பெருகிய உற்பத்தித்திறனும் உடைந்த சமூக ஏகாதிபத்தியங்களும் – பகுதி 5

பாஸ்கர் செல்வராஜ்

முதலாளித்துவ உற்பத்திக் காலத்தில் உற்பத்தித் தொழில்நுட்ப உள்கட்டமைப்புகளும் அவற்றின் மதிப்பைத் தெரிவிக்கும் மூலதனமும்தான் ஒரு நாட்டின் பொருளாதாரத்தைத் தீர்மானிக்கும் காரணிகள். அந்த உற்பத்தியைத் தீர்மானிக்கும் காரணிகள் ஒருசிலரிடம் குவிந்து அதனை உலகம் முழுக்க ஏற்றுமதி செய்து இலாபத்தைக் குவிப்பது ஏகாதிபத்தியம். அதற்கு மாற்றாக அவற்றைப் பொதுவாக்கி திறனுள்ளவர்கள் எவரும் பொருட்களை உற்பத்தி செய்யலாம் என்ற சூழலை ஏற்படுத்தி போட்டியை ஊக்குவிப்பது அரச முதலாளித்துவம்.

இப்படி சமூகமயமாக்கிய சோவியத்தில் முதலில் நேர்மறை விளைவுகளை ஏற்படுத்தினாலும், பிற்காலத்தில் அப்படி ஓரிடத்தில் குவிந்ததைத் தனிநபர்கள் கைப்பற்றி சமூக ஏகாதிபத்தியவாதிகளாக மாறினார்கள். உலகம் இருவேறு மூலதனம், உற்பத்தி உள்கட்டமைப்புகளில் இயங்கும் இருதுருவங்கள் ஆனது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சாதிய சமூக ஏகாதிபத்தியவாதிகளாகத் திகழ்ந்து வந்த இந்தியப் பார்ப்பனியவாதிகள் சோவியத் சமூக ஏகாதிபத்தியவாதிகளுடன் சேர்ந்து கொண்டார்கள். இந்தியாவில் சோசலிசம் தோன்றும்போதே சமூக ஏகாதிபத்தியத்தின் தேவையும் தோன்றியது.

இந்தியாவில் லைசென்ஸ் ராஜ்ஜியம்

சோவியத்தைப் பின்பற்றி இந்தியாவில் சமூகமயமாக்கப்பட்ட மூலதனம், உற்பத்தி உள்கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டது. ஆனால் லைசன்ஸ் ராஜ்ஜியம் மூலம் அது பனியாக்களுக்கு மட்டுமானதாக மாற்றப்பட்டது; இந்தியாவில் அவர்களின் தொழிற்துறை முற்றொருமை ஏற்படுத்தப்பட்டது. விதிவிலக்காக பார்ப்பனிய ஆதிக்கம் உடைக்கப்பட்ட தமிழகத்தில் இந்தக் கட்டமைப்பு குறிப்பிடத்தக்க அளவு விவசாய வளர்ச்சிக்கும் உணவு, கல்விப் பரவலாக்கத்திற்கும் வழிவகுத்து திறன்மிக்கத் தொழிலாளர்களையும் அவர்களைக் கொண்டு வலுவான நிர்வாகத்தையும் உருவாக்கியது. தொழிற்துறை உற்பத்திக்குத் தேவையான நிலம், திறனுள்ள மனிதர்கள், நிர்வாகம் ஆகியவை தமிழகத்திடம் இருந்தும் மூலதனம், தொழில்நுட்பங்கள் பனியாக்களிடம் குவிக்கப்பட்டதால் தொழிற்துறை வளர்ச்சி மட்டுப்பட்டிருந்தது.

