-கலியுகன்
பகுதி – 3
புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியால் தீண்டாமைக்கு எதிராக முன்னெடுக்கப்பட இருந்த இந்த ஊர்வலத்தில் கலந்து கொள்வதற்காக குடாநாட்டின் பல பகுதிகளிலிருந்தும் ஆயிரத்திற்கும் (1,000) மேற்பட்டோர் சுன்னாகம் பஸ் நிலையம் அருகில் குழுமி விட்டனர். ஊர்வலத்தில் கொண்டு செல்வதற்காக பல பதாதைகளையும் சுலோக அட்டைகளையும் அவர்கள் வைத்திருந்தனர்.
இந்த இடத்தில் முக்கியமான ஒரு விடயத்தைக் குறிப்பிடுவது அவசியம்.
ஊர்வலம் ஆரம்பமாக இருந்த சுன்னாகம் பஸ் நிலையம் கந்தரோடை வீதியில், பிற்காலத்தில் கட்சியால் உருவாக்கப்பட்ட ‘தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம்’ என்ற வெகுஜன போராட்ட அமைப்பின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட தோழர் எஸ்.ரி.என். நாகரத்தினம் அவர்களுடைய புடவைக் கடைக்கு எதிரில் அமைந்திருந்தது. பிற்காலத்தில் இந்த ஊர்வலம் குறித்துக் கட்டுரைகள் எழுதிய பலர், இந்த ஊர்வலத்துக்கு எஸ்.ரி.என்.நாகரத்தினம் தான் தலைமைதாங்கிச் சென்றார் என்றும், வேறு சிலர் அவர் ஊர்வலத்தில் பங்கு பற்றினார் என்றும் எழுதியுள்ளனர்.
அது உண்மை அல்ல. அவர் அன்றைய (1966 ஒக்ரோபர் 21) ஊர்வலத்தில் பங்குபற்றவே இல்லை. உண்மையில் நடந்த விடயம் இதுதான்.
அவரை ஊர்வலத்தில் பங்குபற்றும்படி எம்மில் சிலர் நேரில் சென்று அழைத்தோம். அவவாறு நாம் அழைத்ததிற்கு சில காரணங்கள் இருந்தன. பிரதான காரணம், அவர் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் நீண்டகால ஆதரவாளர் என்பதாகும். ஆனால், சித்தாந்த வேறுபாடு காரணமாக கம்யூனிஸ்ட் கட்சி சோவியத் சார்பு – சீன சார்பு என 1964 இல் இரு அணிகளாகப் பிரிந்தபோது, அந்தப் பகுதியில் கம்யூனிஸ்ட் கட்சிப் பிரமுகராக விளங்கிய தோழர் வி.பொன்னம்பலம் அவர்களின் செல்வாக்கு காரணமாக தோழர் நாகரத்தினம் சோவியத் சார்பு அணியுடன் தன்னை இணைத்துக்கொண்டுவிட்டார்.
எனவே, நாம் எமது ஊர்வலத்தில் பங்குபற்றுமாறு அவரை அழைத்தபோது அவர் பங்குபற்றாவிட்டாலும், எமது போராட்டத்துக்கு ஆதரவளித்து 100 ரூபா பணத்தை நன்கொடையாகத் தந்தார். அத்துடன், இந்தப் போராட்டத்தை நாம் உறுதியாக முன்னெடுத்துச் சென்றால், தாமும் எம்முடன் வந்து இணைந்து கொள்வதாகவும் வாக்குறுதி அளித்தார். அது போலவே, போராட்டத்தின் ஒரு கட்டத்தில் அவர் சோவியத் அணியை விட்டு விலகி வந்து, எம்முடன் இணைந்து கொண்டதுடன், கட்சியின் வேண்டுகோளை ஏற்று, நாம் அமைத்த தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தின் தலைமைப் பொறுப்பையும் ஏற்று, திறம்படச் செயல்பட்டார்.
தோழர் நாகரத்தினம் அன்றைய ஊர்வலத்தில் பங்குபற்றவில்லை என்பதற்கு இன்னொரு அத்தாட்சி அன்றைய ஊர்வலம் பற்றி எடுத்த புகைப்படமாகும். அந்தப் புகைப்படம் இதுவரை பல நூறு தடவைகள் பிரசுரமாகிவிடடது. அந்தப் படத்தைப் பார்த்தால், ஊர்வலத்தின் முன்வரிசையில் புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியின் வட பிதேசத் தலைவர்களான தோழர்கள் வி.ஏ.கந்தசாமி, கே.ஏ.சுப்பிரமணியம், டாக்டர் சு.வே. சீனிவாசகம், கே.டானியல், மு.முத்தையா, இ.கா.சூடாமணி ஆகியோரும், அன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் நின்றிருந்த கட்சியின் அகில இலங்கை விவசாயிகள் சங்க சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் தோழர் டி.டி.பெரேரா அவர்களுமே முன் வரிசையில் ஊர்வலத்தைத் தலைமைதாங்கிச் செல்வதைக் காண முடியும். அந்தப் படத்தில் எந்த இடத்திலும் நாகரத்தினம் இல்லை.
ஆனால், பிற்காலத்தில் தோழர் நாகரத்தினம் தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத் தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட பின்பு, சாதி ஒடுக்குமுறைக்கும் தீண்டாமைக்கும் எதிரான பல போராட்டங்களுக்குத் துணிகரமாகத் தலைமைதாங்கி, சாதி வெறியர்களினதும் பொலிசாரினதும் பல தாக்குதல்களுக்கு உள்ளானதுடன், தனது வியாபாரம் மற்றும் பணம் என்பனவற்றையும் இழந்தார். பொலிசாரின் தேடுதல் காரணமாக வீட்டைவிட்டு வெளியேறி சில மாதங்கள் தலைமறைவாகவும் வாழ்ந்தார். தான் இறக்கும் வரை அந்தப் போராட்டப் பாதையில் இருந்து அவர் ஒருபோதும் விலகவும் இல்லை.
இது இவ்வாறிருக்க,
பிற்பகல் சுமார் மூன்று மணி அளவில் ஊர்வலம் யாழ்ப்பாணத்தை நோக்கிப் புறப்படத் தயாரானது. அந்த நேரத்தில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. இந்த நிகழ்வுகளுக்காக கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வருகை தந்திருந்த புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரான தோழர் நா.சண்முகதாசன் (பின்னர் 1968 இல் நடந்த கட்சியின் 9 ஆவது தேசிய மாநாட்டின் போதுதான் அவர் கட்சியின் பொதுச்செயலாளராகத் தெரிவு செய்யப்பட்டார்), சுன்னாகம் வந்து இறுதி முறையாக ஒரு தடவை பொலிஸ் நிலையம் சென்று ஊர்வலத்துக்கு பொலிசாரின் அனுமதியைப் பெற முயன்றார். ஆனால் அவரது வேண்டுகோளை சுன்னாகம் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி இராசையா என்ற சாதி வெறியர் நிராகரித்துவிட்டார்.
தொடரும்…

