ஊடக உலகில் பெரும் முதலாளிகளின் ஊடுருவலும் ஊடக சுதந்திரமும்

-பேராசிரியர் அருண்கண்ணன்

கடந்த ஓகஸ்ட் மாதம் 23-ம் திகதி அன்று அதானி குழுமம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் இந்தியாவின் முன்னணி செய்தி நிறுவனமான என்டிடிவியின் (New Delhi Television Ltd – NDTV) 29% பங்குகளை வாங்கியுள்ளதாக தெரிவித்தது. மேலும் அந்த அறிவிப்பில் கூடுதலாக 26% பங்குகளை வாங்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தது. உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான அதானி (Adani) அவர்களுடைய குழுமத்தின் இந்த அறிவிப்பு பலரையும் அதிர்ச்சி அடையசெய்தது. மேலும் மோடி அவர்களின் நெருக்கமானவராக அறியப்பட்ட அதானியின் குழுமம் இந்தியாவின் முன்னணி செய்தி நிறுவனத்தை வாங்குவதன் மூலம் இந்தியாவில் பத்திரிக்கை சுதந்திரம் பெரிதும் பாதிக்கபடும் என்கிற அச்சத்தைப் பலரும் வெளிபடித்தியுள்ளனர்.

இந்நிலையில் அதாணி குழுமத்தால் எப்படி என்டிடிவியின் பங்குகளை வாங்க முடிந்தது? ஏற்கனவே அம்பானி போன்ற பெரும் கோர்பரேட் நிறுவனங்கள் ஊடக வெளியில் ஆதிக்கம் செலுத்தும் நிலையில் அதானியின் இந்த முயற்சி என்ன மாதிரியான பாதிப்பை ஏற்படுத்தும்? என்பது போன்ற கேள்விகளை முன்வைத்து ஆங்கில ஊடகங்களில் பலரும் விவாதிப்பதைப் பார்க்க முடிகிறது. அதைத் தமிழ்ச் சூழலில் புரிந்து கொள்வதற்கான சிறிய முயற்சியே இந்தக் கட்டுரை.

இந்தியாவில் செய்தித் தொலைக்காட்சியின் தோற்றமும் வளர்ச்சியும்

இந்தியாவில் 1959-ம் ஆண்டு செப்டம்பர் 15-ம் திகதி ஒரு சோதனை முயற்சியாக தூர்தர்சன் என்னும் பொதுத்துறை நிறுவனத்தின் வாயிலாக தொலைக்காட்சி ஒளிபரப்புத் தொடங்கப்பட்டது. அதன்பிறகு 1965-ம் ஆண்டு முதன் முதலில் தூர்தர்சன் செய்தி ஒளிபரப்பைத் தொடங்கியது. இப்படி தொடங்கிய இந்திய செய்தித் தொலைக்காட்சி யின் வரலாற்றில் அடுத்து 30 ஆண்டுகள் தூர்தர்சன் மட்டுமே முழுமையான ஆதிக்கம் செலுத்திவந்தது. இந்தியாவில் 90களுக்குப் பிறகுப் பொருளாதார கொள்கையில் ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாகவும் 1995-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அலைக்கற்றைகள் தொடர்பாக வழங்கிய முக்கியமான தீர்ப்பின் காரணமாகவும் தனியார் தொலைக்காட்சியின் சேவை இந்தியாவில் தொடங்கப்பட்டது. இந்த பின்னணியில் 1998-ம் ஆண்டு என்டிடிவி ஸ்டார் தொலைக்காட்சி நிறுவனத்துடன் இணைந்து தொடங்கியதுதான் இந்தியாவின் முதல் தனியார் செய்தித் தொலைக்காட்சி நிறுவனமாகும்.

