Site icon சக்கரம்

மருது சகோதரர்களைத் தூக்கிலிட்ட ஆங்கிலேயர்கள் – வெல்ஷ் துரையின் ‘நெஞ்சை உலுக்கும்’ நேரடி சாட்சியம்!

-மா.ச.மதிவாணன்

1801 ஒக்ரோபர் 24.

சிவகங்கைச் சீமையின் ’மாமன்னர்களான’ மருது சகோதரர்கள் (பெரிய மருது, சின்ன மருது) தூக்கிலிடப்பட்ட நாள் இன்று.

225 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில்தான் தமிழர் நிலத்தின் மாபெரும் வீர ஆளுமைகள், ”வீர காவியமாக்கப்பட்ட” நாள்…

ஒருகாலத்தில் தனக்கு ஈட்டி எறியவும் வளரி வீசவும் கற்றுக்கொடுத்த சின்ன மருதுவை, பின்னாளில் ஆங்கிலேயப் படைகள் வேட்டையாடுவதைப் போலத் துரத்தின. இறுதியில், தனது நண்பரான சின்ன மருதுவும் அவரது அண்ணன் பெரிய மருதுவும் தூக்குமேடையில் சங்கிலிகளுடன் தொங்கியதைத் தன் கண்களால் கண்டதாக ஆங்கிலேய அதிகாரி ஜேம்ஸ் வெல்ஷ் பதிவு செய்திருக்கிறார். அந்த நெஞ்சை உலுக்கும் நேரடி சாட்சியம்தான் இங்கே:

யார் இந்த மருது சகோதரர்கள்?

தமிழகத்தின் சிவகங்கைச் சீமையை ஆட்சி செய்த மாமன்னர்கள்தான் பெரிய மருது, சின்ன மருது.. இந்த மாவீரர்களைத்தான் சரித்திரத்தின் பக்கங்கள் “மருது சகோதரர்கள்” என்கிற காவிய நாயகர்களாகக் கொண்டாடுகின்றன.

1748 ஆம் ஆண்டு பிறந்தவர் பெரிய மருது. ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர், 1753 ஆம் ஆண்டு பிறந்தவர் சின்ன மருது. மொக்கைப் பழனியப்ப சேர்வை – பொன்னாத்தாள் தம்பதியரின் புதல்வர்கள். சிறுவயதிலேயே போர்க்கலைகளைப் பயின்று, வீரத்தில் சிறந்து விளங்கிய இந்தச் சகோதரர்கள், சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதத் தேவரின் படையில் இணைந்தனர்.

1772 ஆம் ஆண்டு.. சிவகங்கைச் சீமையின் வரலாற்றையே புரட்டிப்போட்ட ஆண்டு! ஆற்காடு நவாபின் படைகளுடன் கைகோர்த்த ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியின் படைகள், சிவகங்கை மீது படையெடுத்தன. காளையார்கோயிலில் நடந்த போரில் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் கொல்லப்பட்டார். மன்னரை இழந்த சிவகங்கைச் சீமை ஆங்கிலேயர்களின் பிடிக்குள் சென்றது.

ஆனால், அந்தத் தோல்வியுடன் எல்லாம் முடிந்துவிடவில்லை. ராணி வேலுநாச்சியாருக்குத் துணையாக நின்ற மருது சகோதரர்கள், அவருடன் சிவகங்கையிலிருந்து வெளியேறினர். திண்டுக்கல் பகுதியில் தஞ்சமடைந்த அவர்கள், மைசூர் ஆட்சியாளர் ஹைதர் அலியின் ஆதரவைப் பெற்றனர். இழந்த மண்ணை மீட்கப் படைகளைத் திரட்டினர். மீண்டும் போருக்குத் தயாராகினர்.

1780 ஆம் ஆண்டு.. 8 ஆண்டுகளுக்குப் பின்னர் சிவகங்கைச் சீமையில் மீண்டும் போர்முரசு முழங்கியது. ராணி வேலுநாச்சியார் தலைமையில் மருது சகோதரர்கள் துணையுடன் திரண்ட படைகள், சிவகங்கையை மீட்டன. இழந்த ஆட்சி மீண்டும் வேலுநாச்சியார் வசமானது. இந்த வெற்றிக்குப் பின்னர் சிவகங்கை நிர்வாகத்தில் மருது சகோதரர்களின் பங்களிப்பு மேலும் அதிகரித்தது. பின்னாளில் சிவகங்கைச் சீமையின் ஆட்சிப் பொறுப்பையும் ஏற்றனர். பெரிய மருது படை நடவடிக்கைகளிலும் வேட்டையிலும் ஈடுபட்டிருக்க, சின்ன மருது ஆட்சி நிர்வாகத்தில் முக்கியப் பங்காற்றினார்.

சிவகங்கைச் சீமையை மீட்டதுடன் மருது சகோதரர்களின் போராட்டம் முடிந்துவிடவில்லை. ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியின் ஆதிக்கம் தென்னிந்தியாவின் பல பகுதிகளிலும் விரிவடைந்து கொண்டிருந்தது. பாளையக்காரர்களின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டன. ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிய வீரபாண்டிய கட்டபொம்மன் 1799-ஆம் ஆண்டு தூக்கிலிடப்பட்டார். ஆனால், ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டம் ஓய்ந்துவிடவில்லை.

1800 ஆம் ஆண்டு மருது சகோதரர்கள் தலைமையில் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிரான ஆயுதப் போராட்டம் தீவிரமடைந்தது. தென்னிந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆங்கிலேய எதிர்ப்புப் படைகளுடன் மருது சகோதரர்கள் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டனர். ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்திற்கு எதிராகப் போராடியவர்களை ஒன்றிணைக்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டனர்.

இந்தச் சூழலில்தான் 1801 ஆம் ஆண்டு பாளையங்கோட்டை சிறையிலிருந்து தப்பிய வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பி ஊமைத்துரை, சிவகங்கைச் சீமைக்கு வந்தார். அவருக்கு மருது சகோதரர்கள் அடைக்கலம் கொடுத்தனர். ஏற்கெனவே ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருந்த மருது சகோதரர்கள், ஊமைத்துரைக்கும் துணையாக நின்றது கிழக்கிந்திய கம்பெனியுடனான மோதலை மேலும் தீவிரப்படுத்தியது.

1801 ஜூன் மாதம்.. சின்ன மருது வெளியிட்ட திருச்சிராப்பள்ளி பிரகடனம் (ஜம்புதீவு பிரகடனம்), ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்ட வரலாற்றில் முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது. சாதி, மத வேறுபாடுகளைக் கடந்து மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்; ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை எதிர்த்துப் போராட வேண்டும் என அறைகூவல் விடுத்தது அந்தப் பிரகடனம்.

