Site icon சக்கரம்

ஒக்ரோபர் 17: உலக வறுமை ஒழிப்பு நாள்

–கா.கணேசன்

வறுமை ஒரு விதியல்ல; மாற்ற வேண்டிய அநீதி!

ஒரு நாட்டின் வளர்ச்சியை அதன் உயரமான கட்டடங்களாலும், பெருகும் செல்வத்தாலும், தொழில்நுட்ப முன்னேற்றத்தாலும் மட்டும் அளவிட முடியாது. அந்த நாட்டில் வாழும் ஒவ்வொரு மனிதரும் எவ்வளவு பாதுகாப்பாகவும், கண்ணியமாகவும், நம்பிக்கையுடனும் வாழ்கிறார்கள் என்பதே உண்மையான வளர்ச்சியின் அளவுகோல். ஒருபுறம் செல்வம் குவிகிறது; மறுபுறம் அடிப்படைத் தேவைகளைக்கூடப் பெற முடியாமல் மக்கள் தவிக்கிறார்கள். பிறந்த குழந்தையின் எதிர்காலம் அது பிறக்கும் குடும்பத்தின் பொருளாதார நிலையால் தீர்மானிக்கப்படுகிறது. உழைக்கும் மனிதரின் வாழ்க்கை வறுமையிலிருந்து மீள முடியாமல் முடங்குகிறது. கல்வி கற்கும் வாய்ப்பும், நல்ல உடல்நலமும், பாதுகாப்பான வாழ்விடமும் சிலருக்கு எளிதில் கிடைக்கின்றன; பலருக்கு அவை எட்டாக்கனவாகின்றன. ஒருவர் பிறந்த சூழலே அவரது உரிமைகளையும் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும்வரை, சமத்துவமான சமூகத்தை உருவாக்கிவிட்டதாகக் கூற முடியாது. வறுமையை ஒழிப்பது என்பது ஏழைகளுக்கு உதவுவது மட்டுமல்ல; ஒவ்வொரு மனிதரும் மாண்புடன் வாழ்வதற்கான உரிமையை உறுதிசெய்வதாகும்.

சங்க இலக்கியத்தில் வறுமையின் சுவடுகள்

வறுமையும் பசியும் காலங்காலமாக மனிதர்களை வாட்டி வருகின்றன. சங்க இலக்கியங்கள் பசியால் அழும் குழந்தைக்குப் பாலூட்ட முடியாத தாயின் துயரத்தையும், உணவின்றிப் பூஞ்சை படர்ந்த அடுப்பையும் சித்தரிக்கின்றன. அதேவேளை, முல்லைக்குத் தேர் கொடுத்த பாரி, மயிலுக்குப் போர்வை தந்த பேகன் போன்ற வள்ளல்களையும் போற்றுகின்றன. “உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே” என்ற குடபுலவியனாரின் வரிகள் உணவின் உயிர் காக்கும் ஆற்றலை உணர்த்துகின்றன. காலம் மாறினாலும், உணவு, கல்வி, மருத்துவம், வீடு போன்ற அடிப்படைத் தேவைகளுக்காக மக்கள் இன்றும் போராடுகின்றனர்.

பசியிடம் தோற்ற ஒரு தாயின் கண்ணீர்- சோமாலியாவின் சோகம்

சங்க இலக்கியத்தில் பசியால் தவித்த தாயின் துயரத்தைப் பார்த்தோம். காலம் கடந்தும், உலகின் மற்றொரு பகுதியில் அதே அவலம் தொடர்கிறது. 2022ஆம் ஆண்டு, ஆபிரிக்க நாடான சோமாலியாவில் கடும் வறட்சியும் பஞ்சமும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை உணவின்றித் தவிக்கச் செய்தன. உணவும் தண்ணீரும் தேடி, ஃபாத்திமா முகமது உமர் தனது குழந்தைகளுடன் மூன்று நாட்கள் நடந்தார். அந்தப் பயணத்தில், பத்து வயது மகன் சலாத் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, அவர்கள் தங்குமிடம் தேடி வந்தடைந்த இடத்தில் உயிரிழந்தான். மகனை இழந்த துயரத்திலும், உயிருடன் இருந்த மற்ற குழந்தைகளுக்காக உணவு தேட வேண்டிய கட்டாயத்தில் அந்தத் தாய் இருந்தார்.

குழந்தையைக் காப்பாற்றத் தாயிடம் அன்பு இருந்தது; ஆனால், அதன் உயிரைக் காக்கத் தேவையான உணவு இல்லை. இந்தத் துயரச் சம்பவத்தை 2022 ஒக்ரோபர் 5 அன்று வெளியிட்ட யூனிசெப் செய்திக் கட்டுரை, சோமாலியாவில் வறட்சியாலும் பஞ்சத்தாலும் தவித்த மக்களின் அவலத்தை உலகின் கவனத்திற்குக் கொண்டுவந்தது. ஒரு குழந்தையின் உயிரைப் பறிக்கும் வறுமை, அதன் எதிர்காலத்தையும் கனவுகளையும் சேர்த்தே பறிக்கிறது. எந்தக் குழந்தையும் பசியால் உயிரிழக்காத உலகை உருவாக்குவது கருணை மட்டுமல்ல; மனிதநீதியின் கடமையும் ஆகும்.

ஒக்ரோபர் 17: வறுமை ஒழிப்புக்கான உலகளாவிய உறுதிமொழி

1987ஆம் ஆண்டு, பிரான்சின் பாரிசு நகரில் உள்ள ட்ரோகாடெரோ பகுதியில், வறுமையில் வாழும் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்க ஆயிரக்கணக்கானோர் ஒன்று கூடினர். வறுமை என்பது வெறும் பொருளாதாரப் பிரச்சினை மட்டுமல்ல; அது மனித மாண்பையும் உரிமைகளையும் பாதிக்கும் கொடுமை என்பதை உலகிற்கு உணர்த்துவதே இந்தக் கூட்டத்தின் நோக்கமாக இருந்தது.

அங்கு நிறுவப்பட்ட நினைவுக் கல்லில், ATD நான்காம் உலக இயக்கத்தின் (ATD Fourth World) நிறுவனர் ஜோசப் வ்ரெசின்ஸ்கி (Joseph Wresinski) அவர்களின் கருத்து இவ்வாறு பொறிக்கப்பட்டுள்ளது:

“மனிதர்கள் எங்கெல்லாம் கொடிய வறுமையில் வாழக் கட்டாயப்படுத்தப்படுகிறார்களோ, அங்கெல்லாம் மனித உரிமைகள் மீறப்படுகின்றன. அவ்வுரிமைகளைக் காக்க ஒன்றுதிரள்வது நமது புனிதக் கடமை.”

இதன் தொடர்ச்சியாக, 1992 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச் சபை (United Nations General Assembly), ஒக்ரோபர் 17-ஆம் நாளைப் “சர்வதேச வறுமை ஒழிப்பு நாளாக” அறிவித்தது. வறுமையில் வாழும் மக்களின் உரிமைகளை மதிப்பதும், அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதும், வறுமையை ஒழிக்க உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்படுவதும் இந்த நாளின் முக்கிய நோக்கங்களாகும்.

ஐ.நா. சபை இந்த நாளினை மையப்படுத்தி “பொதுக் கருப்பொருள்”, “சிறப்புக் கருப்பொருள்” என இரண்டு விதமான கருப்பொருளை அறிவித்திருக்கிறது. 2026–2028ஆம் ஆண்டுகளுக்கான பொதுக் கருப்பொருள் “அமைதிக்காகவும் மனித உரிமைகளுக்காகவும் ஒன்றிணைவோம்” (United for Peace and Human Rights) என்பதாக உள்ளது. 2026ஆம் ஆண்டின் சிறப்புக் கருப்பொருள் “அனைவருக்கும் பாதுகாப்பான வீடுகள்” (Safe Homes for All) என்பதாக உள்ளது.

பாதுகாப்பான வீடு என்பது வெறும் தங்குமிடம் மட்டுமல்ல; அது மனித மாண்புடனும் பாதுகாப்புடனும் வாழ்வதற்கான அடிப்படைத் தேவையாகும். எனவே, வீடற்ற நிலையைப் போக்குவதும், அனைவருக்கும் பாதுகாப்பான வாழ்விடத்தை உறுதிசெய்வதும் வறுமை ஒழிப்பின் முக்கியப் பகுதிகளாகும்.

வறுமை ஒழிப்பு: உலகின் தீராத சவால்

ஐக்கிய நாடுகள் அவையின் நிலையான வளர்ச்சி இலக்குகள் அறிக்கை 2026 (The Sustainable Development Goals Report 2026) படி, உலகில் சுமார் 82.6 கோடி மக்கள் கடும் வறுமையில் வாழ்கின்றனர். இது உலக மக்கள்தொகையில் பத்தில் ஒருவருக்குச் சமம். ஆப்பிரிக்காவின் சகாராவுக்குத் தெற்கிலுள்ள நாடுகளிலும், போரும் மோதல்களும் நிலவும் பகுதிகளிலும் வறுமையின் கொடூர நிலை மிக அதிகமாக உள்ளது.

வேலை கிடைத்தாலும் வறுமை நீங்கிவிடுவதில்லை. குறைந்த ஊதியமும் நிலையற்ற வேலையும் பல தொழிலாளர்களைத் தொடர்ந்து வறுமையில் வைத்திருக்கின்றன. 2025 ஆம் ஆண்டில் உலகளவில் 28.4 கோடித் தொழிலாளர்கள் கடும் வறுமையில் வாழ்ந்தனர். போர்கள், இயற்கைப் பேரிடர்கள், காலநிலை மாற்றம் ஆகியவையும் வறுமையை அதிகரிக்கின்றன.

உலகில் சுமார் 380 கோடி மக்களுக்கு சமூகப் பாதுகாப்புப் பலன்கள் கிடைப்பதில்லை. வறுமையைக் குறைப்பதற்கான வளர்ச்சி உதவி மானியங்களும் 2023–2024 காலத்தில் 8.7 விழுக்காடு குறைந்துள்ளன. இது கவலைக்குரிய நிலையாகும்.

வறுமையை ஒழிக்க வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுடன், உழைப்புக்கேற்ற ஊதியமும் பாதுகாப்பான பணிச்சூழலும் உறுதிசெய்யப்பட வேண்டும். அனைவருக்கும் உணவு, கல்வி, மருத்துவம், வீடு போன்ற அடிப்படைத் தேவைகள் கிடைக்க வேண்டும். முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், வேலையற்றோர் உள்ளிட்டோருக்குச் சமூகப் பாதுகாப்பும் வழங்கப்பட வேண்டும். இதற்குத் தேவையான நிதியை ஒதுக்கி, அரசுகள் தங்கள் பொறுப்பை நிறைவேற்ற வேண்டும். வறுமையை ஒழிப்பது என்பது வருமானத்தை உயர்த்துவது மட்டுமல்ல; அனைவரும் பாதுகாப்புடனும் கண்ணியத்துடனும் வாழ்வதை உறுதிசெய்வதாகும்.

இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் வறுமை

வறுமையை வருமானத்தைக் கொண்டு மட்டும் அளவிட முடியாது. கல்வி, மருத்துவம், குடிநீர், வீடு, கழிப்பிடம் போன்ற அடிப்படை வசதிகள் கிடைக்கின்றனவா என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும். இதுவே பல்பரிமாண வறுமை (Multidimensional Poverty) எனப்படுகிறது. நிதி ஆயோக்கின் 2023ஆம் ஆண்டு அறிக்கையின்படி, இந்தியாவில் பல்பரிமாண வறுமை 2015–16-ல் 24.85 விழுக்காட்டிலிருந்து, 2019–21-ல் 14.96 விழுக்காடாகக் குறைந்தது. தமிழ்நாட்டில் இது 4.76 விழுக்காட்டிலிருந்து 2.20 விழுக்காடாகக் குறைந்தது.

ஊரகப் பகுதிகளில் வறுமை, நகர்ப்புறங்களை விட அதிகமாக இருப்பதைத் தரவுகள் காட்டுகின்றன. தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத் தொகை, காலை உணவுத் திட்டம், புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன், மக்களைத் தேடி மருத்துவம், அனைவர்க்குமான பொது வழங்கல் முறை, வெற்றிப் பயணம் உள்ளிட்ட நலத்திட்டங்கள் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த உதவுகின்றன.

இருப்பினும், குறைந்த வருமானம், நிலையற்ற வேலை, கடன் சுமை, மருத்துவச் செலவுகள் போன்றவை பல குடும்பங்களைத் தொடர்ந்து பாதிக்கின்றன. எனவே, நலத்திட்டங்களுடன் நிலையான வேலைவாய்ப்பு, நியாயமான ஊதியம், மருத்துவம் மற்றும் சமூகப் பாதுகாப்பையும் உறுதிசெய்ய வேண்டும். வறுமையைக் குறைப்பதுடன், மக்கள் மீண்டும் வறுமைக்குள் தள்ளப்படாமல் வாழ்வதற்கான சூழலையும் உருவாக்க வேண்டும்.

சாதியப் பாகுபாடும் பட்டியல் இன மக்களின் வறுமையும்

ஒரு குழந்தையின் எதிர்காலம் அதன் திறமையாலும் உழைப்பாலும் தீர்மானிக்கப்பட வேண்டுமே தவிர, அது பிறந்த சாதியால் தீர்மானிக்கப்படக் கூடாது. ஆனால், இன்றும் சாதிப் பாகுபாடு பலரின் கல்வி, வேலைவாய்ப்பு, வாழ்வாதாரம் ஆகியவற்றுக்குப் பெரும் தடையாக இருக்கிறது. வாய்ப்புகள் மறுக்கப்படும்போது வறுமை உருவாகிறது; வறுமை தொடரும்போது அடுத்த தலைமுறையும் அதிலிருந்து மீள முடியாமல் தவிக்கிறது. குறிப்பாக, பட்டியல் சாதி மக்களின் வாழ்க்கையில் இந்தச் சமூகத் தடைகள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. வறுமையை ஒழிக்க வேண்டுமெனில், அதன் பின்னணியில் உள்ள சாதியப் பாகுபாட்டையும் சமமற்ற வாய்ப்புகளையும் எதிர்கொள்ள வேண்டும்.

ஐந்தாவது தேசியக் குடும்பநலக் கணக்கெடுப்பின்படி (NFHS-5, 2019–21), பட்டியல் சாதியினரின் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 39.2 விழுக்காட்டினர் வயதுக்கேற்ற உயரமின்றியும், 35.1 விழுக்காட்டினர் எடைக்குறைவுடனும் இருந்தனர். அனைத்துச் சமூகக் குழந்தைகளிடையே இந்த விகிதங்கள் முறையே 35.5 மற்றும் 32.1 விழுக்காடாக இருந்தன. அதே கணக்கெடுப்பின்படி, பட்டியல் சாதியினரிடையே குழந்தை இறப்பு விகிதம் ஒவ்வொரு 1,000 உயிர்ப் பிறப்புகளுக்கும் 40.7 ஆக இருந்தது.

ஆறாவது தேசியக் குடும்பநலக் கணக்கெடுப்பின்படி (NFHS-6, 2023–24), அனைத்துச் சமூகக் குழந்தைகளிடையே வயதுக்கேற்ற உயரக்குறைவு 29.3 விழுக்காடாகவும், எடைக்குறைவு 31.8 விழுக்காடாகவும் இருந்தது. இவை தேசிய அளவிலான தரவுகள். இவற்றை முந்தைய கணக்கெடுப்பின் பட்டியல் சாதிக் குழந்தைகளுக்கான தரவுகளுடன் நேரடியாக ஒப்பிட முடியாது. பட்டியல் சாதிக் குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலை எவ்வாறு மாறியுள்ளது என்பதை அறிய, இரு கணக்கெடுப்புகளிலும் ஒரே சமூகப் பிரிவுக்கான ஒப்பிடத்தக்க தரவுகள் தேவை.