என்டிடிவியின் தோற்றமும் வளர்ச்சியும்

இந்தியாவின் சில நகரங்களுக்கு மட்டுமே இருந்த தூர்தர்சன் தொலைக்காட்சி ஒளிபரப்பு சேவை 1982-ல் தேசிய ஒளிபரப்பாக விரிவாக்கப்படுகிறது. அதே காலகட்டத்தில் தூர்தர்சன் தொலைக்காட்சியில் தனியார் நிகழ்ச்சி தயாரிக்கும் நிறுவனங்களின் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அப்படியான ஒரு நிகழ்ச்சி தாயரிப்பு நிறுவனமாக 1988-ம் ஆண்டு பிரனாய் ராய் (Prannoy Roy) மற்றும் ராதிகா ராய் (Radhika Roy) ஆகியோர்களால் தொடங்கப்பட்டது தான் என்டிடிவி நிறுவனம்.

முதல்கட்டமாக அதே ஆண்டு “உலகம் இந்த வாரம்” என்கிற நிகழ்ச்சி தயாரித்தது என்டிடிவி இந்நிகழ்வு ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பப்பட்டது. உலகில் நடந்த சில மிக முக்கியமான நிகழ்வுகளை அலசும் செய்தித் தொகுப்புதான் இந்நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி பெறும் வரவேற்பைப் பெற்றதுடன் இந்திய செய்தித் தொலைக்காட்சி வரலாற்றில் இந்நிகழ்ச்சித் தொகுப்பை ஒரு புரட்சிகரமான மாற்றம் என்றே பலரும் குறிப்பிடுகின்றனர்.

அதற்குப் பிறகு தேர்தல் முடிவுகளைத் தொகுத்து வழங்குவது பட்ஜெட் தொடர்பான விவாதங்களை நடத்துவது என தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளைத் தூர்தர்சன் தொலைக்காட்சிக்குத் தயாரித்து கொடுத்தது என்டிடிவி நிறுவனம். மேலும் 1995-ம் ஆண்டு முதல் முறையாக தினமும் இரவு எட்டு மணி செய்தியை நேரடி ஒளிபரப்பாகத் தயாரித்து கொடுத்தது என்டிடிவி. இந் நேரடி ஒளிபரப்பிற்கு அரசு தரப்பில் இருந்து எதிர்ப்பு வந்ததாகவும் இருப்பினும் என்டிடிவி நேரடி ஒளிபரப்பைச் சாமார்த்தியமாகத் தொடர்ந்து ஒளிபரப்பியதாக என்டிடிவியின் இருபத்தைந்து ஆண்டு நிறைவை ஒட்டி வெளியிடப்பட்டப் புத்தகத்தில் பிரனாய் ராய் குறிப்பிட்டுள்ளார்.

1998-ம் ஆண்டு ரூப்பர்ட் மர்டாக்கின் ஸ்டார் நிறுவனத்துடன் இணைந்து முதல் தனியார் செய்தித் தொலைக்காட்சி ஒளிபரப்பைத் தொடங்கியது என்டிடிவி. நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனமாக 6 பணியாளர்களுடன் தொடங்கி 1998-ல் 300 பணியாளர்களுடன் மிகப்பெரிய நிறுவனமாக வளர்ச்சி அடைந்தது என்டிடிவி நிறுவனம். 1999-ல் ndtv.com இணையதளம் தொடங்கப்பட்டது மேலும் அதே ஆண்டில் வலைதளத்தில் நேரடி ஒளிபரப்பையும் ஆரம்பித்தது. மத்திய அரசின் முன்னாள் தகவல் ஒலிபரப்பு துறை செயலராக இருந்த ரதிகாந்த் பாசு ஸ்டார் நிறுவனத்தின் பொறுப்பாளராக இருந்தவரை ஸ்டார் என்டிடிவி இடையேயான உறவில் பெறும் சிக்கல் ஏற்படவில்லை. ஆனால் அவர் இடத்தில் பீட்டர் முகர்ஜி வந்த பிறகு இரு நிறுவனங்களுக்கு இடையிலான உறவில் சிக்கல் ஏற்பட்டது.