ஏகாதிபத்தியங்கள் உலகம் முழுக்க பரந்து விரிந்து மூலதன தொழில்நுட்ப சந்தையைக் கண்காணித்து கட்டுப்படுத்தி நிர்வகிக்க வேண்டிய சமூகச்சூழல் உண்டானது. உலக மனிதர்களின் கல்வியறிவு பெருகி உற்பத்திக்கான தொழில்நுட்பத்தைப் படைக்கும் திறனுள்ள மனிதர்கள் பெருகினார்கள். சமூகமயமான உற்பத்திக் காரணிகளான திறனுள்ள மனிதர்கள், தொழில்நுட்பம், மூலதனம், நிலம் ஆகியவற்றை நிர்வகிக்கும் நிர்வாகம் முக்கிய இடத்தைப் பெற்றது. சீன கம்யூனிஸ்ட் கட்சி அதனை உற்பத்திக் காரணிகளில் ஒன்றாகச் சேர்த்தது.

அமெரிக்கர்கள் குறைகடத்திகளாலான (semiconductors) தகவல் தொழில்நுட்பத்தைக் கண்டறிந்து நிர்வாகத்தில் ஒரு பாய்ச்சலை நிகழ்த்தினார்கள். கூடவே இந்தத் தொழில்நுட்ப பயன்பாடு நடப்பில் இருந்த இரும்பினால் உருவாக்கப்பட்டு எரிபொருள், மின்சாரத்தில் இயங்கும் பொருட்களின் உற்பத்தித்திறனைக் கூட்டியது. அதன்மூலம் அவர்கள் இதில் பின்தங்கிய சோவியத்தை வீழ்த்தினார்கள். ஒற்றைத்துருவ உலக வல்லரசாக மாறினார்கள். உலக உற்பத்திக்கு அடிப்படையான எரிபொருள் தொழில்நுட்பத்தைக் கொடுக்க இருந்த போட்டி எதிரணியை இல்லாமல் செய்தார்கள்.

தமிழக தொழில் துறை உற்பத்தி

சோவியத் சார்பு சமூக ஏகாதிபத்திய முற்றொருமையைப் பேணிவந்த இந்திய பார்ப்பனியவாதிகளை எரிபொருள் வேண்டுமானால் டொலர் கொடு; டொலர் வேண்டுமென்றால் டொலர் மூலத்தனத்திற்கும் அதன் உற்பத்தி உள்கட்டமைப்பில் உருவாக்கப்பட்ட பொருட்களுக்கும் இந்திய சந்தையைத் திறந்துவிடு என்று நிர்பந்தித்து இவர்களின் முதுகெலும்பை உடைத்தார்கள். அப்படி உடைந்த பார்ப்பனிய-பனியா முற்றொருமை தமிழகத்துக்கு மூலதனத்தையும் தொழில்நுட்பத்தையும் வழங்கியது. தொழிற்துறை உற்பத்தியில் தமிழகம் பாய்ச்சலைக் கண்டது.

இந்தப் புதிய தகவல் தொழில்நுட்பத்திலும் எரிபொருளிலும் போட்டியின்றி முற்றொருமை பெற்ற அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் இவற்றின் மதிப்பையும் விலையையும் சந்தையே தீர்மானிக்கும் என்ற தராளமயக்கொள்கையை செயல்படுத்தினார்கள். போட்டியில்லாத எரிபொருளுக்கும் நுட்பத்திற்கும் சந்தையின் வழியாக விலையையும்ó மதிப்பையும் நிர்ணயிக்கும் இந்தக் கோட்பாட்டை ஒரு எளிய உதாரணம் மூலம் விளக்கவேண்டுமானால்… குளிர்நாட்களில் ஊருக்குள் வரும் கம்பளி வியாபாரி தன் பொருளுக்கு ஒரு விலையைச் சொல்லாமல் ஏலத்தில் அதற்கான விலையையும் மதிப்பையும் கண்டடையும் போங்காட்டத்தைப் போன்றது.

