Site icon சக்கரம்

நேபாள பேரழிவு: அதிகரிக்கும் இமயமலை அபாயங்கள்; பேரிடர்கள் இயற்கையா? செயற்கையா?

லோகேஷ் பார்த்திபன்

ஓகஸ்ட் 26 அன்று நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் ஏற்பட்ட பெருவெள்ளம், இமயமலையில் உருவாகிவரும் புதிய பேரிடர் அபாயங்களை மீண்டும் உலகின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளது. போத்தே கோஷி–திருசூலி ஆற்றுப்பகுதிகளில் ஏற்பட்ட இந்தப் பெருவெள்ளம் குடியிருப்புகள், சாலைகள், பாலங்கள், புனல்மின் நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புகளைக் கடுமையாகப் பாதித்தது. நேபாளம் மட்டுமின்றி திபெத் பகுதியிலும் இதன் தாக்கம் உணரப்பட்டது.

வழக்கமாக பெருவெள்ளம் என்றவுடன் பெருமழை அல்லது பனிப்பாறை ஏரி உடைப்பு போன்ற காரணங்களையே நாம் முதலில் நினைப்போம். ஆனால் இந்தப் பேரிடரை ஏற்படுத்தும் அளவுக்கு அப்பகுதியில் பெருமழை பெய்யவில்லை. முதலில் நிலநடுக்கம் காரணமாக இருக்கலாம் என்றும், பின்னர் பனிப்பாறை ஏரி உடைப்பு வெள்ளமாக இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்பட்டது. தற்போது கிடைத்துள்ள செயற்கைக்கோள் படங்கள் மற்றும் ஆய்வுகள், உயரமான மலைப்பகுதியில் ஏற்பட்ட மிகப்பெரிய பனி–பாறைச்சரிவே இந்தப் பேரிடரின் தொடக்கமாக இருந்திருக்கலாம் என்று சுட்டிக்காட்டுகின்றன.

உயரமான மலைப்பகுதியிலிருந்து சரிந்த பனி மற்றும் பாறைத் தொகுதி கீழ்நோக்கிப் பயணித்தபோது, அதன் பாதையில் இருந்த மண், பாறைகள், பனி, நீர் மற்றும் பிற சிதைவுப் பொருட்களையும் தன்னுடன் சேர்த்துக்கொண்டது. இதனால் அதன் அளவும் வேகமும் அதிகரித்து, இறுதியில் மிகப்பெரிய மண்–பாறைப் பெருக்காக மாறி லெண்டே கோலா வழியாக போத்தே கோஷி மற்றும் திருசூலி ஆறுகளை அடைந்தது.

உயரமான மலையில் தொடங்கிய ஒரு நிகழ்வு, சில மணி நேரங்களுக்குள் கீழே வாழ்ந்த மக்களையும் அங்கிருந்த கட்டமைப்புகளையும் தாக்கிய பேரிடராக மாறியது. இங்கு ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது. ஒரு பனி–பாறைச்சரிவை மனிதர்களால் தடுத்திருக்க முடியாமல் இருக்கலாம். ஆனால் அது மிகப்பெரிய மனிதப் பேரிடராக மாறுவதை நம்மால் குறைத்திருக்க முடியுமா? அதற்கான பதிலைத் தேட வேண்டுமென்றால், இமயமலையில் நாம் மேற்கொள்ளும் வளர்ச்சித் திட்டங்களையும் சேர்த்தே பார்க்க வேண்டும்.

இயற்கையாகவே நிலையற்ற இமயமலை

இமயமலை உலகின் இளம் மலைத்தொடர்களில் ஒன்று. சுமார் ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்தியக் கண்டத்தட்டு யுரேசியக் கண்டத்தட்டுடன் மோதத் தொடங்கியதன் விளைவாக இமயமலை உருவாகத் தொடங்கியது. அந்தப் புவித்தட்டு இயக்கம் இன்றும் தொடர்வதால், இமயமலைப் பகுதி புவியியல் ரீதியாக மிகவும் சுறுசுறுப்பான பகுதியாக உள்ளது. இதன் காரணமாக இங்கு நிலநடுக்கங்கள், நிலச்சரிவுகள், பாறைச்சரிவுகள் போன்றவை இயற்கையாகவே அதிகம் நிகழ்கின்றன. செங்குத்தான மலைச்சரிவுகள், விரிசல்கள் நிறைந்த பாறைகள், ஆழமான ஆற்றுப்பள்ளத்தாக்குகள் ஆகியவை இந்த அபாயத்தை மேலும் அதிகரிக்கின்றன.

இதனுடன் காலநிலை மாற்றமும் புதிய அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. அதிகரிக்கும் வெப்பநிலை பனிப்பாறைகளைச் சுருங்கச் செய்கிறது. உயரமான மலைப்பகுதிகளில் பனி, உறைந்த மண் மற்றும் பாறைகளின் நிலைத்தன்மையிலும் மாற்றங்களை ஏற்படுத்துகிறது. தீவிர மழை, பனிப்பாறை ஏரி உடைப்பு, பனி–பாறைச்சரிவு போன்ற பல்வேறு நிகழ்வுகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து தொடர் அபாயங்களாக மாறுவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கிறது.

அதாவது, இமயமலை என்பது சமவெளியைப் போன்ற நிலப்பரப்பு அல்ல. இங்கு மேற்கொள்ளப்படும் வளர்ச்சித் திட்டங்கள் இந்தப் புவியியல் மற்றும் காலநிலை உண்மைகளைப் புரிந்துகொண்டே திட்டமிடப்பட வேண்டும். ஆனால் நடைமுறையில் அது எந்த அளவிற்கு நடக்கிறது என்பதுதான் தற்போதைய கேள்வி.

ஆற்றுக்கு நாம் இடம் கொடுக்கிறோமா?

நேபாளப் பேரிடருக்குப் பிறகு ICIMOD (International Centre for Integrated Mountain Development) பனிப்பாறை ஆய்வாளர் முகமது ஃபரூக் அசாம், இமயமலைப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள ஒரு முக்கியமான மாற்றத்தைப் பற்றி கூறினார். அதில், முந்தைய தலைமுறைகளைச் சேர்ந்த இமயமலை மக்கள் பெரும்பாலும் தங்களது குடியிருப்புகளை ஆற்றிலிருந்து விலகி, உயரமான பகுதிகளில் அமைத்தனர். இதனால் அன்றாடத் தேவைகளுக்கான தண்ணீரை எடுக்க அவர்கள் கீழே ஆற்றை நோக்கிச் செல்ல வேண்டியிருந்தது. அது சிரமமான வாழ்க்கைமுறையாக இருந்தாலும், வெள்ளத்தின் பாதையிலிருந்து விலகி வாழ்வதற்கான ஒரு பாதுகாப்பு முறையாகவும் இருந்தது. 

ஆனால் இன்று நிலை மாறியுள்ளது. ஆற்றை ஒட்டி சாலைகள் அமைக்கப்படுகின்றன. சாலைகளைத் தொடர்ந்து கடைகள், சந்தைகள், விடுதிகள், குடியிருப்புகள் உருவாகின்றன. புனல்மின் திட்டங்கள், பாலங்கள், போன்றவையும் பெரும்பாலும் ஆற்றுப் பள்ளத்தாக்குகளிலேயே அமைக்கப்படுகின்றன. இங்கு நாம் புரிந்துகொள்ள வேண்டியது, ஆறு என்பது இரண்டு கரைகளுக்கு நடுவே எப்போதும் ஒரே பாதையில் ஓடும் நீர்க்குழாய் அல்ல என்பதுதான். குறிப்பாக இமயமலை ஆறுகள் மழை மற்றும் வெள்ளக் காலங்களில் நீரை மட்டும் சுமந்து வருவதில்லை. மண், மணல், பெரிய பாறைகள், மரங்கள் உள்ளிட்ட ஏராளமான பொருட்களையும் கீழ்நோக்கிக் கொண்டு வருகின்றன.

