Site icon சக்கரம்

பிரான்சில் உள்நாட்டுப் போர்

– பேராசிரியர் விஜய் பிரசாத்

ஆசிரியர்கள் வகுப்பறைக்கு வர வேண்டும், சக மாணவர்களுக்குப் போதுமான மேசைகள் வேண்டும், கல்விக்கு ஏற்ற பாடசாலைக் கட்டடங்களை அரசு கட்ட வேண்டும் – இவ்வளவுதான் பாரிஸ் புறநகர் மாணவர்கள் வீதிக்கு வந்ததன்நோக்கம்.

“பன்லியூ” எனப்படும் இந்தப்புறநகர்கள், பிரான்சின் உழைக்கும் ஏழைகளின் கிடங்குகள்; பெரும்பாலும் பிரான்சின் முன்னாள் காலனிகளிலிருந்து வந்த வெள்ளையர் அல்லாத சமூகங்கள் வாழும் இடங்கள். “குடியரசு உலகளாவியவாதம்” என்ற அதிகாரப்பூர்வ சித்தாந்தத்தில் தன்னை நியாயவானாகக் கருதும் பிரெஞ்சு ஆளும் வர்க்கம் இனவெறி பற்றிப் பேச விரும்புவதில்லை. ஆனால் அரசின் – குறிப்பாகக் காவல்துறையின் – இனவெறியும், தீவிரவலதுசாரிக் கட்சிகளின் இனவெறியும் உண்மை. புறநகர்களில் சேவைகள் சீரழிந்திருப்பது, தங்கள் உரிமைகள்திட்டமிட்டு மறுக்கப்படுவதற்குச் சான்று. அதனால்தான் சில ஆண்டுகளுக்கு ஒருமுறை அங்குள்ள இளைஞர்கள் நீதி கேட்டு வீதிக்கு வருகிறார்கள்.

பாரிஸ் புறநகர்களிலிருந்து தொடங்கிய இந்தப் போராட்டம், கூலி குறைப்பு, விலைவாசி உயர்வு, பலஸ்தீனர்கள்மீதான இஸ்ரேலிய இனப்படுகொலை, உக்ரைனுக்கு அதிகரிக்கும் பிரெஞ்சு இராணுவ உதவி, பொதுச் சேவைகளின்சீரழிவு ஆகியவற்றுக்கு எதிரான பரந்த கோபத்திலிருந்து வலிமை பெற்று பிரான்ஸ் முழுவதும் பரவியது.இவற்றுக்குப் பின்னால் ஒரு பெரும் கேள்வி நிற்கிறது: பிரெஞ்சுக் குடியரசு தனது இளைஞர்களுக்கு எத்தகைய எதிர்காலத்தைத் தருகிறது?

கூலி குறைகிறது, விலை ஏறுகிறது

ஒக்ரோபர் 17 அன்று, பிரான்ஸ் முழுவதும் நடந்த ஆர்ப்பாட்டங்களில் ஏறத்தாழ 8 இலட்சம் பேர் பங்கேற்றதாக சிஜிடி தொழிற்சங்கக் கூட்டமைப்பு கணக்கிட்டது. உயர்ந்த கூலி, ஓய்வூதியம், குறைந்த விலைகள், போதுமான பொதுச் சேவைகள் – இவையே கோரிக்கைகள். எரியும் கட்டடங்களும் சூறையாடப்பட்ட கடைகளும் சர்வதேச ஊடகங்களில் ஆதிக்கம் செலுத்தி, போராட்டங்களை இழிவுபடுத்தப் பயன்படுகின்றன. ஆனால் தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் இலட்சக்கணக்கானோர் ஏன் திரண்டார்கள் என்பதை அவை விளக்கவில்லை. பாடசாலைகள் நெரிசலில் உள்ளன; வாழ்வாதாரம் நிச்சயமற்றது; குடும்பங்கள் களைத்துப் போயிருக்கின்றன.

2018 இல் எரிபொருள் வரி உயர்வு, வேலைக்குச் செல்ல கார்களைச் சார்ந்திருந்த மக்களிடம் கோபத்தைப் பற்றவைத்தது. வாகன அவசர நிலையில் அணியும் மஞ்சள் அங்கியை அணிந்து போராடியதால் அது “மஞ்சள் அங்கி இயக்கம்” எனப்பட்டது. அதே நேரத்தில் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் பெரும் பணக்காரர்களின் மீதான செல்வ வரியைக் குறைத்தது எளிய மக்களுக்கு நேரடி அவமானமாகப் பட்டது. அரசு எரிபொருள் வரி உயர்வைத் திரும்பப் பெற்றது. 2023 இல், நாடாளுமன்ற வாக்கெடுப்பு இன்றி அரசியல் சாசனப்பிரிவைப் பயன்படுத்தி ஓய்வு வயதை 62 இலிருந்து 64 ஆக மக்ரோன் உயர்த்தியபோது மீண்டும் போராட்டம் வெடித்தது.

2025 இல் அப்போதைய பிரதமர் பிரான்சுவா பைரூ, இரண்டு பொது விடுமுறைகளை இரத்து செய்வது உட்பட 43.8 பில்லியன் யூரோ செலவுக் குறைப்பை முன்மொழிந்தார். தொழிலாளர்களின் ஓய்வு நேரமும் சமூகப் பாதுகாப்பும் அரசின் கணக்கைத் தீர்க்கப் பயன்படுகின்றன; பில்லியனர்களின் செல்வத்தை மட்டும் தொட முடியாது என்பது மக்களுக்குத் தெளிவானது.பெற்றோருக்கு இழைக்கப்பட்ட துரோகம் பிள்ளைகளைத் தாக்கியது. இப்போது அவர்களே வீதியில் இருக்கிறார்கள்.