இதனை அடுத்து 2003-ம் ஆண்டு தனியாக என்டிடிவி 24×7 என்கிற ஆங்கிலச் செய்தித் தொலைக்காட்சியும் என்டிடிவி இந்தியா என்கிற இந்தி செய்தித் தொலைக்காட்சியும் தொடங்கப்பட்டன. என்டிடிவி ஆங்கிலச் செய்தித் தொலைக்காட்சி தொடங்கிய சில வாரங்களில் ஹெட்லயன்ஸ் டுடே (தற்போதைய இந்தியா டுடே டிவி) ஆரம்பிக்கப்பட்டது இருப்பினும் அது என்டிடிவி சேனலுக்கு எந்த வகையிலும் போட்டியாக அமையவில்லை.

ஆனால் 2005-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட டைம்ஸ் நொவ் (Times Now) அதற்க்கு அடுத்த ஆண்டு தொடங்கப்பட்ட சிஎன்என் (CNN) போன்ற செய்தி சேனல்கள் அதுவரை தனியார் செய்தித் தொலைக்காட்சிப் பிரிவில் ஆதிக்கம் செலுத்தி வந்த என்டிடிவியைப் பின்னுக்குத் தள்ளியது. தொடங்கிய சில வருடங்களிலேயே முதல் இரண்டு இடங்களையும் இந்த சேனல்கள் கைப்பற்றின. என்டிடிவியில் பயிற்சி பெற்றவர்களான ராஜ்தீப் சர்தேசாய் மற்றும் அர்னாப் கோஸ்வாமி ஆகிய இருவரும் இச் சேனல்களின் வளர்ச்சிக்குப் பெறும் பங்காற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.

குடும்ப நிறுவனமாக இருந்த என்டிடிவி 2004-ல் பங்கு சந்தையில் பட்டியலிடப்படும் நிறுவனமாக மாறுகிறது. அதற்கு அடுத்த ஆண்டு ராய் இணையரால் ஆர்ஆர்பிஆர் என்கிற பெயரில் நிறுவனம் ஒன்று தொடங்கப்பட்டு அதில் உடனடியாக என்டிடிவியில் தங்களுக்கு இருந்த 60% பங்குகளில் 29% பங்குகள் மாற்றுப்படுகிறது. அதே நேரத்தில் என்டிடிவி நிறுவனம் அசுர வேகத்தில் விரிவாக்க முயற்சிகளைத் தொடங்கியது. 2005-ம் ஆண்டு என்டிடிவி ப்ராபிட் (NDTV Profit) என்கிற வணிகச் செய்தி சேனல் தொடங்கப்பட்டது. பிறகு மெட்ரோ நேஷனல் உடன் இணைந்து கொல்கத்தா மும்பை போன்ற நகரங்களில் பிராந்திய மொழியில் செய்திச் சேனல்களைத் தொடங்க முயற்சி செய்யப்பட்டது ஆனால், அந்த முயற்சிகள் தோல்வியில் தான் முடிந்தது. மேலும், உலக அளவில் செய்தி சேனல்கள் தொடங்குவது தொடர்பான ஆலோசனைகளை வழங்கும் நிறுவனம் ஒன்றும் தொடங்கப்பட்டது. அதன் வழியாக மலேசியா நாட்டில் அஸ்ட்ரோ என்கிற 24×7 செய்தி சேனலைத் தொடங்குவதற்கு உதவியது. 2006-ம் ஆண்டில் ரேடியோ சேனல் ஒன்றை தொடங்குவதற்காகச் செய்த முயற்சியும் வெற்றிபெறவில்லை. மேலும் தொலைக்காட்சி சேவையைத் தாண்டி தகவல் தொழில்நுட்பத் துறை சார்ந்து சேவை வழங்குவதற்குத் தொடங்கப்பட்ட என்டிடிவி லேப்ஸ் (NDTV Labs) நிறுவனமும் நீண்ட காலம் தொடர்ந்து நடத்தப்படவில்லை.

