-க.போத்தி ராஜ்
ஜனநாயகத்தின் ஆகச் சிறந்த விஷயமாக பார்க்கப்படும் கருத்துரிமையும், போராடும் சுதந்திரமும் அதன் எல்லையை மீறி வன்முறையாக மாறும்போது, ஓர் அரசு எந்த எல்லையை வரை பொறுமைகாக்க வேண்டும்?
பிரான்ஸ் மற்றும் இத்தாலியில் விலைவாசி உயர்வு, கல்வித் தரமில்லாமை மற்றும் வாழ்க்கைச் செலவு உயர்வு போன்ற பொருளாதாரச் சுமைகளுக்கு எதிராகக் குரல் எழுப்பிய மாணவர்களின் கைகளில் கற்களும் இரும்புக் கம்பிகளும் முளைத்தபோது, அந்நாட்டு அரசுகள் வெறும் காவல் துறையை மட்டும் நம்பியிருக்கவில்லை. மாறாக, குடும்ப அமைப்பின் மீது தங்களின் பார்வையைத் திருப்பியுள்ளன.
இளைய தலைமுறையின் ஆவேசம் வீதிகளில் தீப்பற்றி எரியும்போது, அதற்கு யார் பொறுப்பு? பாடசாலைகளில் வளர்க்கப்பட வேண்டிய ஜனநாயக உணர்வு, வன்முறையாகவும் பொதுச் சொத்துகளைச் சூறையாடுவதாகவும் திசைமாறி இருக்கும்போது ஐரோப்பிய நாடுகள் அதிர்ந்து போயுள்ளன.
மிலான் மற்றும் பாரிஸின் வீதிகளில் எழும் புகைமூட்டங்கள் வெறும் போராட்டத்தின் வெளிப்பாடு மட்டும் இல்லை; அது ஒரு தலைமுறையின் ஆற்றாமையும், குடும்பக் கண்காணிப்பில் ஏற்பட்டுள்ள தளர்வும்தான் என்று இரு நாடுகளின் அரசுகளும் நம்புகின்றன.
பிரான்ஸ் மற்றும் இத்தாலியில் நிகழ்ந்து வரும் மாணவர் கொந்தளிப்பு போராட்டங்கள், உலக நாடுகளைப் புருவம் சுருக்கி பார்க்க வைத்துள்ளது. “நாளை நமது பிள்ளைகள் எதை நோக்கி வீதிகளுக்கு செல்வார்கள்?” என்ற பெற்றோரின் நிம்மதியைக் குலைக்கும் ஒரு புதிய யதார்த்தத்தை ஐரோப்பா இன்று எதிர்கொண்டுள்ளது.
பொதுச் சொத்துகளைச் சேதப்படுத்தும் செயலில் ஈடுபடும் சிறுவர்கள், அவர்களைக் கண்டுகொள்ளாத பெற்றோர் என்ற சூழல் நிலவியபோது, அவர்களைக் கட்டுப்படுத்த பெற்றோரைத் தண்டிப்பதன் மூலம் வன்முறையின் வேர்களை வெட்டிவிட முடியும் என்று அந்த அரசுகள் நம்பின.
இதற்காகத்தான் பிரான்ஸ், இத்தாலி அரசுகள் தீவிரமான ஒரு முடிவை எடுத்தன. ‘உங்கள் பிள்ளைகளின் வன்முறைக்கு நீங்களே பொறுப்பு. அவர்கள் செய்யும் சேதத்துக்குப் பெற்றோர் அபராதம் செலுத்த வேண்டும்’ என்ற சட்டம், பெற்றோர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்துள்ளது.
இது வெறும் அபராதத்துக்கான சட்டம் மட்டுமல்ல; சமூகத்தில் பெற்றோர் தங்கள் கடமையில் இருந்து நழுவுவதைக் கண்டிக்கும் ஒரு கடுமையான சாட்டையாகவும் இரு நாடுகளின் அரசுகள் பார்க்கின்றன. ஆனால், இந்தச் சட்டம் அடிப்படை உரிமைகளின் மீதான அச்சுறுத்தல் என மனித உரிமை அமைப்புகள் எச்சரிக்கின்றன.
பிரான்ஸ், இத்தாலியில் போராட்டம் ஏன்?
பாரிஸின் புறநகரான செய்னி செயின்ட் டெனிஸ் உயர்நிலைப் பாடசாலையில் அடிப்படை வசதிகள் மற்றும் ஆசிரியர்கள் இல்லை எனக் கூறி செப்டம்பர் மாதம் பாடசாலை மாணவர்கள் போராட்டத்தைத் தொடங்கினர். இந்தப் போராட்டம் கல்லூரி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் தொழிற்சங்கத்தினரின் ஆதரவோடு நாடு முழுவதும் பரவியது.
