– எம்.ஏ.பேபி
புது டெல்லியில் 2026 செப்டம்பர் 12-13 அன்று நடைபெற்ற 18வது பிரிக்ஸ் உச்சிமாநாடு, 140 அம்சப் பிரகடனத்தை வெளியிட்டுள்ளது. இது உலக தெற்கின் உணர்வுகளையும் தேவைகளையும் வெளிப்படுத்துவதாகவும், அதே நேரத்தில் அந்த அமைப்பிலுள்ள முரண்பாடுகளைக் காட்டுவதாகவும் உள்ளது. இடதுசாரிகளைப் பொறுத்தவரை, இந்த ஆவணத்தை பாராட்டுவதோ அல்லது முற்றிலுமாக நிராகரிப்பதோ அல்ல; மாறாக, அமெரிக்கா தலைமையிலான ஒருமுனை ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்த ஆவணம் எங்கு முன்னேறுகிறது, எங்கு பின்தங்குகிறது, இந்திய அரசின் சொந்த நடவடிக்கைகள் எங்கு பிரகடனத்தின் அடிப்படை உணர்வுக்கு முரணாக உள்ளன என்பதை விமர்சன ரீதியாகப் புரிந்துகொள்வது அவசியம்.
ஏகாதிபத்திய எதிர்ப்பு மன்றம் அல்ல
பிரிக்ஸ் என்பது ஏகாதிபத்திய எதிர்ப்பு முன்னணி அல்ல. அமெரிக்காவால் முன்னெடுக்கப்படும் ஒற்றை ஆதிக்கத் திட்டத்திற்கு எதிராக பன்முகத்தன்மையை வலுப்படுத்தும் ஒரு மன்றமே இதுவாகும். இந்த வேறுபாடு மிகமுக்கியமானது. இந்த அமைப்பில் முற்றிலும் மாறுபட்ட சமூக அமைப்புகளைக் கொண்டநாடுகள் இடம்பெற்றுள்ளன: சீனாவின் சோசலிச சார்பு பொருளாதாரம், ரஷ்யாவின் மையக் குவிப்பு பொருளாதாரம் மற்றும் பெருநிறுவன-மதவெறி இந்துத்துவ சக்திகளால் ஆளப்படும் இந்தியாவின் பெரிய முதலாளித்துவ சக்திகள் தலைமையிலான முதலாளித்துவ-நிலப்பிரபுத்துவ அரசு ஆகியவை இதில் அடங்கும். நிச்சயமாக, மற்ற நாடுகளை நாம் நோக்கும்போது இந்த பன்முகத்தன்மை மேலும் அதிகரிக்கிறது. எனவே, இவர்கள் பொதுவான முதலாளித்துவ எதிர்ப்புப் போராட்டத்தில் கூட்டுச் சேருபவர்கள் அல்ல. ஜனநாயகமற்ற, டொலர் ஆதிக்கம் செலுத்துகிற, அமெரிக்காவை மையப்படுத்திய சர்வதேச ஒழுங்கில் தங்களுக்கென ஒரு இடத்தை உருவாக்க முயலும்நாடுகளே இவை.
இந்த வரம்பு இயற்கையானது. அமெரிக்காவின் பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல் ‘ஒருதரப்பு வற்புறுத்தும் நடவடிக்கைகளை’ பிரிக்ஸ் பிரகடனம் கண்டனம் செய்வதற்கு இதுவே காரணமாகும். இஸ்ரேலை ஆக்கிரமிப்பாளர் என்று குறிப்பிடாமல் மேற்கு ஆசியாவில் ‘அதிகபட்ச நிதானத்தை’ கடைப்பிடிக்குமாறு அது பேசுவதற்கும் இதுவே காரணம். பிரகடனத்தின் இந்த மௌனங்கள் தற்செயலானவை அல்ல; மாறாக, மாறுபட்ட கூட்டணிகள் மற்றும் வர்க்க நலன்களைக் கொண்ட நாடுகளுக்கு இடையே ஒருமித்த கருத்தை எட்டும்போது கொடுக்கப்படும் விலையாகும்.
அரசியல் செல்வாக்கின்றி உள்ள பொருளாதார பலம்
பிரிக்ஸ் நாடுகள் இணைந்து உலக மக்கள் தொகையில் பாதியை விடக் கூடுதலாகவும், உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தோராயமாக மூன்றில் ஒரு பங்கையும் கொண்டுள்ளன. அவை மிகப்பெரிய பொருளாதார “எடையைக்” கொண்டுள்ளன. ஆனால், ஐ.நா, பன்னாட்டு நிதியம் மற்றும் உலக வங்கி போன்ற சர்வதேச அமைப்புகளில் அவற்றுக்கு ஈடான அரசியல் செல்வாக்கு இல்லை. இந்த முரண்பாட்டைத்தான் இந்தப் பிரகடனம் தீர்க்க முயல்கிறது.ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக் கவுன்சிலில் சீர்திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும் என்று இப்பிரகடனம் கோருகிறது; இந்த அமைப்பில் சீனாவும் ரஷ்யாவும் மட்டுமே நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன. ‘இதுவரை எந்தப் பெண்ணும் ஐநா பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்படவில்லை’ என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளதற்காக இந்தப் பிரகடனத்தை நாம் பாராட்ட வேண்டும். விரைவில் புதிய பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட உள்ள நிலையில், இந்த விவகாரம் உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டும். மேலும், தேர்ந்தெடுக்கப்படும் அந்தப் பெண் உலக தெற்கின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்துபவராகவும், அவற்றுக்காக நிற்பவராகவும் இருக்க வேண்டும்.
இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் பகுதியிலிருந்து ஒருவரும், ஆபிரிக்கா மற்றும் ஆசியாவிலிருந்து தலா இருவர் மட்டுமே இதுவரை இந்தப் பதவியை வகித்துள்ளதால் இது கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. வளர்ந்து வரும் மற்றும் வளரும் நாடுகளின் மாறிவரும் பலத்தை பிரதிபலிக்கும் வகையில் பன்னாட்டு நிதியம் மற்றும் உலக வங்கிகளில் சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்றும், அதிகப்படியான வாக்களிப்பு மற்றும் ஒதுக்கீட்டுப் பிரதிநிதித்துவத்தையும், மிகவும் வெளிப்படையான தலைவர் தேர்வு முறைகளையும் ஆதரிக்க வேண்டும் என்றும் இப்பிரகடனம் கோருகிறது. இது உலக வர்த்தக அமைப்பின் சீர்திருத்தத்தை ஆதரிக்கிறது மற்றும் திறந்த, கணிக்கக்கூடிய மற்றும் விதிகள் சார்ந்த பன்முக வர்த்தக அமைதிக்கான தனது ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. உயர்ந்துவரும் வரிகள், வரிகள் அல்லாத தடைகள் மற்றும் பாதுகாப்புக் கொள்கைகள் குறித்து இது தீவிர கவலை தெரிவிக்கிறது. சர்வதேச சட்டத்திற்கு முரணான ஒருதரப்புத் தலையீட்டு நடவடிக்கைகளைக் கண்டிக்கும் பிரகடனம், இத்தகைய நடவடிக்கைகள் ஏழைகளையும் எளியவர்களையும் எந்த விகிதாச்சாரமுமின்றிப் பாதிக்கின்றன என்பதைக் குறிப்பிடுகிறது.
ஒருதரப்புப் பொருளாதாரத் தடை கடுமையாக்கப்பட்டதன் காரணமாக கியூபா மீது கடும் தாக்கம் ஏற்பட்டுள்ளது குறித்து கவலை தெரிவித்துள்ளதோடு, அதனை முடிவுக்குக் கொண்டு வருவதன் அவசியத்தையும் இது மீண்டும் வலியுறுத்தியுள்ளது.இவை வரவேற்கத்தக்க நிலைப்பாடுகள்தான். ஆனால், அவை உலகளாவிய முதலாளித்துவத்தின் நிறுவனங்களை மாற்றுவதற்குப் பதிலாக, அவற்றைச் சீர்திருத்தும் எல்லைக்குள் மட்டுமே நிற்கின்றன. இந்தப்பிரகடனம் டொலரின் அந்தஸ்தையும், பன்னாட்டு நிதியத்தின் நிபந்தனைகளையும், தெற்கு உலக நாடுகளை என்றென்றும் அடிமைத்தனத்தில் வைத்திருக்கும் கடன்கட்டமைப்பையும் எதிர்த்துச் சவால் விடுக்கவில்லை. பிரிக்ஸ் அவசரகாலக் காப்பு நிதி ஏற்பாடும், பிரிக்ஸ் பலதரப்பு உத்தரவாதத் திட்டமும் நிதி மீள்தன்மையை நோக்கி எடுக்கப்பட்ட சிறிய அடிகளே ஆகும். முன்மொழியப்பட்டுள்ள பிரிக்ஸ் தானியப் பரிமாற்றம்மற்றும் விவசாய வர்த்தக வலைப்பின்னல் ஆகியவை உலகளாவிய உணவு முறைகளைக் கட்டுப்படுத்தும் பெருநிறுவன விவசாய ஏகபோகங்களை எதிர்க்காமல் உணவுப் பாதுகாப்பைக் கையாள முயல்கின்றன
தெற்கு உலகின் முன்னுள்ள சவால்கள்
வறுமை, சுகாதாரம், வேலையின்மை, கடன் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவை தெற்கு உலகின் முன்னுள்ள சவால்களாகும். 10 கோடிக்கும் அதிகமான மக்களை வறுமையிலிருந்து மீட்டெடுத்து, உள்நாட்டுத் தொழில்நுட்பத் திறனை வளர்த்துக் கொண்டுள்ள சீனாவைத் தவிர, மற்ற பிரிக்ஸ் நாடுகள் இந்தச் சவால்களை எதிர்கொள்கின்றன. இந்தப் பிரகடனம்இந்தச் சவால்களை ஒப்புக்கொள்கிறது: 2030 நிகழ்ச்சி நிரலுக்கு உறுதியளிக்கிறது, பெரும்பாலான சவால்களுக்கு மூலக் காரணமாக சமத்துவமின்மையை ஒப்புக்கொள்கிறது, சமத்துவமின்மை குறித்த சர்வதேச குழுவுக்கான முன்மொழிவுகளைக் கவனத்தில் கொள்கிறது. இது செயற்கை நுண்ணறிவு ஆளுமை, டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு, சுகாதார ஒத்துழைப்பு, காசநோய், உணவுப் பாதுகாப்பு மற்றும் பேரிடர் தயார்நிலை ஆகியவற்றைக் கையாள்கிறது.
ஆனால், பிரச்சினைகளை அங்கீகரிப்பது என்பது தீர்வாகிவிடாது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும் அதன் ஆக்கிரமிப்பையும் எதிர்த்து நிற்பதன் மூலமாகவும், புறப்பகுதிகளிலிருந்து உபரியைப் பிரித்தெடுத்து மையப்பகுதியில் குவிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட உலகளாவிய ஒழுங்கின் நிபந்தனைகளை ஏற்க மறுப்பதன் மூலமாகவும் மட்டுமே இந்தச் சவால்களைசந்திக்க முடியும். அமெரிக்க பெருநிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ள அடிப்படை அறிவுசார் சொத்துரிமைஆட்சிமுறை அப்படியே தொடர்ந்தால், தெற்கு உலகிற்கான செயற்கை நுண்ணறிவு வளங்கள்மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான பிரகடனத்தின் கோரிக்கை அர்த்தமற்றதாகிவிடும். பெரிய மருந்து நிறுவனங்களின் ஏகபோக விலை நிர்ணயம் எதிர்த்து தகர்க்கப்படாவிட்டால், பிரிக்ஸின் உலகளாவிய சுகாதாரப் காப்பீட்டுக்கான ஆதரவு வெற்று முழக்கமாகவே இருக்கும். அமெரிக்காவிலும் ஐரோப்பிய ஒன்றியத்திலும் உள்ள விவசாய மானியங்கள் உலகளாவிய சந்தைகளைத் தொடர்ந்து சிதைத்தால், அதன் உணவுப் பாதுகாப்பு ஏற்பாடுகள் போதுமானதாக இருக்காது.
