
தமிழ்த் திரையுலகில் ‘தேனிசைத் தென்றல்’ என்ற அடைமொழியோடு ரசிகர்களை தனது எளிய, துள்ளலான மெட்டுகளால் கட்டிப்போட்ட இசையமைப்பாளர் தேவா, இசைப் பிரியர்களையும் திரைத் துறையையும் கண்ணீரில் ஆழ்த்திவிட்டு இன்று (17.10.2026) காலை இயற்கை எய்தினார்.
சென்னை கோடம்பாக்கத்தில் வசித்து வந்த தேவாவுக்கு இன்று காலை 8.30 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், பின்னர் 10.30 மணியளவில் அவர் உயிர் பிரிந்ததாகவும் கூறப்படுகிறது.
சாதாரண குடும்பத்திலிருந்து இசையுலகுக்கு
தேவாவின் இயற்பெயர் தேவநேசன் சொக்கலிங்கம். 1950-ம் ஆண்டு நவம்பர் 20-ந் திகதி பிறந்தார். இவரது பெற்றோர் சொக்கலிங்கம், கிருஷ்ணவேணி. குடும்பத்தின் பூர்வீகம் வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகேயுள்ள மாங்காடு கிராமம்.
சிறுவயதிலிருந்தே இசையின் மீது ஆர்வம் கொண்ட தேவா, இசையமைப்பாளர் சந்திரபோஸுடன் இணைந்து இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். பின்னர் ஜே.பி.கிருஷ்ணாவிடம் இந்திய இசையையும், மாஸ்டர் தன்ராஜிடம் மேற்கத்திய இசையையும் கற்றுக்கொண்டார்.
இசையுலகில் சாதிக்க வேண்டும் என்ற கனவு இருந்தபோதும், ஆரம்பத்தில் அவருக்கு வாய்ப்புகள் எளிதாகக் கிடைக்கவில்லை. குடும்பச் சூழ்நிலை காரணமாக தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் உதவியாளராகப் பணியாற்றினார்.
அந்தக் காலத்தில் நடந்த ஒரு சம்பவத்தை தேவா நேர்காணல் ஒன்றில் பகிர்ந்திருந்தார். தூர்தர்ஷன் படப்பிடிப்புத் தளத்துக்குக் கொண்டுவரப்பட்ட பியானோவை வாசித்ததற்காகத் தனக்கு 15 நாட்கள் பணியிடை நீக்கம் வழங்கப்பட்டதாகக் கூறியிருந்தார்.
இசையின் மீது கொண்டிருந்த ஆர்வத்தால் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்ட தேவா, பக்திப் பாடல் இசைத்தட்டுகளுக்கு இசையமைக்கத் தொடங்கினார். நூற்றுக்கணக்கான பக்திப் பாடல் தொகுப்புகளுக்கு இசையமைத்த அனுபவமே பின்னாளில் திரைப்பட இசையமைப்பாளராக அவர் வளர்வதற்கு அடித்தளமாக அமைந்தது.
திரையுலகில் முதல் வாய்ப்பு
1986-ம் ஆண்டு வெளியான ‘மாட்டுக்கார மன்னாரு’ திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் தேவா. தொடர்ந்து 1989-ம் ஆண்டு ராமராஜன் நடித்த ‘மனசுக்கேத்த மகராசா’ திரைப்படத்துக்கு இசையமைத்தார். இந்தப் படம் தேவாவைத் திரையுலகில் கவனிக்க வைத்தது.
ஆனால் 1990-ம் ஆண்டு வெளியான ‘வைகாசி பொறந்தாச்சு’ தேவாவின் திரையிசைப் பயணத்தில் முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது. பிரசாந்த் அறிமுகமான இந்தப் படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. கிராமிய இசையின் மணம் மாறாமல், எளிமையான மெட்டுகளைக் கொண்டு பாடல்களை உருவாக்கியிருந்தார் தேவா.
‘சின்னப் பொண்ணுதான் வெட்கப்படுது’, ‘தண்ணி குடம் எடுத்து’ போன்ற பாடல்கள் தமிழகத்தின் கிராமங்களிலும் நகரங்களிலும் ஒலித்தன.
