Site icon சக்கரம்

சாதிக்கும் தொழில்மயமாதலுக்குமான தொடர்பு என்ன? – பகுதி 10

பாஸ்கர் செல்வராஜ்

தொழில்நுட்ப வளர்ச்சி உற்பத்தியை மாற்றியதும் சீனா அதனை எட்டிப் பிடித்ததும் அமெரிக்க முற்றொருமையை உடைத்து டொலருக்கு நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது. அதனைத் தீர்க்க அமெரிக்கா டொலரை நீர்க்க வைத்து விலையைத் தீர்மானிக்கும் ஆற்றலை தக்கவைக்க அரசியல் இராணுவ வலிமையைப் பயன்படுத்துகிறது. இதனை ஏற்க மறுக்கும் நாடுகள் டொலர் கையிருப்பைக் கைவிட்டுச் சொந்த நாணய வணிகத்துக்கு மாறுகின்றன. 

முதலாளித்துவசமூக ஏகாதிபத்திய முற்றொருமை

பார்ப்பனியத்துடன் இணைந்துகொண்டு சீனாவை வெளியேற்றி இந்தியாவில் தனது டொலர் மூலதன தகவல்தொழில்நுட்ப முற்றொருமையை உடையாமல் காத்தது அமெரிக்கா. இதற்கு ஒத்துழைத்த பார்ப்பனியவாதிகள் பிராந்திய போட்டி முதலாளித்துவத்தை ஒழித்துக்கட்டி சமூகத்தின் சொத்துக்களை தங்களின் தனிச்சொத்தாக்கிக் கொண்டு தங்களின் முற்றொருமையை நிலைநாட்டினார்கள். இது இங்கே முதலாளித்துவ-சமூக ஏகாதிபத்திய முற்றொருமையை ஏற்படுத்தியது. 

பின்னரான ரசியா நேட்டோ இடையிலான உக்ரைன் பதிலிப்போர் அமெரிக்காவின் இராணுவ ஆக்கிரமிப்பில் இருக்கும் நாடுகளை ஓரணியாகவும், ரசிய, சீன ஆதரவு நாடுகளை மற்றொரு அணியாகவும் உலகத்தை உடைத்திருக்கிறது. அது டாலர் அல்லாத சொந்த நாணய வர்த்தகத்தை முடுக்கியிருக்கிறது. நடுநிலை வகித்த மற்ற நாடுகள் எல்லாம் இருதரப்பு நாணயங்களையும் ஏற்றுக்கொண்டு வர்த்தகம் செய்யத் தொடங்கி இருக்கின்றன. 

இந்தியா ருபிளை ஏற்றுக்கொண்டு யுவானை ஏற்க மறுக்கிறது. இங்கு நிலவும் முற்றோருமை அதனைத் தடுக்கிறது. டொலர் முற்றோருமை உடைந்து புதிய நாணயங்களின் வழியான வர்த்தகத்துக்கு மாறிக்கொண்டிருக்கும் உலகத்துக்கோ இது எழுபதுகளை ஒத்த சூழல். சீன யுவானை ஏற்காமல் சந்தையில் போட்டியின்றி ஏகபோகம் நிலவும் இந்தியாவுக்கோ எழுபதுகளும் தொண்ணூறுகளும் இணைந்த சூழல். 

ஏகபோகம், விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை

இந்தியாவில் இந்த இருவரின் முற்றொருமை எழுபதுகள்-தொண்ணூறுகளைப் போலவே உற்பத்தியையும் சந்தையையும் ஓரிடத்தில் குவித்து விலைவாசியைக் கூட்டி வேலைவாய்ப்பின்மையைப் பெருக்கி வருகிறது. வருமானம் குறையும் நிலையில் மக்கள் வாங்கும் அளவைக் குறைத்துக் கொண்டு வெறுமனே சோற்றைக் கொண்டு வயிற்றை நிரப்பிக் கொண்டிருக்கிறார்கள். 

இது ஏற்கனவே ஊட்டசத்து குறைபாடுடைய குழந்தைகளும் பெண்களும் நிறைந்திருந்த சூழலை தீவிரமாக்குகிறது. அதீத கலோரிகள் கொண்ட உணவால் சர்க்கரை நோயும் இரத்த அழுத்தமும் இல்லாத மனிதர்களைக் காண்பதே அரிதாகி வருகிறது. இவர்களின் முற்றொருமை உடைந்து போட்டி ஏற்படாதவரை இந்தச் சூழலில் மாற்றமிருக்காது. ஆகவே இந்தப் பிரச்சனைகளால் பாதிக்கப்படும் மக்களின் கொந்தளிப்புகளுக்கும் போராட்டங்களுக்கும் இனி பஞ்சம் இருக்காது. 