பிரான்ஸ் அரசின் பொருளாதாரச் சிக்கன நடவடிக்கைகளும் வாழ்வாதாரப் பிரச்சினைகளும் போராட்டத்தை தீவிரப்படுத்தின. பல நகரங்களில் போராட்டம் வன்முறையாக மாறி, கடைகள் சூறையாடப்பட்டன.
வன்முறையைக் கட்டுப்படுத்தப் போலீஸார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும், துப்பாக்கிச்சூடு நடத்தியும், ஊரடங்கு உத்தரவையும் பிறப்பித்தனர்.
இத்தாலியில் விலைவாசி, வீட்டு வாடகை மற்றும் எரிபொருள் விலை உயர்வைக் கண்டித்து மிலான் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முகமூடி அணிந்த போராட்டக்காரர்கள் கடைகளை அடித்து நொறுக்குவது மற்றும் காவல் துறையினருடன் மோதுவது என வன்முறைகளில் ஈடுபட்டனர்.
இத்தாலி, பிரான்ஸ் அரசுகளின் புதிய சட்டங்கள்
இத்தாலியில் சட்டம் – ஒழுங்கை பராமரிக்கப் பிரதமர் ஜோர்ஜியா மெலோனி புதிய உத்தியைக் கையாண்டார். சாலையில் 5 பேருக்கு மேல் கூட்டமாகச் சென்றால் நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது.
14 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்கள் பொதுச் சொத்துகளைச் சேதப்படுத்தினால், பெற்றோருக்கு 20,000 யூரோக்கள் அபராதமும், 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கும் சட்டம் கொண்டு வரப்பட்டது.
சிவில் சட்டத்தின் 2048-வது பிரிவு திருத்தப்பட்டு, சிறார்களின் சட்டவிரோதச் செயல்களுக்குப் பெற்றோரே பொறுப்பு என அறிவிக்கப்பட்டது. மேலும், 14 முதல் 17 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் வன்முறையில் ஈடுபட வாய்ப்புள்ளது எனக் கருதினால், குற்றம் நடப்பதற்கு முன்பே அவர்களைத் தடுத்து நிறுத்தும் அல்லது காவலில் வைக்கும் அதிகாரத்தைக் காவல் துறைக்கு இத்தாலி வழங்கியுள்ளது.
பிரான்ஸ் அரசும் உரிமையியல் சட்டத்தின் 1242-வது பிரிவின்படி, பிள்ளைகள் ஏற்படுத்தும் சேதங்களுக்குப் பெற்றோர் முழுப் பொறுப்பேற்க வேண்டும் எனக் கூறியது. இழப்பீடு கட்டாவிட்டால் சொத்து பறிமுதல் செய்யப்படும் அபாயமும் உள்ளது.
மேலும் “கலவரக்காரர்களே இழப்பீடு வழங்க வேண்டும்” என்ற மசோதாவின் கீழ் 10,000 யூரோக்கள் அபராதமும், கூட்டு உரிமையியல் பொறுப்பு விதியும் சேர்க்கப்பட்டுள்ளன.
புதிய உத்தியின் பின்னணி:
சிறுவர்கள் எங்கு செல்கிறார்கள், என்ன செய்கிறார்கள் என்பதை பெற்றோர் முறையாகக் கண்காணிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை அல்லது பயத்தை உருவாக்குவதே இந்தச் சட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
சட்டம் மற்றும் காவல் துறைக்குப் பயந்தும், பெற்றோரே தங்கள் பிள்ளைகளை இதுபோன்ற வன்முறைப் போராட்டங்களுக்கு அனுப்பாமல் தடுத்து நிறுத்துவார்கள் என அந்த அரசுகள் நம்புகின்றன.
சர்ச்சைகளும் விமர்சனங்களும்:
இந்த அதிரடி நடவடிக்கைகளுக்கு ஒருபுறம் வரவேற்பு இருந்தாலும், மனித உரிமை அமைப்புகளும் எதிர்க்கட்சிகளும் இதற்கு கடுமையான கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றன.
“குழந்தைகளின் உரிமைகள் பறிக்கப்படுகிறது. முறையான நடைமுறைகள் மீறப்படுகிறது. அரசின் இந்தத் தண்டனை நடவடிக்கைகள் வன்முறைக்கான அடிப்படைக் காரணங்களான சமூக – பொருளாதார சிக்கல்களைத் தீர்க்காது” என்று விமர்சகர்கள் வாதிடுகின்றனர்.