இந்திய அரசமைப்புச் சட்டம் சமத்துவத்தையும் சமூகநீதியையும் உறுதிசெய்கிறது. சமூகத்திலும் பொருளாதாரத்திலும் ஏற்றத்தாழ்வுகள் தொடர்வதை டாக்டர் அம்பேத்கர் எச்சரித்தார். நிலமின்மை, கூலித் தொழிலைச் சார்ந்திருத்தல், நிலையற்ற வேலை, கடன் சுமை ஆகியவை பட்டியல் சாதி மக்களின் வறுமையை மேலும் தீவிரப்படுத்துகின்றன. எனவே, பொருளாதார உதவிகளுடன் சாதியப் பாகுபாட்டை அகற்றுவதும், கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம், வீடு ஆகியவற்றில் சம வாய்ப்புகளை உறுதிசெய்வதும் அவசியம். இடஒதுக்கீட்டுக் கொள்கையை முழுமையாக நடைமுறைப்படுத்துவதும் சமூகநீதியை நிலைநாட்டுவதில் முக்கியமானது.

சாதியத் தடைகள் நீங்கி, அனைவருக்கும் சம உரிமையும் வாய்ப்பும் கிடைக்கும் போதுதான் சமூகநீதியும் வறுமை ஒழிப்பும் முழுமை பெறும்.

பாதுகாப்பான வீடு: மனித மாண்பின் அடிப்படை

2026ஆம் ஆண்டின் கருப்பொருளான “அனைவருக்கும் பாதுகாப்பான வீடுகள்” வறுமை ஒழிப்பில் வீடுகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. உலகில் கோடிக்கணக்கான மக்கள் போதிய வீட்டு வசதியின்றி வாழ்கின்றனர். சிலர் அடிப்படை வசதிகள் இல்லாத குடிசைப் பகுதிகளில் வசிக்கின்றனர்; பலருக்குச் சொந்தமாகவோ வாடகைக்கோ பாதுகாப்பான வீடு கிடைப்பதில்லை.

வீடு என்பது வெறும் தங்குமிடம் அல்ல. அது குடும்பப் பாதுகாப்பு, குழந்தைகளின் கல்வி, பெண்களின் பாதுகாப்பு, தனியுரிமை, மனித மாண்பு ஆகியவற்றுடன் தொடர்புடையது. பாதுகாப்பான வீடு இல்லாத குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுகிறது. முதியவர்களும் மாற்றுத்திறனாளிகளும் தங்களுக்குத் தேவையான வசதிகள் இன்றி தவிக்கின்றனர். உயரும் வீட்டு விலைகள், வாடகைச் சுமை, நிலம் மற்றும் குடியிருப்பு உரிமை தொடர்பான சிக்கல்கள் ஏழைக் குடும்பங்களின் துயரத்தை மேலும் அதிகரிக்கின்றன.

எனவே, மலிவு விலை வீடுகளை உருவாக்குவதுடன், குடிநீர், கழிப்பறை, மின்சாரம், கழிவுநீர் வடிகால் போன்ற அடிப்படை வசதிகளையும் உறுதிசெய்ய வேண்டும். மக்களை அவர்களின் குடியிருப்புகளிலிருந்து கட்டாயமாக வெளியேற்றுவதையும் தடுக்க வேண்டும். பாதுகாப்பான வீடு என்பது வெறும் நலத்திட்டம் அல்ல; ஒவ்வொரு மனிதரும் கண்ணியத்துடன் வாழ்வதற்கான அடிப்படை உரிமையாகும்.

வறுமையை ஒழிக்க என்ன செய்ய வேண்டும்?