இதையடுத்து மருது சகோதரர்களை வீழ்த்த ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி தனது படைகளை சிவகங்கைச் சீமைக்குள் அனுப்பியது. இருதரப்புக்கும் இடையே கடுமையான போர்கள் நடந்தன. மருது சகோதரர்களின் முக்கியப் படைத்தளமாக விளங்கிய காளையார்கோயில் ஆங்கிலேயர்கள் வசமானது. இதன் பின்னரும் ஆங்கிலேயப் படைகள் மருது சகோதரர்களைத் தேடின. இறுதியில் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

1801 ஒக்ரோபர் 24.

சிவகங்கைச் சீமையின் மாமன்னர்களான பெரிய மருதுவும் சின்ன மருதுவும் திருப்பத்தூர் கோட்டையில் ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்டனர்.

மருது சகோதரர்களின் உயிரைப் பறித்த அந்தத் தூக்குக் கயிறு, அவர்களது வரலாற்றை முடித்துவிடவில்லை. 225 ஆண்டுகளுக்குப் பின்னரும் தமிழர் வரலாற்றில் மருது சகோதரர்கள் என்ற பெயர் அழியாமல் நிலைத்திருக்கிறது.

யார் இந்த ஜேம்ஸ் வெல்ஷ்?

மருது சகோதரர்களின் வீர வரலாற்றை ஆங்கிலேய அதிகாரி ஒருவரே தமது நினைவுக் குறிப்புகளில் உருக்கமாகப் பதிவு செய்திருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா? அதுவும் மருது சகோதரர்களுடன் நட்பாகப் பழகி, பின்னர் அவர்களுக்கு எதிராகப் போர்க்களத்தில் நின்ற ஓர் ஆங்கிலேய அதிகாரி!

அவர்தான் ஜேம்ஸ் வெல்ஷ் (James Welsh, 1775–1861).

ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியின் சென்னை மாகாண இராணுவத்தில் பணியாற்றியவர் ஜேம்ஸ் வெல்ஷ். இளம் வயதிலேயே இந்தியாவுக்கு வந்த அவர், தென்னிந்தியாவில் ஆங்கிலேயர்கள் நடத்திய பல்வேறு ராணுவ நடவடிக்கைகளில் பங்கேற்றார். 1801 ஆம் ஆண்டு மருது சகோதரர்களுக்கு எதிராக ஆங்கிலேயப் படைகள் நடத்திய போரிலும் பங்கேற்றவர் இந்த வெல்ஷ் துரைதான்.

ஆனால், அதற்கு ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் மருது சகோதரர்களுடன் வெல்ஷ் துரைக்கு இருந்த உறவே வேறு!

1795 ஆம் ஆண்டு மதுரையில் பணியாற்றியபோது மருது சகோதரர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு வெல்ஷுக்குக் கிடைத்தது. பெரிய மருதுவின் விருந்தோம்பலில் திளைத்தவர். சின்ன மருதுவின் அன்புக்கும் நட்புக்கும் பாத்திரமானவர். சின்ன மருது தனக்கு இனிப்பான ஆரஞ்சுப் பழங்களை அனுப்பியதையும், ஈட்டி எறியவும் வளரி வீசவும் கற்றுக்கொடுத்ததையும் வெல்ஷ் தமது நினைவுக் குறிப்புகளில் நெகிழ்ச்சியுடன் பதிவு செய்துள்ளார்.

காலம் எப்படியெல்லாம் மனிதர்களைப் புரட்டிப் போடுகிறது!

ஒருகாலத்தில் அன்புடன் பழகிய மருது சகோதரர்களுக்கு எதிராகவே சில ஆண்டுகளில் ஆயுதமேந்திப் போர்க்களத்தில் நிற்க வேண்டிய நிலை வெல்ஷுக்கு ஏற்பட்டது. சின்ன மருது காயமடைந்து ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டதையும், மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்டதையும் தனது நினைவுக் குறிப்புகளில் பதிவு செய்திருக்கிறார்.

அத்துடன் முடிந்துவிடவில்லை அந்தத் துயர வரலாறு!

சின்ன மருதுவின் இளைய மகன் துரைசாமி, அப்போது சுமார் 15 வயதுச் சிறுவன். ஆங்கிலேயர்களால் வாழ்நாள் முழுவதும் நாடுகடத்தப்படும் தண்டனை விதிக்கப்பட்ட அந்தச் சிறுவனைத் தூத்துக்குடியில் காவலில் வைத்திருந்த அதிகாரியும் வெல்ஷ் துரைதான். துரைசாமியின் கால்களில் இருந்த சங்கிலிகளை அகற்றி, அவரைத் தனி அறையில் தங்கவைத்ததும் வெல்ஷ்தான். பின்னர் துரைசாமி பினாங்கிற்கு நாடுகடத்தப்பட்டார்.

ஆண்டுகள் உருண்டோடின. 1818 ஆம் ஆண்டு பினாங்கிற்குச் சென்ற வெல்ஷ் துரையை, அடையாளமே தெரியாத அளவுக்கு உருக்குலைந்த ஒருவர் சந்தித்தார். அவர் வேறு யாருமல்ல.. ஒருகாலத்தில் வெல்ஷின் பாதுகாப்பில் இருந்த சின்ன மருதுவின் மகன் துரைசாமிதான்!

அந்தச் சந்திப்பு தமது இதயத்தில் கத்தி பாய்ந்ததைப் போல இருந்ததாக வெல்ஷ் துரை எழுதியிருக்கிறார்.

மருது சகோதரர்களுக்கு எதிரான போரில் பங்கேற்ற ஜேம்ஸ் வெல்ஷ், பின்னாளில் ஆங்கிலேய இராணுவத்தில் பல்வேறு உயர் பதவிகளை வகித்து ஜெனரல் பதவி வரை உயர்ந்தார். 1861 ஜனவரி 24 ஆம் திகதி இங்கிலாந்தின் பாத் நகரில் காலமானார்.

வெல்ஷ் துரை தனது இந்திய இராணுவ அனுபவங்களை Military Reminiscences: Extracted from a Journal of Nearly Forty Years’ Active Service in the East Indies என்ற நூலாக எழுதியுள்ளார். இந்த நூல் 1830-ஆம் ஆண்டு இலண்டனில் இரண்டு தொகுதிகளாக வெளியிடப்பட்டது.

