Site icon சக்கரம்

எமது நினைவுகளையும் மாற்ற வல்லதா AI?

-க.போத்தி ராஜ்

செயற்கை நுண்ணறிவு (AI) நமது அன்றாட வேலைகளையும் தகவல்களைத் திரட்டும் முறையையும் மிகவும் எளிதாக்கியுள்ளது என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், தகவல்களைப் பகுப்பாய்வு செய்து செயற்கை நுண்ணறிவு, நமக்குச் சுருக்கி அளிக்கும் விவரங்கள், மனித மூளையின் நினைவாற்றல் அமைப்பையே மாற்றியமைக்கும் திறன் கொண்டவை என்று புதிய ஆய்வுகள் எச்சரிக்கின்றன. இது வெறும் தொழில்நுட்ப வளர்ச்சி சார்ந்த விஷயம் மட்டுமல்ல. நமது சிந்தனைத் திறனுக்கும் சுயமாக யோசிக்கும் ஆற்றலுக்கும் விடுக்கப்பட்ட மிகப் பெரிய சவால்.

இன்றைய வேகமான உலகமயமாக்கல் சூழலில், நீண்ட கட்டுரைகளையோ அல்லது பல பக்கங்களைக் கொண்ட ஆய்வறிக்கைகளையோ முழுமையாகப் படிக்க மனிதர்களுக்கு நேரமில்லை. இதன் காரணமாக, சாட்ஜிபிடி (ChatGPT), கூகுள் ஜெமினி (Google Gemini) போன்ற AI கருவிகளிடம், ‘இதைச் சுருக்கமாகச் சொல்’ என்று கேட்கிறோம். அவையும் நொடிப் பொழுதில் தகவல்களைச் சுருக்கித் தருகின்றன.

செயற்கை நுண்ணறிவுக் கருவிகள் தகவல்களைச் சுருக்கித் தரும்போது இரண்டு முக்கியத் தவறுகளைச் செய்வதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்:

1. முக்கிய தகவல்களை விட்டுவிடுவது:

கட்டுரையின் மிக முக்கியமான விவரங்களை ஏஐ கருவிகள் விட்டுவிடுகின்றன. பல்வேறு கட்டளைகள் (prompts) மற்றும் மாதிரிகளை (models) வைத்து ஆய்வு செய்ததில், சுமார் 51.6% முக்கியமான தகவல்களை ஏஐ கருவிகள் சுருக்கத்தில் சேர்ப்பதில்லை என்று தெரியவந்துள்ளது.

2. தவறான தகவல்களை உருவாக்குவது:

இல்லாத ஒரு விஷயத்தை இருந்தது போலவோ அல்லது தவறான முறையிலோ சித்தரித்துச் சுருக்கமாக வழங்குகின்றன. மனிதர்களும் தொழில்நுட்பத்தின் மீதுள்ள நம்பிக்கையால், ஏஐ வழங்கியது உண்மை என நம்புகிறார்கள்.

மனித நினைவாற்றலைச் சிதைக்கும் ஏஐ மனித மூளை மிகவும் சுவாரசியமானது. அதேசமயம் எளிதில் ஏமாறக்கூடிய தன்மையும் கொண்டது. ஒரு நிகழ்வை நாம் நேரடியாகவே பார்த்திருந்தாலும், அதற்குப் பிறகு அந்த நிகழ்வைப் பற்றி ஏஐ சுருக்கி அளித்த தவறான தகவல்களைப் படிக்கும்போது நமது மூளை குழப்பமடைகிறது. இதனால், மனிதர்கள் நேரடியாகப் பார்த்த, அறிந்த உண்மையான விஷயங்களைக் கூட, ஏஐ அளித்த தகவல்களைப் படித்த பின் மறந்துவிடும் சூழல் ஏற்படுகிறது.

ஆய்வும் முடிவுகளும்

அமெரிக்காவில் உள்ள ஜார்ஜ் டவுன் பல்கலைக்கழகம் மற்றும் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் 331 பேரிடம் நடத்திய ஆய்வின் முடிவுகள் இதனை உறுதிசெய்கின்றன.

அந்த ஆய்வில் பங்கேற்றவர்களிடம் ஜங்ஷன் பகுதியில் நடக்கும் ஒரு கார் விபத்து தொடர்பான அனிமேஷன் காணொளி காண்பிக்கப்பட்டது. 24 முதல் 48 மணிநேரத்திற்குப் பிறகு, ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட அந்தக் காணொளி தொடர்பான சுருக்கக் குறிப்பு அவர்களிடம் காண்பிக்கப்பட்டது. இதில் சிலருக்குத் துல்லியமான சுருக்கமும், சிலருக்குத் தவறான விவரங்கள் அடங்கிய சுருக்கமும் வழங்கப்பட்டன. பின்னர், அந்த நிகழ்வை நினைவுகூர்ந்து விபத்தில் தவறு யாருடையது என்று கூறுமாறு பங்கேற்பாளர்களிடம் கேட்கப்பட்டது. ஆய்வின் முடிவுகள்:

– துல்லியமான சுருக்கத்தைப் படித்தவர்களில் 83.6% பேர் உண்மையான நிகழ்வைச் சரியாக நினைவுகூர்ந்தனர்.

