (La Niña) நிகழ்வுகள் உலகளாவிய வானிலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. சமீபத்தில் ‘சயின்ஸ்’ (Science) ஆய்விதழில் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வறிக்கை, கடந்த 1000 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு எல் நினோ காலநிலைச் சுழற்சி தற்போது மிகத் தீவிரமடைந்துள்ளதை அதிர்ச்சியளிக்கும் தகவல்களுடன் வெளிப்படுத்தியுள்ளது.
கடல் நீரின் கடந்த கால வெப்பநிலை மாற்றங்களைக் துல்லியமாகக் கணக்கிட ஆய்வாளர்கள் பவளப் பாறைகளின் படிமங்களைப் பயன்படுத்துகின்றனர். இவ்வாறு பெறப்பட்ட சுமார் 1,000 ஆண்டுகாலப் பதிவுகளை ஆய்வு செய்தபோது, தொழில்புரட்சிக்கு முந்தைய கால கட்டத்தை விட தற்போதைய எல் நினோ தொடர்பான வெப்பநிலை மாற்றங்கள் மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
குறிப்பாக, எல் நினோ தெற்கு அலைவு (ENSO) எனப்படும் இந்த இயற்கைச் சுழற்சியின் மாறுபாடு, தொழில்புரட்சிக்கு முந்தைய நிலையை விட 36 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. இதில் பெரும்பாலான அதிதீவிர மாறுபாடுகள் கடந்த 40 ஆண்டுகளில் தான் நிகழ்ந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
பூமி வெப்பமயமாதல் அதிகரித்து வரும் அதே வேளையில், எல் நினோ நிகழ்வுகளின் வீரியமும் அதிகரித்துள்ளது.
வெப்பமான எல் நினோ மற்றும் குளிர்ந்த லா நினா ஆகிய இரு நிலைகளும் பசிபிக் பெருங்கடலைத் தாண்டி உலகின் பல்வேறு பகுதிகளில் மழைப்பொழிவு மற்றும் வெப்பநிலையைப் தலைகீழாக மாற்றுகின்றன.
இதன் காரணமாகப் பல நாடுகளில் கடுமையான வறட்சியும், சில பகுதிகளில் பேரழிவை ஏற்படுத்தும் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டு விவசாயம் மற்றும் உணவு உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்படுகிறது.
அமெரிக்காவின் தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாக மையம் (NOAA) வெளியிட்டுள்ள தகவலின்படி, பசிபிக் பெருங்கடலில் தற்போது புதிய எல் நினோ உருவாகி வருகிறது. மேலும், 2026-27 ஆம் ஆண்டின் இலையுதிர் மற்றும் குளிர்காலப் பருவங்களில் மிகவும் சக்திவாய்ந்த எல் நினோ நிகழ்வு ஏற்படுவதற்கு 90 சதவீதத்திற்கும் அதிகமான வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் வரவிருக்கும் அனைத்து எல் நினோக்களும் தீவிரமானதாகவே இருக்கும் என்று இந்த ஆய்வு உறுதியாகக் கூறாவிட்டாலும், பூமி வெப்பமயமாதலின் விளைவாக எல் நினோவின் மாறுபாடுகள் இயற்கையான வரம்பைக் கடந்து அபாய கட்டத்தை எட்டியுள்ளதை இந்த ஆய்வு உறுதிப்படுத்தியுள்ளது.

