-ச.அருணாச்சலம்
பிரிக்ஸ் மாநாட்டின் மூலம் ஒரு சர்வதேசத் தலைவரைப் போன்ற தோற்றத்தை மோடிக்கு ‘பில்டப்’ (Build up) செய்கிறார்கள்…! ஆனால், சர்வதேச அரங்கில் நம்பகத்தன்மையற்ற – சந்தர்ப்பவாத – போலி மனிதராகவே – அமெரிக்க விசுவாசியாகவே – மோடி பார்க்கப்படுகிறார் என்பதற்கு டெல்லியில் நடந்த பிரிக்ஸ் மாநாடே சாட்சியாகிவிட்டதே.
பிரிக்ஸ் நாடுகளின் உச்சி மாநாட்டில் மோடி பேசியதையும் அவர் பல நாட்டு தலைவர்களை வரவேற்று கைகுலுக்குவதையும், மோடியின் மேதாவிலாசத்தையும், அவர் ஈரான் நாட்டு அதிபருடன் கைகுலுக்கி அளவளாவுவதையும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் மற்றும் சீன தலைவர் ஷீ ஜின் பிங் ஆகியோருடன் அன்னியோன்யமாக இந்திய பிரதமர் மோடி பேசுவதையும் – சுட்டி காட்டாத பெரிய ஊடகங்களே இல்லை. எல்லாம் மோடி மயமாக மோடி மீடியா சித்தரிக்கின்றது.
ஜந்தர் மத்தர் மாணவர் போராட்டத்தினால் சரிந்து போன மோடியின் செல்வாக்கை இந்த மாநாட்டின் மூலம் சரி செய்துவிடலாம் என கொத்தடிமை ஊடகங்கள் இந்த வேலையை செய்கின்றன. உண்மையில் பிரிக்ஸ் அமைப்பின் நோக்கத்திற்கும், அதன் குறிக்கோள்களுக்கும் மோடியின் இந்தியா உதவுகிறதா?
மாநாட்டின் இறுதியில் அனைத்து நாடுகளின் ஒப்புதலோடு இந்தியா ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டது. இதை மாநாட்டின் “டெல்லி பிரகடனம்” என்று கூறுவர்.
இதில் மேற்காசியாவில் நடந்து வரும் போரை பற்றியும், உக்ரைனில் நடந்துவரும் போரை பற்றியும், அமெரிக்கா, வணிக விதிகளை பயன்படுத்தி, வர்த்தக வரிமுறைகளை ஆயுதமாக்கி பிற நாடுகளை மிரட்டி வருவதை பற்றியும், பிற நாடுகளின் மீது ஒருதலை பட்சமான பொருளாதார தடைகளை விதித்து மிரட்டும் இன்றைய ஒருமுனை உலகச்சூழல் குறித்தும் கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன.
ஈரான் மீது பெப்ரவரி 28 இல் அமெரிக்காவும் இஸ்ரேலும் கூட்டாக தாக்குதலை நடத்தி, அந்நாட்டு தலைவர்களை கொலை செய்தனர். இந்த கொடுமையான போரை கண்டிக்கும் இந்த பிரகடனம், ஈரான் மீது குண்டுகளை வீசி போரை தொடுத்த அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளின் பெயரை குறிப்பிடாமல் கண்டிப்பது எதற்காக? ஈரானும் யு.ஏ.இ (UAE) நாடும் தங்களது கடுமையான நிலைகளை தளர்த்தியதால் பெயரைக் குறிப்பிடாமல் கண்டனம் செய்வது சாத்தியமாயிற்று என்பது இந்திய ராஜ தந்திரத்தின் வெற்றியா? அல்லது உண்மைகளை மூடி மறைக்கும் உத்தியா?