இந்த நூலின் முதல் தொகுதியில் (Volume I), 126 முதல் 135 வரையிலான பக்கங்களில் மருது சகோதரர்களுடனான நட்பு, அவர்களுக்கு எதிரான போர், அவர்களது இறுதிக் காலம், சின்ன மருதுவின் மகன் துரைசாமியின் நாடுகடத்தல், 17 ஆண்டுகளுக்குப் பின்னர் பினாங்கில் நிகழ்ந்த நெஞ்சை உலுக்கும் சந்திப்பு எனப் பல நிகழ்வுகளை வெல்ஷ் துரை பதிவு செய்துள்ளார்.

ஒருகாலத்தில் மருது சகோதரர்களின் அன்புக்குரிய நண்பராக இருந்தவர்.. பின்னர் அவர்களுக்கு எதிராகப் போர்க்களத்தில் நின்றவர்.. அவர்களது வீழ்ச்சியையும் குடும்பத்தின் துயரத்தையும் நேரில் அறிந்தவர்.. அந்த வெல்ஷ் துரை, தனது நினைவுக் குறிப்புகளில் மருது சகோதரர்கள் குறித்து எழுதியிருப்பதை, அதன் உணர்வுகள் மாறாமல் தமிழில் நமது மின்னம்பலம் வாசகர்களுக்காக…

எதிரியாகத் திரும்பி வருவேன் என நினைக்கவில்லையே..

காளையார்கோயில் மீதான தாக்குதல் குறித்து வெல்ஷ் தனது நூலின் 126-ஆம் பக்கத்தில் எழுதியிருப்பதாவது:

“காளையார் கோயில் கோவில் மிகப் பெரிய, அழகான கட்டிடம். சுமார் 18 அடி உயரமுள்ள வலிமையான கற்சுவர் அதைச் சூழ்ந்திருந்தது. அந்தக் கோவில், ஏறக்குறையத் தகர்க்கப்பட்டிருந்த கோட்டையின் ஒரு மூலையாக அமைந்திருந்தது.

ஒரே நேரத்தில் வெவ்வேறு திசைகளிலிருந்து நாங்கள் நடத்திய தாக்குதல்களால் எதிரிகள் முற்றிலும் மனம் தளர்ந்து, என்ன செய்வதென்று தெரியாமல் நிலைகுலைந்துபோயிருந்தனர். அன்றைய நாளின் எஞ்சிய நேரத்தில் அங்கே மனித நடமாட்டமே இல்லாததுபோல இருந்தது.

அங்கு 21 பீரங்கிகளைக் கைப்பற்றினோம். அவற்றில் பெரும்பாலானவை பயன்படுத்தத் தயாராகப் பொருத்தப்பட்டிருந்தன. ஏராளமான பொருட்களும் அங்கு இருந்தன. ஐரோப்பிய வகை மரச்சாமான்கள், இரண்டு கடிகாரங்கள், பல பெரிய நிலைக்கண்ணாடிகள் ஆகியவற்றையும் கண்டோம்.

அந்த கோட்டை மிகச் சிறப்பாகவும் பரந்த அளவிலும் கட்டப்பட்டிருந்தது. ஆனால் அதன் ஒரு பக்கமாக அமைந்திருந்த நகரத்துக்கு அடர்த்தியான முள்வேலியே பாதுகாப்பாக இருந்தது. அங்கே பல அழகான வீடுகள் இருந்தன. உண்மையில் அந்தக் கோட்டை மிக வலிமையான பாதுகாப்பு அரணாக இருந்ததில்லை. ஆனால் அந்தப் பகுதியைப் பற்றி எங்களுக்குக் கிடைத்த தகவல்கள் நம்பத்தகுந்தவையாக இருக்கவில்லை. எங்கள் முகாமிலிருந்த எந்த ஐரோப்பியருக்கும் அந்த நாட்டின் உண்மையான நிலைமை தெரியவில்லை.

இதைச் சொல்வதற்கே எனக்கு வெட்கமாக இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்புதான் நானே இந்தப் பகுதி வழியாகச் சென்றிருந்தேன். சிறுவயலில் இருந்த தனது அரண்மனையில் வெள்ளை மருது எனக்கு விருந்தளித்திருந்தார். ஆனால் மீண்டும் இந்த நாட்டுக்குள் நுழைய வேண்டியிருக்கும் என்று அப்போது சிறிதும் நினைக்கவில்லை. அதிலும் ஓர் எதிரியாகத் திரும்பி வருவேன் என்று நினைத்துக்கூடப் பார்க்கவில்லை.

பாஞ்சாலங்குறிச்சியைச் சேர்ந்தவர்கள் வேறு வழியே இல்லாத நிலையில்தான் ஆயுதம் ஏந்த வேண்டியிருந்தது. ஆனால் எனக்குத் தெரிந்தவரையில் மருதுவுக்குத் தீர்த்துக்கொள்ள வேண்டிய குறை எதுவும் இருக்கவில்லை. எனவே அவரது கிளர்ச்சி தேவையற்றதாகவே எனக்குத் தோன்றியது. இதனால் கட்டபொம்மன் மீது எனக்கு இருந்த அந்த இரக்கம் மருது மீது வரவில்லை.

மருதுவின் நாட்டைச் சேர்ந்தவர்கள் போர்வீரர்களாகப் பாஞ்சாலங்குறிச்சிக்காரர்களுக்கு இணையானவர்கள் அல்லர். அப்படி இருந்திருந்தால் நாங்கள் இன்னும் எத்தனையோ பெரிய இடையூறுகளைச் சந்தித்திருக்க வேண்டியிருந்திருக்கும். உண்மையாகவே சொல்கிறேன். 20,000 பாஞ்சாலங்குறிச்சி வீரர்கள் மருதுவின் நாட்டில் இருந்திருந்தால், அவர்களை யாராலும் வென்றிருக்க முடியாது என்பதே எனது உறுதியான கருத்து.”

(நூலில் பக்கம் 126: The Pagoda of Caliacoile is a very large and handsome building, surrounded by a strong stone wall, about eighteen feet in height, and forming one angle of the fort, which was nearly dismantled. The enemy seemed quite disheartened and bewildered, by our different attacks at the same moment, and hardly a soul appeared during the remainder of the day. We found here twenty-one guns, mostly mounted, and a great quantity of stores; there were also many articles of European furniture, and amongst them, two clocks, and several pier glasses. The fort had been well built and was extensive; but the town, covered by a thick hedge only, formed one face of it, and contained many excellent houses. It had, indeed, never been a place of very great strength; but our local information was never such as could be relied upon, and no European in the camp knew any thing about the state of the country.