மிகப்பெரிய வெள்ளங்களின்போது ஆற்றின் அகலம் அதிகரிக்கலாம்; அதன் பாதையே மாறலாம். அத்தகைய ஆற்றின் இயற்கையான வெள்ளப்பரப்பில் நாம் தொடர்ந்து கட்டுமானங்களை மேற்கொண்டால், ஆற்றின் பாதையில் நாமே நமது கட்டமைப்புகளை நிறுத்துகிறோம். இதனால் ஒரு இயற்கையான வெள்ளம் மிகப்பெரிய மனிதப் பேரிடராக மாறுகிறது.

புனல்மின் திட்டங்கள்: மின்சாரத்துடன் வரும் அபாயம்

நேபாளத்தின் பொருளாதார வளர்ச்சியில் புனல்மின் ஆற்றல் (Hydroelectric Power) மிக முக்கியமானது. மலைப்பகுதிகள், வேகமாக ஓடும் ஆறுகள் மற்றும் அதிகமான உயர வேறுபாடுகள் புனல்மின் உற்பத்திக்கு ஏற்ற இயற்கைச் சூழலை வழங்குகின்றன. ஆனால் அதே புவியியல் தன்மைகள்தான் இந்தத் திட்டங்களுக்கு மிகப்பெரிய அபாயத்தையும் உருவாக்குகின்றன.

2015-ஆம் ஆண்டு நேபாளத்தில் ஏற்பட்ட கோர்கா நிலநடுக்கத்திற்குப் பிறகு, இமயமலை புனல்மின் திட்டங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வாளர்கள் விரிவாக ஆராய்ந்தனர். அந்த நிலநடுக்கத்தின்போது நேபாளம் தனது புனல்மின் உற்பத்தித் திறனில் சுமார் 20 சதவீதத்தை தற்காலிகமாக இழந்தது. 30-க்கும் மேற்பட்ட புனல்மின் திட்டங்கள் பாதிக்கப்பட்டன. ஆனால் இவற்றில் ஏற்பட்ட மிகப்பெரிய சேதத்திற்கு நிலநடுக்க அதிர்வு மட்டும் காரணமாக இருக்கவில்லை. நிலநடுக்கத்தால் தூண்டப்பட்ட நிலச்சரிவுகளே புனல்மின் திட்டங்களுக்கு ஏற்பட்ட கடுமையான சேதத்தில் மிகப்பெரிய பங்காற்றியதாக ஆய்வு கண்டறிந்தது.

மேலும், ஆய்வுக்குட்படுத்தப்பட்ட இமயமலை ஆறுகளில் தற்போதுள்ள, கட்டுமானத்தில் உள்ள மற்றும் திட்டமிடப்பட்ட புனல்மின் திட்டங்களில் சுமார் நான்கில் ஒரு பகுதி எதிர்கால நிலநடுக்கங்களில் மிதமானது முதல் கடுமையானது வரையிலான சேதத்தைச் சந்திக்கும் அதிக வாய்ப்பைக் கொண்டிருப்பதாக ஆய்வாளர்கள் மதிப்பிட்டனர். ஒரு புனல்மின் நிலையத்தின் அணை அல்லது மின்நிலையம் பொறியியல் ரீதியாக வலுவாக இருக்கிறதா என்பதை மட்டும் ஆய்வு செய்தால் போதாது. அதன் மேலே உள்ள மலைச்சரிவு எப்படி இருக்கிறது? ஆற்றுப்பள்ளத்தாக்கு எவ்வளவு செங்குத்தானது? நிலநடுக்கத்தின்போது பாறைகள் சரியுமா? பனிப்பாறை ஏரி உடைந்தால் வெள்ளம் எங்கு செல்லும்? மண்–பாறைப் பெருக்கு ஏற்பட்டால் அணுகுச் சாலைகள் மற்றும் மின்கம்பிகள் என்ன ஆகும்? போன்ற கேள்விகளையும் சேர்த்தே கேட்க வேண்டும்.

