
“நீங்கள் வளர்ச்சியையும் பாதுகாப்பையும் விரும்பினால், எங்கள் எதிரிகள் உங்கள் நிலங்களிலிருந்து போரை நடத்த அனுமதிக்காதீர்கள்” என்று ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் வளைகுடா நாடுகளுக்குக் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “ஈரான் முன்கூட்டியே தாக்குதல்களை நடத்தாது என்று நாங்கள் பலமுறை கூறியுள்ளோம். ஆனால் எங்கள் உள்கட்டமைப்பு அல்லது பொருளாதார மையங்களை குறிவைத்தால், அதற்கு நாங்கள் வலுவாக பதிலடி கொடுப்போம்.
பிராந்திய நாடுகளுக்கு: நீங்கள் வளர்ச்சியையும் பாதுகாப்பையும் விரும்பினால், எங்கள் எதிரிகள் உங்கள் நிலங்களிலிருந்து போரை நடத்த அனுமதிக்காதீர்கள்” என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, ஐக்கிய அரபு இராச்சியத்தின் துபாய் நகரில் மறைந்திருந்த அமெரிக்க இராணுவத்தின் இரண்டு இரகசிய முகாம்கள் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதாக ஈரான் தெரிவித்துள்ளது.
இந்த முகாம்களில் சுமார் 500 இற்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் இருந்ததாகவும், இந்தத் தாக்குதலில் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இருப்பினும், இது குறித்த அதிகாரபூர்வ தகவலை அமெரிக்கா இன்னும் வெளியிடவில்லை. மறுபுறம், ஈரானுக்கு எதிரான போரைத் தீவிரப்படுத்த அமெரிக்கா திட்டமிட்டு வருகிறது. குறிப்பாக, ஈரானின் 90 சதவீத கச்சா எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவை தரைவழித் தாக்குதல் மூலம் கைப்பற்ற அமெரிக்கா ஆலோசித்து வருகிறது.
வளைகுடா நாடுகளில் ஏற்பட்டுள்ள இந்தப் பதற்றம், உலகளாவிய எரிசக்தி சந்தையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது.
அமெரிக்க இராணுவத்தை அனுமதிக்க கூடாது: வளைகுடா நாடுகளுக்கு ஈரான் அதிபர் மசூத் பெஸ்கியான் அறிவுறுத்தல்
பாதுகாப்பு, அமைதி மற்றும் வளர்ச்சியை விரும்பினால், அமெரிக்க இராணுவம் தங்கள் நாட்டில் இருந்து செயல்பட வளைகுடா நாடுகள் அனுமதிக்க கூடாது என ஈரான் அதிபர் மசூத் பெஸ்கியான் கூறியுள்ளார்.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கடந்த மாதம் 28 ஆம் திகதி போர் தொடுத்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் ஈரான், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்கள் மற்றும் மையங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இங்கிருந்து அமெரிக்க போர் விமானங்கள் புறப்பட்டு சென்று ஈரான் மீது தாக்குதல் நடத்துகின்றன.
துபாயில் தாக்குதல்: ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள அமெரிக்க இராணுவத்துக்கு உதவியாக, ட்ரோன் எதிர்ப்பு ஆயுதங்களை உக்ரைன் வழங்கியுள்ளது. இந்த ஆயுதங்கள் துபாயில் உள்ள ஒரு கிடங்கில் வைக்கப்பட்டிருந்தன. அந்த இடத்தை தாக்குதல் நடத்தி அழித்துள்ளதாக ஈரான் இராணுவ தலைமையகம் கதம் அல்-அன்பியா கூறியுள்ளது. மேலும், துபாயில் பதுங்கியுள்ள அமெரிக்க இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஈரான் அதிபர் மசூத் பெஸ்கியான் வெளியிட்டுள்ள செய்தியில், ‘‘பாதுகாப்பு, அமைதி மற்றும் வளர்ச்சியை விரும்பினால், அமெரிக்க இராணுவம் தங்கள் நாட்டில் இருந்து செயல்பட வளைகுடா நாடுகள் அனுமதிக்க கூடாது. நாங்கள் எப்போதும் முதலில் தாக்குதல் நடத்துவதில்லை. ஆனால், எங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், பதிலடி கொடுப்போம்’’ என தெரிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தைக்கு நம்பிக்கை தேவை: ஈரான் – அமெரிக்கா இடையே சமரசப் பேச்சுவார்த்தை நடத்தும் பணியில் பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளது. இது தொடர்பாக சவுதி அரேபியா, எகிப்து, மற்றும் துருக்கி வெளியுறவுத்துறை அமைச்சர்களும் பாகிஸ்தானில் இன்றும் (29.03.2026) நாளையும் ஆலோசனை நடத்துகின்றனர். இதை வரவேற்றுள்ள ஈரான் அதிபர் மசூத் பெஸ்கியான், பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஷ் ஷெரீப்பிடம் பேசுகையில், “போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நம்பிக்கை தேவை” என கூறியுள்ளார்.