இந்திய தொலைக்காட்சி நிறுவனங்களின் பெரும்பான்மையான வருமானம் என்பது விளம்பரங்கள் மூலமே கிடைத்துவருகிறது. 2005-ம் ஆண்டுக்குப் பிறகு சந்தையில் ஏற்பட்ட போட்டியின் காரணமாக என்டிடிவியின் விளம்பர வருமானம் பெறும் சரிவைச் சந்திக்க தொடங்கியது. அதற்கு அடுத்த சில ஆண்டுகளில் ஏற்பட்ட உலகப் பொருளாதார நெருக்கடி இந்நிலைமையை மேலும் சிக்கலுக்கு உள்ளாக்கியது. ஒரு புறம் வருமானத்தில் நெருக்கடி உருவான அதே நேரத்தில் பல விரிவாக்க முயற்சிகள் தோல்வியடைந்ததின் காரணமாகவும் 2005 வரை லாபம் ஈட்டி வந்த என்டிடிவி நிறுவனம் அடுத்த வந்த சில ஆண்டுகளில் லாபம் இன்றி நஷ்டத்தில் இயங்கும் நிலை ஏற்பட்டது.

அதானி குழுமம் என்டிடிவி நிறுவனத்தின் பங்குகளை வாங்கியதன் வரலாறு

இப்படியான சூழலில் 2007-ம் ஆண்டு குளோபல் இன்வெஸ்ட்மென்ட் என்கிற நிறுவனத்திடம் இருந்த 7 சதவீத பங்குகளை வாங்கும் முயற்சியில் ராய் இணையர் இறங்கினர். இதற்குப் போதுமான நிதி இல்லாததால் இந்தியா புல்ஸ் (India Bulls) என்கிற நிதி நிறுவனத்திடம் இருந்து 501 கோடி ரூபாய் கடன் பெற்றனர் ராய் இணையர். அதற்கு அடுத்த சில மாதங்களிலேயே உலகப் பொருளாதார நெருக்கடி காரணமாகப் பங்குச் சந்தை பெரும் வீழ்ச்சி அடைகிறது 400 ரூபாயாக இருந்த என்டிடிவியின் பங்குகள் 100 ரூபாயாக சரிந்தது.

இத்தகைய சூழலில் இந்தியா புல்ஸ் நிறுவனத்திடம் வாங்கிய கடனை அடைக்க வேண்டிய நிலை உருவாகிறது. எனவே அக்கடனை அடைப்பதற்கு ஐசிஐசிஐ வங்கியிடமும் (ICICI Bank) இருந்து 350 கோடி ரூபாய் கடனை 19% வட்டியுடன் பெறுகின்றனர் ராய் இணையர். பிறகு வங்கி கடனை அடைப்பதற்கு அம்பானியின் பினாமி நிறுவனம் என்று நம்பப்படுகிற விபிசிஎல் (VPCL) நிறுவனத்திடம் இருந்து 2009-ம் ஆண்டு 403 கோடி ரூபாய் வட்டி இல்லா கடனை ஆர்ஆர்பிஆர் நிறுவனத்தின் வழியாகப் பெற்றுள்ளனர். மேலும் ஆர்ஆர்பிஆர் நிறுவனம் கடனைத் திருப்பித்தராமல் போகும் பட்சத்தில் அதனிடம் உள்ள என்டிடிவியின் 29% பங்குகளை விபிசிஎல் நிறுவனம் எடுத்துக்கொள்ளலாம் என்கிற ஒப்பந்தத்துடன் தான் அக்கடன் வழங்கப்பட்டுள்ளது.