காலநிலை மாற்றம்: வளர்ந்த நாடுகள் பணம் செலுத்த வேண்டும்
காலநிலை மாற்றம் என்பது பிரிக்ஸில் ஒரு முக்கிய கவலையாகும். நேபாளத்தில் கண்டறியப்பட்ட சமீபத்திய இயற்கைப் பேரிடர் மற்றும் நம் நாட்டில் எல் நினோ தாக்கங்கள், ஒருபுறம் பருவமழை பொய்த்தல் மற்றும் கடுமையான வெள்ளப்பெருக்கு, மறுபுறம் வறட்சி போன்றவை நம் நாட்டின் மீது காலநிலை மாற்றத்தின் தாக்கத்தைப் பிரதிபலிக்கின்றன. இத்தகைய பின்னணியில், இப்பிரகடனம் வலுவான பேரிடர் அபாயக்குறைப்பு அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்துள்ளதும், பேரிடர்களை எதிர்கொள்வதற்கான நிதி ஒதுக்கீட்டில் பெரிய இடைவெளிகள் உள்ளிட்ட தீவிரமான காலநிலை சார்ந்த நிதிச் சவால்களை வளரும் பொருளாதாரங்கள் எதிர்கொள்கின்றன என்பதை அங்கீகரித்துள்ளதும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் இங்கேயும் கூட, குற்றவாளிகளின் பெயர்களைக் குறிப்பிடாமல் பிரகடனம் நின்றுவிடுகிறது.
காலநிலை நெருக்கடி என்பது பகிரப்பட்ட பொறுப்பல்ல. இது வளர்ந்த நாடுகளின் இரண்டு நூற்றாண்டுகாலக் கட்டுப்பாடற்ற கார்பன் (கரியமில வாயுக் கழிவு) உமிழ்வுகளின் விளைவாகும். ஐக்கிய நாடுகள் சபையின் பருவநிலை மாற்றத்திற்கான கட்டமைப்பு மாநாட்டில் பொறிக்கப்பட்டுள்ள பொதுவான ஆனால் வேறுபடுத்தப்பட்ட பொறுப்புக் கொள்கை நிலைநிறுத்தப்பட வேண்டும். தெற்கு உலக நாடுகள் அல்ல, வளர்ந்த நாடுகளே இதற்குப் பொறுப்பேற்க வேண்டும்.தாங்கள் அடிமைப்படுத்திச் சூறையாடிய நாடுகளுக்கு அவை காலநிலைக் கடன் வைத்துள்ளன; மேலும் தொழில்நுட்பப் பரிமாற்றம், சலுகைக் கடன் மற்றும் தங்கள் நாட்டில் உண்மையான கார்பன் உமிழ்வைக் குறைப்பது ஆகியவற்றின் மூலம் அவர்கள் அதைச் செலுத்த வேண்டும். பிரிக்ஸ் நாடுகள் முன்பாதுகாப்பு நிதிக்கு மட்டும் கோரிக்கை விடுக்காமல், காலநிலைமாற்றச் சேதங்களுக்கு இழப்பீடு கோர வேண்டும்.
