‘மக்களுக்கு சேவை புரிந்த என் தாய் தேச துரோகியா?’

மகள் மாய்ஷா – சுதா பரத்வாஜ்

பிரதமர் மோடியைக் கொல்ல சதித் திட்டம் தீட்டியதாகக் குற்றம்சாட்டப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் கைது செய்யப்பட்ட 5 சமூகச் செயற்பாட்டாளர்களில் ஒருவர் வழக்கறிஞர் சுதா பரத்வாஜ். பெரிய இடத்துப் பெண்ணாக சீரும் சிறப்புமாக வளர்க்கப்பட்டவர். கான்பூர் ஐஐடியில் பட்டப் படிப்பு முடித்துவிட்டு அமெரிக்காவில் குடியுரிமைப் பெற்று அங்கு வாழ்ந்து வந்தவர். இந்திய பழங்குடி மக்களின் சொல்லொண்ணா துயரங்களைக் கண்டு அவர்கள் வாழ்வை மீட்டெடுப்பதற்காகவே சட்டம் படித்தவர். அமெரிக்க குடியுரிமையை உதறித் தள்ளிவிட்டு இந்தியா வந்து சத்தீஸ்கர் மாநில பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்துக்காகச் சட்ட போராட்டம் நடத்தியவர்.

டெல்லியில் உள்ள தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் கவுரவ பேராசிரியையாக பணியாற்றி வந்த தொழிற்சங்கவாதி, சமூகச் செயற்பாட்டாளர், ஒடுக்கப்பட்ட மக்களின் வழக்கறிஞர்தான் சுதா பரத்வாஜ். மாவோயிஸ்ட் என்று பழிசுமத்தப்பட்டு பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டு இரண்டாண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் இவருடைய உடல் நிலை மிகவும் மோசடைந்துள்ளது. இருப்பினும் சமூக ஆர்வலர் வரவர ராவ் போலவே இவருக்கும் சரியான சிகிச்சை அளிக்கப்படாமல் இருப்பதையும் அதை நீதிமன்றமும் கண்டிக்காமல் இருப்பதையும் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் உட்பட பலர் விமர்சித்து வந்திருக்கிறார்கள். இந்நிலையில் சுதா பரத்வாஜின் 23 வயதான மகள் மாய்ஷா தன்னுடைய தாய் குறித்து கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார். அதனை இங்கு மொழிபெயர்த்துப் பதிவிடுகிறேன்.

“இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் இதே நாளில் அம்மா கைது செய்யப்பட்டார். வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தவரை அம்மாவை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். அவரை என்னால் தொட முடிந்தது, அவருடன் பேச முடிந்தது. ஆனால் அம்மா சிறையில் அடைக்கப்பட்ட பிறகு என் இதயம் சுக்குநூறாக நொறுங்கிப் போனது. அதனை தாங்கிக் கொள்ள முடியாமல் தத்தளித்தேன். பல மாதங்கள் விடாமல் அழுது கொண்டிருந்தேன். பூனா நீதிமன்றத்தில் அம்மாவை காண செல்லும் போதெல்லாம் போலீஸ்காரர்கள் சூழ குற்றவாளி போல அவர் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதை பார்த்தேன். அது ஒரு கொடிய காட்சி. சிறைச்சாலையில் அம்மா எப்படி சமாளிக்கிறார் என்பது எனக்குத் தெரியாது. நீதிமன்ற வளாகத்துக்குள் அம்மாவை அணைத்துக் கொள்ள ஒரு முறை முயன்றேன். ஆனால், ஈவிரக்கமின்றி என் கையை தட்டிவிட்டார் அங்கிருந்த பெண் காவல்துறை அதிகாரி. நான் வெகுண்டெழுந்தேன். ஆனால், அப்போதும் அம்மா நிதானம் இழக்கவில்லை. அவர்களிடமும் பரிவுடன் நடந்து கொண்டார்.

Breaking: Bombay HC Denies Bail To Sudha Bharadwaj, Arun Ferreira & Vernon Gonsalves In Bhima Koregaon Case [Read Orders]
Sudha Bharadwaj, Arun Ferreira & Vernon Gonsalves

கொரோனா காலம் உலகைப் பீடித்ததை அடுத்து தங்களுடைய குடும்பத்தினரிடம் தொலைப்பேசியில் பேச சிறை வாசிகள் அனுமதிக்கப்பட்டார்கள். எப்படியும் அம்மா என்னை அழைத்துப் பேசிவிடுவார் என்று தினமும் காத்துக்கிடப்பேன். ஒருவழியாக ஜூன் 9-ம் தேதி அம்மாவின் குரலைக் கேட்டேன். நான்கு மாதங்கள் கழித்து அம்மாவின் குரலைக் கேட்க நேர்ந்தபோது பூரித்துப்போனேன், உணர்ச்சிவசப்பட்டேன். இங்குள்ள மக்களுக்குச் சேவை புரிவதற்காக அமெரிக்கக் குடியுரிமையை விட்டுக்கொடுத்தவர் என்னுடைய தாய். ஆனால், அரசுக்கு எதிராகச் செயல்பட ஏழை மக்களை தூண்டிவிடவே என்னுடைய தாய் அமெரிக்கக் குடியுரிமையை துறந்ததாக அரசாங்கம் குற்றம்சாட்டுகிறது. அவர்களிடம் ஒன்றை கேட்க நினைக்கிறேன், ‘தன்னுடைய நாட்டு மக்களுக்குச் சேவை புரிய அமெரிக்காவின் சுகபோக வாழ்க்கையை விட்டுக்கொடுத்தவர் எவரேனும் உண்டா? அப்படிப்பட்ட ஒருவர் தேச துரோகி என்று முத்திரை குத்தப்பட்டதுண்டா?

என்னுடைய பாட்டி கிருஷ்ண பரத்வாஜ் பிரபல பொருளாதார நிபுணர். அவர் தன்னை போலவே தன்னுடைய மகளையும் உருவாக்க ஆசைப்பட்டார். ஆனால் என்னுடைய தாய் தன்னுடைய பாதையை சுயமாக தேர்ந்தெடுத்தார். மக்களுக்கு சேவை புரிய அவர் முடிவெடுத்தார். இது தேச விரோதமாகுமா?’ தன்னுடைய உடல் ஆரோக்கியத்தைப் பொருட்படுத்தாமல் இரவும் பகலுமாக இப்படி உழைக்க வேண்டுமா என்று அம்மாவிடம் நான் சண்டையிட்டிருக்கிறேன். அதற்கு அம்மா சொல்வார், ‘நம்மை போன்றவர்கள் உழைக்காவிட்டால் பிறகு ஏழை மக்களுக்கு எப்படி நீதி கிடைக்கும்?’ நான் சாதாரணமாக வாழ ஆசைப்பட்டேன். தினந்தோறும் சாப்பாடு கட்டிக்கொடுத்து பள்ளி, கல்லூரி வாசலில் இறக்கிவிடும் தாய் வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் என்னுடைய அம்மா சாதாரண தாய் அல்லவே. அவர் செய்தவற்றை செய்யக்கூடிய மனத் திண்மை உலகில் மிகச் சிலருக்கு மட்டுமே வாய்க்கும். அதனால்தான் என்னமோ இன்று அவர் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.

என்னுடைய தாயின் துணை இல்லாவிடிலும் நான் செய்யும் அத்தனையிலும் அவருடைய பிரதிபலிப்பு இருக்கவே செய்கிறது: அவர் உறுதியானவர், சுதந்திரமானவர், அச்சமற்றவர். என்னைவிடவும் உறுதியானவர் அம்மா என்பது எனக்குத் தெரியும். சிந்தனையாளர் பிராட் மெல்ட்ஜர் (Brad Meltzer) சுட்டிக்காட்டியதுபோல, நீங்கள் ஒன்றை நம்புவீர்களேயானால் அதற்காக போராடுங்கள். அந்த முயற்சிக்கு அநீதி இழைக்கப்பட்டால் அதுவரை போராடியதைக் காட்டிலும் இன்னும் வலுவாக போராடுங்கள்”

தமிழில்: ம.சுசித்ரா

மூலக்கட்டுரை: ‘Maa chose to serve her people. Is that anti-national?’ Sudha Bharadwaj’s daughter

Tags: