-ச.அருணாச்சலம்
ஆடிய ஆட்டம் என்ன? அடித்த கூத்துக்கள் என்ன? செய்த அராஜகங்கள் என்ன? பேசாத பேச்சுண்டா? அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு மக்கள் சரியான அடி தந்துள்ளனர். அமெரிக்க இடைத்தேர்தலில் ட்ரம்ப்பிசத்தை எதிர்த்த அலை வரப்போகிறது என்று அனைத்து ஊடகங்களும் கூறின! ஆனால், வந்ததோ, மிகப் பெரிய சுனாமியாகும். நீல சுனாமி அதிபர் ட்ரம்பையும், அவரது குடியரசு வேட்பாளர்களையும் பந்தாடியதன் பின்னணியில் உள்ள காரணங்கள் என்ன?
நடந்த தேர்தலில், ஹவுஸ் ஆஃப் ரெப்பரசன்டேட்டிவ்ஸ் (House of Representatives) என்றழைக்கப்படும் அமெரிக்க மேலவையான காங்கிரஸிற்கு (435 இடங்கள்), ஜனநாயக கட்சியினர் (அக்கட்சியின் வண்ணம் – நீலம்) இது வரை 254 இடங்களில் வென்று உள்ளனர். முந்தைய காங்கிரசில் பெரும்பான்மை பெற்றிருந்த ட்ரம்ப்பின் குடியரசு கட்சியினர் (அக்கட்சியின் வண்ணம் – சிகப்பு) இப்பொழுது 162 இடங்களை மட்டும் பெற்று மாபெரும் தோல்வியைத் தழுவினர்.
இதைப் போன்றே செனட் (Senate) என்றழைக்கப்படும் நூறு இடங்களை கொண்ட அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு நடந்த தேர்தலில் ஜனநாயக கட்சி 54 இடங்களிலும், ட்ரம்ப் கட்சி 44 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. ஆக , அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஜனநாயக கட்சி அமோக வெற்றி பெற்று ட்ரம்ப்பிசத்திற்கு கடிவாளம் போட்டுள்ளது. பதவிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் முடிவதற்குள் அதிரடியாக செயல்பட்டு,தேவையற்ற ஈரான் போர், தேவையற்ற சுங்கவரி யுத்தம் ஆகியவற்றில் ஈடுபட்டு அமெரிக்க மக்களையும் உலகினரையும் எரிசக்தி தட்டுப்பாடு, விலை ஏற்றம் என்ற நெருக்கடியில் தள்ளியதற்கு தகுந்த பதிலடியை ட்ரம்பிற்கு கொடுத்துள்ளனர், அமெரிக்க மக்கள்!
இஸ்லாமிய வெறுப்பை பரப்பியும், வெள்ளையரல்லாத அமெரிக்க குடியேறிகளை வசைபாடியும், இஸ்ரேலின் மனித படுகொலையை ஆதரித்தும் வாக்குகளை கேட்ட ட்ரம்பிற்கு அமெரிக்க மக்கள் தோல்வியை கொடுத்துள்ளனர். அவர்கள் அமெரிக்காவை மகோன்னதமாக்கு என்ற கோஷத்தை புறந்தள்ளி அமெரிக்காவை, இங்கு வாழும் அனைத்து மக்களுக்குமான நாடாக மாற்றுவோம் (Election is no longer for restoration, it’s for transformation) என்று இத் தேர்தலில் கூறியுள்ளனர்.
இந்த முறை ஜனநாயக கட்சியினர் பெற்ற வெற்றி என்பது, காலங்காலமாக குடியரசு கட்சியினர் வெற்றி பெற்றுவரும் மாகாணங்களான வடக்கு மற்றும் தெற்கு கரோலினா, கான்ஸாஸ், ஓஹையோ, டெக்ஸாஸ் மற்றும் மேய்ன் ஆகியவற்றில் கூட அக்கட்சியினரை மண்ணை கவ்வ வைத்துள்ள நீல சுனாமியின் தாக்கம் ஆகும்.
இந்திய வம்சாவளியினரான கேரளத்தில் பிறந்து அமெரிக்க குடிமகனான விவேக் ராமசாமி குடியரசு கட்சியின் ஆளுனர் பதவிக்கான வேட்பாளராக தேர்தலில் நின்றார். ட்ரம்பின் தவறான கொள்கைகளை தனது லட்சியமாக வரித்துக் கொண்ட இந்த வம்சாவளி விவேக் ராமசாமி தோற்கடிக்கப்பட்டார் என்பது இனிப்பான செய்தி தான்.