– ஆனால், தவறான விவரங்கள் கொண்ட ஏஐ சுருக்கத்தைப் படித்தவர்களில் 44.8% பேர் மட்டுமே உண்மையைச் சரியாக நினைவில் வைத்திருந்தனர்.

‘இது ஏஐ  உருவாக்கிய சுருக்கம், இதில் தவறுகள் இருக்கலாம்’ என்று முன்கூட்டியே எச்சரித்து, பங்கேற்பாளர்களிடம் கொடுத்தபோதிலும், இந்தத் தவறான தாக்கம் குறையவில்லை.

ஏஐ தவறு செய்யும் என்று நமது அறிவுக்குத் தெரிந்திருந்தாலும், நமது ஆழ்மனது (Unconscious Mind) ஏஐ அளித்த தகவலையே உண்மையான நினைவாகப் பதிவு செய்துகொள்கிறது. தொழில்நுட்பத்தின் மீதான நமது அபார நம்பிக்கையும் இதற்கு ஒரு முக்கியக் காரணமாகும்.

ஆய்வாளர்களின் எச்சரிக்கை :

இந்த ஆராய்ச்சியை வழிநடத்திய ஜோர்ஜ் டவுன் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் மத்தேயா சிம் கூறுகையில்,  “ஏஐ தொழில்நுட்பத்தின் தவறுகளை மனிதர்கள் தலையிட்டுச் சரிசெய்வார்கள் என்று பெரும்பாலும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அதற்கு பதிலாக ஏஐ செய்யும் தவறுகளால் மனித நினைவாற்றலே சிதைக்கப்படலாம் என்று எங்கள் ஆய்வு தெரிவிக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

எந்தெந்தத் துறைகளில் அபாயம்?

நீதிமன்றம் – குற்றவியல்:

ஒரு குற்றச் சம்பவத்தைக் கண்ட சாட்சியிடம், ஏஐ உருவாக்கிய சுருக்கப்பட்ட அறிக்கையைக் காண்பித்தால், அவர் தனது சொந்த நினைவை இழந்து தவறான வாக்குமூலம் அளிக்க வாய்ப்புள்ளது.

மருத்துவத் துறை:

நோயாளியின் மருத்துவ அறிக்கையை ஏஐ சுருக்கித் தரும்போது ஏற்படும் சிறிய தவறும் தவறான சிகிச்சைக்கு வழிவகுக்கும்.

செய்தி – அரசியல்:

சமூக ஊடகங்களில் உலா வரும் ஏஐ வழங்கி சுருக்கப்பட்ட தகவல்களும் செய்திகளும் மக்கள் மத்தியில் தவறான கருத்துகளையும் போலிச் செய்திகளையும் உண்மை என நம்ப வைத்துவிடும்.

செயற்கை நுண்ணறிவுக் கருவிகள் நமக்கு உதவ வந்த உதவியாளர்கள் மட்டுமே. அவை நமது மூளைக்கு மாற்றாக முடியாது. வேகத்தை விடத் துல்லியமே முக்கியம். எனவே, முக்கியமான முடிவுகள் எடுக்கும்போதும், ஆழமான விஷயங்களைக் கற்கும்போதும் ஏஐ அளித்த சுருக்கங்களை மட்டும் நம்பியிருக்காமல், மூல ஆதாரங்களை நாமே நேரடியாகப் படிப்பதே பாதுகாப்பானது. ஏஐ நம் நேரத்தைச் சேமிக்கலாம். ஆனால் நம் நினைவாற்றலைத் தீர்மானிக்க அதை அனுமதிக்கக் கூடாது.

மனித குலத்துக்கே AI அச்சுறுத்தலா?

ஒரு கணனி அல்லது மொபைல்போன் மனிதனின் கட்டுப்பாட்டை மீறி, தானாகவே சிந்திக்கத் தொடங்கினால் என்னவாகும்? மனிதன் உருவாக்கிய ஓர் இயந்திரம், அவனது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய மறுத்து, தனக்கென ஓர் உலகத்தைத் தன்னிச்சையாக இணையத்தில் உருவாக்கத் தொடங்கினால் என்னவாகும்? – இது ஏதோ ஹாலிவுட் திரைப்படத்தின் கதை போல இருக்கிறதா? இது கதை இல்லை. நமது வீட்டு ஜன்னல் கதவுகளுக்கு வெளியே காத்திருக்கும் நிஜம். மனித குலத்தின் ஆகச் சிறந்த கண்டுபிடிப்பான ‘செயற்கை நுண்ணறிவு’ (AI) இன்று மனிதர்களுக்கே சவாலாக, அழிக்கும் சக்தியாக மாறிவிடுமோ என்ற அச்சம்தான் அந்த நிஜம்.