வறுமையை ஒழிப்பது என்பது ஏழைகளுக்கு உதவி செய்வதுடன் முடிந்துவிடாது. வறுமையை உருவாக்கும் சமூக, பொருளாதாரத் தடைகளை அகற்றி, ஒவ்வொருவரும் மாண்புடன் வாழ்வதற்கான வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அதற்கு அனைவர்க்கும் பாதுகாப்பான வீடு, அடிப்படை வசதிகள், நிலையான வேலைவாய்ப்பு, நியாயமான ஊதியம் ஆகியவை உறுதிசெய்யப்பட வேண்டும். குடியிருப்பு உரிமைகள் பாதுகாக்கப்படுவதுடன், வீடற்றவர்களுக்கும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கும் மலிவு விலை வீடுகள் கிடைக்க வேண்டும்.

வறுமையில் வாழும் மக்களை அரசுத் திட்டங்களின் பயனாளிகளாக மட்டும் பார்க்கக் கூடாது. அவர்களின் வாழ்க்கையைப் பாதிக்கும் முடிவுகளை எடுப்பதிலும், திட்டங்களைச் செயல்படுத்துவதிலும் கண்காணிப்பதிலும் அவர்களுக்கும் உரிய பங்கேற்பு வழங்கப்பட வேண்டும். தங்கள் தேவைகளைத் தாங்களே எடுத்துரைத்து, முடிவெடுக்கும் செயல்முறையில் பங்கேற்கும் உரிமை அவர்களுக்கு உண்டு.

விளிம்புநிலை மக்கள், குழந்தைகள், பெண்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், வேலையிழந்தோர் உள்ளிட்டோருக்குத் தேவையான நிதியுதவி, ஓய்வூதியம், பராமரிப்புச் சேவைகள் ஆகியவை உரிய முறையில் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும். அதேபோல், தொழிலாளர்களுக்கு உழைப்புக்கேற்ற ஊதியம், பாதுகாப்பான பணிச்சூழல், குறித்த காலத்தில் கூலி, தொழிலாளர் உரிமைகள் ஆகியவை உறுதிசெய்யப்பட வேண்டும். வேலை கிடைப்பது மட்டுமல்ல; அந்த வேலை மனிதர்களை வறுமையிலிருந்து மீட்கும் வகையில் இருக்க வேண்டும்.

சாதி மற்றும் பாலினப் பாகுபாடுகளையும் ஒழிப்பது அவசியம். விளிம்புநிலை மக்களுக்கு நிலம், கல்வி, வேலைவாய்ப்பு, பொதுச் சேவைகள் ஆகியவற்றில் சம வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். பெண்களின் ஊதியமற்ற பராமரிப்புப் பணிச்சுமையைக் குறைக்கக் குழந்தைப் பராமரிப்பு வசதிகளை அதிகரிக்க வேண்டும். தனியார் துறையிலும் பாகுபாடற்ற வேலைவாய்ப்பையும் சமவாய்ப்புகளையும் உறுதிசெய்ய உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

வெள்ளம், வறட்சி, வெப்ப அலை போன்ற இயற்கைப் பேரிடர்கள் ஏற்கெனவே வறுமையில் வாழும் குடும்பங்களை மேலும் பாதிக்கின்றன. எனவே, பேரிடர் காலங்களில் உடனடி நிவாரணம் வழங்குவதுடன், இழந்த வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கவும் உதவ வேண்டும். பேரிடர் மேலாண்மையையும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களையும் ஒருங்கிணைப்பதன் மூலம் குடும்பங்கள் மீண்டும் வறுமையில் தள்ளப்படுவதைத் தடுக்கலாம்.

வறுமையை ஒழிப்பது என்பது நலத்திட்டங்களின் பயன்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதோடு முடிந்துவிடுவதல்ல. சம உரிமையும் சம வாய்ப்பும் சமூகப் பாதுகாப்பும் ஒவ்வொருவருக்கும் உறுதிசெய்யப்பட வேண்டும். உதவிகளைப் பெறுவோராக மட்டுமல்லாமல், தங்கள் வாழ்க்கையைத் தாங்களே தீர்மானிக்கும் ஆற்றல் கொண்டவர்களாக வறுமையில் வாழும் மக்கள் உயர வேண்டும். வறுமையின் இருளைப் போக்குவது நலத்திட்டங்களின் ஒளி மட்டுமல்ல; சமத்துவமும் உரிமையும் கண்ணியமும் இணைந்த சமூக மாற்றமே நிலையான விடியலைத் தரும்.

வறுமையற்ற உலகம் என்பது நீதியான உலகம்

வறுமையை ஒழிப்பது என்பது உதவிகளை வழங்குவதோடு முடிந்துவிடக் கூடாது; அதை உருவாக்கும் அநீதிகளையும் அகற்ற வேண்டும். வளங்கள் நியாயமாகப் பகிரப்பட வேண்டும்; அனைவர்க்கும் சம வாய்ப்புகள் கிடைக்க வேண்டும்; ஒவ்வொருவரின் குரலும் மதிக்கப்பட வேண்டும்.

நெல்சன் மண்டேலா வலியுறுத்தியதுபோல், “வறுமையை வெல்வது கருணைச் செயல் அன்று; அது நீதிச் செயல்.” குழந்தைக்குச் சத்தான உணவும், குடும்பத்திற்குப் பாதுகாப்பான வீடும், தொழிலாளிக்குத் தகுந்த கூலியும் உதவிகள் அல்ல; அவை அடிப்படை உரிமைகள். அவை அனைவர்க்கும் கிடைப்பதை உறுதிசெய்வதே உண்மையான சமூகநீதி.

பசியும் வறுமையும் நிறைந்த இடத்தில் வளர்ச்சியும் அமைதியும் முழுமை பெறாது. உணவு, வீடு, கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு, சமூகப் பாதுகாப்பு ஆகியவை அனைவர்க்கும் கிடைக்கும்போதுதான் வளர்ச்சி மக்களின் வாழ்வில் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தும். வறுமையை ஒழிப்பது அரசின் கடமை மட்டுமல்ல; அநீதியை எதிர்த்து, சமத்துவத்தை நிலைநாட்ட விரும்பும் ஒவ்வொருவரின் பொறுப்புமாகும்.

இந்த உணர்வையே பாரதி அனல் தெறிக்கும் வரிகளில் வெளிப்படுத்தினார்:

“தனி ஒருவனுக்கு உணவில்லையெனில்
ஜகத்தினை அழித்திடுவோம்!”

இது வெறும் கவிதை வரியல்ல; பசியையும் அநீதியையும் பொறுத்துக்கொள்ளாத அறக்குரல். அந்தக் குரல் நம் சிந்தனையிலும் செயலிலும் ஒலிக்கட்டும். வறுமையில் வாழும் மக்களின் குரலுக்குச் செவிசாய்ப்போம்; பாகுபாடுகளை எதிர்ப்போம்; அனைவருக்கும் உரிமையும் வாய்ப்பும் கிடைக்க ஒன்றிணைந்து செயல்படுவோம். வறுமையைப் பார்த்துப் பரிதாபப்படுவது மட்டும் போதாது; அதற்குக் காரணமான அநீதிகளை அகற்ற வேண்டும். பசியற்ற, பாகுபாடற்ற, அனைவருக்கும் உரிமையும் கண்ணியமும் கிடைக்கும் உலகை உருவாக்க நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

அம்பேத்கர் வலியுறுத்திய சமூக ஜனநாயகம் மலர வேண்டுமெனில், பொருளாதார ஏற்றத் தாழ்வுகளும் சமூக அநீதிகளும் அகற்றப்பட வேண்டும். வறுமையை ஒழிப்போம்; சமத்துவத்தை நிலைநாட்டுவோம்; ஒவ்வொருவரும் உரிமையுடனும் கண்ணியத்துடனும் வாழும் நீதியான உலகைப் படைப்போம்!

Exit mobile version