இந்திய வமிசாவளியை சார்ந்த முன்னாள் சட்டமியற்றுபவர்களான பிரமீளா ஜெயபால், ரோ கன்னா, அமி பேரா மற்றும் சுஹாஸ் சுப்பிரமண்யம் ஆகியோர் மீண்டும் ஜனநாயக கட்சி சார்பாக போட்டியிட்டு வென்றுள்ளனர். அத்துடன் புதியவர்களும் இளந்தலைமுறையை சார்ந்தவர்களுமான பியா தண்டியா மற்றும் அருணா மில்லர் போன்றோரும் வென்றுள்ளனர்.
இவர்கள் அனைவரும் அமெரிக்க ஜனநாயக மாண்புகளை காப்பாற்றவும், ட்ரம்ப்பின் தான்தோன்றி தனமான போர் நடவடிக்கைகளை எதிர்த்தும், அதிபரின் வெள்ளை இன மேலாதிக்கம், இஸ்லாமிய வெறுப்பு மற்றும் இலாபவெறி, ஆகியவற்றை எதிர்த்தும், அமெரிக்க நலனைவிட இஸ்ரேலின் நலன் முதன்மையானது என்று செயல்பட்ட ட்ரம்பை தோற்கடித்துள்ளனர்.
கர்நாடகாவை பூர்வீகமாக கொண்ட இந்திய வம்சாவளி பெண்ணை மணந்துள்ள அப்துல், கடைசி நேரத்தில் ஜனநாயக கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், எதிர்கட்சியான குடியரசு கட்சி வேட்பாளருக்கு ஆதரவை வழங்கி சொந்த கட்சி வேட்பாளரான அப்துல் சையதின் காலை வாரிய போதும், வெற்றி வாகை சூடியுள்ளது வரலாற்று சிறப்பு மிக்கதாகும்.
டெக்சாஸ் மகாணத்தின் அரசு வழக்கறிஞரும், குடியரசு கட்சி வேட்பாளருமான கென் பாக்ஸ்டனை, சாதாரண ஸ்கூல் டீச்சரான ஜேம்ஸ் டாலரிக்கோ தோற்கடித்துள்ளார். அதை போன்று மிச்சிகன் மாநிலத்தில் குடியரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான மைக் ரோஜர்சை, ஜனநாயக கட்சியை சார்ந்த அரபு- அமெரிக்க இனத்தவரும், இஸலாமியருமான அப்துல் எல் சையது தோற்கடித்து வென்றுள்ளார். வரலாற்றில் மொத்தம் 7 இஸ்லாமியர்கள் முதன்முதலாக அமெரிக்க காங்கிரசுக்கு தேர்வாகியுள்ளது, இந்த தேர்தல் முடிவுகளில் சிறப்பம்சமாகும்.
அமெரிக்க மக்கள் நலனைவிட தனது வணிக நலன்களை முன்னிறுத்திய ட்ரம்பின் மோசமான நடவடிக்கைகளை – தனது மகனையும் மருமகனையும் இராஜாங்க பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுத்தி, ஒப்பந்தங்கள் மூலம் இலாப வேட்டையாட அனுமதிப்பதை- எதிர்த்தும், பொது வாழ்க்கையில் உயர்ந்த தலைமை பதவிகளை வகிப்போர் கண்ணியத்துடனும், நாகரீகமாகவும் நடந்து கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தியும் வாக்களித்துள்ளன. ட்ரம்பின் செயல்பாடுகளால் ஏற்பட்ட விலைவாசி ஏற்றம் அமெரிக்க மக்களை வாட்டியதின் வெளிப்பாடு தான் குடியரசு கட்சியின் தோல்வியாகும்.
இதை மறைமுகமாக ஒத்துக் கொண்ட துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் குடியரசு கட்சியின் மோசமான தோல்விக்கு நான்கு காரணங்களை கூறியுள்ளார். ‘ஈரான் போரை எதிர்த்தும், விலைவாசி உயர்வை எதிர்த்தும், அமெரிக்க நலனே முதன்மையானது என்ற நிலையை ட்ரம்ப் கைவிட்டதை எதிர்த்தும், இஸ்ரேல நலனே முக்கியம் என செயல்படுவதை எதிர்த்துமே மக்கள் வாக்களித்துள்ளனர். மேக் அமெரிக்கா கிரேட் எகெய்ன் (Make America Great Again) என்ற மாகா (MAGA) கொள்கையை மக்கள் எதிர்க்கவில்லை’ என்ற தொனியில் கருத்து தெரிவித்துள்ளார். இதையே ட்ரம்பின் மகனான, ஜூனியர் ட்ரம்ப்பும் தெரிவித்துள்ளார்.
