உடையும் ஒற்றைத் துருவம் – பகுதி 7

பாஸ்கர் செல்வராஜ்

ழுபதுகளில் தங்கத்தின் அடிப்படையிலான மதிப்புவிதி உடைந்து அமெரிக்க ஏகாதிபத்திய அணி, சோவியத் சமூக ஏகாதிபத்திய அணி என உலகம் இரண்டாகப் பிரிந்து இருதுருவமானது. இந்தியப் பார்ப்பனியம் சோவியத் சார்பெடுத்து முதலாளித்துவ காலத்திற்கு ஏற்ற சமூக ஏகாதிபத்தியத்தை நிறுவியது. பார்ப்பனியம் உடைந்த தமிழகத்தில் அது உணவு, கல்விப் பரவலாக்கத்திற்கு வித்திட்டது.  

உலக சந்தையைப் பிடிக்க நடந்த பனிப்போர்காலத்தில் குறைமின்கடத்திகளை உருவாக்கி உற்பத்தித்திறனைப் பெருக்கி சோவியத்தை வீழ்த்தியது அமெரிக்கா. அதன்கீழ் ஒற்றைத்துருவ உலகம் உருவானது. அதன் சந்தை தேவைக்கு இந்தியாவில் நிலவிய சமூக ஏகாதிபத்தியத்தை உடைத்தது. சமூகமயமான அரச முதலாளித்துவ கட்டமைப்பில் தமிழகம் பலனடைந்து தொழில்துறை வளர்ச்சி கண்டது.

தகவல் தொழில் நுட்ப காலனிகள்!

தொழிற்புரட்சி கண்ட இங்கிலாந்து ஏகாதிபத்தியமாக வளர்ந்து அதன் உற்பத்தியை தனது காலனி நாடுகளுக்கு மாற்றி உற்பத்தியை உறிஞ்சி வாழும் வர்த்தக மையமாக மாறியது. அதைப்போல தகவல் தொழில்நுட்ப புரட்சி கண்ட அமெரிக்க ஏகாதிபத்தியமும் பொருள் உற்பத்தியை சீனா, இந்தியா போன்ற நாடுகளுக்கு மாற்றி அப்பொருட்களை விற்று பெருலாபமீட்டும் வர்த்தக மையமாக மாறியது.

போட்டியற்ற சந்தையில் உற்பத்தித்திறனைப் பெருக்கும் முனைப்பு குன்றி அதற்குத் தேவையான திறன்மிக்க தொழிலாளர் உருவாக்கம், தொழில்முனைவோர் பங்களிப்பின்றி தகவல் தொழில்நுட்பத்தில் பின்தங்கியது.

முதலில் நிலையான கம்பிவழி இணைப்பில் இயங்க ஆரம்பித்த இந்தக் குறைமின்கடத்திகளாலான தகவல்தொழில்நுட்ப பொருட்கள் பின்பு மின்கலங்களில் சேமிக்கப்பட்ட மின்சாரத்தில் இயங்கி உலங்குபவைகளாகவும் கம்பியில்லாத இணையத் தொடர்பின் மூலம் இணைந்திருப்பவைகளாகவும் மாறின. இவற்றின் வளர்ச்சி இரும்பினாலான பொருட்களின் உற்பத்தித்திறனைப் பெருக்குவதாகவும் அந்தப் பொருட்களை இவற்றுடன் இணைத்து இயக்கி கட்டுப்படுத்துவதாகவும் மாற்றியது.

தகவல்தொழில்நுட்ப பொருட்களை இயக்கப் பயன்படுத்தப்பட்ட மின்கலங்கள் மற்ற பொருட்களையும் இயக்கக்கூடியதாக வளர்ந்தன. இந்த மின்கலங்களை மின்னேற்றம் செய்ய மரபான ஓரிடத்தில் நிலையாக இருக்கும் அளவில் பெரிய மின்னிலையத்தில் உருவாகும் மின்சாரம் பயன்படுத்தபட்டு வருகிறது. இவற்றுக்கும் பதிலாக அளவில் சிறிய எளிதில் நகரும் சூரிய மின்னாற்றல் தகடுகள் உருவாகி அதனைக் கொண்டு மின்னேற்றம் செய்யும் வாய்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மாறிய பொருள் உற்பத்தி சுழற்சி!

இது இதுவரையிலும் நடந்து வந்த “எரிபொருளிலும் மின்சாரத்திலும் உருவாகி இயங்கும் இரும்பினாலான பொருள் உற்பத்தி” சுழற்சியை மாற்றி “இரும்பாலும் சிலிக்கனாலும் உருவாகி கம்பியில்லா மின்சார இணைய இணைப்பில் இணைந்து இயங்கும் பொருட்கள்” என்பதாக மாற்றி இருக்கிறது. இந்த மாறும் உற்பத்தியும் அதன்மூலம் உருவாகும் பொருட்கள் இயங்குவதற்கும் ஏற்ற புதிய உள்கட்டமைப்புகளை உருவாக்கக் கோரியது.

நடப்பு உற்பத்தியின் மையமான எரிபொருள், தகவல்தொழில்நுட்ப பொருட்களின் வர்த்தகத்திலும் அதன் மதிப்பைத் தெரிவிக்கும் டொலர் மூலதனத்தின் முற்றொருமையை நிலைநாட்டி இலாபத்தைப் பெருக்குவதில் கவனத்தைக் குவித்த அமெரிக்கா அடுத்தகட்ட இத்தொழில்நுட்ப வளர்ச்சியில் பின்தங்கியது. பெருலாபம் தரும் இந்த வர்த்தகத்திலும் அதற்கான மென்பொருள் உற்பத்தியிலும் ஈடுபட்ட இந்தியப் பார்ப்பனிய வர்த்தக வர்க்கம் இப்பொருள் உற்பத்தித் தொழில்நுட்பம் எதையும் கைக்கொள்ளாமல் தனது வரலாற்றுத் தேக்கத்தைத் தொடர வைத்தது.  

சீனாவின் அனைவருக்குமான அரச முதலாளித்துவ கட்டமைப்பும் திறனுள்ள தொழிலாளர்கள் தொழில்முனைவோராக வளர்ந்து போட்டியிட ஏற்படுத்தப்பட்ட சமமான வாய்ப்பும் இந்த உற்பத்தி மாற்றத்திற்கு அடிப்படையான சிலிக்கன், மின்கலங்கள், இணையப்பொருட்களின் உற்பத்தித் தொழில்நுட்பத்தை எட்டிப்பிடிக்க வைத்திருக்கிறது.

டொலர் கோட்டை உடைப்பு!

நடப்பு உற்பத்தி முறையின் மையமான எரிபொருள் முற்றொருமையை உடைக்க ஐரோப்பியர்களும் மற்றவர்களும் தொடர்ந்து முயற்சித்து வந்தார்கள். அதனைத் தடுக்க இடையறாது போர்களில் ஈடுபட்டு பின்னடைவைச் சந்தித்தது அமெரிக்கா. அதோடு தகவல் தொழில்நுட்ப பொருட்களின் உற்பத்தி வளர்ச்சியில் ஏற்பட்ட பின்னடைவும் சேர்ந்துகொள்ள இவ்விரண்டிலும் கொண்டிருந்த முற்றொருமையை இழக்க ஆரம்பித்தது. இந்த இரண்டு சரக்குகளின் வர்த்தக அடித்தளத்தில் கட்டப்பட்ட டொலர் கோட்டை 2008 இல் உடைப்பைக் கண்டது.

உடைந்த கோட்டையை உற்பத்தித்திறனைப் பெருக்கி செப்பனிடுவதற்குப் பதிலாக டிரில்லியன் கணக்கில் டொலரை அச்சிட்டு டொலரை நீர்க்க வைத்து நிதியத் தீர்வை நாடியது. 2012 இல் டொலரை மறுமதிப்பீடு செய்தது. டொலர் கடன்பத்திரங்களில் முதலிட்ட நாடுகள் டொலரில் இருந்து விலக ஆரம்பித்தன. அது உடைப்பைப் பெரிதாக்கும் திசையில் சென்றது.

இதனைத் தடுத்து இழக்கும் முற்றொருமையை நிலைநாட்ட ரசிய, ஈரான், வெனிசுவேலா நாடுகளின் மீதான பொருளாதாரத்தடை, சீனாவுடன் வர்த்தகப்போர் என பொருளாதாரப் போரில் இறங்கியது அமெரிக்கா. இந்நாடுகள் டொலர் கையிருப்பைக் கைவிட்டும் சொந்த நாணயத்திலும் யூரோவிலும் வர்த்தகத்தை வீரியமாக்கியும் எதிர்தாக்குதலைத் தொடுத்தன.

ஒற்றைத்துருவம் உடைப்பை நோக்கிச் செல்லும் இந்த உலக சூழலை அப்போது ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அமெரிக்க, சீன முதலீடுகளையும் அவர்களின் தகவல்தொழில்நுட்பங்கள், டொலர்-ரூபாய் எரிபொருள் இறக்குமதி என இருபக்கத்தையும் சமமாக அனுமதித்து வழக்கமான சார்பிலா கொள்கையில் பயணிக்க எத்தனித்தது.

இந்தியாவில் அமெரிக்க முற்றொருமை!

பார்ப்பனியவாதிகளுடன் கூட்டமைத்த அமெரிக்கா பா.ஜ.கவை ஆட்சியில் அமர்த்தி பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, மின்னணு வர்த்தகத்தைச் செயல்படுத்தி மூலதனம், உற்பத்தி, சந்தை என அனைத்தையும் இரு ஏகாதிபத்தியவாதிகளும் தங்களிடம் குவித்தார்கள். மாநிலங்கள் வரிவிதிப்பின் வழியாக மூலதனத்தின் மீது கொண்டிருந்த அதிகாரத்தையும் இழந்தன. இறையாண்மையற்ற நிர்வாக அலகுகளாகக் குறுக்கப்பட்டன. எல்லைப் பிரச்சனையை காரணம் காட்டி சீன தொழில்நுட்பங்களையும் மூலதனத்தையும் வெளியேற்றி இந்தியாவில் அமெரிக்க-பார்ப்பனிய முற்றொருமை நிலைநாட்டப்பட்டது.

புதிய மதிப்பு விதி உருவான எழுபதுகளில் சோசலிசத்தின் பெயரால் வங்கியை அரசுடைமையாக்கி அந்த ரூபாய் மூலதனத்தைக் கொண்டு துறைமுகம், விமானம், சாலைகள், தொலைத்தொடர்பு உள்ளிட்ட அரச முதலாளித்துவ உள்கட்டமைப்பை ஏற்படுத்திய பார்ப்பனியவாதிகள் அதன்மூலம் தங்களின் சமூக ஏகாதிபத்தியத்தை நிறுவினார்கள். தொண்ணூறுகளில் அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது மூலதன சந்தை தேவைக்கு அதனை உடைத்தபோது ஓரளவு அது அனைவருக்குமான சமூக சொத்தானது.

சந்தையில் போட்டி பெருகி அமெரிக்க முற்றொருமை உடையும் சூழலையும் உடையாமல் நிலைத்திருக்கும் இந்துத்துவ சமூக கட்டமைப்பையும் பயன்படுத்திக் கொண்டு அந்த அரச முதலாளித்துவ உள்கட்டமைப்பு மற்றும் ரூபாய் மூலதனத்தை இப்போது தங்களின் தனிச்சொத்தாக பார்ப்பனியவாதிகள் மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். தொண்ணூறுகளில் இழந்த சமூக ஏகாதிபத்தியத்தை உடைத்தவர்களின் துணையுடனே மீண்டும் நிலைநாட்டி இருக்கிறார்கள்.

இந்தக் கொள்(ளை)கை மாற்றத்திற்கு ஏற்ப பார்ப்பனிய அடியாட்களை அடிமைச் சேவகம் செய்யவைத்து தமிழ்நாட்டின் உரிமைகளைப் பறித்து பார்ப்பனிய ஆதிக்கத்தை நிலைநாட்டியது பொறுக்காமல் பொங்கியது சுயமரியாதையுள்ள தமிழகம். பார்ப்பனிய எதிர்ப்பு, மாநில சுயாட்சி, சமூகநீதி அரசியலைக் கையில் எடுத்து அந்த எழுச்சியை அறுவடை செய்து ஆட்சிக்கு வந்தது திமுக.  

மிகக்குறுகிய காலத்தில் ரூபாய் மூலதனத்தை உருக்குலைத்து டொலர் மூலதனம் அதனைப் பதிலீடு செய்தது. இந்தியாவின் 568 பில்லியன் அந்நிய செலாவணி கையிருப்பில் 58 விழுக்காடு அளவு டொலர் இடம்பிடித்திருக்கிறது. அதனை அடிப்படை பணமாக (base money) வைத்துக்கொண்டு மிகையாக உருவாக்கப்பட்ட ரூபாய் பணவீக்கத்தைக் கொண்டுவந்து உருவாக்கப்பட்ட ரூபாயை மதிப்பிழக்க வைத்துக் கொண்டிருக்கிறது.

மலிவாக உருவாக்கப்பட்ட டொலர் காகிதங்களைக் கொண்டுவந்து இந்திய சொத்துக்களை வாங்கிய அமெரிக்க ஏகாதிபத்தியம் இந்தியாவை தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தது. இந்தியாவை தனது தகவல்தொழில்நுட்ப பொருட்களுக்கு மட்டுமான சந்தையாக மாற்றியிருக்கிறது. இந்திய மூலதன, தொழில்நுட்ப சந்தை இவர்களுக்கு; ஒத்துழைத்த பார்ப்பனிய கூட்டுக்களவாணிகளுக்கு அரச முதலாளித்துவகால சமூக சொத்துக்களான ரூபாய் மூலதனம் மற்றும் துறைமுகம், விமானதளம், சாலைகள், தொலைத்தொடர்பு ஆகிய உள்கட்டமைப்புகள். இருவருக்கும் மட்டுமான சந்தை; இருவருக்கும் வெற்றி (win-win); சுபம்.