இளையராஜா தமிழ்த் திரையிசையில் மிகப்பெரிய செல்வாக்குடன் இருந்த காலத்தில், தேவா தனக்கென ஒரு இசைப் பாதையை உருவாக்கத் தொடங்கினார்.
அடுத்த சில ஆண்டுகளில் தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தன. ஒரு கட்டத்தில் ஆண்டுக்கு 30-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைக்கும் அளவுக்கு அவரது பணிகள் அதிகரித்தன. 1996-ம் ஆண்டில் மட்டும் 36 திரைப்படங்களுக்கு இசையமைத்தார்.
கிராமப்புற, உழைக்கும் வர்க்கத்து மக்களின் உணர்வுகளுக்கு தனது இசையின் மூலம் உயிர் கொடுத்த அவரது மறைவு, தமிழ் இசை உலகுக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
தமிழ் திரையுலகின் இசை எல்லைகளை இசைஞானியும் இசைப் புயலும் தங்களின் ஆளுமையால் முழுமையாக ஆக்கிரமித்திருந்த காலகட்டம் அது. ஒருபுறம் கிராமத்து மண்ணின் மனத்தையும், செவ்வியல் இசையின் அற்புதங்களையும் தங்கு தடையின்றி வழங்கி வந்த இளையராஜாவின் மாயாஜாலம், மறுபுறம் நவீனத் தொழில்நுட்பத்தையும், மேற்கத்திய இசைப் புதுமைகளையும் கொண்டுவந்து உலகை வியக்க வைத்த ஏ.ஆர்.ரஹ்மானின் புதிய அலை. இந்த இரண்டு இமயங்களுக்கு இடையே தனக்கென ஒரு தனித்துவமான இடத்தை உருவாக்குவது என்பது சாதாரண காரியமல்ல.
ஆனால், தேவா அதை மிக எளிதாக சாதித்துக் காட்டினார். மக்களின் இதயத் துடிப்பை மிகத் துல்லியமாக உணர்ந்திருந்த தேவா, தொழிலாளர்கள், அடித்தட்டு மக்களின் கொண்டாட்டங்களுக்கு ஏற்ற எளிய, துள்ளலான இசையை தனது அடையாளமாக மாற்றினார். பந்தா இல்லாத இசை அமைப்பு, கேட்ட உடனே உதடுகள் முணுமுணுக்கும் எளிமையான மெட்டுகள், அடித்தட்டு மக்களின் வாழ்வியலோடு பிணைந்த வாத்தியங்களின் பயன்பாடு எனத் தனக்கான ஒரு தனி இடத்தை அவர் அமைத்துக்கொண்டார்.
‘அண்ணாமலை’ படத்தில் ‘வந்தேண்டா பால்காரன்’, ‘பாட்ஷா’ படத்தில் இடம்பெற்ற ‘நான் ஆட்டோகாரன்’ போன்ற பாடல்கள் உழைக்கும் வர்க்கத்தினரின் தேசிய கீதங்களாக இன்றும் விளங்குகின்றன. அதுமட்டுமின்றி இந்தப் பாடல்கள் ரஜினிகாந்தின் திரைப் பயணத்திலும் அழிக்க முடியாத இடத்தை பிடித்துள்ளன. இன்றளவும் ரஜினி படங்களில் வரும் ‘சூப்பர் ஸ்டார்’ டைட்டில் கார்டுக்கு தேவாவின் இசையே பயன்படுத்தப்படுகிறது. இன்னொரு புறம் கமல்ஹாசனின் ‘அவ்வை சண்முகி’, ‘பஞ்ச தந்திரம்’, பம்மல் கே.சம்பந்தம்’ போன்ற படங்களின் பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றவை.
சென்னை நகரத்தின் மூலை முடுக்குகளில் மட்டுமே ஒலித்துக் கொண்டிருந்த ‘கானா’ என்ற எளிய மக்களின் இசை வடிவத்தை, தமிழ் சினிமா என்னும் மேடைக்குக் கொண்டுவந்து, அதனை எல்லா தரப்பினரும் ரசித்துத் தலையாட்ட வைத்த பெருமை தேவாவையே சேரும்.
