பிரேசில் அதிபர் தேர்தலில் லூலா டா சில்வா 4 ஆவது முறை​யாக வெற்றி

பிரேசில் அதிபர் தேர்தலில் தொழிலா​ளர் கட்​சித் தலை​வர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா வெற்றி பெற்​றார். வரும் ஜனவரி​யில் அவர் 4 ஆவது முறை​யாக பிரேசில் அதிபராக பதவி​யேற்க உள்​ளார்.

தென்​அமெரிக்க நாடான பிரேசி​லில் கடந்த 04.10.2026 அன்றுஅதிபர் தேர்தல் நடை​பெற்​றது. இதில் ஆளும் தொழிலா​ளர் கட்சி சார்​பில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா (80) மீண்​டும் போட்டி​யிட்​டார். அவருக்கு எதிராக லிபரல் கட்சி சார்​பில் முன்னாள் அதிபர் ஜெய்ர் போல்​சனாரோவின் மகன் ஃப்ளாவியோ போல்​சனாரோ (45) களமிறங்​கினார். இந்த தேர்​தலில் லூலா டா சில்வா 45.16% வாக்​கு​களும் ஃப்ளாவியோ போல்​சனாரோ 47.03% வாக்​கு​களும் பெற்​றனர்.

பிரேசில் சட்ட விதி​களின்​படி எந்த வேட்​பாள​ரும் 50% வாக்குகளைப் பெறாத நிலை​யில் கடந்த 25.10.2026 அன்று மீண்​டும் மறுதேர்​தல் நடை​பெற்​றது. இந்த தேர்​தலின் முடிவு​கள் நேற்று (26.10.2026) வெளி​யிடப்​பட்டன. இதில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா 51.76% வாக்​கு​களைப் பெற்று வெற்றி பெற்​றார். போல்​சனாரோவுக்கு 48.24% வாக்​கு​கள் மட்​டுமே கிடைத்​தன. லூலா டா சில்வா கடந்த 2003 ஆம் ஆண்​டில் முதல்​முறை​யாக பிரேசில் அதிபராக பதவி​யேற்​றார்.

கடந்த 2007 ஆம் ஆண்​டில் 2 ஆம் முறை அதிபராக பதவி வகித்​தார். கடந்த 2023 இ ல் 3 ஆவது முறை அதிபராக பதவி​யேற்​றார். தற்​போதைய தேர்​தல் வெற்றி மூலம் அடுத்த ஆண்டு ஜனவரி 5 இல் லூலா டா சில்வா 4 ஆவது முறை​யாக பிரேசில் அதிபராக பத​வி​யேற்க உள்ளார்.

அமெரிக்​கா​வுக்கு ஏமாற்​றம்

இடதுசாரி தலை​வ​ரான பிரேசில் அதிபர் சில்வா, அமெரிக்காவுக்கு எதிரான நிலைப்​பாட்டை கடைபி​டித்து வருகிறார். தற்​போதைய தேர்​தலில் போல்​சனாரோவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்​ரம்ப் பகிரங்​க​மாக ஆதரவு தெரிவித்​தார். ஆனால் அவர் தோல்​வியைத் தழுவியிருப்பது அமெரிக்​கா​வுக்கு பெரும் ஏமாற்​றமாக அமைந்​துள்​ளது.

அதிபர் லூலா டா சில்வா, ‘பிரிக்ஸ்’ கூட்​டமைப்பு மற்​றும் ‘குளோபல் சவுத்’ கூட்​டமைப்​பின் வளர்ச்​சிக்காக தொடர்ந்து குரல் எழுப்பி வரு​கிறார். அமெரிக்​கா​வின் டாலருக்கு மாற்​றாக பிரிக்ஸ் கூட்டமைப்பு சார்​பில் புதிய நாணயத்தை வெளி​யிட​வும் அவர் தீவிர முயற்சி மேற்​கொண்டு வருகிறார். அவர் மீண்​டும் அதிபராக தேர்வு செய்​யப்​பட்​டிருப்​ப​தால் இந்​தியா, பிரேசில் இடை​யி​லான வர்த்​தக, ராஜ்ஜியரீதி​யி​லான உறவு மேலும் வலுப்படும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

பிரதமர் நரேந்​திர மோடி சமூக வலை​தளத்​தில் நேற்று (26.10.2026) வெளி​யிட்ட பதி​வில், “பிரேசில் மறு தேர்தலில் சிறப்​பான வெற்​றியைப் பெற்ற எனது நண்​பரும் அதிபரு​மான லூலா​வுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். பன்​முகத்​தன்மை கொண்ட இந்​தியா – பிரேசில் இடை​யி​லான உறவை மேலும் வலுப்படுத்த அவருடன் இணைந்து பணி​யாற்ற விரும்​பு​கிறேன்.

நாம் இணைந்து பல்​வேறு துறைகளில் ஒத்​துழைப்​பைத் தொடர்ந்து வலுப்​படுத்​து​வோம். வள​ரும் நாடுகளின் நலன்​களை முன்​னிறுத்​து​வோம். அனைவரை​யும் உள்​ளடக்​கிய சமத்​து​வ​ மிக்க, நிலைத்தன்​மைக் கொண்ட உலகை நோக்கி பணி​யாற்​று​வோம்” என தெரி​வித்​துள்​ளார்.

பிரேசில் அதிபராக லூலா மீண்டும் தெரிவு செய்யப்பட்டதற்கு சீன அதிபர் வாழ்த்து!

பிரேசில் அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட லூயிஸ் இனாவியோ லூலா டா சில்வாவுக்கு சீன அதிபர் ஸி ஜின்பிங் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

அந்தச் செய்தியில், சீன – பிரேசில் உறவுகளை மேம்படுத்துவதில் லூலா முக்கிய பங்களிப்புகளை ஆற்றியுள்ளார் என சீன அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்தைய ஆண்டுகளில் தானும் லூலாவும் பல்வேறு வழிகளில் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வருவதாகவும், மேலும், நீதியான உலகம் மற்றும் நிலையான புவிக்கான பகிரப்பட்ட எதிர்காலத்துடன் கூடிய சீன – பிரேசில் சமூகத்தை புதிய முன்னேற்றத்துக்கு கூட்டாக வழிநடத்தி வருவதாகவும் சீன அதிபர் ஸி தெரிவித்துள்ளார்.

இருதரப்பு உறவுகளின் உலகளாவிய மூலோபாய மற்றும் நீண்டகால முக்கியத்துவம், இது உலக நாடுகளிடையே ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பின் ஒரு முன்மாதிரியாகத் திகழ்கிறது என்றார்.

சீன – பிரேசில் உறவுகளுக்குத் தாம் மிகுந்த மிகுந்த முக்கியத்துவம் அளிப்பதாகவும், பகிரப்பட்ட எதிர்காலத்துடன் கூடிய சீன – பிரேசில் சமூகத்தைக் கட்டமைப்பதை புதிய உயரங்களுக்கு வழி நடத்தவும், இரு நாடுகளுக்கும் இடையிலான அனைத்துத் துறை சார்ந்த மூலோபாய ஒருங்கிணைப்புக்கு வாய்ப்புக்களைத் திறக்கவும், இரு நாட்டு மக்களின் நல்வாழ்வைத் தொடர்ந்து மேம்படுத்தவும் அதிபர் லூலாவுடன் இணைந்து பணியாற்றத் தயாராக உள்ளதாகவும் சீன அதிபர் ஸி ஜின்பிங் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Tags: