Site icon சக்கரம்

ஹிட்லர் பாணி ஆட்சியாளர்களும் பாசாங்குத்தனமான விமர்சகர்களும்

ஜனநாயக ரீதியான மாற்றுக் கருத்துக்களை நசுக்குவதற்காகக் குற்றவியல் விசாரணைகளையும் சட்ட நடவடிக்கைகளையும் ஓர் ஆயுதமாகப் பயன்படுத்த வேண்டாம் என எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, ஜே.வி.பி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தை எச்சரித்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. 21.11.206 அன்று பாராளுமன்றத்தில் நடைபெற்ற வரவு-செலவுத் திட்ட விவாதத்தின் போது உரையாற்றிய அவர், அரசியல் களத்திலிருந்து எதிரிகளை அகற்ற முயற்சிப்பதற்குப் பதிலாக, தேர்தல்களில் அவர்களை எதிர்கொள்ளுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தினார்.

1980 ஆம் ஆண்டில் ஜே.ஆர். ஜயவர்தன அரசாங்கம் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் குடியுரிமையைப் பறித்து, 1982 ஜனாதிபதித் தேர்தலில் அவர் போட்டியிடுவதைத் தடுத்தமையை நினைவு கூர்ந்த ஜயசேகர, அரசியல் போட்டியாளர்களை ஒதுக்கி வைப்பதற்காகச் சட்டத்தைப் பயன்படுத்தி வரலாற்றை மீண்டும் நிகழ்த்த வேண்டாம் என எச்சரித்தார். 1994 ஆம் ஆண்டில் சிறிமாவோ மீண்டும் பிரதமராகத் திரும்பியதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் (CIABOC) பணிப்பாளர் நாயகத்தினால் வழங்கப்படும் சான்றிதழின் அடிப்படையில் விளக்கமறியலில் வைப்பதற்கு வழிவகுக்கும் ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் 149 ஆவது பிரிவைக் குறிப்பிட்டுப் பேசிய ஜயசேகர, தடுத்து வைப்பதற்கான காரணங்களை நீதவான்களால் போதுமான அளவு ஆராய முடியுமா எனக் கேள்வி எழுப்பினார். இத்தகைய உத்தரவுகளைச் சவாலுக்கு உட்படுத்துவதற்குச் சந்தேகநபர்களுக்கு அர்த்தமுள்ள வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்திய அவர், உயர் நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீடிக்கும் 22 ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகளை விமர்சித்ததுடன், அவை தற்போதைய பதவியிலுள்ள நீதிபதிகளுக்குப் பிரயோகிக்கப்பட்டிருக்கக் கூடாது என்றும் வாதிட்டார். அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் நீதிபதிகள் குழாம் நியமிக்கப்படுவதில் அதிக வெளிப்படைத்தன்மை அவசியம் என்றும் அவர் கோரினார்.

ஜே.வி.பி தலைமையிலான அரசாங்கத்தைத் தாக்கிப் பேசும்போது, 1977 பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி (UNP) மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்ற போது, அக்கட்சிக்கு ஜே.வி.பி ஆதரவளித்தது என்பது ஜயசேகரவிற்குத் தோன்றியிருக்க வாய்ப்பில்லை.

கடந்த ஆண்டு ஜே.வி.பி/தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் இருட்டிலிருந்து மீட்டெடுக்கப்பட்டு, அதன் கண்டறிதல்கள் குறித்து விசாரணை நடத்துவதாக வாக்குறுதியளித்துப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையானது, ‘1977 பொதுத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்ட நேரத்தில், ஜே.வி.பியின் வெளிவட்ட அமைப்பாளர்கள் தீவிரமாகச் செயற்பட்டனர். உண்மையில், அக்காலப்பகுதியில் வலதுசாரி முதலாளித்துவ அரசியல் சக்தியாக வகைப்படுத்தப்பட்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சிக்கு நேரடியாக ஆதரவளிக்கும் அளவிற்கு அவர்கள் சென்றனர்’ (பக்கம் 14) என சொல்லுகின்றது. அச்சமயம் ஜே.வி.பி தலைவர்கள் சிறையில் இருந்தபோதிலும், அவர்களின் அறிதலின்றி அக்கட்சி ஐக்கிய தேசியக் கட்சியுடன் கைகோர்த்திருக்காது. எனவே, ஜயவர்தன அரசாங்கத்தின் அரசியல் அடக்குமுறை வரலாறு கண்டிக்கப்படும் போது, ஐக்கிய தேசியக் கட்சியுடனான ஜே.வி.பியின் வரலாற்றுத் தொடர்பை வசதியாகப் புறக்கணித்துவிட முடியாது.

அரசியல் போட்டியாளர்களை மௌனமாக்குவதற்குச் சட்ட மற்றும் நீதித்துறைச் செயன்முறைகளைத் தவறாகப் பயன்படுத்தியதில் ஜனாதிபதி ஜயவர்தன மட்டுமே தனித்து நிற்கவில்லை. இலங்கையின் பெரும்பாலான அரசாங்கங்களும் அவற்றின் தலைவர்களும் அதிகாரத்தின் மீதான தமது பிடியை உறுதிப்படுத்திக கொள்வதற்காகத் தயக்கமின்றி அடக்குமுறை வழிமுறைகளைக் கையாண்டுள்ளனர்;. இது ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிப்பதற்கு ஹிட்லரும் நாஜி கட்சியும் பயன்படுத்திய வழிமுறைகளை எமக்கு நினைவூட்டுகின்றது.

வெறுமனே தேர்தல்களில் வெற்றி பெறுவதன் மூலம் மாத்திரம் ஹிட்லர் தனது அதிகாரத்தை உறுதிப்படுத்திக் கொள்ளவில்லை. தனது எதிரிகளைச் செயலிழக்கச் செய்யவும், பாராளுமன்ற எதிர்ப்பைப் பலவீனப்படுத்தவும், உண்மையான தேர்தல் போட்டியைச் சாத்தியமற்றதாக்கவும் அவர் அரச நிறுவனங்கள், பொலிஸ் அதிகாரங்கள், அவசரகாலச் சட்டங்கள் மற்றும் நீதித்துறையைப் படிப்படியாக ஆயுதமாக்கினார். அரசியல் எதிரிகளை ஒழித்துத் தனது இலக்கை அடைவதற்காகக் கைதுகள், அச்சுறுத்தல்கள், புனையப்பட்ட அல்லது அரசியல் ரீதியாகப் பயன்படுத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் மற்றும் சட்டத் திரிபுகளை அவர் திட்டமிட்ட முறையில் பயன்படுத்தினார். சர்வாதிகாரத்திற்கு வழிவகுத்த அவரது ‘அதிகாரமளிக்கும் சட்டம்’ (Enabling Act), எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களின் அச்சுறுத்தல், துன்புறுத்தல் மற்றும் கைதுகளுக்கு மத்தியிலேயே நிறைவேற்றப்பட்டது.

எந்தவொரு கற்பனையாலும் இலங்கையில் எந்தவொரு அரசாங்கத்தின் கீழும் நிலவிய சூழ்நிலையை நாஜி ஆட்சியின் கீழ் ஜேர்மனியில் நிலவிய சூழ்நிலையுடன் ஒப்பிட முடியாது. இருப்பினும், ஜனநாயகத்தைப் பாதுகாப்பதில் எதனையும் தற்செயலாக விட்டுவிடக் கூடாது என்பதுடன், சர்வாதிகாரப் போக்குகளை வெளிப்படுத்தும் அரசாங்கங்களும் அவற்றின் தலைவர்களும் கட்டுக்குள் வைக்கப்படுவது இன்றியமையாததாகும்.

சுவாரசியமான விடயம் யாதெனில், பாராளுமன்ற உறுப்பினர் ஜயசேகரவும் மனித உரிமைகள் மற்றும் சிவில் சுதந்திரங்களின் இன்றைய பெரும்பாலான காவலர்களும், தமது போட்டியாளர்களுக்கு எதிராக அரசியல் பழிவாங்கல்களைக் கட்டவிழ்த்துவிட்ட ஐக்கிய தேசியக் கட்சி (UNP) மற்றும் சிறீலங்கா சுதந்திரக் கட்சி (SLFP) தலைமையிலான அரசாங்கங்களில் அங்கம் வகிப்பதில் எவ்விதத் தயக்கமும் கொண்டிருக்கவில்லை.

சட்ட மற்றும் நீதித்துறைச் செயன்முறைகளைச் சீர்குலைப்பதற்காகப் பயங்கரவாதத் தடைச் சட்டம் போன்ற கொடூரமான சட்டங்களை அறிமுகப்படுத்தித் தவறாகப் பயன்படுத்தியதோடு, அரசியல் வன்முறைகளையும் தேர்தல் மோசடிகளையும் ஐக்கிய தேசியக் கட்சி நிறுவனமயப்படுத்தியது. சிறீலங்கா சுதந்திரக் கட்சியும் அரசியல் போட்டியாளர்களைத் தாக்கியதும், தேர்தல்களில் வெற்றி பெறுவதற்காக வாக்குப் பெட்டிகளை நிரப்பியதுமான வரலாற்றைக் கொண்டுள்ளது. 1999 வடமேல் மாகாண சபைத் தேர்தலில் அது ஐக்கிய தேசியக் கட்சியை எவ்வாறு தோற்கடித்தது என்பது இதற்கு ஒரு தகுந்த உதாரணமாகும்.

சிறீலங்கா சுதந்திரக் கட்சி / மக்கள் கூட்டணி அமைச்சர்கள் தலைமையிலான குண்டர் படைகள் தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சிச் செயற்பாட்டாளர்களைத் தாக்கியதுடன், அவர்களில் சிலரைப் பொது இடத்தில் நிர்வாணமாக்கி, எதிர்க்கட்சி வாக்குச்சாவடி முகவர்களை விரட்டியடித்து, பொலிஸாரின் கண்முன்னாலேயே வாக்குப் பெட்டிகளை நிரப்பின. சிறீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம், போரில் வெற்றி பெற்ற முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவைத் துன்புறுத்தியதுடன், எதிர்க்கட்சி அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் மீதான எண்ணற்ற தாக்குதல்களுக்கும் குற்றஞ்சாட்டப்பட்டது.

தற்போதைய அரசாங்கத்தின் சர்வாதிகாரப் போக்குகள் குறித்த எதிர்க்கட்சி அரசியல்வாதிகளின் விமர்சனம் நியாயமானது என்பதுடன், ஜனநாயகத்திற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் குறித்த அவர்களின் எச்சரிக்கைகளுக்குச் செவிசாய்க்கப்பட வேண்டும்; ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவை பாசாங்குத்தனத்தால் கறைபடிந்துள்ளன.

மூலம்: Hitlerite rulers and hypocritical critics

Exit mobile version