தொழில்நுட்பப் புரட்சிக்கும் மனித குலத்தின் அழிவுக்கும் இடையே மிக மெல்லிய கோடு மட்டுமே உள்ளது. அந்த எல்லைக் கோட்டில் நாம் இப்போது எங்கு நிற்கிறோம்? ஏஐ தொழில்நுட்பம், டீப்ஃபேக், ஏஜிஐ ஆகியவற்றின் அதிவேக வளர்ச்சி, உலகம் முழுவதிலும் ஒரு புதிய அச்ச அலையை உருவாக்கியுள்ளது. பொருளாதார இழப்புகள், உள்கட்டமைப்புச் சீர்குலைவுகள் மற்றும் உயிரியல் அச்சுறுத்தல்கள் வரை ஏஐ ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகள் அசாதாரணமானவை.

தொழில்நுட்பத் தலைவர்களின் எச்சரிக்கை:

“செயற்கை நுண்ணறிவு மனித குலத்தையே அழித்துவிடும்” என்று எலான் மஸ்க், டேரியோ அமோடி (ஆந்த்ரோபிக் சிஇஓ), சாம் அல்ட்மேன் (ஓபன் ஏஐ சிஇஓ) ஆகியோர் எச்சரித்துள்ளனர்.

ஆந்த்ரோபிக் சிஇஓ டேரியோ அமோடி கூறுகையில், “மனிதனின் உதவி இன்றி தானாகவே சிந்தித்து முடிவெடுக்கும் ‘ஏஜென்டிக் ஏஐ’ அமைப்புகள் வேகமாக வளர்ந்து வருகின்றன. இவற்றைச் சரியான முறையில் கட்டுப்பாட்டுக்குள் வைக்கவில்லை என்றால், அடுத்த 6 முதல் 12 மாதங்களுக்குள் இணைய உள்கட்டமைப்புகளில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும்” என்றார்.

ஆந்த்ரோபிக் தனது ‘கிளாட்’ (Claude) மாடலைச் சோதித்தபோது, அது தானாகவே எல்லைகளைத் தாண்டி, அனுமதியின்றி 4 அமைப்புகளுக்குள் ஊடுருவியது கண்டறியப்பட்டது. இதனால் எந்த சேதமும் ஏற்படாவிட்டாலும், ஏஐ அமைப்புகள் தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட வரம்புகளைத் தாண்டிச் செயல்படத் தொடங்கிவிட்டன என்பதையே இது சுட்டிக்காட்டுகிறது. இந்தக் கருத்தை ஆதரிக்கும் சாம் அல்ட்மேன், பாதுகாப்பு அம்சங்கள் மேம்படுத்தப்பட்டு வருவதாகக் கூறினார்.

எலான் மஸ்க் கூறுகையில், “கடுமையான பாதுகாப்பு வழிமுறைகளைச் செய்யாவிட்டால் உயிரியல் சார்ந்த உணர்வு நிலைக்கு ஆபத்து ஏற்படும். அணு ஆயுதப் போருக்கு இணையாக ஏஐ தொழில்நுட்பத்தையொட்டி சர்வதேச விதிகள் அமைக்கப்பட வேண்டும்” என்றார்.

அதேவேளையில், மெட்டா நிறுவனத்தின் தலைமை ஏஐ அறிவியல் அறிஞர் யான் லீசன் மற்றும் மார்க் ஸக்கர்பெர்க் ஆகியோர், “கட்டுப்பாடுகளை விதிப்பது போட்டிச் சூழலுக்கு விரோதமானது” என இந்தப் பாதிப்புகளைக் குறைத்து மதிப்பிடுகின்றனர்.

அரசியல் தலைவர்களின் நிலைப்பாடு

தொழில்நுட்பத் தலைவர்களின் எச்சரிக்கையை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிராகரித்து உள்ளார். “செயற்கை நுண்ணறிவு என்பது மனிதகுலத்தை அழித்துவிடும் என்கிற அச்சுறுத்தும் கணிப்புகள் அனைத்தும் பொய்ப் பிரச்சாரம். வணிக வரலாற்றிலேயே, ஒரு துறையின் தலைவர்கள் கடுமையாக அமல்படுத்தப்படும் கட்டுப்பாடுகளைக் கேட்டு, அதனாலேயே தங்கள் தொழில் அழிந்து திவாலாவதை யாராவது பார்த்திருக்கிறீர்களா?

அமெரிக்க அரசின் விதிகள் புதுமைப் படைப்புகளை முடக்கிவிடும். போட்டியில் சீனா முந்திவிடும். ஏஐ துறையில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்களே உலகை ஆள்வார்கள். ஏஐ-க்கு தேவைப்படும் பாதுகாப்பு வேலி, ஒரு வலுவான மற்றும் புத்திசாலித்தனமான அதிபர் மட்டுமே. அது அமெரிக்காவிடம் தாராளமாகவே உள்ளது” என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

மறுபுறம், சீனா இரண்டு விதமான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. வெளிநாட்டுப் போட்டியை எதிர்கொள்ளும் அதேவேளையில், உள்நாட்டில் கடுமையான கட்டுப்பாடுகளைப் புகுத்துகிறது. எந்தவொரு ஏஐ சேவையும் மக்களின் பயன்பாட்டுக்கு வரும் முன், சீன அரசின் சைபர் சேவை (CAC) ஒப்புதலையும் பாதுகாப்புத் தணிக்கையையும் பெற வேண்டும். பயனர்களின் அடையாளச் சரிபார்ப்பும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஏஐ உண்டாக்கும் முதன்மை ஆபத்துகள்

ஏஐ தொழில்நுட்பத்தின் அச்சுறுத்தல்களை இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவை:

1. உயிரியல் மற்றும் சைபர் ஆபத்துகள்:

ஏஐ தொழில்நுட்பத்தின் சுயகற்றல் திறனானது தீவிரவாதிகள் கைகளில் சிக்கும்போது அது பேராபத்தாக மாறலாம். அனுபவமில்லாத ஒருவர்கூட ஏஐ உதவியுடன் கொடூரமான வைரஸ்கள் அல்லது நச்சுப் பொருட்களை உருவாக்க முடியும். மேலும், மனித தலையீடு இல்லாமல் ஏஐ தானாகவே இணைய வழியில் ஊடுருவி வங்கிச் சேவைகள், அரசுத் தரவுத்தளங்கள் மற்றும் மின்சார விநியோக அமைப்புகளை முடக்கும் அபாயமும் உள்ளது.

2. பொருளாதார, உள்கட்டமைப்பு பலவீனங்கள்:

மென்பொருள் உருவாக்கம், நிதித் துறை, வாடிக்கையாளர் சேவை போன்ற அறிவுசார்ந்த பணிகளில் மனிதர்களின் தேவை குறைக்கப்பட்டு, உலக அளவில் வேலையின்மையும், நிதி இடைவெளியும் அதிகரிக்கும். மேலும், மின்சாரக் கிரிட், போக்குவரத்து போன்ற உள்கட்டமைப்புகள் ஏஐ வசமாகும் சூழலில், அதில் ஏற்படும் சிறிய தவறுகூட நாட்டின் இயக்கத்தையே சீர்குலைத்துவிடும்.

அதனால், ஏஐ தொழில்நுட்பமானது மனித குலத்தை அழிக்குமா என்ற கேள்விக்கான பதில், அதை நாம் எவ்வாறு கையாள்கிறோம் என்பதில்தான் உள்ளது. வர்த்தகப் போட்டி மற்றும் புவிசார் அரசியல் காரணமாக பாதுகாப்பு விதிகளைப் புறக்கணிப்பது, மனிதகுலத்துக்கே ஆபத்தாக முடியக்கூடும் என்பதே பெரும்பாலான வல்லுநர்களின் எச்சரிக்கையாகும்.

செயற்கை நுண்ணறிவு என்பது மனித மூளைக்கு எதிரி அல்ல. அது மனிதனால் உருவாக்கப்பட்ட கருவி மட்டுமே. ஆபத்து என்பது ஏஐ தொழில்நுட்பத்திடம் இல்லை. அதை நாம் எவ்வாறு உருவாக்குகிறோம் மற்றும் பயன்படுத்துகிறோம் என்பதில்தான் இருக்கிறது.

வர்த்தகப் போட்டி காரணமாகப் பாதுகாப்பு விதிகளைப் புறக்கணிப்பது மனிதகுலத்துக்கே ஆபத்தாக முடியும். தீவிரமான பாதுகாப்பு விதிகள், சர்வதேச உடன்படிக்கைகள் மற்றும் தெளிவான வழிகாட்டுதல்களுடன் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினால், நோய்களுக்கு மருந்தைக் கண்டுபிடிப்பதிலும் காலநிலை மாற்றத்தைச் சமாளிப்பதிலும் ‘ஏஐ’ மனிதகுலத்துக்கு உறுதுணையாக இருக்கும்.

Exit mobile version