
புதிய உலக வரைபடம் தொடர்பான தீர்மானம் ஐ.நா. சபையில் நேற்று பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. இதன்படி ஆப்பிரிக்க கண்டம் பெரிதாகவும் வடஅமெரிக்கா, ஐரோப்பிய கண்டம் சிறியதாகவும் மாற்றப்பட்டு உள்ளன.
ஆபிரிக்கா மற்றும் பிற நிலநடுக்கோட்டுப் பிரதேசங்களின் தோற்றத்தை வழக்கமான உலக வரைபடங்கள் தவறாகப் பிரதிபலிப்பதாக வாதிட்டு, ஆபிரிக்க யூனியன் (African Union) சார்பில் டோகோ (Togo) நாடு இந்த முன்னெடுப்புக்குத் தலைமை தாங்கியது.
கடந்த 1569 ஆம் ஆண்டில் நெதர்லாந்தைச் சேர்ந்த புவியியல் ஆராய்ச்சியாளர் கெரார்டஸ் மெர்கேட்டர் (Gerardus Mercator) உலக வரைபடத்தை உருவாக்கினார். இதில் பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள பகுதிகள் சிறியதாகவும் துருவப் பகுதிகள் பெரியதாகவும் காட்டப்பட்டன. உதாரணமாக மெர்கேட்டரின் உலக வரைபடத்தில் கிரீன்லாந்து தீவும் ஆபிரிக்க கண்டமும் ஒரே அளவாக காட்சியளித்தன. ஆனால் கிரீன்லாந்தைவிட ஆப்பிரிக்க கண்டம் 14 மடங்கு பெரியது ஆகும்.
இதைத் தொடர்ந்து ஆபிரிக்காவின் உண்மையான நிலப்பரப்பை பிரதிபலிக்கும் புதிய உலக வரைபடத்தை ஐ.நா. சபையில் ஆபிரிக்க நாடுகள் சமர்ப்பித்தன. இதுதொடர்பான தீர்மானமும் கொண்டு வரப்பட்டது. இந்தத் தீர்மானம் மீது ஐ.நா. சபையில் செப்டம்பர் 4ஆம் திகதி வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இந்தியா உட்பட 164 நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன. உக்ரைன், எஸ்டோனியா, ஜோர்ஜியா, லிதுவேனியா, மால்டோவா, செர்பியா ஆகிய 6 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. அமெரிக்கா மட்டும் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தது.
இதுதொடர்பாக அமெரிக்க தூதர் யரினா பெரென்செவிச் கூறும்போது, உலகம் எதிர்கொள்ளும் உண்மையான பிரச்சினைகள் குறித்து ஐ.நா. சபை கவனம் செலுத்த வேண்டும். 16 ஆம் நூற்றாண்டு உலக வரைபடத்தை மாற்றுவதில் எந்தப் பயனும் இல்லை” என்றார்.
கண்டங்களின் ஒப்புமைப் பரப்பளவை மிகவும் துல்லியமாகப் பாதுகாப்பதற்காக 2018 ஆம் ஆண்டில் ஈக்குவல் எர்த் (Equal Earth) கணிப்பு முறை அறிமுகப்படுத்தப்பட்டது. நிலப்பரப்பின் துல்லியமான பிரதிநிதித்துவம் அவசியமான இடங்களில், ஈக்குவல் எர்த் அல்லது பிற சம-பரப்பு (Equal-area) கணிப்பு முறைகளைப் பயன்படுத்துமாறு அரசாங்கங்கள், கல்வி நிறுவனங்கள், சர்வதேச அமைப்புகள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களை ஐ.நா. தீர்மானம் ஊக்குவிக்கிறது.
புதிய உலக வரைபடத்தின்படி ஆபிரிக்க கண்டம் பெரிதாகவும் வடஅமெரிக்கா, ஐரோப்பிய கண்டம் சிறியதாகவும் மாற்றப்பட்டு உள்ளன. இந்தியாவை பொறுத்தவரை மிகப்பெரிய மாற்றம் ஏதுவும் இல்லை. ஆபிரிக்க நாடுகள் உடனான உறவை புதுப்பிக்க பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் விரும்புகின்றன. இதன் காரணமாக பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் புதிய உலக வரைபடத்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ளன.

