
போருக்கு அல்ல; மக்கள் நலனுக்கே முன்னுரிமை
பிரித்தானியாவில் இராணுவச் செலவினங்களை அதிகரிக்கும் திட்டத்தைக் கைவிட்டு, கல்வி, மருத்துவம், வீட்டுவசதி மற்றும் சமூக நலத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள் உள்ளிட்ட 1,000-க்கும் மேற்பட்டோர் திறந்த கடிதம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளனர்.
பிரித்தானியாவின் பாதுகாப்புத்துறைச் செயலர் வெஸ் ஸ்ட்ரீட்டிங், நாடு போருக்குச் செல்ல இன்னும் 1,000 நாட்களே இருக்கலாம் என தெரிவித்த நிலையில், ‘போருக்கு அல்ல; மக்கள் நலனுக்கே முன்னுரிமை’ என்ற முழக்கத்துடன் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மில்பர்ன் ஆய்வுக் குழுவின் பரிந்துரைப்படி இளைஞர்களுக்கான நலத்திட்ட உதவிகளைக் குறைக்க அரசு திட்டமிட்டுள்ள நிலையில், இராணுவத்திற்காக ஆண்டுதோறும் கூடுதலாக 15 பில்லியன் பவுண்டுகளைச் (சுமார் 1 இலட்சத்து 81 ஆயிரத்து 805 கோடி இந்திய ரூபாய்) செலவிட முடிவு செய்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ‘போர் நிறுத்தக் கூட்டணி’ (Stop the War Coalition) ஏற்பாடு செய்துள்ள இந்தத் திறந்த கடிதத்தில், 48 மணி நேரத்திற்குள் 1,000-க்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டுள்ளனர்.
“இளைஞர்களுக்குக் கூடுதல் ஆதரவு தேவைப்படுகிறதே தவிர, நலத்திட்ட உதவிகளில் வெட்டுகள் தேவையில்லை. இராணுவச் செலவுகளை அதிகரிப்பது ஆயுத விற்பனை நிறுவனங்களின் லாபத்தையே பெருக்கும். இது போரை நோக்கிய நகர்வைத் தீவிரப்படுத்துமே தவிர, வேலைவாய்ப்புகளையோ பொருளாதார வளர்ச்சியையோ உருவாக்காது என அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
அரசு இந்தத் திட்டங்களைக் கைவிட்டு, கல்வி, சுகாதாரம், வீட்டுவசதி மற்றும் சமூக நலத்திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும். போரை மையமாகக் கொண்ட வெளியுறவுக் கொள்கைக்குப் பதிலாக, பேச்சுவார்த்தை மற்றும் தூதரக உறவுகள் மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும்” என வலியுறுத்தப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களான ரிச்சர்ட் பர்கன், ஜெரமி கார்பின், ஜோன் மெக்டொனல், ஜோன் ட்ரிக்கெட் உள்ளிட்டோர் இந்த மடலில் கையெழுத்திட்டுள்ளனர். பசுமைக் கட்சியின் துணைத் தலைவர் மோதின் அலி மற்றும் NEU, PCS, TSSA தொழிற்சங்கங்களின் பொதுச் செயலாளர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, சர்வதேச இளைஞர் வேலைநிறுத்தப் போராட்டம் வெள்ளிக்கிழமையன்று நடைபெற்றது. ‘எங்கள் எதிர்காலத்திற்காகப் போராடுவோம்; அவர்களின் போர்களுக்காக அல்ல!’ என்ற முழக்கத்துடன் ஐரோப்பா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இலட்சக்கணக்கான மாணவர்களும் இளைஞர்களும் வீதிகளில் இறங்கிப் போராடினர்.
“இளைஞர்களுக்கான நலத்திட்ட உதவிகளைக் குறைக்கவும், அவர்களைப் போர் இயந்திரத்திற்குள் தள்ளவும், போர்வெறிக்காக அவர்களின் உயிர்களைப் பலிகொடுக்கவும் அரசு நினைக்கிறது. ஆனால், இளைஞர்கள் இதனை ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். இன்று பிரித்தானியாவின் அனைத்துப் பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் போராடி வருகின்றனர். ஐரோப்பா முழுவதும் இலட்சக்கணக்கான இளைஞர்கள் வீதிகளில் இறங்கியுள்ளனர். இதுவே சர்வதேச மக்கள் இயக்கத்தின் வலிமை” என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
பெருநிறுவன அலுவலகங்களை முற்றுகையிட்ட மாணவர்கள்:
இதற்கிடையில், இலண்டனின் நிதி மற்றும் பெருநிறுவன மையங்களில் மாணவர் அமைப்புகளைச் சேர்ந்த போராட்டக்காரர்கள் பல்வேறு நிறுவனங்களின் அலுவலகங்களை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பலஸ்தீன மக்கள் மீதான இனப்படுகொலைக்கும், காலநிலைப் பேரழிவுக்கும் துணைபோகும் நிறுவனங்களைக் கண்டித்து இந்தப் போராட்டம் நடைபெற்றது.
‘நோ நியூ வொர்க்கர்ஸ்’ மற்றும் ‘ஜென் 1.5’ ஆகிய மாணவர் அமைப்புகளைச் சேர்ந்த அகிம்சை வழிப் போராட்டக்காரர்கள், காப்பீட்டு நிறுவனங்களான சோம்போ, சப், தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் மற்றும் எண்ணெய் நிறுவனமான பிபி ஆகியவற்றின் அலுவலகங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இஸ்ரேலின் மிகப்பெரிய ஆயுத விநியோக நிறுவனமான எல்பிட் சிஸ்டம்ஸுக்கு காப்பீடு வழங்கும் சோம்போ, சப் நிறுவனங்களுக்கும், ‘புராஜெக்ட் நிம்பஸ்’ திட்டத்தின் மூலம் இஸ்ரேலிய இராணுவத்திற்கு செயற்கை நுண்ணறிவு மற்றும் கிளவுட் சேவைகளை வழங்கும் கூகுளுக்கும் எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதுகுறித்து ‘நோ நியூ வொர்க்கர்ஸ்’ அமைப்பின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “சோம்போ மற்றும் சப் நிறுவனங்கள் எல்பிட் நிறுவனத்தின் தொழிற்சாலைகள் தொடர்ந்து இயங்குவதற்கு உதவுகின்றன. இதன்மூலம் பலஸ்தீன மக்களுக்கு எதிரான தாக்குதல்களுக்கான ஆயுத விநியோகத்திற்குத் துணைபோகின்றன. அதேவேளையில், அலையன்ஸ் மற்றும் அவிவா நிறுவனங்கள் எல்பிட் நிறுவனத்துடனான தொடர்பைக் கைவிட்டுள்ளன” என்றார்.
‘ஜென் 1.5’ அமைப்பின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “மௌனமாக இருக்க மறுக்கும் ஒரு தலைமுறையின் உறுதியையே இந்தப் போராட்டங்கள் வெளிப்படுத்துகின்றன. பிபி நிறுவனம் சுற்றுச்சூழலை அழிப்பதையும், இனப்படுகொலைக்குப் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள் மூலம் கூகுள் இலாபம் ஈட்டுவதையும் நாங்கள் வேடிக்கை பார்க்க மாட்டோம். எங்களது எதிர்காலம் இந்தப் பெருநிறுவனங்களின் அலுவலகங்களில் விற்பனை செய்யப்படுகிறது” என்று தெரிவித்தார்.