ஆனால், இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராகி இரண்டு வருடங்களுக்குள்ளாகவே மிகப் பெரிய தோல்வியை சந்தித்துள்ள ட்ரம்ப், ஆச்சர்யகரமாக வெற்றிபெற்ற ஜனநாயக கட்சியினருக்கு வாழ்த்துக்களை கூறியுள்ளார். 2020 இல் தோல்வியடைந்த போது, “தேர்தல் திருடப்பட்டது “ என்று கூறியதை போன்று இப்பொழுதும் கூறுவார் என எதிர்பார்த்த நிலைக்கு மாறாக ஜனநாயக கட்சியினரை வாழ்த்திய ட்ரம்ப் “ நான் அவர்களுடன் இணைந்து பணியாற்றுவேன்” என்று கூறிவிட்டு தன்னை தகுதி நீக்கம் செய்ய ஜனநாயக கட்சி முயற்சித்தால் அது அக்கட்சியை அழித்துவிடும் என்றும், அதிபர் என்ற முறையில் தன்னிடம் வீட்டோ (veto) என்ற ஆயுதம் இருக்கிறது என்று எச்சரிக்கையும் விடுத்துள்ளார். குப்புற வீழ்ந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற நிலை இது தான்!
‘‘நான் நேரடியாக களத்தில் (வாக்குசீட்டில்) இருந்திருந்தால் கதையே வேறு, நான் அமோக வெற்றி பெற்றிருப்பேன்’’ என்று தன்னைத் தானே சமாதான படுத்தி கொள்ளும் ட்ரம்ப் தோல்விக்கு காரணம், ஈரான் போர் தான் என்பதை ஒத்துக் கொண்டார் .
தேர்தலுக்கு முன்பு, ”தேர்தலில் தோல்வியடைந்தால் தான் இஸ்ரேலில் போய் குடியேறுவேன் அங்கு எனது அப்ரூவல் ரேட்டிங் 99% உள்ளது” என்று உளறி வந்த ட்ரம்ப், தோல்விக்கு பிறகும் ஈரான் மீது அணுகுண்டு தாக்குதல் நடத்துவாரா? என்ற பேச்சு ஒருவார காலமாகவே உலகெங்கிலும் வலம் வருகிறது.
ட்ரம்பின் தோல்வி, ஈரான் மீது தொடுக்கப்பட்ட போரை அமெரிக்க மக்கள் விரும்பவில்லை என்பதை காட்டுகிறது என்று ஈரான் தெரிவித்துள்ள போதிலும், ட்ரம்ப் ஈரான் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்த மாட்டார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்று மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மனிதகுல வரலாற்றில் அணு ஆயுத தாக்குதலுக்கு உட்படுத்தப்படுவோம் என்று ஒரு அரசு தன் மக்களுக்கு எச்சரிக்கை விடுவதும், அந்த ஆபத்து நேர்ந்தால் அதை எதிர் கொள்ள பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும் என்றும் அறிவிக்கும் துயர நிகழ்வு இப்பொழுது ஈரானில் நடைபெறுகிறது.
போர்வெறியனும், சர்வதேச நீதிமன்றத்தால் தேடப்படும் குற்றவாளியுமான நெத்தன்யாகு தொடர்ந்து ட்ரம்பை அணு ஆயுத தாக்குதல் நடத்துமாறு நச்சரிப்பதாக முன்னாள் ட்ரம்ப் ஆதரவாளரும் புகழ்பெற்ற பத்திரிக்கையாளருமான டக்கர் கார்ல்சன் தெரிவித்துள்ளார்.
ட்ரம்ப் இச்செய்தியை மறுக்கவில்லை, மாறாக நான் கொலைகளை விரும்பவில்லை, அவசியமானால் தாக்குதல் நடத்த தயங்க மாட்டேன் என்று கூறியுள்ளார். எனவே வரும் நாட்களில் இந்த பைத்தியக்காரன் என்ன செய்வான் என்பதை அறுதியிட்டு கூற யாரும் தயாராய் இல்லை!
இஸ்ரேலுக்காக எதையும் செய்யும் அமெரிக்க அதிபரான ட்ரம்ப் அடைந்துள்ள தேர்தல் தோல்வியால் அமெரிக்க இந்திய வர்த்தக உறவுகளில் மாற்றம் ஏற்படுமா?
“மை டியர் பிராண்ட் ட்ரம்ப்” என மோடிஜீ கூறினாலும், ட்ரம்பை கண்டால் மோடிக்கு உள்ளூர உதறல் தான். ட்ரம்பின் ஆளுமை குறைவது இந்திய நலன்களுக்கு நல்லது தான் என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் எண்ணுமானால் அது முற்றிலும் தவறான கணிப்பாகும்.
தன்னுடைய மற்றைய அதிகாரங்கள் அமெரிக்க செனட் மற்றும் காங்கிரசால் கட்டுபடுத்தபடும்பொழுது , போர் மற்றும் வர்த்தக (war and tariffs) வரிகள் விவகாரத்தில் அதிபரின் செயலதிகாரத்தை அவை கட்டு படுத்த முடியாது. இந்த நிலையில் தான் விரும்பும் வர்த்தக ஒப்பந்தத்தை – இந்திய அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தை- ஏற்படுத்த தனது முழு அதிகாரத்தையும் பயன்படுத்த ட்ரம்ப் தயங்கமாட்டார் என்றே தோன்றுகிறது.