முதலாளிகளின் விலையும் வாங்குபவர்களின் விருப்பமும்

நாம் உருவாக்கும் பொருட்களைப்போல மற்றவரும் ஒரு பொருளை உருவாக்கி விற்க வந்திருக்கிறார் என்ற உணர்வின்றி புதிய பொருளை வாயைப் பிளந்துகொண்டு பார்க்கும் வாடிக்கையாளரின் பையில் உள்ள பணத்தை நைச்சியமாக உருவும் தந்திரம் இது. ஆனால் இதையே முதலாளித்துவ நிபுணர்கள் கோட்பாட்டாக்கி விலைகள் வாங்கும் வாடிக்கையாளரைப் பொறுத்தது; முதலாளிகள் எவ்வளவு விலை சொன்னாலும் தேவையும், வாங்கும் விருப்பமும், வசதியும் இருந்தால் வாடிக்கையாளர் வாங்கப் போகிறார் என அதற்கு வியாக்கியானம் கொடுத்தார்கள்.

இதனால் வாடிக்கையாளரின் வாங்கும்திறனும் அந்தப் பொருளாதார சுழற்சியும் வேகமாகச் சரிவது குறித்தெல்லாம் இவர்களுக்குக் கவலையில்லை. முதலாளிகளுக்கு அதிக இலாபம் கிடைக்கிறதே! அவர்களிடம் பொறுக்கித் தின்னும் இவர்களுக்கு அது போதாதா என்ன? புதிய பொருட்களை வாயைப்பிளந்து கொண்டு சொன்ன விலைக்கு வாங்கும் வாடிக்கையாளனின் அந்தப் பண்பை சரக்குகளின் மாய்மாலம் (fetishism of commodities) என புறந்தள்ளுகிறார் மார்க்ஸ். பொருட்களின் மதிப்பு அதில் செலுத்தப்படும் மனிதர்களின் உழைப்பின் அளவு சார்ந்தது என்கிறார்.

கல்லின் மீது மனித உழைப்பு செலுத்தப்படாதவரை அதற்கு மதிப்பில்லை; அது பயன்படத்தக்க சிற்பமாக உருவாகாமல் போனால் அந்த உழைப்புக்குப் பயனில்லை; அந்தச் சிலையை அவரே வைத்துக்கொண்டால் அது சரக்கில்லை அது அவருக்குப் பயன்படும் பொருள்; அதையே மற்றவருக்கு கொடுத்துப் பரிவர்த்தனை செய்துகொண்டால்தான் அது சரக்கு என பொருளையும் சரக்கையும் பகுக்கிறார்.

இந்தச் சரக்குக்களில் செலுத்தப்படும் உழைப்பைத் திறன்மிக்க உழைப்பு (skilled labour) எல்லோராலும் செய்யமுடியும் சராசரி உழைப்பு (average labour) என உழைப்பை இரண்டாகப் பிரிக்கிறார். ஒரு சரக்கை சந்தைப்படுத்தும்போது சராசரி உழைப்பில்தான் அது மதிப்பிடப்படுகிறது. அதிலுள்ள திறன்மிக்க உழைப்பு சராசரி உழைப்புடன் ஒப்பிட எத்தனை மடங்கு என்பதாக மாற்றி ஒரு பொருளின் மதிப்பும் விலையும் தெரிவிக்கப்படுகிறது என மதிப்பின் பரிமாணங்களை விவரிக்கிறார்.

மேலும் ஒரு கற்சிலையை உருவாக்கத் தேவைப்படும் நேரமும் ஒரு மண்சிலையை உருவாக்கத் தேவைப்படும் நேரமும் ஒன்றாக இருந்தால் அவற்றின் மதிப்பு ஒன்றுதான். ஆனால் நடைமுறையில் அப்படி இருப்பதில்லை; ஒவ்வொரு பொருளிலும் செலுத்தப்படும் மனித உழைப்பு அந்தந்த நாட்டின் உற்பத்தித்திறன் (productiveness) சார்ந்தது என்கிறார்.