திருசூலி ஆறு: நீருக்கானதா ? மின்சாரத்துக்கானதா?

தற்போதைய நேபாளப் பேரிடர் பாதித்த திருசூலி ஆற்றுப்படுகையை எடுத்துக்கொண்டால் இந்தக் கேள்வி இன்னும் முக்கியமாகிறது.

சர்வதேச நிதி நிறுவனம் (International Finance Corporation, IFC) 2020-ல் வெளியிட்ட திருசூலி ஆற்றுப்படுகைக்கான ஒட்டுமொத்த தாக்க மதிப்பீட்டின்படி, அப்போது அந்த ஆற்றுப்படுகையில் 36-க்கும் மேற்பட்ட புனல்மின் திட்டங்கள் பல்வேறு கட்ட வளர்ச்சி அல்லது திட்டமிடல் நிலைகளில் இருந்தன. ஒரு தனிப்பட்ட புனல்மின் திட்டத்தின் சுற்றுச்சூழல் தாக்கத்தை மட்டும் மதிப்பிடுவது போதாது என்பதால்தான் IFC இந்த ஆற்றுப்படுகை அளவிலான ஆய்வை மேற்கொண்டது.

ஒரு ஆற்றில் முதல் திட்டம் வரும்போது அதன் தாக்கம் குறைவாக இருக்கலாம். இரண்டாவது திட்டத்தின் தாக்கமும் தனியாகப் பார்க்கும்போது ஏற்றுக்கொள்ளக்கூடியதாகத் தெரியலாம். ஆனால் அதே ஆற்றுப்படுகையில் தொடர்ந்து அணைகள், சுரங்கங்கள், சாலைகள், மின்கம்பிகள், தொழிலாளர் குடியிருப்புகள் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி உருவாகும்போது அவை அனைத்தும் சேர்ந்து ஏற்படுத்தும் தாக்கம் முற்றிலும் வேறுபட்டதாக இருக்கலாம்.

IFC ஆய்வே திருசூலி ஆற்றுப்படுகை ஏற்கெனவே புனல்மின் மற்றும் பிற வளர்ச்சித் திட்டங்களால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், காலநிலை மாற்றம், மலைச்சரிவுகளின் நிலையற்ற தன்மை, மணல் அகழ்வு மற்றும் நகரமயமாக்கல் போன்ற பிற அழுத்தங்கள் இந்தத் தாக்கங்களை மேலும் அதிகரிப்பதாகவும் சுட்டிக்காட்டியது. இதுதான் ஒட்டுமொத்த தாக்கம் (cumulative impact). ஆனால் பேரிடர் அபாய மதிப்பீடுகளில் நாம் இன்னமும் பெரும்பாலும் ஒவ்வொரு திட்டத்தையும் தனித்தனியாகவே பார்க்கிறோம்.

ஒரு திட்டம் பாதுகாப்பானதா என்பது மட்டுமல்ல; ஒரே ஆற்றுப்படுகையில் இத்தனை திட்டங்களை அமைத்த பிறகும் அந்த ஆற்றுப்படுகை பாதுகாப்பானதாக இருக்குமா? என்பதையும் கேட்க வேண்டியுள்ளது.

கட்டமைப்புகள் பேரிடரை உருவாக்குகின்றனவா?

இங்கு ஒரு வேறுபாட்டைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். தற்போதைய நேபாளப் பேரிடருக்குக் காரணமான பனி–பாறைச்சரிவை புனல்மின் நிலையங்களோ, சாலைகளோ, அணைகளோ உருவாக்கவில்லை. ஆனால் இயற்கையாகவே அபாயம் அதிகம் உள்ள இடத்தில் அதிகமான கட்டமைப்புகளையும் மக்களையும் குவிப்பது பேரிடரால் ஏற்படும் இழப்பை அதிகரிக்கிறது. இதுதான் பேரிடர் அபாயத்தின் அடிப்படை.

