தீண்டாமைக்கு எதிரான 1966 ஒக்ரோபர் 21 எழுச்சியின் வரலாறும் பின்னணியும்

-கலியுகன்

பகுதி – 2

அச்சுவேலியில் கூட்டப்பட்ட சர்வகட்சிக் கூட்டத்தின் முடிவுகளை நடைமுறைப்படுத்தக் கோரி, புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சி சுன்னாகத்திலிருந்து யாழ்பபாண நகர் வரை ஒரு ஊர்வலத்தையும், ஊர்வல முடிவில் யாழ். நகரில் இருந்த முற்றவெளி மைதானத்தில் ஒரு பொதுக்கூட்டத்தையும் நடத்துவது எனத் தீர்மானித்தது.

இவற்றை நடத்துவதற்கான திகதியாக 1966 ஒக்ரோபர் 21ஆம் திகதி நிர்ணயிக்கப்பட்டது. இந்தத் திகதிதான் பின்னர் தீண்டாமைக்கெதிரான மக்கள் எழுச்சி தினமாக இன்றுவரை பல்வேறு தரப்புகளால் நினைவு கூரப்பட்டு வருகிறது.

இந்த நிகழ்வுகளை நடத்துவதற்கான சட்டபூர்வ அனுமதியைப் பெறவேண்டி இருந்ததால், அப்பொழுது சுன்னாகத்தில் கட்சியின் பொறுப்பாளராக இருந்த நா.யோகேந்திரநாதன் சுன்னாகம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடம் அனுமதி கோரி விண்ணப்பம் ஒன்றைக் கையளித்தார்.

பொலிசார் நீண்ட நாட்களாக அந்த விண்ணப்பத்திற்கு பதில் அளிக்காமல் இழுத்தடித்து வந்தனர். இருப்பினும் ஊர்வலத்திற்கான அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கட்சியால் சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுவிட்ட நிலையில், ஊர்வலத்துக்கு ஒரு நாள் மட்டும் இருந்த நிலையில், விண்ணப்பம் கொடுத்த நா.யோகேந்திரநாதனை அழைத்த சுன்னாகம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, ஊர்வலத்துக்கு அனுமதி வழங்க வேண்டாம் என மேலிடத்திலிருந்து உத்தரவு வந்துள்ளது எனத் தெரிவித்தார். (ஊர்வலத்துக்கு அனுமதி வழங்க வேண்டாமென அரசாங்கத்தில் அங்கம் வகித்த தமிழரசுக் கட்சி பலத்த அழுத்தம் பிரோகித்ததாக பின்னர் அறியக் கிடைத்தது)

அந்த நேரத்தில் சுன்னாகம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றியவர் ஒரு சிங்களவர். (அவரது பெயர் விஜயதிலகா என நினைவு) அவர் சிறீலங்கா சுதந்திரக் கட்சித் தலைவி திருமதி சிறீமாவோ பண்டாரநாயக்கா அவர்களின் அத்தனகல தொகுதியைச் சேர்ந்தவர். 1965 பொதுத் தேர்தலின் போது திருமதி பண்டாரநாயக்காவுக்கு ஆதரவாகச் செயல்பட்டார் என்ற காரணத்தால் அரசியல் பழிவாங்கலின் நிமித்தம் சுன்னாகம் பொலிஸ் நிலையத்துக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டிருந்தார் என தெரிய வந்தது.

எமது ஊர்வலத்தின் மீது அனுதாபம் கொண்டிருந்த அவர், எமக்காக எதுவும் செய்ய முடியாத நிலையில் இருந்தார். அது பற்றித் தமது கவலையை எம்மிடம் தெரிவித்த அவர், தடையை மீறி ஊர்வலம் நடத்தினால் பலாத்காரமாகத் தன்னும் ஊர்வலத்தைத் தடுத்து நிறுத்தும்படி உத்தரவு வந்துள்ளதாகத் தெரிவித்தார். இந்த நிலைமையில், தான் அந்த நிலைமையை எதிர்கொள்ள விரும்பாததால், ஒரு கிழமை விடுமுறையில் செல்லத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்தார்.

இருப்பினும், கட்சி ஊர்வலத்துக்கான சகல ஏற்பாடுகளையும் செய்துவிட்டபடியால், திட்டமிட்டபடி சுன்னாகத்தில் இருந்து ஒக்ரோபர் 21ஆம் திகதி ஊர்வலத்தை நடத்துவதென தீர்மானித்தது.

சுன்னாகம் பொலிஸ் பொறுப்பதிகாரி ஒரு வாரம் விடுமுறையில் செல்ல முடிவெடுத்த நிலையில், அங்கு கடமையாற்றிய உதவிப் பொறுப்பதிகாரி இராசையா என்பவர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாகப் பதவி ஏற்றார். இராசையா மிகுந்த உயர்சாதி வெறி உணர்வு கொண்டவர். அவர் எப்படியும் இந்த ஊர்வலத்தை தடுத்து நிறுத்த வேண்டுமென்ற மூர்க்கத்தனத்தனமான உணர்வுடன் இருந்தார்.

இந்தச் சூழ்நிலையில், ஒருநாள் இரவு சில பொலிசாருடன் ஒரு ஜீப் வண்டியில் சுன்னாகம் புகையிரத நிலைய வீதியில் அமைந்திருந்த கட்சி அலுவலகத்துக்கு வந்த இராசையா, அங்கு தூங்கிக் கொண்டிருந்த கட்சியின் சுன்னாகம் பொறுப்பாளர் யோகேந்திரநாதனையும் அவரது இரு தோழர்களான அ.கௌரிகாந்தன் மற்றும் இயக்கச்சி மணியம் ஆகியோரையும் பிடித்து, பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டு சென்றார். (இவர்கள் மூவரும் சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூயில் ஒன்றாகக் கற்றதுடன், தன்னார்வமாகக் கட்சியில் இணைந்து, கட்சியின் முழுநேர செயற்பாட்டாளராக இயங்கிக் கொண்டிருந்தனர்)

இந்த மூவரையும் சுன்னாகம் பொலிஸ் நிலையம் கொண்டு சென்ற பதில் பொறுப்பதிகாரி இராசையா, இரவு முழுவதும் அவர்களை அடித்துத் துன்புறுத்திவிட்டு, காலையில்தான் விடுவித்தார்.

பொலிசாரின் அச்சுறுத்தல் இருந்த போதும், திட்டமிட்டபடி ஊர்வலத்தை சுன்னாகத்தில் இருந்து நடத்துவதில் புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சி உறுதியாக இருந்தது. அதன் பொருட்டு ஒக்ரோபர் 21ஆம் திகதி பிற்பகல் இரண்டு மணி முதல் கட்சியின் உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் ஊர்வலம் தொடங்கவிருந்த சுன்னாகம் பஸ் நிலையத்தின் அருகில் பெருந்தொகையில் குழுமத் தொடங்கினர்.

தொடரும்…

பகுதி – 1

Tags: