Site icon சக்கரம்

பொறுத்தது போதும்

சுதந்திரமாகவும் நியாயமாகவும் தேர்தல்களை நடத்துவதற்காக அரசமைப்புச் சட்டத்தின்கீழ் அமைக்கப்பட்ட சுயேச்சையான அதிகார அமைப்பான இந்தியத் தேர்தல் ஆணையம், இன்று ‘ஆடை அணியாத பேரரசனைப்’ போல நிர்வாணமாக நிற்கிறது. பீகாரில் 2025 ஜூன் 24 அன்று வாக்காளர் பட்டியலில் ‘சிறப்பு தீவிர திருத்தப் பணி’ (SIR) தொடங்கப்பட்டபோதே, அது வாக்காளர் பட்டியலைச் சீரமைக்கும் நோக்கம் கொண்டதல்ல என்பது தெளிவாகிவிட்டது. தேர்தல் ஆணையம் கூறியதற்கு மாறாக, இத்தகைய நடவடிக்கைக்கு முந்தைய முன்னுதாரணம் எதுவும் இல்லை. இச்செயல்பாட்டை நாடு முழுவதும் மேற்கொள்வதற்கு முறையான முடிவோ அல்லது தகுந்த ஆய்வோ அடிப்படையாக இருக்கவில்லை.

தேர்தல் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளின் சட்டப்பூர்வ ஏற்பாடுகளும் இந்த நடவடிக்கையை அங்கீகரிக்கவில்லை. இது குடிமக்களின் அரசமைப்புச் சட்ட ரீதியான வாக்குரிமையைப் பெருமளவில் பறிப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருந்தது. எனினும், வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டவர்கள் தன்னிச்சையாகத் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதும் தெளிவாகத் தெரிந்தது. அந்தச் செயல்முறையின் பின்னணியில் ஒரு திட்டமிட்ட சதித்திட்டம் இருந்தது. சமூக-பொருளாதார மற்றும் அடையாளப் பின்னணியின் அடிப்படையில் பா.ஜ.க-விற்கு எதிராக வாக்களிக்க வாய்ப்புள்ள வாக்காளர்களைப் பட்டியலிலிருந்து நீக்குவதற்கான தெளிவான திட்டம் அதில் இருந்தது.

குடியுரிமை விவகாரமும் தன்னிச்சையான நீக்கமும்

பீகார் அனுபவத்திலிருந்தே, சட்டப்பூர்வமான குடியுரிமை விவகாரமே மக்களைக் கட்டுப்படுத்தவும் அல்லது பட்டியலிலிருந்து நீக்கவும் பயன்படுத்தக்கூடிய மிக எளிதான ஆயுதமாக மாறியுள்ளது என்பது தெளிவாகியுள்ளது.கேள்விக்கு உள்ளாக்கப்பட்டு, ‘வெளிநாட்டினர் சட்டத்’ திட்டங்களின்படி அதன்விதிகளுக்கு மாறாக நிரூபிக்கப்படாத வரையில், அனைவருக்குமான குடியுரிமை எனும் முன் அனுமானத்தோடு அனைவருக்குமான வயதுவந்தோர் வாக்குரிமையை உறுதிசெய்யவே அரசமைப்புச் சட்டத்தின் 326 ஆவது பிரிவு உருவாக்கப்பட்டது; ஆனால், அத்தகைய பிரிவு இந்த (நீக்கும்) நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்பட்டது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்.

326 ஆவது பிரிவு குறித்த மேலோட்டமான குறிப்பு, குடியுரிமை தொடர்பான விவகாரத்தை மறைமுகமாக உள்ளே கொண்டுவருவதற்கான ஒரு போலியான காரணமாகவே பயன்படுத்தப்பட்டது. இவ்வளவு பிரம்மாண்டமான நடவடிக்கையை நியாயப்படுத்துவதற்காக, வாக்காளர் பட்டியலில் பெருமளவிலான ‘வெளிநாட்டினர்’ இடம்பெற்றுள்ளதாகக் கூச்சலிட்டுப்பிரச்சாரம் செய்யப்பட்டது. ஆனால், நான்கு மாநிலங்களைத் தவிர்த்து நாட்டின் மற்ற அனைத்துப் பகுதிகளிலும் இப்பணி மேற்கொள்ளப்பட்டு, வாக்காளர் பட்டியலிலிருந்து 13.5 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்ட பின்னரும் கூட, கண்டறியப்பட்ட ‘வெளிநாட்டினர்’ குறித்த எந்தவொரு நம்பகமான புள்ளிவிவரத்தையும் இந்தியத்தேர்தல் ஆணையத்தால் முன்வைக்க முடியவில்லை. உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் ‘கண்டறிதல், நீக்குதல்,வெளியேற்றுதல்’ (detect, delete, deport) என்ற தெளிவான செயல்திட்டமே, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரால் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது.