பிரான்சின் தேசியப் புள்ளியியல் நிறுவனத்தின்படி, 2023 இல் 98 இலட்சம் பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்ந்தனர்; வறுமை விகிதம்(15.4%) 1996 இல் கணக்கெடுப்பு தொடங்கியதிலிருந்து மிக அதிகம். புறநகர்களில் வறுமையும் அன்றாட இனவெறியும் பின்னிப் பிணைந்திருக்கின்றன. 2016 ஜூலையில் போலீஸ் காவலில் இறந்தமாலி வம்சாவளி இளைஞர் அடாமா த்ராவோ ரேவுக்கு நீதி கேட்ட இயக்கம், 2020 ஜூனில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற போராட்டமாக வளர்ந்தது.

பலஸ்தீனம், உக்ரைன்

2023 ஒக்ரோபர் 12 அன்று, காசா மீதான புதிய வன்முறை தொடங்கி ஒரு வாரத்துக்குள், பிரான்சில் பலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டங்களைத் தடை செய்யுமாறு உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டர்மனான் உத்தரவிட்டார். பாரிஸின் சயன்சஸ் போ பல்கலைக்கழகத்தில், இஸ்ரேலிய நிறுவனங்களுடனான கூட்டுறவை எதிர்த்த அறுபது மாணவர்களை வெளியேற்றக் கலவரத் தடுப்புப் போலீஸ் அழைக்கப்பட்டது. உக்ரைன் மக்களின் உயிர்கள் காக்கப்பட வேண்டியவை, பலஸ்தீனர்களின் உயிர்கள் கைவிடப்படலாம் என்று அரசு பிரித்துப் பார்ப்பதை மாணவர்கள் கண்டார்கள்.

ரஷ்யாவை அச்சுறுத்தலாகச் சித்தரித்து, சமூகச் செலவுகளைக் குறைத்து இராணுவ முதலீட்டைப் பெருக்க 2025 மார்ச்சில் மக்ரோன் அழைப்பு விடுத்தார். 2027-க்குள் ஆண்டு இராணுவ பட்ஜெட்டை 2017 இன் இரு மடங்காக, 64 பில்லியன் யூரோவாக உயர்த்துவதாக அறிவித்தார்; கடன் வாங்கவோ வரி உயர்த்தவோ மாட்டோம் என்றார்.

2027 பட்ஜெட் முன்மொழிவு இராணுவத்துக்கு 63.4 பில்லியன் யூரோ ஒதுக்குகிறது – 2026 ஐ விட 11% அதிகம். கல்விக்கும் மருத்துவத்துக்கும் இல்லாத பணம், போருக்கு மட்டும் கிடைக்கிறது. அல்பேனியா முதல் இத்தாலி, ஸ்பெயின் வரை, வீட்டு விலை உயர்வு, கூலி வீழ்ச்சி, சிதைந்த சமூகப் பாதுகாப்பு என்ற அதே பிரச்சனைகளுக்காக ஐரோப்பா எங்கும் இலட்சக்கணக்கானோர் வீதியில் இறங்கியுள்ளனர்.

முடிவு திறந்தே இருக்கிறது

மஞ்சள் அங்கி இயக்கம் உள்ளூர் மக்கள் மன்றங்களை உருவாக்கியது; போலீஸ் வன்முறைக்கு எதிரான இயக்கங்கள் வலுப்பெற்றன. ஆனால் சிக்கனம், இராணுவமயம், இனவெறி ஆகியவற்றை எதிர்க்கும் பொதுத் திட்டத்துடன் இந்தச் சிதறிய சக்திகளை நீடித்த அரசியல் சக்தியாக்குவது என்பது இன்னும் தீர்க்கப்படவில்லை. 2024 இல் பிரெஞ்சுக் கம்யூனிஸ்ட் கட்சி, “அடிபணியாத பிரான்ஸ்”, சோசலிஸ்ட் கட்சி உள்ளிட்டவை இணைந்த “புதிய மக்கள் முன்னணி” நாடாளுமன்றத் தேர்தலில் அதிக இடங்களை வென்றது; ஆனால் பிரதமர் பதவி மறுக்கப்பட்டது.

2027 ஜனாதிபதித் தேர்தலில் அந்த முன்னணி ஒரே வேட்பாளரைச் (பெரும்பாலும் “அடிபணியாத பிரான்ஸ்” கட்சித் தலைவர் ஜான்-லூக் மெலான்சோன்) சுற்றி ஒன்றுபடுமா என்பது கேள்வி. மையவாதிகள் நம்பகத்தன்மை இழக்கும் நிலையில், மரீன் லே பென் தலைமையிலான தீவிர வலதுசாரி அமைப்பான “தேசியப் பேரணி”க்கே சாதகமாக செல்லக்கூடும். மக்களின் பாதுகாப்பின்மையைப் புலம்பெயர்ந்தோருக்கு எதிராகத் திருப்பி, அவர்களது கோபத்தை புலம்பெயர்ந்தோர் மீதான கூடுதல் அடக்குமுறைக்கான கோரிக்கையாக அது மாற்றும். கண்ணியத்துடன் கற்கவும் வாழவும் வழி கேட்ட இளைஞர்களின் உணர்வுகளுக்கு இது முற்றிலும் எதிரானது.

மூலம்: The Civil War in France

தமிழில் : எஸ்.பி.ஆர்.

Exit mobile version