புதிய சட்டங்களும் பலன்களும்:
இந்தப் புதிய சட்டங்களால் மிலான் மற்றும் பாரிஸ் போன்ற முக்கிய நகரங்களின் மையப் பகுதிகளில் தொடர்ச்சியாக நடந்து வந்த கடைகளை அடித்து நொறுக்குதல், சூறையாடல் மற்றும் வாகனங்களுக்குத் தீ வைக்கும் சம்பவங்கள் ஓரளவு குறைந்துள்ளன.
சட்டத்தின் மீதான அச்சம் காரணமாக, முகமூடி அணிந்து வன்முறையில் ஈடுபடும் ‘பிளாக் புளாக்’’(Black Bloc) குழுவினரின் செயல்பாடுகள் முடக்கப்பட்டுள்ளன.
இத்தாலி, பிரான்ஸ் அரசுகளின் இந்த உத்தி பெற்றோர் மத்தியில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அபராதம் செலுத்த வேண்டும் என்பதால், பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகள் மாலை வேளைகளில் எங்கு செல்கிறார்கள், யாருடன் பழகுகிறார்கள் என்பதைத் தீவிரமாகக் கண்காணிக்கத் தொடங்கியுள்ளனர்.
ஐரோப்பிய நாடுகளில் தொடரும் போராட்டம்: பிரான்சில் 1000 பேர் கைது
விலைவாசி உயர்வு, வீட்டுவசதி தட்டுப்பாடு, சீரழிந்து வரும் பொதுச்சேவைகள் மற்றும் அரசின் பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராக பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், போர்த்துகல், அல்பேனியா, பெல்ஜியம் ஆகிய ஐரோப்பிய நாடுகளில் 2 வாரங்களுக்கு மேலாக போராட்டம் நடைபெற்று வருகிறது.
நேற்று முன்தினம் (24.10.206) இலட்சக் கணக்கானோர் வீதிகளில் திரண்டு பேரணி நடத்தினர். பகலில் அமைதியாகத் தொடங்கிய போராட்டங்கள் மாலையில் கலவரமாக மாறின. பிரான்ஸ் உள்துறை அமைச்சக தகவலின்படி 4.10 இலட்சம் பேரும், தொழிற்சங்கங்கள் கூற்றுப்படி 8 இலட்சம் பேரும் சனிக்கிழமைப் போராட்டத்தில் பங்கேற்றனர். நிலைமையைக் கட்டுப்படுத்த 70,000 போலீசார் குவிக்கப்பட்டனர்.
பாரிஸில் போர்ட் டி இத்தாலியிலிருந்து போர்ட் டி வின்சென்னெஸ் வரை நடந்த பேரணியின் இறுதியில் வன்முறை வெடித்தது.
போலீசார் தடியடி, கண்ணீர்ப்புகை மற்றும் தண்ணீரைப் பீச்சியடித்துக் கூட்டத்தைக் கலைத்தனர். பிரான்ஸ் முழுவதும் இதுவரை 1,000 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இத்தாலி: மிலான், ரோம், துரின் ஆகிய நகரங்களில் இளைஞர்களும் மாணவர்களும் திரளாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, ஏற்கெனவே இருந்த நூற்றுக்கணக்கான வீரர்களுடன் கூடுதலாக 500 ராணுவ வீரர்களைப் பிரதமர் ஜோர்ஜியா மெலோனி களமிறக்கியுள்ளார்.
ஸ்பெயின்: பார்சிலோனா வின் பிளாக்கா டி கட்டலூனியா சதுக்கத்தில் கருப்பு உடை மற்றும் முகமூடி அணிந்த கும்பல் 14 க்கும் மேற்பட்ட கடைகளின் கண்ணாடிகளை உடைத்து பொருட்களைக் கொள்ளையடித்தது. வன்முறையில் ஈடுபட்டதாக நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
போர்த்துகல்: லிஸ்பன் உள்ளிட்ட நகரங்களில் வாடகை உயர்வு மற்றும் நில உரிமையாளர்கள் எளிதாகக் குடியிருப்பாளர்களை வெளியேற்றும் சட்டத்திற்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் பேரணி நடத்தினர்.
அல்பேனியா: தலைநகர் திரானாவில் கல்விக்கட்டணக் குறைப்பு மற்றும் பிரதமர் எடி ராமா ராஜினாமா செய்யக் கோரி மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் கற்கள் வீசப்பட்டதால் 2,500-க்கும் மேற்பட்ட போலீசார் கண்ணீர்ப்புகை மற்றும் தண்ணீரைப் பீச்சியடித்தனர்.
-இந்து தமிழ்