இந்தியா: அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இளைய பங்காளி
புதுடெல்லி பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் மிக அப்பட்டமான முரண்பாடு இந்திய அரசின் நடவடிக்கையாகும். பா.ஜ.க தலைமையிலான ஒன்றிய அரசு அமெரிக்காவுடன் சமரசம் செய்து கொண்டு அதன் இளைய பங்காளியாகச் செயல்படும் வெளியுறவுக் கொள்கையைக் கைக்கொண்டுள்ளது. இது பன்முகத்தன்மையின் அடிப்படைக்கே எதிரானது.
சீனாவைக் கட்டுப்படுத்த வடிவமைக்கப்பட்ட குவாட், ஆக்கஸ் (AUKUS), மற்றும் இராணுவ மற்றும் வர்த்தக ஏற்பாடுகள் மூலம் இந்தியா அமெரிக்காவுடனான நீண்ட கால இராணுவம் சார் சூழ்ச்சிக் கூட்டணிக்குள் சிக்கி அந்த உறவை ஆழப்படுத்தியுள்ளது. கிழக்கு ஜெருசலேமைத் தலைநகராகக் கொண்டு 1967 எல்லைகளுக்குள் பலஸ்தீன சுயநிர்ணய உரிமையைபிரகடனம் கோரும் அதேவேளையில், அது இஸ்ரேலுடன் ஒரு இராணுவம் சார் சூழ்ச்சியின் கீழான உறவைப்பேணி வருகிறது. ஈரான், வெனிசுலா மற்றும் கியூபா மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பு குறித்து அது மௌனம் காத்துள்ளது. காசாவில் இஸ்ரேலிய இனப்படுகொலை வன்முறையைக் கூட அது திட்டவட்டமாகக் கண்டிக்க மறுத்துவிட்டது. இது பன்முகத்தன்மையில் உறுதி கொண்ட ஒரு நாட்டின் செயல் அல்ல. அமெரிக்க மேலாதிக்கத்தை எதிர்கொள்வதற்கான விலையைக் கொடுக்காமல், பிரிக்ஸ் உறுப்பினராக இருப்பதன் பலன்களைப் பெற விரும்பும் ஒரு நாட்டின் செயலாகும். மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு அமெரிக்கத் திசைக்கு ஏற்ப நடனமாடிக்கொண்டு, தெற்கு உலகின் மேஜையில் அமர விரும்புகிறது.
பா.ஜ.க அரசு தனது வெளியுறவுக் கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்; அமெரிக்காவால் குறிவைக்கப்பட்ட பலஸ்தீனம், ஈரான், கியூபா, வெனிசுவேலா மற்றும் பிற நாடுகளுடன் ஒற்றுமையுடன் நிற்க வேண்டும். பா.ஜ.க அரசு வெளிப்புற மற்றும் உள்நாட்டு யதார்த்தங்களை எதிர்கொள்ளக் கற்றுக் கொள்ள வேண்டும். மேற்கு ஆசியாவில் உள்ள 15 நாடுகளில் அரபு ஆராய்ச்சி மற்றும் கொள்கை ஆய்வு மையம் நடத்திய ஆய்வின்படி, 44 சதவீதத்தினர் இஸ்ரேலையும், 21 சதவீதத்தினர் அமெரிக்காவையும் அரபு பாதுகாப்பிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் நாடுகளாகக் குறிப்பிட்டுள்ளனர். ஈரான் 6 சதவீதத்துடன் வெகு தொலைவில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இது ஒருபுதிய போக்கு அல்ல: இஸ்ரேல் தொடர்ந்து முதலிடத்திலும், அமெரிக்கா தொடர்ந்து இரண்டாவது இடத்திலும் உள்ளன. இஸ்ரேலியக் கொள்கைகள் அரபு பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை அச்சுறுத்துவதாக பதிலளித்தவர்களில் பெரும்பான்மையான 84 சதவீதம் பேர் ஒருமுகமாக ஒப்புக்கொண்டனர், அதே நேரத்தில் 77 சதவீதம் பேர் அமெரிக்கக் கொள்கைகளைப் பற்றியும் அவ்வாறே தெரிவித்தனர். பொதுவாக அமெரிக்கா மீதான தங்கள் உணர்வுகள் குறித்துக் கேட்கப்பட்டபோது, 56 சதவீதம்பேர் எதிர்மறையான உணர்வுகளை வெளிப்படுத்தினர் – இது ஒரு பத்தாண்டுக்கு முன்பை விட அதிகமான சதவீதமாகும். இது அரபு உலகின் மனநிலை மட்டுமல்ல. 36 நாடுகளை உள்ளடக்கிய பியூ ரிசர்ச் சென்டரின் 2026 வசந்த கால உலகளாவிய மனப்பான்மை ஆய்வு, பெரும்பாலான நாடுகளில் பெரும்பான்மையினர் இஸ்ரேல் மீது எதிர்மறையான பார்வைகளைக் கொண்டுள்ளனர் என்பதைக் கண்டறிந்துள்ளது. இந்திய அரசு இந்த யதார்த்தத்தைத் தன் கண்களை திறந்து பார்த்து, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிடமிருந்து விலகி நிற்க வேண்டும்.