ரஷ்யா சீனா மற்றும் ஈரானுடன் மோதி வெற்றி பெற முடியாத ட்ரம்ப், ஏப்ப சாப்பையான மோடி அரசை அடக்கி வசப்படுத்துவதில் தீவிரம் காட்டுவார்.
அடுத்து லின்சே கிரஹாம் அறிமுகப்படுத்திய ரஷ்யா ஈரான் தடை சட்டம் 2026 குடியரசு மற்றும் ஜனநாயக கட்சிகள் இரண்டுமே இணைந்து நிறைவேற்றிய சட்டம் என்பதால், இதில் ட்ரம்ப் இந்தியாவிற்கு விதிவிலக்கு அளிப்பது வெகுநாள் நீடிக்க வாய்ப்பில்லை. இந்திய பொருட்களின் மீது செக்சன் 301 படி 10% வரிச் சுமையை அமெரிக்கா விதித்துள்ளது. இது ஏற்கனவே விதித்திருந்த 50% வரிச் சுமைக்கு மேல் விதிக்கப்படும் வரியாகும். அமெரிக்க உச்சநீதிமன்றம் ட்ரம்பின் வரிவிதிக்கும் அதிகாரத்தை கேள்வி கேட்டாலும் 1962 ஆம் வருடத்திய சட்டத்தின் செக்சன் 232 நீடிப்பதை தடுக்கவில்லை. சுருக்கமாக ட்ரம்ப் அடைந்த தோல்வி அவரது ஒரு சில அதிகாரங்களை கட்டுபடுத்துமே ஒழிய, வரி விதிக்கும் முறைகளை கட்டுபடுத்தாது. காரணம், அவற்றிற்கு இரு கட்சிகளின் ஆதரவும் உள்ளது என்பது தான்.
இரு கட்சிகளின் ஆதரவு வரி விதிப்பில் மட்டுமல்லாது, ஈரான் அரசு பற்றிய அணுகுமுறையிலும் நாம் காணலாம். ஈரான் அரசை மாற்ற வேண்டும் – regime change- என்பதில் ஜனநாயக கட்சித் தலைமைக்கும், குடியரசு கட்சிக்கும் ஒத்த கருத்தே உள்ளன.
நடந்து முடிந்த இடைத்தேர்தலில் ஈரான் போரினால் விளைந்த டீசல் தட்டுப்பாடு, எரி பொருள் விலை ஏற்றம், பணவீக்கம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் பெருவாரியாக ஜனநாயக கட்சிக்கு வாக்களித்துள்ளனர். ஜனநாயக கட்சியின் தலைமையோ ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதை எதிர்க்கவில்லை, ட்ரம்ப் இந்த போரை சரிவர கையாளவில்லை என்ற நிலைப்பாட்டில் ஜனநாயக கட்சியின் தலைமை உள்ளது.
ஆனால் பெருவாரியான மக்களும், ஜனநாயக கட்சியில் கணிசமான பேரும் குறிப்பாக இளந்தலைமுறையினர் அவ்வாறு எண்ணவில்லை. அவர்கள் இத்தேர்தலில், பலஸ்தீனத்தில் இஸ்ரேலின் படுகொலைக்கெதிராகவும், ஈரான் மீது இஸ்ரேலுக்கு உள்ள பகையை அமெரிக்காவை போரில் இழுத்துவிட்டு, இஸ்ரேல் குளிர் காய்வதையும் , போரில் ஈடுபடுவது அமெரிக்க நலன்களுக்கு உகந்தது அல்ல என்பதையும் மக்களிடம் எடுத்து வைத்தே தேர்தலில் வெற்றியை ஈட்டியுள்ளனர்.
எனவே, இத்தேர்தல் ஜனநாயக கட்சியின் தலைமைக்கு கிடைத்த வெற்றியல்ல, ட்ரம்பின் முட்டாள்தனமான போர் நடவடிக்கைகளுக்கு எதிரான வாக்கு என்பதால் ஜனநாயக கட்சியிலும் மாற்றத்தை விரும்பும் இளைய சக்திகளின் தலைமை ஏற்படுவதற்கு இத்தேர்தல் முடிவுகள் வலு சேர்த்துள்ளன. அப்படி மாற்றம் நடந்தால் தான் அமெரிக்க அரசியலிலும் உரிய மாற்றங்கள் ஏற்படும். அத்தகைய மாற்றங்களுக்கான முதல்படி இது என்பதால், மாற்று அரசியலை விரும்பும் அனைவரும் இத் தேர்தல் முடிவுகளை வரவேற்கின்றனர்.

