
பிரேசில் அதிபர் தேர்தலில் தொழிலாளர் கட்சித் தலைவர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா வெற்றி பெற்றார். வரும் ஜனவரியில் அவர் 4 ஆவது முறையாக பிரேசில் அதிபராக பதவியேற்க உள்ளார்.
தென்அமெரிக்க நாடான பிரேசிலில் கடந்த 04.10.2026 அன்றுஅதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும் தொழிலாளர் கட்சி சார்பில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா (80) மீண்டும் போட்டியிட்டார். அவருக்கு எதிராக லிபரல் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் ஜெய்ர் போல்சனாரோவின் மகன் ஃப்ளாவியோ போல்சனாரோ (45) களமிறங்கினார். இந்த தேர்தலில் லூலா டா சில்வா 45.16% வாக்குகளும் ஃப்ளாவியோ போல்சனாரோ 47.03% வாக்குகளும் பெற்றனர்.
பிரேசில் சட்ட விதிகளின்படி எந்த வேட்பாளரும் 50% வாக்குகளைப் பெறாத நிலையில் கடந்த 25.10.2026 அன்று மீண்டும் மறுதேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலின் முடிவுகள் நேற்று (26.10.2026) வெளியிடப்பட்டன. இதில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா 51.76% வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். போல்சனாரோவுக்கு 48.24% வாக்குகள் மட்டுமே கிடைத்தன. லூலா டா சில்வா கடந்த 2003 ஆம் ஆண்டில் முதல்முறையாக பிரேசில் அதிபராக பதவியேற்றார்.
கடந்த 2007 ஆம் ஆண்டில் 2 ஆம் முறை அதிபராக பதவி வகித்தார். கடந்த 2023 இ ல் 3 ஆவது முறை அதிபராக பதவியேற்றார். தற்போதைய தேர்தல் வெற்றி மூலம் அடுத்த ஆண்டு ஜனவரி 5 இல் லூலா டா சில்வா 4 ஆவது முறையாக பிரேசில் அதிபராக பதவியேற்க உள்ளார்.
அமெரிக்காவுக்கு ஏமாற்றம்
இடதுசாரி தலைவரான பிரேசில் அதிபர் சில்வா, அமெரிக்காவுக்கு எதிரான நிலைப்பாட்டை கடைபிடித்து வருகிறார். தற்போதைய தேர்தலில் போல்சனாரோவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பகிரங்கமாக ஆதரவு தெரிவித்தார். ஆனால் அவர் தோல்வியைத் தழுவியிருப்பது அமெரிக்காவுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்துள்ளது.
அதிபர் லூலா டா சில்வா, ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பு மற்றும் ‘குளோபல் சவுத்’ கூட்டமைப்பின் வளர்ச்சிக்காக தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறார். அமெரிக்காவின் டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கூட்டமைப்பு சார்பில் புதிய நாணயத்தை வெளியிடவும் அவர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார். அவர் மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்பட்டிருப்பதால் இந்தியா, பிரேசில் இடையிலான வர்த்தக, ராஜ்ஜியரீதியிலான உறவு மேலும் வலுப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைதளத்தில் நேற்று (26.10.2026) வெளியிட்ட பதிவில், “பிரேசில் மறு தேர்தலில் சிறப்பான வெற்றியைப் பெற்ற எனது நண்பரும் அதிபருமான லூலாவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். பன்முகத்தன்மை கொண்ட இந்தியா – பிரேசில் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்த அவருடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்.
நாம் இணைந்து பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பைத் தொடர்ந்து வலுப்படுத்துவோம். வளரும் நாடுகளின் நலன்களை முன்னிறுத்துவோம். அனைவரையும் உள்ளடக்கிய சமத்துவ மிக்க, நிலைத்தன்மைக் கொண்ட உலகை நோக்கி பணியாற்றுவோம்” என தெரிவித்துள்ளார்.
பிரேசில் அதிபராக லூலா மீண்டும் தெரிவு செய்யப்பட்டதற்கு சீன அதிபர் வாழ்த்து!
பிரேசில் அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட லூயிஸ் இனாவியோ லூலா டா சில்வாவுக்கு சீன அதிபர் ஸி ஜின்பிங் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
அந்தச் செய்தியில், சீன – பிரேசில் உறவுகளை மேம்படுத்துவதில் லூலா முக்கிய பங்களிப்புகளை ஆற்றியுள்ளார் என சீன அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்தைய ஆண்டுகளில் தானும் லூலாவும் பல்வேறு வழிகளில் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வருவதாகவும், மேலும், நீதியான உலகம் மற்றும் நிலையான புவிக்கான பகிரப்பட்ட எதிர்காலத்துடன் கூடிய சீன – பிரேசில் சமூகத்தை புதிய முன்னேற்றத்துக்கு கூட்டாக வழிநடத்தி வருவதாகவும் சீன அதிபர் ஸி தெரிவித்துள்ளார்.
இருதரப்பு உறவுகளின் உலகளாவிய மூலோபாய மற்றும் நீண்டகால முக்கியத்துவம், இது உலக நாடுகளிடையே ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பின் ஒரு முன்மாதிரியாகத் திகழ்கிறது என்றார்.
சீன – பிரேசில் உறவுகளுக்குத் தாம் மிகுந்த மிகுந்த முக்கியத்துவம் அளிப்பதாகவும், பகிரப்பட்ட எதிர்காலத்துடன் கூடிய சீன – பிரேசில் சமூகத்தைக் கட்டமைப்பதை புதிய உயரங்களுக்கு வழி நடத்தவும், இரு நாடுகளுக்கும் இடையிலான அனைத்துத் துறை சார்ந்த மூலோபாய ஒருங்கிணைப்புக்கு வாய்ப்புக்களைத் திறக்கவும், இரு நாட்டு மக்களின் நல்வாழ்வைத் தொடர்ந்து மேம்படுத்தவும் அதிபர் லூலாவுடன் இணைந்து பணியாற்றத் தயாராக உள்ளதாகவும் சீன அதிபர் ஸி ஜின்பிங் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