I had myself, to my shame be it mentioned, actually passed through it, a few months before, and been entertained by Wella Murdoo in his palace at Sherewele; but had not then the slightest idea of ever again entering it much less as a foe. The Punjalumcoorchy men had been driven to take up arms as their only resource; but Murdoo had no grievance to redress, so far as ever came within my knowledge, and as his rebellion was therefore gratuitous, I could not feel so much for him as for the Cat. The people of his country were also by no means equal to the others as soldiers; had they been so, we should have had many more difficulties to have surmounted: indeed, it is my serious opinion, that twenty thousand Punjalumcoorcheers, would have been invincible in his country).

காடுகளில் மருது சகோதரர்களைத் தேடிய ஆங்கிலேயப் படைகள்

மருது சகோதரர்களைத் தேடிப் பிடித்தது குறித்து வெல்ஷ் தனது நூலின் 128–129 பக்கங்களில் எழுதியிருப்பதாவது:

“அக்டோபர் 4-ஆம் தேதி கர்னல் அக்னியூ சென்னைக்குத் திரும்பிவிட்டார். அதன் பின்னர் நாங்கள் மீண்டும் மேஜர் காலின் மெக்காலேயின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டோம். அவரிடமிருந்து உத்தரவு வரும்வரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் காத்திருந்தோம்.

அன்று 50 கிராமங்களின் தலைவர்கள் எங்களிடம் வந்து பாதுகாப்பு உறுதிமொழி பெற்றுக்கொண்டனர். மருது சகோதரர்கள் தங்களது படைகளைக் கலைத்துவிட்டதாகவும், 200 ஆதரவாளர்களை மட்டுமே அழைத்துக்கொண்டு Shangrapoy (சிங்கம்புணரி?) காட்டுக்குள் மறைந்திருப்பதாகவும் அவர்கள் செய்தி கொண்டு வந்தனர். இந்தச் செய்தி எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. ஏனென்றால், முடிவே இல்லாமல் நீண்டுகொண்டிருந்த, எந்தப் பயனும் தராத இந்தப் போரால் நாங்கள் மிகவும் களைத்துப்போயிருந்தோம்.

அதன் பின்னர் நடந்த நிகழ்வுகள் அவ்வளவு முக்கியமானவை அல்ல. ஏனென்றால், எதிரிகள் எங்குமே எங்களை எதிர்த்து நின்று போரிடவில்லை. அவர்களை வேட்டையாடிப் பிடிப்பதற்காகப் பல்வேறு காட்டுப் பகுதிகளுக்குப் படைக்குழுக்கள் அனுப்பப்பட்டன.

மருது சகோதரர்களில் ஒருவரைப் பிடித்துக் கொடுப்பவருக்குப் பெரும் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டிருந்தது. அவரை நான் தீவிரமாகத் துரத்திக்கொண்டிருந்தேன். அப்போதுதான் எனக்கு அந்தத் துரதிர்ஷ்டம் நேர்ந்தது. எங்கள் படைக்குழுவுக்கு மிக அருகிலேயே இருந்த கூட்டணிப் படையைச் சேர்ந்த சில சிப்பாய்கள் (புதுக்கோட்டைத் தொண்டைமான், எட்டயபுரம் பாளையக்காரர் உள்ளிட்டோர் ஆங்கிலேயர்களுக்குப் படைகளை அனுப்பியிருந்தனர். அவர்களது படைவீரர்களைத்தான் வெல்ஷ் குறிப்பிடுகிறாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை) அவரைச் சுட்டுக் காயப்படுத்திக் கைது செய்துவிட்டனர். இதனால் பத்தாயிரம் பகோடா, அதாவது நான்காயிரம் பவுண்டு பரிசுத் தொகையைப் பெறும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைக்காமல் போய்விட்டது.

அடுத்த சில நாட்களுக்குள் மருது சகோதரர்கள் இருவரும், அவர்களது குடும்பத்தினரும், கட்டபொம்ம நாயக்கர், தளவாய் பிள்ளை, ஊமைத்துரை ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். சின்ன மருதுவின் இளைய மகன் துரைசாமி, தளவாய் பிள்ளை ஆகியோரைத் தவிர மற்ற ஆண்கள் அனைவரும் தூக்கிலிடப்பட்டனர். (வெல்ஷ் குறிப்பிடும் ‘கட்டபொம்ம நாயக்கர்’ யார் என்பது தெளிவாகவில்லை. வீரபாண்டிய கட்டபொம்மன் 1799 ஆம் ஆண்டிலேயே தூக்கிலிடப்பட்டவர். எனவே வெல்ஷின் இந்தப் பதிவில் குறிப்பிடப்படும் நபரின் அடையாளம் குறித்து வரலாற்று ரீதியான தெளிவு தேவைப்படுகிறது.)

துரைசாமியும் தளவாய் பிள்ளையும் அவ்வளவு முக்கியமானவர்களாகக் கருதப்படாததால், அவர்களது 70 விசுவாசமான ஆதரவாளர்களுடன் பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் தீவுக்கு நாடு கடத்தப்பட்டனர்.

இப்படியாக, எங்களை மிகவும் வாட்டி வதைத்த அந்தப் போர் முடிவுக்கு வந்தது. அந்தப் போரில் ஏராளமான மனித உயிர்கள் பலியாகியிருந்தன. உயிர் பிழைத்தவர்களுக்குக் கூட அந்தப் போரின் முடிவு எந்த வகையிலும் பெருமை சேர்ப்பதாக இருக்கவில்லை.”

(நூலில் 128–129 Colonel Agnew having returned to Madras on the 4th of October, we were again put under the orders of Major Colin Macaulay, and remained inactive, waiting to hear from him. The head men of fifty villages came in to-day to take cowle, and brought intelligence that the Murdoos had disbanded their forces; and, with only two hundred followers, had secreted themselves in the Shangrapoy jungle. This we considered as very good news, for we were not a little weary of such a tedious and unprofitable warfare.

What followed afterwards, was, indeed, of little importance, the enemy no where making head against us; parties were sent to hunt them down in the different jungles, and I had the bad luck to be in full pursuit of one of the Murdoos, for whom a large reward was advertised, when a few of our ally Peons fired at, wounded, and took him, close to our party; thus depriving us of about ten thousand pagodas, or four thousand pounds sterling.

In a few days both the Murdoos, with their families, Catabomia Naig, Dalawai Pilly, and the Dumb Brother, were all taken, and the men all hanged, excepting Dora-Swamy, the youngest son of Cheena Murdoo, and Dallawai Pilly, who, being of less consequence, were transported for life to Prince of Wales’s Island, with seventy of their devoted followers; and thus ended this most harassing warfare, in which the expenditure of life had been profuse, and the result any thing but honourable to the survivors.

எந்தப் பிரதிபலனும் எதிர்பாராத அன்பு காட்டிய பெரிய மருது

பெரிய மருதுவுடன் தனக்கிருந்த நட்பு குறித்து வெல்ஷ் தனது நூலின் 129–130 பக்கங்களில் எழுதியிருப்பதாவது:

“இந்தப் பதிவில் நான் அடிக்கடி குறிப்பிட்டுள்ள மருது சகோதரர்களில் மூத்தவர் வெள்ளை மருது அல்லது வெள்ளி மருது என்று அழைக்கப்பட்டார். நாட்டின் நிர்வாகத்தில் அவர் ஈடுபடவில்லை. வேட்டையாடுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். தனது நேரம் முழுவதையும் வேட்டையிலேயே செலவிட்டார்.

சாதாரண மனிதர்களைவிட உயரமான உடலும் அபாரமான வலிமையும் கொண்டிருந்தார். காடுகளில் வாழும் கொடிய விலங்குகளை நேருக்கு நேர் எதிர்கொள்வதுதான் அவருக்கு மிகவும் பிடித்தமான செயல். சாதாரண ஆர்க்காடு ரூபாய் நாணயத்தைக் கூடத் தனது விரல்களால் வளைத்துவிடும் அளவுக்கு அவரிடம் வலிமை இருந்ததாகச் சொல்லப்பட்டது.

ஆட்சி நிர்வாகத்தின் கவலைகளோ, அதிகாரத்துக்குரிய ஆடம்பரங்களோ இல்லாமல், ஊர் ஊராகச் சுற்றித் திரியும் வாழ்க்கையை அவர் நடத்தினார். தஞ்சாவூர், திருச்சி, மதுரை ஆகிய இடங்களில் வாழ்ந்த ஐரோப்பியர்களை அவ்வப்போது சந்திப்பார். அவர்கள் அனைவரும் அவர்மீது மிகுந்த மதிப்பு வைத்திருந்தனர்.

யாருக்காவது வேட்டையாடப்பட்ட விலங்குகள் வேண்டுமென்றால் வெள்ளை மருதுவுக்கு ஒரு செய்தி அனுப்பினால் போதும். அவை நிச்சயமாகக் கிடைத்துவிடும். யாராவது நேரடியாக வேட்டைக்குச் செல்ல விரும்பினால், அவர்களை உரிய இடத்துக்கு அழைத்துச் சென்று வேட்டையில் வெற்றி பெறச் செய்வதும், அவர்களது உயிரைப் பாதுகாப்பதும் வெள்ளை மருதுவின் பொறுப்பாக இருக்கும். விருந்தினரை வலிமை மிக்க ஈட்டிக்காரர்கள் சூழ்ந்து பாதுகாத்துக் கொண்டிருக்கும்போது ஒரு பெரிய புலி வந்துவிட்டால், அந்தக் கொடிய விலங்கை முதலில் எதிர்கொண்டு வீழ்த்துவது வெள்ளை மருதுவாகத்தான் இருப்பார்.

நல்ல நிர்வாகமும் பாதுகாப்பும் உள்ள ஒரு நாட்டில் வாழ்பவர்களுக்கு இப்படிப்பட்ட வாழ்க்கை வீணானதாகவும் முக்கியத்துவமற்றதாகவும் தோன்றலாம். ஆனால் அடர்ந்த காடுகளும் கொடிய விலங்குகளும் நிறைந்த ஒரு பகுதியில் இப்படிப்பட்ட வாழ்க்கை பயனற்றதாக இருக்கவில்லை.

சிறிய விலங்குகளைத் தந்திரமாக வரவழைத்தோ, விரட்டியோ தனது ஐரோப்பிய நண்பருக்கு முன்னால் கொண்டு வருவார். இதனால் அந்த நண்பர் அதிக ஆபத்தின்றிக் காட்டுப்பன்றிகள், பெரிய மான்கள், மயில்கள் உள்ளிட்டவற்றை ஏராளமாக வேட்டையாட முடியும்.

கிழக்கத்திய நிம்ரோத் என்று சொல்லத்தக்க இந்த மாபெரும் வேட்டைக்காரரிடமிருந்து நான் ஏராளமான அன்பையும் அக்கறையையும் பெற்றிருக்கிறேன். 1795-ஆம் ஆண்டு நான் மதுரையில் பணியாற்றியபோது, அங்கிருந்த இளம் ராணுவ அதிகாரிகளில் ஒருவனாக இருந்தேன். அப்போதுதான் வெள்ளை மருது என்மீது இவ்வளவு அன்பும் அக்கறையும் காட்டினார். என்னிடம் எந்தப் பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் அவர் பழகியவர் என்பதற்கு இதைவிட உறுதியான சான்று வேறு என்ன இருக்க முடியும்?”

(நூலில் பக்கங்கள் 129–130: Of the two Murdoos, so frequently mentioned in this narrative, the elder brother was called Wella, or Velli Murdoo, but he had nothing to do with the management of the country. He was a great sportsman, and gave up his whole time to hunting and shooting. Being a man of uncommon stature and strength, his chief delight was to encounter the monsters of the woods; and it was even said, that he could bend a common Arcot rupee with his fingers.

Unencumbered with the cares or trappings of government, he led a sort of wandering life; and occasionally visited his European neighbours at Tanjore, Trichinopoly, and Madura, by whom he was much esteemed. If any one wanted game, a message sent to Velli Murdoo was sure to procure it; or if he wished to partake in the sports of the field, Velli Murdoo was the man to conduct him to the spot, and to insure his success, as well as to watch over his safety. Did a royal tiger appear, while his guest was surrounded by hardy and powerful pikemen, Velli Murdoo was the first to meet the monster and despatch him.

A life such as this, although it may appear idle and insignificant to those accustomed to the safety of a well-regulated country, was very far from being without it’s usefulness, in a district overrun with jungle, and infested by beasts of prey. The minor game was, however, politely decoyed, or driven in front of his European friend, who might thus, with less danger, kill hogs, elks, deer, pea-fowl, &c. in abundance. From this Oriental Nimrod I had received many marks of attention and kindness, when stationed at Madura, in the year 1795, and then one of the youngest subalterns in the place; a pretty certain proof of his disinterestedness)

தூக்கு மேடையில் மருது இருவர் உடல்கள் தொங்கியதை கண்டேனே..

சின்ன மருதுவுடன் தனக்கிருந்த நட்பு, அவரது ஆட்சிமுறை, இறுதியில் அவருக்கு நேர்ந்த கொடுமை ஆகியவை குறித்து வெல்ஷ் தனது நூலின் 130 ஆம் பக்கத்தில் எழுதியிருப்பதாவது:

சின்ன மருது பரந்த, வளமான நாட்டின் ஆட்சியாளராக இருந்தார். அவர் பொதுவாகச் சிறுவயலில் வசித்து வந்தார். கருமையான நிறமும் நல்ல உடல்வாகும் கொண்ட அழகான மனிதர் அவர். மிகவும் அன்பாகவும் இனிமையாகவும் பழகக்கூடியவர். யார் வேண்டுமானாலும் எளிதில் அவரை அணுக முடியும்.