வாக்காளர் பட்டியலில் ‘சிறப்பு தீவிர திருத்தப் பணி’நடவடிக்கையின்போது நீக்கப்பட்ட சுமார் 13.5 கோடிபெயர்கள், அதற்கு முந்தைய மொத்த எண்ணிக்கையில் ஏறக்குறைய 15 சதவீதமாகும். மாநில வாரியாகவோ அல்லது ஒட்டுமொத்தமாகவோ மக்கள் தொகைக்கும் வாக்காளர் எண்ணிக்கைக்கும் இடையிலான விகிதத்தை ஆராயும்போது, தவிர்க்க முடியாத ஒரே ஒரு முடிவே எட்டப்படுகிறது; அது இச்செயல்முறை பெருமளவிலான மக்களை வாக்களிக்கும் உரிமையிலிருந்து வெளியேற்றியுள்ளது என்பதேயாகும்.

நீதித்துறை தீர்ப்பாயங்களும் புள்ளிவிவர உண்மைகளும்

பிரச்சனை இத்துடன் முடிந்துவிடவில்லை. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, நடைமுறைகளையும் சட்டவிதிகளையும் அப்பட்டமாக மீறியதன் மூலம் இந்தியத்தேர்தல் ஆணையம் தன்னைத்தானே அம்பலப்படுத்திக்கொண்டுள்ளது. குறிப்பாக மேற்கு வங்கச் சட்டமன்றத் தேர்தலின்போது 27 இலட்சம் மக்களின் வாக்குரிமை முடக்கி வைக்கப்பட்ட நிகழ்வு, அதன்செயல்பாட்டின் மிக மோசமான நிலையைக் காட்டியது. உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் கீழ் அமைக்கப்பட்ட தீர்ப்பாயங்கள், தற்போது விசாரணையில் உள்ள அனைத்து வழக்குகளையும் ஆய்வு செய்து முடிப்பதற்கு12 முதல் 25 ஆண்டுகள் வரை ஆகலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளன. இதுவரை ஆய்வு செய்யப்பட்ட மிகச் சில வழக்குகளிலேயே, 93 சதவீத மக்களின் பெயர்கள் மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

உச்சநீதிமன்றத்தில் இந்தியத் தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தின் மூலமே,அதன் குற்றவியல் நடவடிக்கைகள் மேலும் அம்பலமாகியுள்ளன. மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேரத் தீர்ப்பாயங்களை அணுகிய 22 இலட்சம் பேரைத் தவிர, நீதித்துறை அதிகாரிகளால் விடுவிக்கப்பட்ட 33 இலட்சம் பேரில் இருந்து, தனிப்பட்ட ஆட்சேபனையாளர்களுக்காக ஒதுக்கப்பட்ட ‘படிவம் 7’ விண்ணப்பங்களைப் பயன்படுத்தி அவர்களை உள்ளே அனுமதிக்காமல் தடுக்கும் முயற்சியாக, கூடுதலாக 16 லட்சம் பேர் இந்தத் தீர்ப்பாயங்களுக்குப் பரிந்துரைக்கப்பட்டனர். இந்த விண்ணப்பங்களில் கணிசமான பகுதி, தேர்தல் ஆணைய அதிகாரிகளாலேயே முன்மொழியப்பட்டதாகத் தீர்ப்பாயத் தலைவர்களில் ஒருவரான கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதிசுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனநாயகத்தின் மீதான தாக்குதலும் மக்கள் கொந்தளிப்பும்

இத்தகைய அப்பட்டமான தவறுகளில் பா.ஜ.க கைகோர்த்துச் செயல்பட்டது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஒவ்வொரு கட்டத்திலும், எழுப்பப்பட்ட ஒவ்வொரு கேள்விக்கும், இந்தியத் தேர்தல் ஆணையத்தைப் பாதுகாக்க பா.ஜ.க களத்தில் குதித்தது. ஆனால்,வலுவான அரசியல் எதிர்ப்பு இருந்தபோதிலும், வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த செயல்முறை முன்வைத்துள்ள சவாலின் தீவிரம் இன்னும் முழுமையாகப் புரிந்து கொள்ளப்படவில்லை. ஒருபுறம், குடிமக்கள், குறிப்பாக நலிவடைந்த பிரிவினர், பெரும் பாதுகாப்பின்மையால் அவதிப்பட்டனர்; ஆனால் ஒட்டுமொத்த விரக்தி காணப்படவில்லை. மௌனமாக்கப்பட்ட அரைகுறை நீதித்துறைத் தலையீடுகள் நிலைமையைச் சீர்செய்ய உதவவில்லை. உச்ச நீதிமன்றம் அதற்குத் தேவையான அவசரத்தைக் காட்டாமல், அரசமைப்புச் சட்டப் பொறுப்பை நிறைவேற்றுவதில் ஆணையத்தின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதிலேயே அதிக கவனம் செலுத்தியது. இந்தியத் தேர்தல் ஆணையம் தனது தரப்பை அடிக்கடி பொய்களால் திரித்துக் கூறியது நீதித்துறையால் கவனிக்கப்படாமல் போனது.

‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழ் நடத்திய புலனாய்வின் அதிர்ச்சியூட்டும் அம்பலப்படுத்தல், ஒட்டுமொத்த சூழ்நிலையையும் அடியோடு மாற்றியுள்ளது. படிவம் 6 வடிவமைப்பில் செய்யப்பட்ட சட்டவிரோதமாற்றங்கள், பா.ஜ.க தொண்டர்களால் படிவம் 7 தவறாகப் பயன்படுத்தப்பட்டது, இ.ஆர்.ஓ அதிகாரிகளின் சட்டப்பூர்வ அதிகாரங்களைச் சீர்குலைத்த மென்பொருள் வடிவமைப்பு என அனைத்தும் அம்பலமாகின. மேலும், மூன்று பேர் கொண்ட ஆணையத்திற்குள் கருத்து வேறுபாடுகள் நிலவியதும், ஞானேஷ்குமார் தன்னிச்சையாக முடிவுகளை எடுத்ததும் வெளிச்சத்திற்கு வந்தது. சட்டப்படி அனைத்து முடிவுகளும் ஒருமனதாகவோ அல்லது பெரும்பான்மை அடிப்படையிலோ எடுக்கப்பட வேண்டும் என்பதால், மற்ற இருஆணையர்களின் எதிர்ப்பையும் மீறி ஞானேஷ்குமார் எடுத்த முடிவுகள் செல்லாதவையாகின்றன.

ஞானேஷ் குமார் கூற்றுக்கு மாறாக, படிவம் 6 மாற்றங்களுக்குத் தான் ஒப்புதல் அளிக்கவில்லை என உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி வாய்மொழியாகக் கூறியிருப்பது, எஸ்.ஐ.ஆர் முறையைத் தடுத்து நிறுத்த ஒரு சட்டரீதியான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் தொகையில் 15 சதவீதத்தினரின் உரிமைகள் பறிபோவதைத் தடுக்க இது அவசியமாகிறது. ஞானேஷ் குமார் தலைமையில் சுதந்திரமான தேர்தலை நடத்த முடியாது. இதற்கிடையில் ‘வாக்குத் திருட்டு’ குறித்த குற்றச்சாட்டு உச்சத்தை எட்டியுள்ளது. தர்மேந்திர பிரதானை பதவியிலிருந்து அகற்றியதில் கிடைத்த வெற்றியால் உத்வேகமடைந்த இளைய தலைமுறையினர், வாக்குரிமையைக் காக்க வீதிக்கு வந்து போராடுகின்றனர். டெல்லி காவல்துறை போராட்டக்காரர்களைக் கையாண்ட கொடூரமான விதம் நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது. ஒரு முக்கியமான கட்டத்தை நாம் எட்டியுள்ளோம். மோதலைத் தவிர்க்கப்போகிறோமா அல்லது நிலைமைஅராஜகத்தில் முடியப்போகிறதா என்பதை அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும். ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது.

நூறு கோடிக்கும் அதிகமான, விவாதிக்கும் இயல்புடைய இந்தியர்களை, சிந்தனையற்ற நடைபிணங்களாக மாற்றிவிட முடியாது. கண்மூடித்தனமான நம்பிக்கையை விட பகுத்தறிவுதான் வெற்றிபெற வேண்டும். இது ஒரு ‘பனானா ரிபப்ளிக்’ அல்ல-அதாவது, தனியார் பெரும் கோர்ப்பரேட் நிறுவனங்களால் நிர்வகிக்கப்படக்கூடிய நாடு அல்ல; சுதந்திரப் போராட்டத்தின் பாரம்பரியமும் அரசமைப்புச் சட்ட நெறிமுறைகளும் நம்மை அழைக்கின்றன.

மூலம்: Enough is Enough
தமிழில்:
ச.வீரமணி

Exit mobile version