மற்றொரு யதார்த்தம் உள்நாட்டு நிலவரம் சார்ந்ததாகும். பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்கு முன்னதாக சேரிகளைத் துணியால் மறைப்பதன் மூலமும், வீடற்றவர்களை நகர மையங்களிலிருந்து அகற்றுவதன் மூலமும் அரசாங்கம் வறுமையை “மறைக்க” முயன்றது. வறுமை, பணவீக்கம், வேலையின்மை மற்றும் வீடற்ற தன்மை ஆகியவற்றை கம்பளத்தின் கீழ் துடைத்துத்தள்ளவோ அல்லது பொருளாதார புள்ளிவிவரங்கள் மற்றும் விளம்பர வெளிச்சங்கள் மூலம் மடைமாற்றவோ முடியாது.
முன்னுள்ள பாதை
புதுடெல்லி பிரிக்ஸ் பிரகடனம் தெற்கு உலகின் குறைகளை வெளிப்படுத்துகிறது. இது ஒருதரப்புத் பொருளாதாரத் தடைகளை எதிர்த்துக் குரல் எழுப்புகிறது, பலஸ்தீன உரிமைகளை ஆதரிக்கிறது, மற்றும் நிறுவன சீர்திருத்தங்களைக் கோருகிறது. ஆனால் பிரகடனங்கள் மக்களை விடுவிப்பதில்லை. போராட்டங்களே விடுவிக்கும். இடதுசாரிகள் பிரகடனத்திற்கும் யதார்த்தத்திற்கும் இடையிலான இடைவெளியை அம்பலப்படுத்த வேண்டும், அரசாங்கங்களைப் பொறுப்புக்கூற வைக்க வேண்டும்; மேலும் உண்மையான மாற்றத்தைக் கட்டாயப்படுத்தக் கூடிய போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். பிரிக்ஸ் என்பது ஏகாதிபத்திய எதிர்ப்பு மன்றம் அல்ல. எனினும் இதைக் கைவிடுவது நமது பணியல்ல, மாறாக அதை மாற்றியமைத்து வெறும் பன்முகத்தன்மையின் எல்லைகளுக்குஅப்பால் கொண்டு செல்வதே நமது பணியாகும். பலஸ்தீனம், ஈரான், கியூபா மற்றும் வெனிசுவேலா நாட்டுமக்களுக்கு பிரகடனங்களை விடக் கூடுதலாக நடவடிக்கை தேவை. அந்த நடவடிக்கை என்பது ஒழுங்கமைக்கப்பட்ட உழைக்கும் வர்க்கம், விவசாயிகள், இளைஞர்களிடமிருந்தும்; மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் கட்டமைக்கப்படும் உலகத்தை ஏற்க மறுக்கும் அனைவரிடமிருந்தும் வரும். அந்தப்போராட்டம் தொடர்கிறது.
மூலம்: BRICS: Aspirations amidst Contradictions
தமிழில்: எஸ்.பி.ஆர்