அவர் தலையசைத்தாலே அதுவே சட்டமாகக் கருதப்படும் அளவுக்கு மக்களிடம் செல்வாக்குப் பெற்றிருந்தார். அப்படிப்பட்ட ஆட்சியாளராக இருந்தபோதும், ஒரு காவலாளிகூட இல்லாத திறந்த அரண்மனையில் வாழ்ந்தார்.

1795 பெப்ரவரி மாதத்தில் நான் அவரைச் சந்திக்கச் சென்றேன். அப்போது யார் வேண்டுமானாலும் அவரது அரண்மனைக்குள் சுதந்திரமாகச் செல்லவும் வெளியே வரவும் முடிந்தது. அங்கு வந்த ஒவ்வொருவரும், தந்தையாக விளங்கிய சின்ன மருதுவை எல்லாம் வல்ல இறைவன் ஆசீர்வதிக்க வேண்டும் என்று மனதார வாழ்த்தினர்.

அவரது நாட்டின் வழியாகச் சென்றபோது சாதாரணமாகத்தான் அவரைச் சந்தித்தேன். ஆனால் அந்தச் சந்திப்புக்குப் பிறகு அவர் எனது நண்பராகிவிட்டார். நான் மதுரையில் இருந்த காலம் முழுவதும் எனக்கு நல்ல அரிசியையும் பழங்களையும் பரிசாக அனுப்பிக்கொண்டே இருந்தார்.

குறிப்பாக, தடிமனான சொரசொரப்பான தோல் கொண்ட பெரிய ஆரஞ்சுப் பழங்களை அனுப்புவார். அவை அத்தனை இனிப்பாக இருக்கும். இந்தியாவின் வேறு எந்தப் பகுதியிலும் அவ்வளவு சுவையான ஆரஞ்சுப் பழங்களை நான் பார்த்ததில்லை.

ஈட்டியை எறிவதையும் வளரி என்ற ஆயுதத்தை வீசுவதையும் எனக்கு முதன்முதலில் கற்றுக்கொடுத்தவர் சின்ன மருதுதான். வளரி என்பது மற்ற பகுதிகளில் அதிகம் அறியப்படாத ஆயுதம். ஆனால் அதைப் பயன்படுத்துவதில் திறமை கொண்ட ஒருவர் 100 கெஜம் தொலைவுக்குள் இருக்கும் இலக்கைத் துல்லியமாகத் தாக்க முடியும்.

ஆனால் போரின் விதி என்னை எங்கே கொண்டுவந்து நிறுத்தியது!

அதே மனிதரை, ஒரு காட்டு விலங்கைப் போல நான் துரத்த வேண்டியிருந்தது!

அவர் படுகாயமடைந்து, சாதாரணச் சிப்பாய்களால் கைது செய்யப்பட்டதைப் பார்க்க வேண்டியிருந்தது. தொடை எலும்பு முறிந்த நிலையில் சிறைக்குள் அவர் துன்பப்பட்டுக் கொண்டிருந்ததையும் காண வேண்டியிருந்தது.

இறுதியாக, அந்த மனிதர் தனது வீரமிக்க சகோதரருடனும், அவருக்குச் சற்றும் சளைக்காத வீரமுடைய மகனுடனும், தங்களது தளபதிகள் சூழ, ஒரே தூக்குமேடையில் சங்கிலிகளுடன் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்ததையும் (திருப்பத்தூர் கோட்டையில்) என் கண்களால் காண வேண்டியிருந்தது! (நூலில் பக்கம் 130: The Cheena Murdoo was the ostensible sovereign of an extensive and fertile country, and his general residence was at Sherewele. Though of a dark complexion, he was a portly, handsome, and affable man, of the kindest manners, and most easy access; and though ruling over a people to whom his very nod was a law, he lived in an open Palace, without a single guard; indeed, when I visited him in February, 1795, every man who chose to come in, had free ingress and egress, while every voice called down the blessing of the Almighty upon the father of his people.

From a merely casual visit, when passing through his country, he became my friend, and during my continuance at Madura, never failed to send me presents of fine rice and fruit; particularly a large rough-skinned orange, remarkably sweet, which I have never met with in such perfection in any other part of India. It was he, also, who first taught me to throw the spear, and hurl the collery stick, a weapon scarcely known elsewhere, but in a skilful hand, capable of being thrown to a certainty to any distance within one hundred yards.

Yet this very man, I was afterwards destined by the fortune of war, to chase like a wild beast; to see badly wounded, and captured by common Peons; then lingering with a fractured thigh in prison; and lastly, to behold him, with his gallant brother, and no less gallant son, surrounded by their principal adherents, hanging in chains upon a common gibbet)

சின்ன மருதுவின் 15 வயது மகன்.. இரக்கம் இல்லாமல் இருக்க முடியாது

சின்ன மருதுவின் இளைய மகன் துரைசாமியைத் தூத்துக்குடியில் சந்தித்தது குறித்தும், அவரை நாடுகடத்தும் கப்பலில் ஏற்றிவிட்டது குறித்தும் வெல்ஷ் தனது நூலின் 133–134 பக்கங்களில் எழுதியிருப்பதாவது:

“நாட்டில் மீண்டும் அமைதி நிலைநாட்டப்பட்டதும் தெற்குப் படைகள் பாளையங்கோட்டைக்குத் திரும்பின. நான் தூத்துக்குடியின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டேன். ”நாடு கடத்தல்” கைதிகள் அனைவரும் முதலில் அங்குதான் அழைத்து வரப்பட்டனர்.

அங்குதான் என் பழைய நண்பரான சின்ன மருதுவின் இளைய மகன் துரைசாமியைச் சந்தித்தேன். அவர் சின்ன மருதுவின் மகன்களில் உயிருடன் எஞ்சியிருந்த ஒரே மகன். அவருக்கு அப்போது சுமார் பதினைந்து வயதுதான். அந்த இளைஞனுக்கு நாடு கடத்தப்படும் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. அவரது இரும்புச் சங்கிலிகளைத் தளர்த்த முடிந்ததில் துயரம் கலந்த ஓர் ஆறுதல் எனக்குக் கிடைத்தது.

அந்த இளைஞர் மிகவும் இனிமையான இயல்புடையவர். தனக்கு நேர்ந்த கொடுமையான விதியை அமைதியாகவும் கண்ணியமாகவும் ஏற்றுக் கொண்டார். ஒருமுறை கூட முணுமுணுக்கவில்லை. ஆனால் அவரது அழகான முகத்தில் அப்படியொரு ஆழ்ந்த துயரம் படிந்திருந்தது. அந்த முகத்தைப் பார்த்துவிட்டு அவருக்காக இரங்காமல் இருக்க யாராலும் முடியாது.

துரைசாமி என்னுடைய நேரடிப் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டிருந்தார். எனவே அவர் தப்பிச் செல்வதற்கு நான் மறைமுகமாக உதவ முடியாது. ஆனால் அவர் என்னுடன் ஒரே கட்டிடத்தில் தங்கியிருந்ததால், அவரது அவமானகரமான இரும்புச் சங்கிலிகளை அகற்ற முடிந்தது. முன்பு அவருக்குக் கீழ் பணியாற்றியவர்களிடமிருந்தும் அவரைத் தனியாகப் பிரித்து வைத்தேன்.

வசதியான ஓர் அறையில் துரைசாமி பாதுகாப்பாகத் தங்கியிருந்தார். அவரைக் காவலில் வைத்திருந்த என்னுடனும் எனது குடும்பத்தினருடனும் அவர் பழகுவதற்கு வாய்ப்பளித்தேன். அவரது சாதியையும் மதத்தையும் சேர்ந்த மரியாதைக்குரிய ஒருவர் தயாரித்த நல்ல உணவை அவருக்கு வழங்க ஏற்பாடு செய்தேன்.

எழுபது கைதிகளைப் பினாங்குக்கு அழைத்துச் செல்வதற்காக அரசாங்கம் ஒரு கப்பலை ஏற்பாடு செய்தது. அந்தக் கைதிகளுக்குப் பாதுகாப்பாகச் செல்லும் படைக்குழுவின் பொறுப்பு ஆறாவது படைப்பிரிவைச் சேர்ந்த லெப்டினன்ட் ராக்ஹெட்டிடம் ஒப்படைக்கப்பட்டது.

அவர் தற்செயலாக இந்தப் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டாரா அல்லது குறிப்பாகத் தேர்வு செய்யப்பட்டாரா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் இப்படிப்பட்ட ஒரு பொறுப்பை மனிதாபிமானத்துடனும் கண்ணியத்துடனும் நிறைவேற்றுவதற்கு அவரைவிடச் சிறந்த ஒருவரைத் தேர்ந்தெடுத்திருக்க முடியாது.

போர்க்களத்தில் அவரை நான் நன்கு அறிந்திருந்தேன். நாங்கள் அண்மையில் போரிட்டு வந்த நாட்டின், இப்போது தண்டனை விதிக்கப்பட்டிருந்த அந்த இளம் இளவரசருடன் நேரடியாகப் பழகுவதற்கும் அவருக்கு வாய்ப்புக் கிடைத்தது.

கப்பலின் கேப்டனான லீயும் துரைசாமியுடன் பழகினார். கைதிகளுக்குத் தேவையான உணவுப் பொருட்களும் மற்ற ஏற்பாடுகளும் செய்யப்பட்டுக்கொண்டிருந்த நாட்களில், குறிப்பாகச் சிறைப்பட்டிருந்த அந்த இளவரசரின் நிலையைப் பார்த்து எங்களைப் போலவே அவரும் இரக்கம் கொண்டார்.

தூத்துக்குடித் துறைமுகத்தில் துரைசாமியை லெப்டினன்ட் ராக்ஹெட்டிடம் ஒப்படைத்த அந்த நாளை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது.

எனது இளம் நண்பன் துரைசாமியைப் படகில் ஏற்றிவிட்டபோது, அவரது அழகிய முகத்தில் அன்பும் நம்பிக்கையிழந்த துயரமும் ஒன்றாகக் கலந்திருந்தன. அந்த முகம் இப்போதும் என் கண்முன்னே நிற்கிறது.

அவருடன் தண்டிக்கப்பட்ட மற்றவர்களும் தங்களது அன்புக்குரிய தாய்நாட்டை நிரந்தரமாகப் பிரிந்து சென்றனர். அந்தப் பிரிவின் துயரத்தை அவர்கள் அமைதியாகவும் மனவலிமையுடனும் தாங்கிக்கொண்டிருந்தனர்.”

(நூலில் பக்கங்கள் 133–134: No sooner was order again restored than the southern corps returned to Pallamcottah; and I was detached to command Tutucorine, whither all the rebels destined for transportation were sent in the first instance; and there I had the melancholy satisfaction of lightening the chains of Dora Swamy, the younger and only surviving son of my poor quondam friend, Cheena Murdoo, a youth of about fifteen, condemned to perpetual banishment. With a mild and dignified resignation, this amiable young man bore his cruel fate without a murmur; but such was the melancholy expression in his fine countenance, that it was impossible to see and not commiserate him. As he was consigned to my personal charge, to connive at his escape was impossible; but being under the same roof with me, in the large fortified factory, I was enabled to free him from his ignominious fetters, and separate him from the mass of his former menials.

His person was equally secure, in a commodious chamber, enjoying the company of his jailor and family, and fed with wholesome meals, dressed by a respectable man of his own caste and religion. A vessel being commissioned by Government to carry the seventy convicts to Penang, Lieutenant Rockhead of the 6th regiment was appointed to command the escort. Whether this appointment proceeded from the mere chance of routine, or from particular selection, I know not; but never could it have fallen on a man more fitted for the humane and honourable discharge of such a duty. I had known him intimately in the field, and he fortunately arrived in time to become personally acquainted with the now-condemned sovereign of the country in which we had so lately been employed. Captain Lee, who commanded the ship, had also an opportunity of participating in our feelings towards his future passengers, particularly the captive Prince, while the requisite stores and provisions were collecting and removing to the vessel.

Never shall I forget the day, when, on the wharf at Tutucorine, I consigned my charge over to Lieutenant Rockhead. I still seem to see the combination of affection and despair which marked the fine countenance of my young friend Dora Swamy, as I handed him into the boat; and the manly and silent misery, which his companions in affliction displayed, on quitting their dear native land for ever)

17 ஆண்டுகளுக்குப் பிறகு “துரைசாமி”.. நெஞ்சில் பாய்ந்ததே கத்தி!

1818 ஆம் ஆண்டு பினாங்கில் துரைசாமியை மீண்டும் சந்தித்ததையும், அந்தச் சந்திப்பின்போது தனக்கு ஏற்பட்ட வேதனையையும் வெல்ஷ் தனது நூலின் 134–135 பக்கங்களில் எழுதியிருப்பதாவது:

“அத்துடன் எங்களுடைய பழக்கம் முடிந்துவிட்டதாகவே அப்போது தோன்றியது. ஆனால் விதி எனக்காக இன்னொரு வேதனையை வைத்திருந்தது.

1818 ஆம் ஆண்டு உடல்நலக் குறைவால் கடற்பயணம் மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது நான் பினாங்கில் இறங்கினேன். அங்கே பரிதாபமான தோற்றத்துடன், உடல் நலிந்து, முதியவரைப் போலக் காணப்பட்ட ஒருவர் திடீரென என்னைச் சந்திக்க வந்தார்.

அவரது முகத்தையோ உருவத்தையோ என்னால் சிறிதும் அடையாளம் காண முடியவில்லை. அவரது பெயரையும் என்ன விஷயமாக வந்திருக்கிறார் என்பதையும் கேட்டேன். அவர் சிறிது நேரம் என்னையே பார்த்துக்கொண்டிருந்தார். அவரது சுருக்கங்கள் நிறைந்த கன்னங்களில் கண்ணீர் வழிந்தது. கடைசியாக அவர் ஒரு பெயரை உச்சரித்தார்.

”துரைசாமி”

அந்த ஒரு வார்த்தை என் நெஞ்சில் கத்தியைப் பாய்ச்சியதுபோல இருந்தது!

அந்த கணமே எனக்கு எல்லாம் புரிந்துவிட்டது. ஒருகாலத்தில் என்னுடைய பாதுகாப்பில் இருந்த அந்த இளம் கைதி என் முன்னால் நின்றுகொண்டிருந்தார். அவரது வெளித்தோற்றம் மாறியிருந்தது. பயங்கரமாக மாறியிருந்தது. ஆனால் அவரது உள்ளம் மாறவில்லை. பழைய நாட்களையும் பழைய நட்பையும் அவர் இன்னமும் நெஞ்சில் வைத்திருந்தார்.

எனது பெயரைத் தற்செயலாகக் கேட்டதும், என்மீது அவர் வைத்திருந்த பழைய அன்பு மீண்டும் எழுந்திருக்கிறது. இப்போது நான் உயர்ந்த பதவிக்கு வந்திருப்பதால், அவரது துன்பங்களைக் குறைப்பதற்கு என்னால் ஏதாவது செய்ய முடியும் என்று அவர் நம்பியிருக்கலாம். ஆனால் அந்த நம்பிக்கை தவறானதாக இருந்திருக்குமோ என்று நான் மிகவும் அஞ்சினேன்.

உயிருடன் எஞ்சியிருந்த தனது குடும்பத்தினருக்குக் கடிதங்களை எடுத்துச் செல்லுமாறும் அவர் என்னிடம் கெஞ்சிக் கேட்டார். ஆனால் அப்போது நடைமுறையில் இருந்த அரசாங்க உத்தரவுகளின்படி அதற்கும் அனுமதி இல்லை என்பதை அறிந்தேன்.

அங்கிருந்த ஆளுநர் கர்னல் பானர்மேன், முன்பு எனது படைத் தளபதியாக இருந்தவர். அவர் அன்பாகவும் பரிவுடனும் நடந்துகொண்டார். ஆனால் இந்த விஷயத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் அவரிடமும் இல்லை என்று தெரிந்தது. எனவே துரைசாமியின் வேண்டுகோளை நான் மறுக்க வேண்டியதாயிற்று.

(நூலில் 134–135: Here, to all appearance, our acquaintance was to end; but fortune had still another pang in store for me, for being forced to sea for my health, in the year 1818, and landing at Penang, I received a sudden visit from a miserable decrepit old man: who, when, without the most distant recollection of his person or countenance, I demanded his name and business, looked for some time in my face, the tears ran down his furrowed cheek, and at length he uttered the word “Dora Swamy!” It came like a dagger to my heart; the conviction was instantaneous. My poor young prisoner stood before me; changed, dreadfully changed in outward appearance, but still with the same mind, and cherishing the remembrance of former days and former friendships.

The casual hearing of my name had revived his affection, and, I much fear, the mistaken hope, that an advancement in rank might afford me the means of lessening his misery. He even entreated me to be the bearer of letters to his surviving family, but this I understood was contrary to the existing orders; since, though I found the Governor, the late Colonel Bannerman, my former commanding officer, kind and considerate, it did not appear to rest with him, and I was compelled to decline.

வெல்ஷின் இறுதி வேண்டுகோள்

சின்ன மருதுவின் மகன் துரைசாமியின் நிலை குறித்து வெல்ஷ் தனது நூலின் 135-ஆம் பக்கத்தில் எழுதியிருப்பதாவது:

“இறுதியாக எனக்கு ஒரு நம்பிக்கை இருக்கிறது. நான் இத்தனை ஆண்டுகள் பணியாற்றிய இந்தக் கிழக்கிந்திய கம்பெனியின் இயக்குநர்களில் இரக்கமுள்ள ஒருவரின் கைகளிலாவது என்னுடைய இந்தப் பதிவு சென்றடைய வேண்டும்.

அதன் மூலம் குற்றமற்ற ஒரு மனிதனின் துன்பங்களை முற்றிலுமாக நீக்க முடியாவிட்டாலும், ஓரளவாவது குறைக்க முடியும் என்று நம்புகிறேன்.

இப்போது அந்த நாட்டில் முழுமையாக அமைதி நிலைநாட்டப்பட்டுவிட்டது. எனவே இப்படிப்பட்ட ஓர் இரக்கமுள்ள நடவடிக்கையை மேற்கொள்வதால் அரசாங்கத்தின் கொள்கைக்கோ, நிர்வாகத்துக்கோ எந்தத் தீங்கும் ஏற்பட வாய்ப்பில்லை.”

(நூலில் பக்கம் 135: Let me however, in conclusion, express a hope that this narrative may fall into the hands of some kind-hearted Director of that honourable Company, which I have served so long, and be the means of alleviating, if not entirely removing the sufferings of an innocent man; the country being now completely settled, and no chance of any ill effects, as regards state policy, likely to accrue from such a compassionate measure.)

இப்படித்தான் வெல்ஷ் துரையின் அந்த சரித்திர நூலின் ஒவ்வொரு பக்கமும் ஓராயிரம் வரலாற்று நிகழ்வுகளை சுமந்து நிற்கிறது.

மண்ணின் விடுதலைக்காக.. மக்களின் விடுதலைக்காக.. ‘ஆதிக்கம்’ எந்த வடிவிலும் நின்ற போதும் எதிர்த்து நின்று வீர காவியமான மாவீரர்களான மாமன்னர்கள் ”மருது சகோதரர்கள்” வரலாறு தமிழர் நிலத்தில் காலத்தால் அழியாத சரித்திரம்!

Exit mobile version