வடசென்னை வட்டார மொழியையும், எளிய மனிதர்களின் உரையாடல்களையும் அடிப்படையாகக் கொண்ட பாடல்களை திரையில் ஒலிக்கச் செய்து, அடித்தட்டு மக்களின் இசையை கவனிக்க வைத்தார். ‘கவலைப்படாதே சகோதரா’, ‘சலோமியா’, ‘அண்ணா நகரு ஆண்டாளு’, ‘உதயம் தியேட்டருல’ போன்ற பாடல்கள் மூலம் கானா இசையை உலகறியச் செய்தவர் தேவா.
ஒருபுறம் கானாவில் கலக்கிக் கொண்டிருந்தாலும், இன்னொரு புறம் இதமான மெலடிப் பாடல்களிலும் அவர் நிகழ்த்திய அற்புதங்கள் எண்ணற்றவை. ‘நேருக்கு நேர்’ படத்தில் இடம்பெற்ற ‘மனம் விரும்புதே உன்னை’, ‘காதல் கோட்டை’ படத்தில் ‘நலம் நலமறிய ஆவல்’, ‘ஆசை’ படத்தில் இடம்பெற்ற ‘மீனம்மா’, ‘புல்வெளி’ என தேவா வழங்கிய மெலடிப் பாடல்கள் ஒவ்வொன்றும் ஆன்மாவைத் தொடும் ரகம்.
விஜய், அஜித் இருவரின் ஆரம்பகாலத் திரைப் பயணத்தில் தேவாவின் பாடல்கள் ஆற்றிய பங்கு மகத்தானது. அஜித்தின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த ‘ஆசை’, ‘காதல் கோட்டை’, ‘வாலி’, ‘முகவரி’, போன்ற படங்களுக்கும் விஜய்யின் ‘ரசிகன்’, ‘விஷ்ணு’ , ‘ஒன்ஸ் மோர்’, ‘மின்சாரக் கண்ணா’, ‘குஷி’ உள்ளிட்ட படங்களுக்கும் தேவா இசையமைத்த பாடல்களும் பின்னணி இசையும் மிகப்பெரிய பலமாக அமைந்தன.
விஜய்யை முதல் முதலாக பாடகராக அறிமுகப்படுத்தியதும் தேவாதான். இது தவிர பிரபுதேவா, சூர்யா, பிரசாந்த், முரளி, சரத்குமார் என ஏராளமான ஹீரோக்களின் படங்களுக்கும் சூப்பர் ஹீரோ பாடல்களை தேவா வாரி வழங்கியிருக்கிறார். தமிழ் தவிர்த்து, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் தேவா இசையமைத்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் சிறந்த இசையமைப்பாளர் விருது, கலைமாமணி உட்பட பல உயரிய விருதுகளை தேவா பெற்றுள்ளார். பாடகராகவும் அவர் பாடிய ஏராளமான கானா பாடல்கள், திருவிழாக்கள், திருமண நிகழ்வுகள் மற்றும் பேருந்துப் பயணங்களில் இன்றும் தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்துள்ளன.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு 2014-ம் ஆண்டு அனிருத் இசையில் வெளியான ‘மான் கராத்தே’ படத்தில் ஒரு பாடலை பாடி இருந்தார். அதன்பிறகு ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘மாமன்னன்’ படத்தில் ‘நெஞ்சமே நெஞ்சமே’ ரீப்ரைஸ் (Reprise) பாடலை இசையமைப்பாளர் தேவா பாடியுள்ளார்.
ஏறத்தாழ 400-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து, அடக்கமும் எளிமையும் நிறைந்த முகத்தில் என்றும் மாறாத புன்னகையும் கொண்ட ‘தேனிசைத் தென்றல்’ தேவாவின் மறைவு, தமிழ் இசை பிரியர்களின் நெஞ்சங்களில் ஆறாத சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