உற்பத்தி திறனும் சரக்கின் விலையும்

அந்த உற்பத்தித்திறன் அந்த நாட்டுத் தொழிலாளரின் சராசரித்திறன், அறிவியல் வளர்ச்சி, அதன் நடைமுறைப் பயன்பாட்டு அளவு, சமூகத்தில்  உற்பத்தி ஒருங்கமைக்கப்பட்டிருக்கும் பாங்கு, இயற்கைச்சூழல் என பல காரணிகளைச் சார்ந்தது என விரித்துச் செல்கிறார். அதோடு உற்பத்தித்திறன் அதிகரிக்க அதிகரிக்க சரக்கின் விலை வீழும் ஏனெனில் அதில் செலுத்தப்படும் மனித உழைப்பின் அளவு குறைகிறது; எனவே மதிப்பும் உற்பத்தித்திறனும் ஒன்றுக்கொன்று நேரெதிரானது; ஒன்று கூடும்போது மற்றது குறையும் என்கிறார்.

ஆனால் அவரின் கூற்று நடைமுறையில் மெய்ப்படவில்லை. உற்பத்தி நவீனமாக்கப்பட்டு பொருளுற்பத்தி பெருகினாலும் பொருட்களின் விலைகள் தொடர்ந்து உயர்ந்து வருகிறதே தவிர குறையவில்லையே! அதற்குக் காரணம் மார்க்ஸ் போட்டி முதலாளித்துவத்தை மையமாக வைத்துச் சொன்னார்; அது மாறி உற்பத்தி ஒருசிலரிடம் குவிந்து ஏகாதிபத்தியமாக மாறிவிட்டது; முன்பு உற்பத்தியில் ஈடுபட்ட திறன்மிக்கத் தொழிலாளர்கள் இப்போது அவர்களின் கூலிக்காரர்களாக மாற்றப்பட்டு விட்டார்கள் என விளக்கிய லெனின் அரச முதலாளித்துவத்தை செயல்படுத்தி அதற்குத் தீர்வு கண்டார்.

தொழிலாளர்களின் உழைப்பின் அளவு

உற்பத்திக் கருவிகளான மூலதனம், தொழில்நுட்ப உள்கட்டமைப்புகளைப் பொதுவாக்கி தொழிலாளர்களுக்குக் கல்வியூட்டி சராசரி உழைப்புத்திறனைக் கூட்டி போட்டியை ஊக்குவித்து விலைவாசியைக் கட்டுப்படுத்தினார். ஸ்டாலின் காலத்துக்குப் பிறகு அதையும் தனிநபர்கள் தங்களின் சொத்தாக மாற்றிக்கொண்டு சமூக ஏகாதிபத்தியமாக மாறி அமெரிக்க முதலாளித்துவ ஏகாதிபத்தியவாதிகளுடன் போட்டிக்கு நின்றார்கள். அதில் அமெரிக்கர்கள் வென்றார்கள். தகவல் தொழில்நுட்பத்திலும் எரிபொருளிலும் முற்றொருமைப் பெற்று தங்களுக்கு சாதகமான சமனற்ற மதிப்பு விதியை ஏற்படுத்தி அதனை எல்லோரின் மீதும் திணித்தார்கள்.  

மார்க்ஸ் கூறியதைப்போல ஒவ்வொரு பொருளிலும் பொதிந்துள்ள தொழிலாளர்களின் உழைப்பின் அளவை நிர்ணயிக்கும் முறை இதுவரையிலும் உருவாக்கப்படவில்லை. ஏனெனில் அவரின் கருத்துப்படி மதிப்பு மாறிலி (constant) அல்ல; மாறாக தொடர்ந்து மாறக்கூடியது. ஒவ்வொரு சமூகத்தின் உற்பத்தித்திறன் வளர்ச்சியைப் பொறுத்து அச்சமூகத்தின் சராசரி உழைப்பு மற்றும் திறன்மிக்க உழைப்பை நேரத்தை அளவாகக்கொண்டு அளவிட்டு அதன் அடிப்படையில் அந்நாட்டின் பொருட்களின் பணத்தின் மதிப்பைத் தெரிவிப்பது இதுவரையிலும் சிக்கலாக இருந்து வருகிறது.

சோவியத்தில் பொருட்களின் விலைகளைத் தீர்மானிக்க குழுக்கள் உருவாக்கப்பட்டு ஆயிரக்கணக்கான பொருட்களுக்கு விலைகள் நிர்ணயிக்கப்பட்டு அந்த விலைப்பட்டியல் நாடு முழுவதும் வழங்கப்பட்டது. வேகமாக மாறும் சூழலைக் கண்காணித்து அதனை மேம்படுத்துவது அவர்களுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியதாக ஆய்விதழ்கள் எழுதுகின்றன.

அந்தத் தேவைக்கு அந்தக் கணக்கீடுகளை செய்யத் தேவையான கருவிகளைக் கண்டறிய முற்பட்டிருந்தால் சோவியத்தில் அப்போதே எண்ணிமப் பொருளாதாரம் ஏற்பட்டு சோவியத்தின் உற்பத்தித்திறனைக் கூட்டி அமெரிக்க ஏகாதிபத்தியத்தை வீழ்த்தி இருக்கலாம். உலகமே சோசலிசப் பொருளாதாரத்தை நோக்கி பீடுநடை போட்டிருக்கும்.

கெடுவாய்ப்பாக சமூகத்தைப் புறக்கணித்த சமூக ஏகாதிபத்தியவாதிகளின் கைகளில் சிக்குண்ட சோவியத் அதனைச் செய்யத்தவறியது. அதனை செய்து முடித்த அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் உலகம் முழுக்க சுற்றும் மூலதனத்தையும் சரக்கையும் கணக்கிடப் பயன்படுத்தி உலகை சுரண்டி உறிஞ்சி வாழ வழிவகுத்தது.

இதுவரையிலுமான மதிப்பு முறைகளை கூர்ந்து ஆராயும்போது எந்த விதமான மதிப்பு முறையைத் தோற்றுவித்தாலும் அது துல்லியத்தன்மை குறைவானதாகவும் அதனைப் பயன்படுத்தி தனிநபர்கள் விலைகளை மாற்றிக் குளிர்காய்வதும் தவிர்ப்பது கடினமானது என்பதைக் காட்டுகிறது. இதற்குத் தீர்வு மதிப்பின் தீர்மானகரமான காரணியான மனிதர்களின் திறனை மேம்படுத்துவதும், உலகில் உள்ள அனைத்து சமூகங்களும் அனைத்துப் பொருட்களையும் உற்பத்தி செய்யும் திறனை அடைவதும், அதனால் ஒரு சமூகம் மற்ற சமூகத்தைச் சுரண்ட வாய்ப்பற்ற சோசலிச சமூகங்களாக வளர்வதும்தான்.

இப்படியான சமமான சமூக வளர்ச்சியின்றி ஏற்றத்தாழ்வு நிலவிய தொண்ணூறுகளில் எரிபொருளிலும் தகவல்தொழில்நுட்பத்திலும் முற்றொருமை பெற்ற அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் கொண்டுவந்த தாராளமய சந்தைவிதி உலகை எப்படி ஒட்டச் சுரண்ட பயன்பட்டது? சீனாவும் இந்தியாவும் அதனை எதிர்கொண்ட முறைகள் என்ன? இரண்டும் ஏன் இருவேறு வகையான வளர்ச்சியைக் கண்டன?

தொடரும்….

பகுதி 1: இந்தியாவைக் கட்டுப்படுத்தும் ஐந்து பெரிய நிறுவனங்கள்

பகுதி 2: இந்தியாவைக் கட்டுப்படுத்தும் ஐந்து பெரிய நிறுவனங்கள்

பகுதி 3: விலையை உயர்த்தி உழைப்பை உறிஞ்சும் பொறிமுறை என்ன? 

பகுதி 4:  டொலர் உலகப் பணமானதும், இந்தியா சோசலிசத்திற்கு மாறியதும் எப்படி?

Tags: