
ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா (Ursula von der Leyen) சமீபத்தில் ‘ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலைமை’ குறித்த உரை ஒன்று நிகழ்த்தினார். அந்த உரையில் ஐரோப்பிய நாடுகளில் வாழும் மக்களின் உண்மையான நிலை என்ன என்பதனை சொல்லாமல் தவிர்த்து விட்டார். அவர் பெரும் கோர்ப்பரேட்டுகள் மற்றும் தொழிலதிபர்களின் நலனை மட்டுமே முன்னிறுத்துகிறார் என இடதுசாரிக் கட்சி தலைவர்கள்மற்றும் முற்போக்கு அமைப்புகள் கடும்கண்டனம் தெரிவித்துள்ளன.
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை, வீட்டு வாடகை அதிகரித்துள்ளது. பெட்ரோல் டீசல் விலை உயர்வு காரணமாக போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்துள்ளது. இந்நிலையில் கிடைக்கும் குறைந்த சம்பளத்தை வைத்துக்கொண்டு எந்த செலவுகளை சமாளிப்பது என தொழிலாளர்கள் விழிப்பிதுங்கியுள்ளனர். இச்சூழலில், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த எந்தவொரு தீர்வையும் ஐரோப்பிய ஆணையம் முன்வைக்கவில்லை.
ரஷ்யாவிடம் இருந்து ஐரோப்பிய நாடுகள் குறைந்த விலைக்கு எரிவாயு வாங்கி வந்தன. உக்ரைன் போர் துவங்கிய பிறகு அமெரிக்காவின் அழுத்தம் மற்றும் அப்போருக்கான ஆதரவு என்ற அடிப்படையில் பல ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து எரிவாயு வாங்குவதை நிறுத்திவிட்டன. இதற்கு பதிலாக அமெரிக்காவிடம் இருந்து அதிக விலைக்கு எரிவாயு வாங்குகின்றன. இதன் காரணமாக அதிகரிக்கும் செலவுகள் ஐரோப்பிய மக்கள் தலையில் தான் விழுந்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் கடந்த ஐந்து ஆண்டுகளில் இராணுவச் செலவை 80 சதவிகிதமாக உயர்த்தியது. காட்டுத்தீ போன்ற இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ள போதிய அளவு தீயணைப்பு வீரர்கள் மற்றும் உபகாரணங்கள் இல்லாத நிலை ஐரோப்பா முழுவதும் நிலவுகின்றது. இப்படிப்பட்ட சூழலில் கூட பொதுத் துறைகள் மற்றும்பொது மக்களின் நலனுக்கான சேவைகளில் முதலீடு செய்யாமல் இராணுவத்திற்கு செலவு செய்கிறது ஐரோப்பிய ஒன்றியம். அதுமட்டுமல்ல ஏற்கெனவே மக்களுக்காக செய்யப்படும் குறைந்த பட்ச நிதி ஒதுக்கீடுகளைக்கூட சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் வெட்டுகின்றது.
இந்நிலையில் இது பற்றி பேசிய பெல்ஜியம் தொழிலாளர் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மார்க் பொடெங்கா (Marc Botenga) ஐரோப்பிய ஒன்றியத்தில் பொற்காலம் என்பது கோடீஸ்வரர்களுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் மட்டுமே. உழைக்கும் வர்க்கத்திற்கு விலையேற்றமும் நிதி வெட்டுகளும் மட்டுமே கிடைக்கின்றன என விமர்சித்துள்ளார்.
சர்வதேச அளவில் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கை முற்றிலும் செயலற்றதாக மாறிவிட்டது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வர்த்தகம் மற்றும் சர்வதேச விவகாரங்களில் அமெரிக்க அரசின் முடிவுகளுக்கும் விருப்பத்திற்கும் அடிபணியும் போக்கையே ஐரோப்பிய ஒன்றியம் தொடர்கிறது. உக்ரைன், கிரீன்லாந்து மற்றும் ஆபிரிக்க நாடுகளில் உள்ள அரிய கனிம வளங்கள் உள்ளிட்ட முக்கியமான மூலப்பொருட்களைப் எடுப்பதற்கு ‘ஐரோப்பியக் கழகம்’ தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது அந்நாடுகளை சூறையாட கொண்டு வரப்படும் ஏகாதிபத்திய கொள்கையாகும். இப்படி தொடர்ந்து ஏகாதிபத்திய கொள்கைகளை கடைபிடிப்பது, இராணுவத்திற்கு அதிகம் செலவு செய்து போர் ஆதரவு நிலைப்பாட்டை தொடர்வது என மக்கள் விரோத கொள்கைகளை ஐரோப்பிய ஒன்றியம் அமுல்படுத்திக் கொண்டுள்ளது. இத்தகைய ஐரோப்பிய ஒன்றியத்திற்குப் பதிலாக, மனிதநேய ஒற்றுமை மற்றும் உழைக்கும் மக்களின் நலனை அடிப்படையாகக் கொண்ட புதிய கட்டமைப்பு தேவை என ஐரோப்பிய இடதுசாரிகள் வலியுறுத்தியுள்ளன.

