Site icon சக்கரம்

காஸா முதல் ‘ஃப்ளை டுபாய்’ (Fly Dubai) விமான சம்பவம் வரை

–பாரதி ஆனந்த்

ஒக்ரோபர் 7, 2023 – உலக வரலாற்றில் ஒரு முக்கியமான நாள். அன்றைய தினம் இஸ்ரேல் மீது ஒபரேஷன் ‘அல்-அக்ஸா வெள்ளம்’ (Operation Al-Aqsa Flood) என்ற பெயரில் ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலியர்கள் உள்பட 1,200 பேர் கொல்லப்பட்டனர். அதன் பின்னர் இஸ்ரேல் தாக்குதலில் 74,000+ பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். காஸாவில் 1.50 இலட்சம் பேர் ஊனமுற்றுள்ளனர். பலரைக் காணவில்லை. சுமார் 6 இலட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்தான உணவு, கல்வி, சுகாதாரம் என எந்த அடிப்படை உரிமைகளும் இன்றி தவிக்கின்றனர். 2.2 மில்லியன் மக்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது.

இதற்கும் ‘ஃப்ளை டுபாய்’ விமான சம்பவத்துக்கும் நேரடியாக எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால், ஒக்ரோபர் 27 ஆம் திகதி இஸ்ரேலில் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதில், காஸா தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

இந்தத் தேர்தலில் இஸ்ரேலின் மையவாதக் கட்சியான யாஷர் (Yashar) கட்சித் தலைவரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான காடி ஐசென்கோட்(Gadi Eisenkot)-டுக்கு சாதகமான போக்கு நிலவுவதாகக் கூறப்படுகிறது. இந்தக் கருத்துக் கணிப்புகள் ஆளுங்கட்சிக்கு உளைச்சலாக இருந்த நிலையில், இப்போது நடந்துள்ள ‘ஃப்ளை டுபாய்’ விமான சம்பவத்தால், இஸ்ரேலின் முன்னணி வலதுசாரி மற்றும் தேசியவாத அரசியல் கட்சியான லிகுட் கட்சியின் பெஞ்சமின் நெதன்யாகு தான் ‘இஸ்ரேலின் பாதுகாவலர்’ என்றொரு பார்வைக் கோணம் உருவாகியிருக்கிறது.

தேர்தலில் மீண்டும் வெற்றி பெற இதுபோன்ற ‘நரேட்டிவை’ உருவாக்க நெதன்யாகு கடும் பிரயத்தனம் செய்துவந்த நிலையில், இந்தச் சம்பவம் ‘பழம் நழுவி பாலில் விழுவது’ போல் அவருக்கு சாதகமாக அரங்கேறியுள்ளது என்று வெளிநாட்டு ஊடகங்கள் பலவும் சுட்டிக்காட்டுகின்றன.

எச்சரித்த நெதன்யாகு..!

‘ஃப்ளை டுபாய்’ சம்பவத்துக்கு சில மணி நேரங்களுக்கு முன்னர், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில் அவர் கூறியது:

ஒக்ரோபர் 27 ஆம் திகதி இஸ்ரேலில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதைப் பயன்படுத்தி எதிரிகள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தக்கூடும் என்று எனக்கு அறிகுறிகள் கிடைத்துள்ளன. எங்களுடன் விளையாடாதீர்கள். இப்போதும், எப்போதும் இஸ்ரேலின் நீண்ட கரங்கள் உங்களை எந்த இடத்திலும் வந்து தாக்கும்.

இவ்வாறாக, ‘இஸ்ரேலின் பாதுகாவலர் நான் தான்’ என்ற தொனியில் நெதன்யாகு பேசியிருந்தார். இதை இஸ்ரேலிய எதிர்க்கட்சிகள் தேர்தல் கூத்து என்று விமர்சித்திருந்தன. மேலும், ஒக்ரோபர் 7, 2023 தோல்வியைத் திசைத்திருப்பும் முயற்சி என்றும் விமர்சித்து இருந்தன.

ஆனால், ‘ஃப்ளை டுபாய்’ விமானத்தில் நடந்த சம்பவம் நெதன்யாகுவின் எச்சரிக்கை சரி என்று இஸ்ரேலியர்களை நம்பவைத்துள்ளது.

ஃப்ளை டுபாய் விமானத்தில் நடந்தது என்ன?

டுபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு 180 பயணிகளுடன் பறந்த ‘ஃப்ளை டுபாய்’ விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது, துணை விமானி திடீரென கொக்பிட்டைப் (cockpit) பூட்டிவிட்டு, கேப்டன் ஸ்மித் மச்சார் (Smit Machchhar) மீது கத்தியால் தாக்குதல் நடத்தியுள்ளார். விமானத்தைக் கீழே மோதி விபத்துக்குள்ளாக்க துணை விமானி முயன்றதாகக் கூறப்படுகிறது.

படுகாயமடைந்த நிலையிலும் கேப்டன் ஸ்மித் அப்போது துணை விமானியை எதிர்த்து தைரியமாக சண்டையிட்டு, விமானத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயன்றுள்ளார். விமானம் திடீரென கீழ்நோக்கி சரிந்ததை அடுத்து, கொக்பிட்டில் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பயணிகளும், மாற்று விமானிகளும் கொக்பிட் கதவைத் திறந்து தாக்குதல் நடத்திய துணை விமானியை மடக்கிப் பிடித்தனர். இதன்மூலம் விமானம் சவுதி அரேபியாவின் தபூக் விமான நிலையத்தில் அவசரமாகத் தரை இறக்கப்பட்டது.

இந்தச் சம்பவத்தால் இஸ்ரேலின் நீண்ட கால பிரதமராக இருக்கும் நெதன்யாகு, ‘இஸ்ரேலின் பாதுகாவலர்’ (the protector of Israel) என்ற தனது பிம்பத்தை மீள்கட்டமைப்பு செய்திருப்பதாக நம்புவதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

சமூக வலைதளப் பதிவு…

‘ஃப்ளை டுபாய்’ சம்பவம் நடந்த வெகு சில மணி நேரங்களிலேயே நெதன்யாகு தனது சமூக வலைதளப் பக்கங்களில் சில புகைப்படங்களையும், வீடியோவையும் பகிர்ந்தார். அதில், ஃப்ளை டுபாய் விமானத்தில் பயணித்த பயணியை அவர் ஆரத்தழுவி வாழ்த்தும் காட்சி. அந்தப் பயணி காக்பிட்டில் சத்தம் கேட்டு ஓடி உதவிய பயணிகளில் ஒருவர். அவர் நெதன்யாகுவின் ஆதரவாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது. நெதன்யாகு பகிர்ந்த புகைப்படங்களில் அந்தப் பயணியின் சட்டை இரத்தக் கறைகளுடன் இருந்தது.

ஒக்ரோபர் 7 தோல்வியும், விமர்சனங்களும்..

ஒக்ரோபர் 7 தாக்குதல் குறித்த அதிருப்திகள், விமர்சனங்கள் நெதன்யாகு மீது இருந்தாலும் கூட, அதை அவர் இதுவரை ஏற்றுக் கொள்ளவில்லை. ஒக்ரோபர் 7 தாக்குதல் குறித்து நீதி விசாரணை ஆணையம் அமைக்கவிடாமல் நெதன்யாகு தடுத்தார். தனக்குச் சாதகமான ஒரு விசாரணைக் குழுவை அமைக்க முயன்று அதில் தோல்வியுற்றார்.

இறுதியாக, “பாதுகாப்புப் படையின் உயரதிகாரிகள் எனக்கு ஹமாஸ் தாக்குதல் பற்றி முறையாக எச்சரிக்கத் தவறிவிட்டனர். ஒக்ரோபர் 7 அன்று என்னை தூக்கத்தில் இருந்து முன்னரே எழுப்பியிருப்பார்கள் என்றால், நிலைமை முற்றிலும் வேறாக இருந்திருக்கும்,” என்று கூறிவருகிறார்.

ஆனால், 2023 தாக்குதலுக்கு சில நாட்களுக்கு முன்பே, இஸ்ரேலின் பாதுகாப்பு அமைப்புகளுக்கும், நெதன்யாகுவுக்கும் நேரடியாகவே தெளிவான எச்சரிக்கைகள் வந்ததாக பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த எச்சரிக்கைகள் உயர் பதவியில் உள்ள அரபு அதிகாரிகளிடமிருந்து, எகிப்து உளவுத் துறை அமைச்சர் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத் தலைவர் முகமது பின் சயீத் போன்றவர்களிடம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. ஏன், இந்தத் தாக்குதலின் மூளையாகச் செயல்பட்ட ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வாரிடம் இருந்தே நெதன்யாகுவுக்கு நேரடி எச்சரிக்கை வந்ததாகவும் பல்வேறு அறிக்கைகளும் கூறுகின்றன.

ஆனால், நெதன்யாகுவும், இஸ்ரேல் பாதுகாப்புப் படை அதிகாரிகளும் ‘காஸாவில் வெடிக்கப் போகும் பூகம்பம்’ என்ற ஹமாஸின் எச்சரிக்கையை பாலஸ்தீனர்கள் ஏதோ பொருளாதார சலுகைகளை எதிர்பார்ப்பதாகப் புரிந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

1973 இஸ்ரேல் – அரபு போருக்கு முன்னால் எதிரிகளின் வியூகங்களை இஸ்ரேல் சரியாகக் கணிக்காமல் போனது. இதை இஸ்ரேல் conceptzia என்று அழைப்பதுண்டு. அதுபோலத்தான் ஒக்ரோபர் 7, 2023 தாக்குதலும் இஸ்ரேல் உளவுத் துறையின் தவறான அனுமானங்களின் விளைவு என்று கூறப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் நெதன்யாகுவின் தவறான கொள்கை முடிவும் காரணம் என்று கூறப்படுகிறது. 2018 முதலே கத்தாரில் இருந்து ஹமாஸுக்கு நிதியுதவி செல்வதை நெதன்யாகு அனுமதித்திருக்கிறார். அந்த நிதியுதவியால் அமைதியை நிலைநாட்ட முடியும் என்று அவர் நம்பியிருக்கிறார். ஆனால் அந்த நிதி காஸாவில் நலிந்த மக்களுக்குச் செல்லாமல், ஹமாஸ் தன்னை இராணுவ ரீதியாக வலுப்படுத்தவே சென்றது என்பது விமர்சனம்.

இஸ்ரேல் உளவுத் துறை, இஸ்ரேல் பிரதமரின் தவறான conceptzia தான் ஒக்ரோபர் 7, 2023 தாக்குதலுக்கு காரணம் என்பது எதிர்க்கட்சிகளின் விமர்சனம்.

எதிர்க்கட்சிகளுக்கு சாதகமா?

ஒக்ரோபர் 27 இஸ்ரேல் தேர்தலில் “ABBA” என்ற முழக்கம் பிரபலம் அடைந்துவருகிறது. இதற்கு ஆங்கிலத்தில் (Anyone But Bibi Again) என்று விரிவாக்கம். ‘பிபி’ என்பது நெதன்யாகுவின் செல்லப் பெயர். இந்தத் தேர்தலில் நெதன்யாகுவை தவிர வேறு யார் வேண்டுமானாலும் பிரதமராகலாம் என்பதை முன்னெடுக்க இந்தப் பதம் பயன்படுத்தப்படுகிறது.

அதுவும் குறிப்பாக பிரதான எதிர்க்கட்சியான யாஷர் கட்சி (Yashar Party) இதை வலுவான பிரச்சார உத்தியாக கையிலெடுத்துள்ளது. இதன் தலைவர் காடி ஐசென்கோட் தான் பிரதமர் வேட்பாளர். காஸாவுக்கு எதிரான போரில் உயிர் நீத்தவர்களில் இவரது மகனும் ஒருவர்.

தேர்தல் கருத்துக் கணிப்புகளும் கூட பெரும்பான்மை கட்சியாக யாஷர் கட்சி வரக்கூடும் என்கின்றன. ஆனாலும், கூட்டணி அமைப்பது கடினமாக இருக்கலாம், ஏனென்றால் ஐசென்கோட்டின் அணி வலதுசாரி, இடதுசாரி மற்றும் மையம் சார்ந்த கட்சிகளின் கலவையாக உள்ளது, நெதன்யாகுவை வெளியேற்ற வேண்டும் என்ற ஒரே இலக்கைத் தவிர அவர்களுக்குள் பொதுவான கருத்து எதுவும் பெரிதாக இல்லை. நஃப்தாலி பென்னட் மற்றும் யாயர் லாபிட் தலைமையில் இதே போன்ற ஒரு கூட்டணி 2022 இல் விரைவாகவே உடைந்து போனது சுட்டிக்காட்டப்படுகிறது.

அதேபோல், ஆட்சியில் அடுத்து அமரப்போகும் கட்சி யூத கட்சியாகவே இருக்க வேண்டும் என்று பல்வேறு யூத கட்சிகளும் விரும்புகின்றன.

சமீப காலம் வரை, கருத்துக் கணிப்புகள் ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவே தொடர்ந்து சுட்டிக் காட்டி வந்தன. ஆனால் கடந்த சில வாரங்களாக, பிபி (நெதன்யாகு) ஆதரவு மற்றும் எதிர்ப்பு அணிகளுக்கு இடையிலான வித்தியாசம் நெருக்கமாகி உள்ளன.

இந்தச் சூழலில் ‘ஃப்ளை டுபாய்’ விமான சம்பவம் நெதன்யாகுவுக்கு ஓரளவு சாதகமாகத் திரும்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.

-இந்து தமிழ்
2026.10.01

Exit mobile version