பிரச்சனை: முக்காலப் பிரச்சனை சாதி அதன் தற்காலப் பரிமாணம் ஊட்டச்சத்தற்ற உடல்வறுமை, முறையான வேலைவாய்ப்பின்மை, கடன்பட்ட வாழ்வு.

இந்தப் பிரச்சனைகளை ஒருவர் தற்காலப் பிரச்சனையாகக் கருத்துவாரெனில் அவர் இந்திய உழைக்கும் வர்க்கத்தின் வரலாற்றையோ சமூக மாற்ற அறிவியலையோ அறியாதவராகத்தான் இருப்பார்.

சராசரித்திறன், சொத்து, குடும்பம், சமூக மாற்றம்

உலக சமூகங்கள் நிலத்தைப் பொதுவாக வைத்துக்கொண்டு ஒன்றாக உழைத்து உண்டபோது பெண்களை மையமாகக் (matrilineal) கொண்ட குழுக்களாக மணந்து (group marriage) கொண்டார்கள். அந்தச் சமூகம் பழங்குடி (tribal) சமூகமாக அறியப்படுகிறது. உழைப்பில் பிரிவினை தோன்றி நிலம், கால்நடைகள் தனிநபர்களின் சொத்தாக மாறியபோது ஆண்களை மையமாகக் (patrilineal) கொண்ட பெற்றோர்கள் பார்த்து இணைத்து வைக்கும் இணைமணம் (pairing marriage) செய்துகொண்டார்கள். 

வன்முறையாக அடுத்தவர் நிலத்தை, கால்நடைகளைப் பிடுங்கி ஒருவர் மற்றவரைவிட அதிகம் சொத்து சேர்த்தபோது சொத்துள்ள ஆண்கள் சொத்து வைத்திருக்கும் மற்றவரின் மகளைத் தானே தேர்ந்தெடுத்து மணம் செய்துகொள்ளும் ஒருதார மணமும் (monogamy) சொத்துத் திமிரில் பல பெண்களை வலுக்கட்டாயமாக மணக்கும் பலதார மணமும் (polygamy) உருவானது. சமூகங்கள் இருவேறு வர்க்கங்களாகப் பிரிந்து நிலபிரபுத்துவ (feudal) சமூகங்களானது. 

நிலம் சார்ந்த விவசாய உற்பத்தி சமூகத்தில் உள்ளவர்களின் திறன் வளர்ந்து தொழில்நுட்பம் சார்ந்த தொழிற்துறை உற்பத்திக்கு மாறியது. அதில் இருபாலரும் பங்கேற்றபோது இருவரின் விருப்பம் சார்ந்து தங்களின் துணைகளைத் தாங்களே தேர்ந்தெடுக்கும் (சொத்து, தகுதி, திறன் பார்த்து) காதல் மணம் (love marriage) உண்டானது. அப்படியான சமூகங்கள் முதலாளித்துவ (capitalistic) சமூகங்களாக மாறின.

இப்படி மனிதர்களின் உழைப்புத்திறன் வளரும்போது உற்பத்தி (production) மாறுகிறது. அதனால் பெருகும் பொருட்செல்வம் மனிதர்களை உற்பத்தி செய்யும் (reproduction) குடும்பத்தை மாற்றுகிறது. ஒட்டுமொத்த சமூக மனிதர்களின் திறனும் (average labor) வளர்ந்து அவர்கள் உற்பத்தியில் பங்கேற்கும்போது ஏற்படும் பொருட்களின் பெருக்கம் மொத்த சமூகத்தையும் மாற்றி (social change) புதிய சமூகத்தைப் படைக்கிறது.

நிலப்பிரபுத்துவம், வல்லாட்சிக் கட்டமைப்பு 

இந்தியாவின் பெரும்பாலான சமூகங்கள் நிலத்தில் தனியுடைமை தோன்றி இணைமணம் ஏற்படும்வரை மற்ற உலக சமூகங்களைப்போல இயல்பாகவே வளர்ந்திருக்கின்றன. இதன்பிறகு மேற்குலகச் சமூகங்களில் விவசாய உற்பத்திக்கு அடிப்படையான நிலத்தைத் தன்னிடம் குவித்துக்கொண்டு நிலப்பிரபுக்கள் (feudal lords) உருவாகிறார்கள். இந்தியாவிலோ நிலம் ஒருவனின்கீழ் குவிக்கப்பட்டு ஒரேயொரு வல்லாட்சியாளன் (despot) உருவாகிறான்.  

அங்கே நிலமும் நிலமற்றவர்களின் உழைப்பும் சந்தையில் விற்று வாங்கி பணத்தின் வழியாகச் சுற்றிச்சுழலுகிறது. இந்த சுழற்சியில் ஏற்படும் செல்வமாற்றத்திற்கு ஏற்ப சொத்துள்ளவர்களுக்குள்ளும் சொத்தற்றவர்களுக்குள்ளும் மணம் செய்துகொள்கிறார்கள். அடிமைகளும் விடுதலை பெற்று இயல்பாகக் குடியானவர்களாக மாறுகிறார்கள். 

ஆனால் இந்தியச் சமூகங்களுக்குள் பணத்தின் பயன்பாட்டை ஆங்கிலேயர் காலம்வரை காணமுடியவில்லை. சமூகத்திற்கு வெளியில்தான் பரிவர்த்தனை செய்ய பணம் பயன்பட்டிருக்கிறது. இந்திய வரலாற்றில் சந்தையில் நிலத்தையும் உழைப்பையும் விற்று வாங்கியதற்கான சுவடே இல்லை.

இருவேறு சமூகங்களின் சந்திப்பு

இந்த வேறுபாட்டுக்கான அடிப்படை மேற்குலக சமூகங்கள் ஒத்த இன, உற்பத்தி, சமூகக் கட்டமைப்பைக் கொண்டிருந்தார்கள். இந்தியாவிலோ வெள்ளை-கறுப்பினம், கால்நடை-விவசாய உற்பத்தி, தந்தைவழி-தாய்வழி சமூகம் என இருவேறு கட்டமைப்பைக் கொண்டவர்கள் சந்தித்துக் கொள்கிறார்கள்.

மேய்ச்சல் தொழில் செய்த ஆரியர்களிடம் நிலத்தில் தனியுடைமை ஏற்பட எந்த அடிப்படையும் இல்லை. நிலத்தில் மேய்ந்து வளரும் கால்நடைகளைக் கைப்பற்றி தங்களுக்குள் பார்ப்பனன், சத்திரியன், வைசியன் என்று முதலில் வர்க்கமாகப் பிரிகிறார்கள். பின்பு கங்கைச் சமவெளிப் பகுதி விவசாய சமூகங்களை அடிமைப்படுத்தக் கிளம்புகிறார்கள். 

விவசாயம் அறியாத இவர்கள் கைப்பற்றிய நிலத்தைத் தங்களுக்குள் பிரித்துக் கொள்ளாமல் கால்நடை உற்பத்தி முறையைப் போன்று விவசாய உற்பத்தியில் உருவாகும் உபரியைக் கறந்து போரில் வென்றவர்களுக்குள் பகிர்ந்துகொள்ளும் வல்லாட்சிக் கட்டமைப்பை ஏற்படுத்துகிறார்கள். இப்படி சேர்க்கும் சொத்தை தங்களுக்கானதாக அதிலும் வெள்ளையினத்துக்கானதாக மாற்ற சொத்துள்ள வெள்ளையினத்துக்குள் மணந்து கொள்கிறார்கள். 

சாதிய உருவாக்கம்

அதற்கு வெளியிலான மணத்தைச் சூத்திரன் என இழிவுசெய்து வெளியேற்றி இனத்தூய்மையைக் காக்கிறார்கள். சொத்துடைமையை இனவாதம் சார்ந்து தங்களின் பிறப்புரிமையாக்கும் இவர்கள் இந்த சொத்துக்கு மூலமான விவசாய உற்பத்தி தடையின்றியும் மாற்றமின்றியும் தொடர அந்த உற்பத்தியில் ஈடுபடும் உழவர், தச்சர் என அனைவருக்கும் அதனைப் பிறப்புரிமை சார்ந்ததாக விரிவுபடுத்தி தங்களின்கீழ் அடுக்குகிறார்கள். மற்றவர்களும் அந்தப் பிறப்புரிமையைத் காக்க தங்களுக்குள் மட்டும் மணந்து கொள்ளத் தொடங்குகிறார்கள். 

இதனை ஏற்க மறுப்பவர்களை சமூகத்தில் இருந்து விலக்கி தீண்டாதார்களாக ஊருக்கு வெளியில் வீசி கொடுமையாகத் தண்டிக்கிறார்கள். இது மேற்கின் சொத்து சார்ந்து தொடர்ந்து மாற்றத்திற்கு உள்ளாகும் மணமுறையைக் கொண்ட வர்க்க சமூகத்துக்குப் பதிலாக இந்தியாவில் சொத்துடைமையும் இனவாதமும் கலந்த மணக்கலப்பற்ற புதிய சாதிய இனக்குழு (endogamic caste tribes) சமூகங்களை உருவாக்குகிறது. (விரிவாக அடுத்த தொடரில்) 

இதன்பிறகு படையெடுத்து வருபவர்கள் விவசாய உற்பத்தியில் இருந்து வரும் உபரிக்குப் புதிய சொந்தக்காரர்கள் ஆகிறார்கள். ஏற்கனவே நிலத்தை நிர்வகித்த நிர்வாகிகளின் இடத்தைப் புதிய நிர்வாகிகள் பதிலீடு செய்கிறார்கள். இவர்களும் இந்த சொத்தைத் தங்களின் பிறப்புரிமையாக்க தங்களுக்குள் மணந்துகொண்டு ஆயிரக்கணக்கான புதியபுதிய சாதிகளாகப் பரிணமிக்கிறார்கள். சொத்தின் அடிப்படையில் சமூகத்தில் மேலானவர்களாகக் கருத்தப்பட்டவர்கள் சாதிய அடுக்கில் கீழே தள்ளப்படுகிறார்கள். இந்தக் கட்டமைப்பின் சூத்திரதாரிகளான பார்ப்பனர்கள் எப்போதும் தலையில் அமர்ந்துகொண்டு உண்டு கொழிக்கிறார்கள். 

இந்தியாவின் உற்பத்தித் தேக்கம்

உலக சமூகங்களில் அடிமைப்பட்டவர்களின் தொடர் போராட்டம் உற்பத்தியைச் ஜனநாயகப்படுத்தி உணவு, உடை, இருப்பிடத்தை உறுதிசெய்து திறன்மிக்கத் தொழிலாளர்களை உருவாக்கி விவசாய உற்பத்தியை மாற்றி தொழில்மயமாக்குகிறது. இந்தியாவிலோ மன்னனைச் சார்ந்த நிர்வாகிகள் அவர்களைச் சார்ந்த வணிகர், உழவர், தச்சர் அவர்களைச் சார்ந்த மற்ற உழைப்பாளர்கள் என விவசாய உற்பத்தி எந்த மாற்றமுமின்றி தொடர்கிறது. 

அதற்கு அடிப்படையான தொழிலாளர் திறன் வளர்ச்சியின்றி போராட்டமற்ற சாதியச் சாருண்ணிகளாக அசைவற்று ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வாழ்கிறோம். எல்லாத் தொழிலறிவும் சிறிய சாதிய சமூகத்துக்குள் முடக்கப்பட்டு வளர்ச்சியின்றி தேங்குகிறது. பின்னர் வந்த முகலாயர்களும், ஆங்கிலேயர்களும் அவர்களின் தேவைக்கு ஏற்ப இதில் உடைப்பை ஏற்படுத்துகிறார்கள். அதுவரையிலும் ஒண்டுக்குடியில் ஓரிருவேளை உண்டு வாழ்ந்த உழைக்கும் வர்க்கம் அதன்பிறகு அதுவுமின்றி அடிமைகளாக விற்கப்படுகிறது. 

தொழிற்துறை உற்பத்தி ஓரிடத்தில் குவிந்து ஏற்படும் ஏகாதிபத்திய காலத்தில் போரின் விளைவாக இந்தியா சுதந்திரம் பெறுகிறது. அப்போதும் தொழிலாளர்களின் அடிப்படைத் தேவையை நிறைவுசெய்து அவர்களின் திறனைப் பெருக்கி தொழிற்துறை வளர்ச்சி காண்பதற்குப் பதிலாக அதையும் சிறு சாதிய குழுக்களுக்கானதாக மாற்றியது பார்ப்பனியம். அதன்பிறகான மதிப்பு மாற்றவிதி ஏற்படுத்திய கொந்தளிப்பில் ஆங்கிலேயர்கால நிலவுடைமை உடைந்து எழுபதுகளில் அரைகுறையாக நிலச்சீர்திருத்தமும் பட்டினியைப் போக்க பச்சைப் புரட்சியும் ஏற்படுகிறது. 