இந்த விபிசிஎல் நிறுவனத்தின் கணக்கில் கடன் வழங்கும் அளவிற்குப் பணம் இல்லை என்பதும் இது ஒரு ஆலோசனை நிறுவனமாகத்தான் பதியப்பட்டுள்ளது போன்ற விவரங்கள் பின்னால் தான் பொது வெளிக்கு வந்தது. இதனுடன் விபிசிஎல் நிறுவனம் ஆர்ஆர்பிஆர் நிறுவனத்திடம் கடனை வழங்குவதற்கு சில வாரங்களுக்கு முன்பு சிநோனா (Shinano) நிறுவனத்திடம் இருந்து அதே அளவு தொகையைக் கடனாக பெற்றுள்ளது தெரியவருகிறது. மேலும் விபிசிஎல் நிறுவனத்தின் இயக்குனர்கள் இருவரும் ரிலையன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் அதேபோல் சிநோனா நிறுவனமே ரிலையன்ஸின் ஒரு கிளை நிறுவனம் என்பதும் தெரியவருகிறது. இதனுடன் சிநோனா மற்றும் விபிசிஎல் ஆகிய இரண்டு நிறுவனங்களும் ஒரே அலுவலக முகவரியில் இயங்கிவந்தது என்பதும் வருமான வரித்துறை அறிக்கையின் வாயிலாக அறிய முடிகிறது.

அதற்கு அடுத்த சில ஆண்டுகளில் விபிசிஎல் நிறுவனத்தை எமினென்ட் குழுமம் வாங்குகிறது இதன் முலம் என்டிடிவியின் 29% பங்குகளை எடுத்துக்கொள்ளும் உரிமத்தைப் பெறுகிறது அக்குழுமம். அந்த நிறுவனமும் கூட அம்பானியின் ஜியோ நிறுவனத்தின் இயக்குனராக உள்ள மகேந்திர நகாத்தா ( Mahendra nhata) அவர்களுடையதுதான். இந்த நிறுவனத்தைச் சில ஆண்டுகள் கழித்து சுரேந்திர லுனிய என்கிற நிறுவனம் வாங்கியுள்ளது. சமீபத்தில் அந்நிறுவனத்தை அதானி குழுமம் வாங்கியது. இந்த பின்னணியில்தான் அதானி குழுமம் என்டிடிவியின் 29% பங்குகளைப் பெற்றுள்ளது. இதனுடன் கூடுதலாக மேலும் 26% பங்குகளை வாங்க உள்ளதாகவும் அதானி குழுமம் கூறியுள்ளது. ஒருவேளை இதில் அதானி குழுமம் வெற்றி பெறும் பட்சத்தில் என்டிடிவியின் கட்டுப்பாடு ராய் இணையரிடம் இருந்து அதானி குழுமத்திடம் சென்றுவிடும்.

என்டிடிவி நிறுவனத்தின் நிதி மேலாண்மை

என்டிடிவி நிறுவனத்தின் நிதி மேலாண்மை தொடர்பான சச்சரவுகள் என்பது அதனுடைய தொடக்க காலகட்டந் தொட்டே இருந்து வருகிறது. 1997-ம் ஆண்டு பாராளுமன்றக் குழு என்டிடிவி நிகழ்ச்சித் தயாரிப்பு நிறுவனத்திற்கும் தூர்தர்சன் தொலைக்காட்சிக்கும் இடையிலான நிதி பரிவர்த்தனைகளில் முறைகேடுகள் எதுவும் நடைபெற்றுள்ளதா என்பதை விசாரித்தது. அதனைத் தொடர்ந்து 1998-ம் ஆண்டு சிபிஐ பிரனாய் ராய் மற்றும் தூர்தர்சனில் பணிபுரிந்த ரதிகாந்த் பாசு உள்ளபட பல அதிகாரிகள் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இவ் வழக்கை நீண்ட காலம் விசாரித்த சிபிஐ 2013-ம் ஆண்டு முடித்து வைத்தது. இதில் முன்வைக்கப்பட்ட எந்த குற்றச்சாட்டுகளும் கடைசி வரை நிரூபிக்கப்படவில்லை.

