-கலியுகன்
பொலிசார் ஊர்வலத்துக்கு அனுமதி வழங்க மறுத்த செய்தியைச் சொல்ல வந்த தோழர் நா.சண்முகதாசன், ‘ஊர்வலத்தைத் திட்டமிட்டபடி தொடங்கி நடத்துங்கள்’ என்று சொல்லிவிட்டு, அவர் வழமையாக யாழ். நகரில் தங்கும் ஹோட்டலுக்குப் புறப்பட்டுப் போய்விட்டார்.
அவர் ஊர்வலத்துக்குத் தலைமைதாங்கி வழிநடத்திச் செல்வார் என எதிர்பார்த்திருந்த தோழர்கள் பலருக்கு அவரது செய்கை ஏமாற்றமாகிப் போய்விட்டது.
இருப்பினும், திட்டமிட்டபடி, வடபகுதிக் கட்சித் தலைமைத் தோழர்களால் பிற்பகல் சுமார் 3 மணி அளவில் ஊர்வலம் ஆரம்பிக்கப்பட்டது. கந்தரோடை வீதியில் இருந்த சுன்னாகம் பஸ்; நிலையத்தில் ஆரம்பமான ஊர்வலம், யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதிக்குச் சென்று, யாழ்ப்பாணம் நோக்கி முன்னேறியது. ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள், மிகுந்த புரட்சிகர உணர்ச்சிக் கொந்தளிப்புடன், சாதியமைப்புக்கும் தீண்டாமைக்கும் எதிரான கோசங்களை முழங்கியவாறு சென்று கொண்டிருந்தனர்.
பிரதான கோசமாக ‘சாதியமைப்புத் தகரட்டும், சமத்துவ நீதி ஓங்கட்டும்’ என்ற சுலோகம் அமைந்திருந்தது. அடுத்து வந்த ஐந்து ஆண்டுகாலப் போராட்டத்தின் போதும், இந்தச் சுலோகமே பிரதான கோசமாக இருந்தது. இந்தக் கோசம் தவிர, ”மா’ விட்ட புரத்தில் மனிதனை விட்டால் என்ன?’, ‘குறள் கண்ட தமிழனுக்கு கறள் கண்ட பேணியா?’, ‘போகட்டும், போகட்டும் போத்தலும் பேணியும்’ போன்ற சுலோகங்களும் பல போராட்டங்களின் போது உபயோகிக்கப்பட்டன.
ஊர்வலம் காங்கேசன்துறை வீதியில் அமைந்திருந்த சுன்னாகம் பொலிஸ் நிலையத்தை அண்மித்த போது, வீதியின் குறுக்கே துப்பாக்கிகளுடனும் பொல்லுகளுடனும், சுன்னாகம் உதவி பொலிஸ் இன்ஸ்பெக்டர் இராசையா தலைமையில் அணி வகுத்து நின்ற பொலிசார், திடீரெனப் பாய்ந்து ஊர்வலத்தினரைக் கண்டிபடி தாக்கத் தொடங்கினர்.
துப்பாக்கிப் பிடிகளாலும் பொல்லுகளாலும் தாக்கப்பட்ட பலர் காயமடைந்த நிலையில் பொலிசாருக்கு எதிரான கோசங்களை எழுப்பியபடி நின்று கொண்டிருந்தனர். அந்த நிலையில், ஊர்வலக்காரர்களுக்கு அருகில் வந்த பொலிசார், ஊர்வலத்தைத் தலைமைதாங்கிச் சென்ற தோழர்கள் வி.ஏ.கந்தசாமி, கே.ஏ.சுப்பிரமணியம், இ.கா.சூடாமணி ஆகியோரை பலவந்தமாக பொலிஸ் நிலையத்துக்குள் இழுத்துச் சென்று அடைத்து வைத்தனர். (அவர்கள் மீது பொது அமைதிக்குப் பங்கம் விழைவித்ததாகப் பொலிசாரால் தொடரப்பட்ட வழக்கு, சில தவணைகளின் பின்னர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது)
இந்த நிலைமையைத் தொடர்ந்து, ஊர்வலத்தில் வந்தவர்களைக் கலைந்து போகும்படி பொலிசார் அறிவித்தனர். ஆனால், தாம் கலைந்து போகத் தயாரில்லை என ஊர்வலத்தில் வந்தவர்கள் பொலிசாரிடம் நேரடியாகவே கூறி விட்டனர். நடந்த சம்பவத்தைக் கேள்வியுற்ற நூறறுக்கணக்கான பொதுமக்கள் அவ்விடத்துக்கு வந்து, ஊர்வலக்காரர்களுக்கு அரணாக நின்று கொண்டனர். இதனால், பொலிசாருக்கு மேலும் ஏதும் செய்ய முடியாத ஒரு நிலை உருவாகிவிட்டது.
சில நிமிடங்கள் கடந்த நிலையில், சுன்னாகம் உதவி பொலிஸ் இன்ஸ்பெக்டர் இராசையா பொலிஸ் நிலையத்துக்குள் இருந்து வெளியே வந்து, ‘நான் உங்கள் விடயம் குறித்து யாழ்ப்பாண பொலிஸ் சுப்பிரண்டனுடன் கதைத்தேன். அவர் உங்களை ஊர்வலமாக கோசம் எழுப்பிச் செல்லாது, ஐந்தடி இடைவெளி விட்டு, இரண்டு இரண்டு பேராக யாழ்ப்பாணம் செல்லும்படி கூறியிருக்கிறார்’ என்ற தகவலைத் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, சில தோழர்கள் அங்குள்ள சில புடவைக் கடைகளுக்குச் சென்று கருப்புத் துணிகளை வாங்கி வந்து, துண்டுகளாகி ஊர்வலக்காரர்களிடம் கொடுத்தனர். கருத்துச் சுதந்திரம் மறுக்கப்பட்டதை எடுத்துக் காட்டும் முகமாக, அந்தக் கறுப்புத் துண்டுகளை வாயை மூடிக் கட்டிக் கொண்டு, யாழ்ப்பாணம் நோக்கிப் புறப்பட்டது ஊர்வலம்.
ஊர்வலத்தின் முன்னாலும் பின்னாலும் பக்கவாட்டிலும் ஆயுதம் தரித்த பொலிசார் ஜீப் வண்டிகளில் அணிவகுத்து வந்தனர்.
பொலிசாரின் தாக்குதல் நடவடிக்கை காரணமாக உணர்ச்சி வசப்பட்டிருந்த ஊர்வலத் தோழர்கள், பொலிசாரின் கட்டுப்பாட்டையும் மீறி, உரத்த குரலில் கோசமெழுப்பியபடி சென்றனர். அவர்களது கோசங்களில், சாதியமைப்பு மற்றும் தீண்டாமைக்கெதிராக மட்டுமின்றி, பொலிசாரின் அடக்குமுறைக்கெதிராகவும், அந்த அடக்குமுறைக்குப் பின்னணியில் இருந்த தமிழரசுக் கட்சிக்கு எதிராகவும் கோசங்கள் இடம் பெற்றிருந்தன.
ஊர்வலத்தினர் மீது பொலிசார் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்குதல் நடத்திய செய்தி, தீயென யாழ். குடாநாடு முழுவதும் பரவிவிட்டதால், பலர் ஓடோடி வந்து ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். அது மட்டுமின்றி, ஊர்வலம் சென்ற யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதியின் இருமருங்கிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் குழுமி நின்று ஊர்வலத்தைப் பார்வையிட்டதுடன், தமது கைகளை அசைத்து தமது ஆதரையும் தெரிவித்துக் கொண்டனர்.
ஊர்வலம் மாலை ஆறு மணி அளவில் பொதுக்கூட்டம் நடைபெறவிருந்த யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தை அடைந்ததும், கூட்டம் ஆரம்பமானது. கூட்டத்துக்கு காங்கேசன்துறை பட்டினசபையின் முன்னாள் தலைவர் தோழர் டாக்டர் சு.வே.சீனிவாசகம் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் தோழர்கள் சுபைர் இளங்கீரன், கே.டானியல், எம்.கே. அந்தனிசில், நா.சண்முகதாசன் ஆகியோர் உட்பட பலர் உரையாற்றினர்.
இந்த ஊர்வலமும், பொதுக்கூட்டமும் தீண்டாமைக்கும் சாதியமைப்புக்கும் எதிரான போராட்டத்தின் தொடக்கமும் அல்ல, முடிவும் அல்ல. இந்த 1966 ஒக்ரோபர் நிகழ்வு இந்தப் போராட்டத்தில் இடையில் வந்த ஒரு அத்தியாயம்தான். ஆனால், இதன் முக்கியத்துவம் என்னவென்றால், இது முன்னைய போராட்டங்களிலிருந்து வழிமுறையில் வேறுபட்டது என்பது ஒரு விடயம். இரண்டாவது, வரலாற்றில் இது போன்ற போராட்டங்கள் பின்னர் இன்றுவரை நடைபெறவில்லை என்பதாகும்.
தொடரும்…