கடந்த மாதம் டியான்ஜின் (சீனா) நகரில் நடந்த ஷங்காய் கூட்டுறவு அமைப்பு (SCO) மாநாட்டில் இந்தியாவும் கலந்து கொண்டது. இந்த மாநாட்டு கூட்டறிக்கையில் ஈரான் மீது போரை தொடுத்த அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளை பெயர் சொல்லி கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதை இந்தியாவும் ஏற்றுக்கொண்டது.
ஆனால், டெல்லியில் இந்தியாவின் தலைமையில் நடக்கும் பிரிக்ஸ் மாநாட்டில் போரை துவக்கிய அமெரிக்கா, இஸ்ரேலை குறிப்பிட்டு கண்டிக்க இந்தியாவிற்கு என்ன தயக்கம்?
யாரை கண்டு மோடி பயந்து நடுக்குகிறார்?
பெயரை குறிப்பிடாமல் கண்டிக்கிறோம் என்பதே பெரிய முன்னேற்றமாக – இந்திய ராஜ தந்திரத்திற்கு கிடைத்த வெற்றியாக வருணிப்பது ஏற்புடையது அல்ல. சீனா, ரஷ்யா மற்றும் ஈரான் போன்ற பிற நாடுகளின் குமுறலை செவி மடுப்பது போல் நடித்து, அத்துமீறி போரை துவக்கிய அமெரிக்காவை குறிப்பிட்டு கண்டிக்க தயங்குவது பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் என்ற நாடகத்தை, ட்ரம்பிற்கு பயந்து மோடி நடத்துவதை, உலக நாடுகள் உணர்ந்துள்ளன.
அந்த பிரகடனத்தில் லெபனான் நாட்டின் இறையாண்மையை இஸ்ரேல் மீறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், காசா மற்றும் மேற்கு கரை உள்ளிட்ட பலஸ்தீன பகுதிகளில் இஸ்ரேல் நாட்டின் வன்கொடுமைகளை கண்டிப்பதாகவும் தீர்மானங்கள் கூறுகின்றன . மோடியின் “பித்ரு தேசமான” இஸ்ரேலை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றும் இந்தியா அமெரிக்காவை கண்டிக்க மறுப்பது ஏன்?
உலகளாவிய நிருவாக சீர்திருத்தம், பன்முக உலக ஒழுங்கு, ஐ நா சபைக்கான முதலிடம் வணிகம் மற்றும் வர்த்தக வரி மூலம் பழிவாங்குதலை எதிர்த்தல், டிஜிட்டல் இணைப்புமுறை மற்றும் மார்க்கெட்டிங் முறைகளை வளர்தெடுத்தல், புதிய தொழில்நுட்ப கூட்டுறவை பேணுதல், கருத்தொற்றுமையை வளர்த்தல் என பல சீர்திருத்தங்களை முன்னெடுக்க வேண்டும் எனக் கூறும் இந்தியா அவற்றை நடைமுறைப்படுத்த என்றாவது முயற்சிக்குமா?
பொருளாதார தடைகளை மீறி அனைத்து நாடுகளுடனும் கூட்டுறவு என்று முழங்கும் இந்தியா ஈரானில் முதலீடு செய்ய தயாராய் உள்ளதா? ஏற்கனவே சப்ஹார் முறைமுகத்தில் செய்த முதலீட்டை அமெரிக்காவின் அச்சுறுத்தலால் இந்தியா திரும்ப பெற்றதே அதை மறக்க முடியுமா ? அல்லது அமெரிக்கா இப்பொழுது அறிவித்துள்ள தடைகளை மீறி, ஈரானில் முதலீடு செய்ய இந்தியா தயாராய் உள்ளதா? என கேட்க தோன்றுகிறது. சொன்னதை செய்து முடிக்க தயங்கும் இந்தியாவை எந்த நாடு மதிக்கும்?
குளோபல் சௌத் எனப்படும் உலகின் தெற்கு நாடுகளனைத்திற்கும் பிரதிநிதித்துவம் (Representation) பொறுப்புணர்வோடு செயல்படல் (responsiveness) மற்றும் செயல்பாட்டிற்கான விதிகளை வகுத்தல் (rule making) ஆகிய மூன்றும் முக்கியம் எனக்கூறிய மோடி அனைத்து நாடுகளையும் அரவணைத்து, புதிய உலக ஒழுங்கை ஏற்படுத்த வேண்டும், அதற்கு புதிய தொழில் நுட்பம் உதவ வேண்டும் என்றும் பேசியிருக்கிறார். குளோபல் சௌத் நாடுகள் முடிவெடுத்து செயல்படும் நிலையில் இருக்க வேண்டும் என்று கூறிய மோடி , அமெரிக்கா தொடுக்கும் போர்களை கண்டிக்க மறுப்பது ஏன்? தெற்குநாடுகள் தங்களது வர்த்தகத்தை டொலர் மூலமன்றி தங்களது கரன்சி மூலமே நடத்த முன் வர வேண்டும் என்ற கருத்தை நடைமுறைபடுத்த இந்தியா தயங்குவது ஏன்?
பிரிக்ஸ் அமைப்பின் மூல வேரும், இந்தியாவின் உற்ற நண்பனுமான ரஷ்யாவுடனான இந்திய நட்புறவை, இந்திய வர்த்தகத்தின்- ஏற்றுமதி இறக்குமதியின் அளவை – அமெரிக்காவின் கட்டளைக்கிணங்க நடத்தப்படுவதற்கு என்ன காரணம்? வர்த்தக வரிகளின் மூலம் நமது ஏற்றுமதி வாய்ப்பை சூறையாடும் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் நடவடிக்கைகளை கேள்வி கேட்பதோ, கண்டிப்பதோ மோடியின் அகராதியில் இல்லையே, ஏன்?
ஈரான் மீது குண்டு வீசி, சிவில் நியூக்கிளியர் அமைப்புகளின் மீது குண்டுவீசி நிர்மூலப்படுத்திய அமெரிக்காவை கண்டிக்காமல் பொது மக்களின் சுகாதாரத்தை, வாழும் சூழலை எவ்வாறு காப்பாற்ற முடியும்? அமெரிக்காவின் தடைகளை புறந்தள்ளாமல் அவற்றை கண்டிக்காமல் ஈரானுடன் நட்பு பாராட்ட முடியுமா?
இந்த அடிப்படை புரிதல் இல்லாமல் , தலைவர்களுடன் கைகுலுக்குவதும், கட்டித் தழுவுவதும் இரு நாட்டு உறவுகளை சீர்படுத்துமா?
ஈரானின் உச்சபட்ச தலைவர் காமெனியை கொல்லப்பட்டதை கண்டிக்காமல், அவருக்கு மரியாதை நிமித்தமாக அஞ்சலி கூட செலுத்த முன்வராத மோடியை ஈரான் நாடு நம்புமா? அதனால், நட்பு பாராட்ட முடியுமா?
திருக்குறளின் ரஷ்ய மொழியாக்கத்தை ரஷ்ய அதிபர் புட்டீனுக்கு பரிசாக கொடுக்கும் வேளையில், திருக்குறள் நட்பை பற்றி என்ன கூறியுள்ளது என்பதையாவது மோடி கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு
என்ற குறளையும், அதன் பொருளையும் மோடி தெரிந்து கொண்டாரோ, என்னவோ இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் மெத்த படித்த உயரதிகாரிகள் நாடுகளுக்குடையேயான உறவுகளில் அடிப்படை நேர்மை வேண்டும் என்ற பால பாடத்தையாவது மோடிக்கு எடுத்து கூறுவார்களா?
இந்த மாநாட்டால், இந்த நாடகத்தால் இந்தியா அடைந்த பயன் என்ன? இந்தியாவின் நேர்மையற்ற அணுகுமுறையால் நட்பு நாடுகளான ரஷ்யா மற்றும் ஈரான் நாட்டின் நல்லெண்ணத்தை இன்று இழந்து நிற்கிறோம்.
இந்தியா உலக உறவுகளில் தார்மீக நெறிகளை கடைபிடிப்பதன் மூலமே பிரிக்ஸ் போன்ற அமைப்பிற்கு அறஞ்சார்ந்த தலைமையை கொடுக்க முடியும். நேர்மையை கடைபிடிப்பதனால் நாட்டு நலன்கள் பலியாகும் என்பது கட்டுக்கதை.
நாட்டு நலன்களையும், தார்மீக நெறிமுறைகளையும் சமன் செய்து, பொருளாதார கொள்கைகளை வகுப்பதும் அயல்நாட்டு உறவுகளை உருவாக்குவதும் ஒரு நாட்டு தலைமையின் முதிர்ச்சிக்கும் பக்குவத்திற்கும் விடப்படும் சவாலான பணியாகும்.
நேர்மையற்ற அணுகுமுறையால் சீனாவை சுற்றி முற்றுகையிட அமெரிக்காவுடன் இராணுவ கூட்டுறவை வளர்க்கிறோம். சீனத்தை எதிர்த்து நிற்கும் நாடாக இந்தியா திகழ அமெரிக்கா உதவும் என்று நம்பி கழுத்தை நீட்டுகிறது மோடி அரசு. ஆனால் பல்வேறு பொருட்களுக்கு சீனாவை நம்பியே நமது பொருளாதாரம் உள்ளது. சீனாவிடமிருந்து நாம் செய்யும் இறக்குமதிகளின் அளவு 130 பில்லியன் டொலரை தொடும் வேளையில், சுயசார்புடன் (ஆத்மநிர்பர) இந்தியா முன்னேறுகிறது என்று அரசியல் நாடகமாடுகிறது மோடி அரசு. சீன நிறுவனங்களை இந்தியாவிலிருந்து அகற்றுவதன் மூலம், சீனத்தின் தொழில் நுட்பத்தை, சீனத்தின் முதலீட்டை அதனால் கிடைக்கும் வளர்ச்சியை இழந்து நிற்கிறோம்.
நேர்மையற்ற அணுகுமுறையால் சீனாவுடனான எல்லை தாவா குறித்த பேச்சுவார்த்தை நீடிக்கிறது. அதே வேளையில் பாகிஸ்தானுடனான சீன நட்புறவு வளர்த்து கொண்டே செல்கிறது.
நேர்மையற்ற அணுகுமுறையால், அமெரிக்காவின் அச்சுறுத்தல்களை எதிர்க்காமல் அடிமைச் சேவகம் செய்தால், ஆசியாவில் நாமும் வல்லரசாகலாம் என்ற நப்பாசையில் இந்திய நாட்டின் இறையாண்மைக்கே வேட்டு வைக்கிறது மோடி அரசு. அமெரிக்க வேளாண் பொருட்களுக்கு இந்திய சந்தையை திறப்பதற்கும், அமெரிக்கா கூறும் விலையில் கச்சா எண்ணெய்யை இந்தியா வாங்கவும் மோடி அரசு சம்மதம் தெரிவிக்கிறது.
நேர்மையற்ற அணுகுமுறையால் இந்திய மக்களின் ஏகோபித்த நிலைபாட்டை மறுதலித்து இஸ்ரேலின் இனவெறி ஆட்சியை , அதன் இன ஒழிப்பை, ஆதரிக்கும் இழிநிலைக்கு இந்தியாவை இட்டுச்சென்றுள்ளார் மோடி.
பிரிக்ஸ் மாநாடு நடப்பதற்கு முன்பும் மோடி அரசின் நிலை இதுதான். மாநாட்டிற்கு பிறகும் மோடி அரசு கடைப்பிடிக்கப்போகும் கொள்கைகளும் இவைதான். பிறகு எதற்கு இந்த நாடகம்?
இந்த நாடகத்தை எல்லாம் உலக தலைவர்கள் அறிந்து கொண்டனர். இந்திய மக்கள் இன்னும் புரிந்து கொள்ள வேண்டும்.