திறனற்ற தொழிலாளர்கள்

அந்த விவசாய உற்பத்தியை மேலும் பெருக்கி விவசாயிகளுக்கும் விவசாய கூலிகளுக்கும் செல்வத்தைப் பரவலாக்கி அவர்களின் வாங்கும்திறனைக் கூட்டி அவர்களின் அடிப்படையான தேவைகளை நிறைவு செய்திருக்கலாம். பதிலாக சோவியத் உடைந்து ஒற்றைத்துருவம் ஏற்பட்ட தொண்ணூறுகளுக்குப் பிறகான உலகமய காலத்தில் விவசாயிகளை அப்படியே கைவிட்டு தகவல் தொழில்நுட்பப் புரட்சிக்கு தாவியது இந்தியா. அரசமைய கல்வி, மருத்துவத்தைக் கைகழுவி தனியாரிடம் விட்டது. 

அதன்பிறகு ஏற்பட்ட அரைகுறை தொழிற்துறை வளர்ச்சி எந்த பணிப்பாதுகாப்பும் தொழிலாளர் உரிமைகளுமற்ற தினக்கூலிகளை உருவாக்கியது. இப்போது அதுவும் முதலாளித்துவ-சமூக ஏகாதிபத்தியவாதிகளிடம் குவிந்து அருகிக் கொண்டிருக்கிறது. இந்த எழுபத்தைந்து ஆண்டு சுதந்திரப் பயணத்தில் இந்திய உழைக்கும் மக்கள் சுத்தமான குடிநீர், சத்தான உணவு, தரமான கல்வி, சுகாதாரம் ஆகிய அடிப்படைத் தேவைகளைக்கூட பூர்த்தி செய்துகொள்ள முடியாத அவல வாழ்வை வாழ்கிறார்கள். 

இவையில்லாமல் வயிறு புடைத்து உடல் நறுங்கிக் கிடக்கும் இந்த சமூகத்தில் இருந்து பெரும் எண்ணிக்கையில் திறன்மிக்கத் தொழிலாளர்கள் உருவாவர்கள் என்று நினைப்பதும் அவர்களின் மூலம் நாடு தொழிற்துறை வளர்ச்சி அடைவதாகவும் கனவு மட்டும்தான் காணமுடியும். உழைப்பாளரின் இந்த நிலையில் மாற்றம் ஏற்படாதவரை எப்போதும் அது கானல்நீராகத்தான் இருக்கும். 

தொழிற்துறை உற்பத்தி இயந்திரமயமாகிக் கொண்டிருக்கும் இந்த காலத்தில் இவ்வளவு தொழிலாளர்களுக்கும் அதில் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி செல்வத்தைப் பரவலாக்கி வாங்கும்திறனைக் கூட்டுவது ஆகாத காரியம். ஆகவே இந்த ஊட்டச்சத்தற்ற உடல்வறுமை, முறையான வேலைவாய்ப்பின்மையை ஒழித்து பின்தங்கிய உற்பத்தியை மாற்ற பெருமளவில் வேலைவாய்ப்பை அளிக்கும் விவசாயத்துறை  வளர்ச்சியுடன் கூடிய தொழிற்துறை வளர்ச்சிதான் தீர்வாக இருக்கும்.  

தீர்வு: விவசாய வளர்ச்சியுடன் கூடிய தொழிற்துறை வளர்ச்சி. 

இந்த இருதுறை வளர்ச்சியை இந்த இணையதள காலத்தில் எப்படி ஒருசேர சாதிப்பது? இந்தத் தீர்வு எப்படிச் சாதியப் பிரச்சனையைத் தீர்க்கும் என்பதை அடுத்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

தொடரும்….

பகுதி 1: இந்தியாவைக் கட்டுப்படுத்தும் ஐந்து பெரிய நிறுவனங்கள்

பகுதி 2: இந்தியாவைக் கட்டுப்படுத்தும் ஐந்து பெரிய நிறுவனங்கள்

பகுதி 3: விலையை உயர்த்தி உழைப்பை உறிஞ்சும் பொறிமுறை என்ன? 

பகுதி 4:  டொலர் உலகப் பணமானதும், இந்தியா சோசலிசத்திற்கு மாறியதும் எப்படி?

பகுதி 5:  பெருகிய உற்பத்தித்திறனும் உடைந்த சமூக ஏகாதிபத்தியங்களும் 

பகுதி 6:  இந்தியா சீனாவின் வேறுபட்ட பாதையும் வளர்ச்சியும்

பகுதி 7:  உடையும் ஒற்றைத் துருவம்

பகுதி 8: உலகை மாற்றிக் கொண்டிருக்கும் உக்ரைன் போர்

பகுதி 9: எழுபதுகளையும் தொண்ணூறுகளையும் ஒத்த சூழலை எதிர்கொள்ளும் இந்தியா

Exit mobile version