சீனாஇந்தியா பிராந்திய அரசுகளின் நிலை!

சீனர்கள் அரச முதலாளித்துவத்தை அனைவருக்கும் பொதுவாக்கி பணத்தை உருவாக்கி செலவு செய்யும் அதிகாரத்தை பிராந்திய அரசுகளுக்குக் கொடுத்து திறன்மிக்க தொழிலாளர்களை தொழில்முனைவோராக்கி சந்தையில் போட்டியைப் பெருக்கி உற்பத்தி தொழில்நுட்பங்களைக் கைக்கொள்கிறார்கள். பார்ப்பனியர்கள் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் இணைந்துகொண்டு எஞ்சியிருக்கும் அரச முதலாளித்துவ கட்டமைப்புகளை கைப்பற்றிக் கொண்டு பிராந்தியப் போட்டியாளர்களை ஒடுக்கி மாநில அரசுகளின் அதிகாரத்தைப் பறித்து வெறும் நிர்வாக அலகுகளாக மாற்றி தங்களின் முற்றொருமையை நிலைநாட்டுகிறார்கள்.  

அமெரிக்கர்கள் தங்களுக்கான போட்டியற்ற உலக முற்றொருமையை நிலைநாட்ட போட்டியாளர்களை சர்வாதிகாரிகளாகச் சித்தரித்து அவர்களைத் தனிமைப்படுத்தி “சனநாயகத்துக்கு எதிரான சர்வாதிகாரம்” என்ற அரசியலை முன்னெடுக்கிறார்கள். பார்ப்பனியவாதிகள் தங்களின் பொருளாதார போட்டியற்ற ஓர்மைக்கு ஏற்ப ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கலாச்சாரம், ஒரே கட்சி, ஒரே ஆட்சி, ஒரே வரி, ஒரே சந்தை, ஒரே இணையம், ஒரே பிணையம், ஒரே எரிவாயுக்குழாய் என ஒருங்கிணைந்த எதேச்சதிகார அரசியல் பொருளாதாரத்தை முன்னெடுக்கிறார்கள்.

இந்தப்  பொருளாதார ஓர்மையால் பாதிக்கப்பட்டவர்களின் பொருளாதார நலனை முன்னெடுக்கும் மற்றவர்கள் இந்தியாவின் பன்மைத்துவம், ஜனநாயகம், சமூகநீதி என்பதான மாற்று அரசியலை முன்வைக்கிறார்கள். இந்த நகர்வுகள் அத்தனையும் கொரோனா பெருந்தொற்றிடம் சீனா தோற்று அதன் பொருளாதாரம் வீழும்; அமெரிக்கா வெல்லும் என்ற நம்பிக்கையில் குறுகிய காலத்தில் செய்யப்பட்டது.

எதிர்பார்ப்பிற்கு மாறாக சீனா வென்று அமெரிக்கா தோற்றது. அதனால் ஏற்பட்ட நிதிச்சந்தை நெருக்கடிக்கும் முன்புபோலவே டொலரை அச்சடித்து நீர்க்கச் செய்யும் வேலையைச் செய்தது அமெரிக்கா. அது எப்படி உக்ரைன் போரை கொண்டுவந்தது? அந்தப் போர் எப்படி உலகை மாற்றிக்கொண்டிருக்கிறது? அது எப்படி இந்தியாவில் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது?

தொடரும்….

பகுதி 1: இந்தியாவைக் கட்டுப்படுத்தும் ஐந்து பெரிய நிறுவனங்கள்

பகுதி 2: இந்தியாவைக் கட்டுப்படுத்தும் ஐந்து பெரிய நிறுவனங்கள்

பகுதி 3: விலையை உயர்த்தி உழைப்பை உறிஞ்சும் பொறிமுறை என்ன? 

பகுதி 4:  டொலர் உலகப் பணமானதும், இந்தியா சோசலிசத்திற்கு மாறியதும் எப்படி?

பகுதி 5:  பெருகிய உற்பத்தித்திறனும் உடைந்த சமூக ஏகாதிபத்தியங்களும் 

பகுதி 6:  இந்தியா சீனாவின் வேறுபட்ட பாதையும் வளர்ச்சியும்

Tags: