Site icon சக்கரம்

தீண்டாமைக்கு எதிரான 1966 ஒக்ரோபர் 21 எழுச்சியின் வரலாறும் பின்னணியும்

-கலியுகன்

பகுதி – 5

1966 ஒக்ரோபர் 21 எழுச்சியை ஆரம்பித்து முன்னெடுத்து வந்த புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சி, ஒரு கட்டத்தில்,போராட்டத்தின் போக்குக் காரணமாகவும், வளர்ச்சி காரணமாகவும், போராட்டத்தை ஒரு பரந்துபட்ட அடிப்படையில் முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தது.

இந்த விடயம் குறித்து கட்சியின் வட பிரதேசக் குழு விரிவாக ஆராய்ந்தது. அந்தக் காலகட்டத்தில் கட்சியின் வட பிரதேசச் செயலாளராக தோழர் மு.கார்த்திகேசன் செயற்பட்டு வந்தார். (இவரே கட்சித் தலைமையின் வேண்டுகோளை ஏற்று, கொழும்பிலிருந்து 1944 இல் யாழ்ப்பாணம் வந்து அங்கு கட்சியை முதன்முதலில் உருவாக்கியவர்) அன்றைய சூழலில் அரசாங்க உத்தயோகத்தில் இருப்பவர்கள் அரசியலில் ஈடுபடக்கூடாது என்ற சட்டம் அமுலில் இருந்ததால், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் ஆசிரியராக இருந்த கார்த்திகேசன் ‘மாணிக்கவாசகர்’ என்ற புனைபெயரிலேயே கட்சியில் செயல்பட்டு வந்தார்.

தோழர் கார்த்திகேசனைச் செயலாளராகக் கொண்ட கட்சியின் வட பிரதேசக் குழுவில் தோழர்கள் வி.ஏ. கந்தசாமி, கே.ஏ. சுப்பிரமணியம், நீர்வை பொன்னையன், மு.குமாரசாமி. வ.சின்னத்தம்பி, இ.குணரத்தினம், மு.முத்தையா, கே.ஜனகா, சி.கா. செந்தில்வேல், எம்.ஏ.சி. இக்பால், நா.யோகேந்திரநாதன், ச.சுப்பிரமணியம், இ.வே. துரைரத்தினம் உட்பட இன்னும் சிலர் உறுப்பினர்களாகச் செயற்பட்டு வந்தனர்.

இவர்கள் அனைவரும் கூடி விரிவாக ஆராய்ந்த பின்னர், போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக ‘தீண்டாமைமை ஒழிப்பு வெகுஜன இயக்கம்’ என்ற பெயரில் ஒரு வெகுஜன அமைப்பை உருவாக்குவது எனத் தீர்மானிக்கப்பட்டது. அதன் தலைவராக சுன்னாகத்தைச் சேர்ந்த தோழர் எஸ்.ரி.என். நாகரத்தினம் தெரிவு செய்யப்பட்டார். அதன் பின்னர் போராட்டங்கள் யாவும் அந்த அமைப்பின் பெயரிலேயே முன்னெடுக்கப்பட்டன.

முன்பு இருந்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கான அமைப்புகளுக்கும், தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்திற்கும் இடையில் ஓர் அடிப்படை வேறுபாடு இருந்தது. முன்பு தோழர் எம்.சி. சுப்பிரமணியம் (கார்த்திகேசன் 1944 இல் யாழ்ப்பாணம் வந்து முதன்முதலாக அமைத்த கம்யூனிஸ்ட் கடசிக் கிளையில் ஆரம்பத்தில் இணைந்தவர்களில் எம்.சியும் ஒருவர்) தலைமையில் இருந்த சிறுபான்மைத் தமிழர் மகாசபை உட்பட அனைத்து அமைப்புகளிலும் தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே அங்கம் வகித்தனர்.

ஆனால் தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தில் தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, சாதியமைப்புக்கும் தீண்டாமைக்கும் எதிரான உயர் சமூகங்களைச் சேர்ந்தவர்களும் அங்கம் வகித்தனர். வெகுஜன இயக்கத்தின் சார்பாக முன்னெடுக்கப்பட்ட இந்தப் போராட்டம் கணிசமான அளவு வெற்றி பெற்றதற்கு இந்த நிலைமையும் பிரதான காரணங்களில் ஒன்று.

இன்று இந்தப் போராட்டம் குறித்து வரலாறு எழுதுபவர்கள், இந்தப் போராட்டத்தின் அச்சாணியாகத் திகழ்ந்த இருவரின் பெயரை சில உள்நோக்கங்களுடன் தவிர்த்துவிட்டு எழுதுவதைக் காண முடிகிறது. அவர்கள் தவிர்க்கும் இருவரில் ஒருவர் தோழர் மு. கார்த்திகேசன், மற்றவர் தோழர் வி.ஏ. கந்தசாமி.

தோழர் மு.கார்த்திகேசன்

தோழர் கார்த்திகேசனைப் பொறுத்தவரை, திரைமறைவில் இருந்து கொண்டு போராட்டத்தை வழிநடத்தியதுடன், வேறு பல உதவிகளையும் வழங்கினார். வேறு பல உதவிகள் எனும்போது, போராட்டத்தில் ஈடுபட்ட பல தோழர்களை பொலிசார் கைது செய்து பல வழக்குகளைத் தாக்கல் செய்திருந்தனர். அவர்களது வழக்குகளுக்கு சட்டத்தரணிகளை ஏற்பாடு செய்வதற்கு பெரும்தொகை பணம் தேவைப்பட்டது. அன்றைய சூழலில் அந்தப் பணத்தை புரட்டித் தரக்கூடிய ஆற்றல் யாழ்ப்பாண மக்களிடத்தில் பெரும் செல்வாக்குடன் இருந்த தோழர் கார்த்திகேசன் அவர்களிடமே இருந்தது. அவர் அந்த உதவியை எவ்வித தயக்கமும் இன்றிச் செய்தார்.

அதேபோல, நீதிமன்றத் தடுப்புக் காவலில் இருந்த சில தோழர்களை பிணையில் வெளியே எடுப்பதற்குப் பொறுப்பாக காணி உறுதிகளை நீதிமன்றங்களில் பிணையாகச் சமர்ப்பிக்க வேண்டி இருந்தது. கட்சியில் சொந்த வீடும் காணிகளும் உடையவர்கள் சிலர் இருந்தபோதிலும், அவர்களில் எவரும் காணி உறுதிகளை வழங்க முன்வரவில்லை. காணி உறுதித் தேவைக்கும் கார்த்திகேசனிடமே ஓடினார்கள். இதில் வேடிக்கை என்னவெனில், தோழர் கார்த்திகேசன் அவர்களிடம் ஒருபோதும் சொந்தமாக வீடோ அல்லது காணிகளோ இருக்கவில்லை. இருப்பினும் கட்சித் தோழர்களின் வேண்டுகோளைப் புறக்கணிக்காது, தனது செல்வாக்கைப் பயன்படுத்தி தனக்குத் தெரிந்தவர்களிடம் காணி உறுதிகளைப் பெற்று உதவியிருக்கிறார்.

இத்தகைய ஓர் உண்மையான கம்யூனிஸ்ட்டும் தியாகசீலருமான தோழர் கார்த்திகேசன் மீது கட்சிக்குள் இருந்த ஒரு குழுவினர் பொய்க் குற்றச்சாட்டுகளைக் கூறி அவரை மனவேதனைக்குள்ளாக்கினர். அதனால் நொந்துபோன கார்த்திகேசன், கட்சியின் வட பிதேசச் செயலாளர் பதவியிலிருந்து தானாகவே விலகிக் கொண்டார். அவரது இடத்துக்கு இன்னொரு மகத்தான கம்யூனிஸ்ட்டான தோழர் வி.ஏ. கந்தசாமி தெரிவு செய்யப்பட்டார். அதன் மூலம் அப்பதவியைக் கைப்பற்ற சதிகாரர் போட்டிருந்த திட்டம் தவிடுபொடியானது.

தோழர் வி.ஏ. கந்தசாமி

தோழர் கார்த்திகேசன் தவிர, தோழர் வி.ஏ. கந்தசாமியும் இந்தப் போராட்டத்தில் பெரும் பங்கு வகித்த ஒருவராவார். ஒரு தொழிலாளியாக இருந்து, தொழிற்சங்கப் போராட்டங்களில் ஈடுபட்டு, அதனூடாக கம்யூனிஸ்ட் கட்சியில் கட்சியில் இணைந்து கொண்ட அவர், திருமணம் கூடச் செய்யாது, தன்னைப் பராமரித்த சகோதரியின் குடும்பத்தையும் விட்டும் வெளியே வந்து, கட்சியைக் குடும்பமாகவும், கட்சி அலுவலகத்தைத் தனது வசிப்பிடமாகவும் கொண்டு வாழ்ந்த உன்னத மனிதர். அவர் இந்தப் போராட்டங்களில் நேரடியாக ஈடுபட்டு, பல தடவைகள் பொலிசாரின் தாக்குதலுக்கும் உள்ளாகி, சிறை வாழ்க்கையையும் அனுபவித்தவர்.

அது மட்டுமின்றி, மார்க்சிய தத்துவத்தில் ஆழ்ந்த புலமையும், செழிப்பான அரசியல் அனுபவமும் கொண்ட அவர், மிகச் சிறந்த மேடைப் பேச்சாளரும் ஆவார். பாமர மக்களும் விளங்கக்கூடிய வகையிலும், மக்களுக்கு உணர்ச்சியூட்டும் வகையிலும் அமையும் அவரது பேச்சைக் கேட்கவென்றே கூட்டங்களுக்கு மக்கள் திரள்வதுண்டு.

தொடரும்….

பகுதி – 1
பகுதி – 2
பகுதி – 3
பகுதி – 4

Exit mobile version