மக்கள் இல்லாத ஒரு மலைப்பகுதியில் மிகப்பெரிய பாறைச்சரிவு ஏற்பட்டால் அது ஒரு இயற்கை நிகழ்வாக முடிந்துவிடலாம். அதே பாறைச்சரிவு கீழே ஆயிரக்கணக்கான மக்கள் வாழும் நகரம், சாலை, பாலம் அல்லது மின்நிலையத்தைத் தாக்கினால் அது பேரிடராக மாறுகிறது. எனவே, இயற்கை அபாயத்தை மட்டும் நாம் புரிந்துகொண்டால் போதாது; அதன் பாதையில் நாம் எதை வைத்திருக்கிறோம் என்பதையும் பார்க்க வேண்டும்.

எல்லைகளை அறியாத இமயமலை ஆறுகள்

இமயமலைப் பேரிடர்களில் இன்னொரு முக்கியமான சிக்கல் உள்ளது. உலகின் உள்ள எல்லா ஆறுகளும், பனிப்பாறைகளும் அரசியல் எல்லைகளைப் பின்பற்றுவதில்லை. 2024-ல் வெளியான ஆய்வு ஒன்று, திபெத் பகுதியில் உருவாகும் பனிப்பாறை ஏரி உடைப்பு வெள்ளங்களால் நேபாளத்தின் போத்தே கோஷி–சுன்கோஷி மற்றும் திருசூலி ஆற்றுப்பகுதிகளில் வாழும் மக்கள் எதிர்கொள்ளும் அபாயங்களை ஆய்வு செய்தது.

இந்த ஆற்றுப்படுகைகளில் ஆய்வு செய்யப்பட்ட சமூகங்கள் எல்லை கடந்த பனிப்பாறை ஏரி உடைப்பு வெள்ளங்களுக்கு மிதமானது முதல் அதிகமானது வரையிலான பாதிப்புறும் நிலையில் இருப்பதாக அந்த ஆய்வு கண்டறிந்தது. இந்த அபாயத்தைக் குறைப்பதற்கு முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்புகளை விரிவுபடுத்துதல், நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பை அதிகரித்தல் மற்றும் பேரிடரைத் தாங்கக்கூடிய கட்டமைப்புகளை உருவாக்குதல் அவசியம் என்றும் ஆய்வு வலியுறுத்தியது.

ICIMOD எனும் அமைப்பும் தற்போதைய திடீர் பெருவெள்ள நிகழ்வை ஒரு தொடர் அபாயத்தின் எடுத்துக்காட்டாகப் பார்க்கிறது. உயரமான மலைப்பகுதியில் தொடங்கிய ஒரு நிகழ்வு சில மணி நேரங்களுக்குள் கீழே உள்ள குடியிருப்புகளைத் தாக்கும் பெருவெள்ளமாக மாறியுள்ளது. மேலும், கீழ்ப்பகுதிகளில் உள்ள மக்களின் அபாய நிலை வேகமாக மாறிவருவதால், நிகழ்நேர அபாயத் தகவல்கள் உள்ளூர் நிர்வாகங்களையும் மக்களையும் விரைவாகச் சென்றடைய வேண்டும் என்றும் அது வலியுறுத்துகிறது.

எனவே திபெத்தில் உருவாகும் அபாயம் நேபாளத்தின் பிரச்சினை அல்ல என்று சீனா ஒதுங்க முடியாது; நேபாளத்தில் ஏற்படும் ஒரு நிகழ்வு கீழ்நோக்கி இந்தியாவையும் பாதிக்கக்கூடும். பனிப்பாறைகள், பனிப்பாறை ஏரிகள், மழை, ஆற்றின் நீர்மட்டம், நிலச்சரிவு போன்றவற்றைக் கண்காணிக்கும் தகவல்கள் நாடுகளுக்கிடையே வேகமாகப் பகிரப்பட வேண்டும். வெள்ளநீர் எல்லையைக் கடப்பதற்கு முன்பு, அதன் எச்சரிக்கை எல்லையைக் கடந்திருக்க வேண்டும்.

வளர்ச்சியை நிறுத்துவதா? அல்லது வளர்ச்சியை மாற்றுவதா?

இந்த கட்டுரையின் நோக்கம் இமயமலையில் சாலைகள் அமைக்கக்கூடாது, மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடாது அல்லது புனல்மின் திட்டங்களே வேண்டாம் என்று கூறுவது அல்ல. இமயமலையில் வாழும் மக்களுக்கும் மின்சாரம் தேவை. போக்குவரத்து தேவை. மருத்துவமனைகள், பள்ளிகள், வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சி தேவை. ஆனால் வளர்ச்சி என்பது அதிகமான கட்டுமானங்களை உருவாக்குவது மட்டும் அல்ல. எங்கு கட்டக்கூடாது என்பதைத் தீர்மானிப்பதும் வளர்ச்சித் திட்டமிடலின் ஒரு பகுதிதான் என்பதை உணர வேண்டும்.

ஆற்றின் இயற்கையான வெள்ளப் பரப்புகளைக் (Flood plains) கட்டுமானங்களிலிருந்து பாதுகாக்க வேண்டும். நிலையற்ற மலைச்சரிவுகளில் சாலைகளை அமைப்பதற்கு முன்பு புவியியல் ஆய்வுகள் கட்டாயமாக்கப்பட வேண்டும். ஒரு புனல்மின் திட்டத்தை மட்டும் தனியாக மதிப்பிடாமல், முழு ஆற்றுப்படுகையிலும் உள்ள திட்டங்களின் ஒட்டுமொத்த தாக்கத்தை மதிப்பிட வேண்டும். காலநிலை மாற்றத்தால் உருவாகும் புதிய அபாயங்களையும் பழைய திட்டங்களின் பாதுகாப்பு மதிப்பீடுகளில் சேர்க்க வேண்டும். சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு போலவே, காலநிலை மாற்ற மதிப்பீடும் இனி வரும் திட்டங்களுக்கு கட்டாயமாக்கப்பட வேண்டும்.

ஒரு பேரிடர் நிகழ்ந்த பிறகு அந்த இடத்தை மீண்டும் அதேபோல் கட்டியெழுப்புவதை மட்டுமே ‘மறுகட்டமைப்பு’ என்று பார்க்கக்கூடாது. அங்கு மீண்டும் கட்டுவது பாதுகாப்பானதா என்ற கேள்வியையும் முதலில் கேட்க வேண்டும். நேபாளத்தின் தற்போதைய பேரிடர் நமக்குச் சொல்லும் பாடம் மிக எளிமையானது.

மலை எப்போது சரியும் என்பதை நம்மால் எப்போதும் முன்கூட்டியே தீர்மானிக்க முடியாமல் இருக்கலாம். ஆனால் அந்த மலையின் கீழே எங்கு வீடு கட்டுகிறோம், எங்கு சாலை அமைக்கிறோம், எங்கு புனல்மின் நிலையம் நிறுவுகிறோம், ஒரே ஆற்றுப்படுகையில் எத்தனை திட்டங்களை அனுமதிக்கிறோம் என்பவை இயற்கையின் முடிவுகள் அல்ல. அவை மனிதர்கள் எடுக்கும் முடிவுகள்.

Reference

1.        ICIMOD (2026) — Nepal Rasuwa flood / ice–rock avalanche

2.       Dandekar & Thakkar / SANDRP (2026) — Hydropower and disaster risk

3.       Reuters (2026) — What triggered the Nepal–Tibet disaster?

4.       chwanghart, W., Ryan, M. & Korup, O. (2018). “Topographic and Seismic Constraints on the Vulnerability of Himalayan Hydropower.” Geophysical Research Letters.

5.       International Finance Corporation (IFC) (2020). “Cumulative Impact Assessment and Management: Hydropower Development in the Trishuli River Basin, Nepal.”

6.       “Risk perception and vulnerability of communities in Nepal to transboundary glacial lake outburst floods from Tibet, China” (2024), International Journal of Disaster Risk Reduction, 107, 104476.

7.       NDTV (2026) — Construction close to Himalayan rivers

Exit mobile version