இது ஒரு புறம் இருக்க தூர்தர்சனின் இயக்குனராக இருந்த ரதிகாந்த் பாசு (IAS Officer) 1996-ம் ஆண்டு திடீரென பணியில் இருந்து விலகுகிறார். மேலும் அடுத்த சில ஆண்டுகளில் ஸ்டார் நிறுவனத்தின் இந்திய பொறுப்பாளராகப் பதவி ஏற்கிறார். அதனைத் தொடர்ந்து என்டிடிவி மற்றும் ஸ்டார் இடையிலான ஐந்து ஆண்டுகளுக்கான ஒப்பந்தம் கையைழுத்தனாது. ஸ்டார் உலக அளவில் பெரிய நிறுவனமாக இருந்த பொழுதும் இரண்டு நிறுவனங்களுக்கு இடையிலான ஒப்பந்தம் என்டிடிவிக்குச் சாதகமாக இருந்ததாகவும் அதற்கு ரதிகாந்த் பாசு ஒரு முக்கியமான காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டது. அதன் காரணமாகவே பாசுவிற்குப் பிறகு ஸ்டாரில் பொறுப்பேற்ற பீட்டர் முகர்ஜி கொஞ்சம் கடுமையாக நடந்து கொண்டதாகவும் இதன் விளைவாகவே என்டிடிவி உடனான ஒப்பந்தம் புதுப்பிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

மேலும் இவர்கள் ரிலையன்ஸ் நிறுவனங்களிடம் இருந்து கடன் பெற்ற விதமும் பல கேள்விகளையே நமக்கு எழுப்புகிறது. வாய்ப்பு இருந்தும் ரிலையன்ஸ் நிறுவனம் ஏன் என்டிடிவியின் பங்குகளை வாங்கவில்லை போன்ற கேள்விகளுக்குப் பதில் இருப்பதாகத் தெரியவில்லை. மேலும் 2009-ம் ஆண்டு ரிலையன்ஸ் நிறுவனத்திற்காக லாபி செய்த ராடிய மற்றும் முன்னாள் எக்கானிமிக் டைம்ஸ் பத்திரிக்கையில் பணிபுரிந்த வேணுவிற்கும் இடையில் நடந்த உரையாடலில் அம்பானியின் நெருக்கமானவராக கருதப்பட்ட மனோஜ் மோடி டெல்லிக்கு வர உள்ளதாகவும் நாம் பிரனாய் ராய்க்கு உதவு வேண்டும் என்று சொல்லும் ஆடியோ வெளியானது. இந்த பின்னணியில் தான் விபிசிஎல் நிறுவனத்திடம் இருந்து ராய் கடன் பெற்றதாகச் சொல்லப்படுகிறது. மேலும் என்டிடிவியின் 25-ம் ஆண்டு விழாவில் 25 பேருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது அதில் அம்பானியும் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்றைய நிலையில் என்டிடிவி நிறுவனத்தின் பங்குகளில் அதானி நிறுவனத்திடம் 29% பங்குகளும் ராய் இணையருக்கு 32% பங்குகளும் எல்டிஎஸ் இன்வெஸ்ட்மென்ட் என்கிற நிதி நிறுவனத்திடம் 9.75% பங்குகளும் விகாஸ் இந்தியா என்கிற நிறுவனத்திடம் 4.42% பங்குகளும் 29,691 தனிநபர்களிடம் 23.85% பங்குகளும் உள்ளன. எல்டிஎஸ் மற்றும் விகாஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும் மொரிசியஸ் நாட்டில் இருந்து செயல்படுகின்றன. இதில் எல்டிஎஸ் நிறுவனத்தின் மொத்த இந்திய முதலீடுகளில் 98% சதவித முதலீடுகள் அதானியின் நான்கு நிறுவனங்களில் உள்ளது. இது இருவருக்கும் இடையில் இருக்கும் நெருக்கத்தைக் காட்டுகிறது. எனவே என்டிடிவியில் அதானி குழுமத்தால் கூடுதல் பங்குகளை எளிதாக பெற முடியும் என்றே தோன்றுகிறது

Not for sale!

இந்தியாவில் ஊடகங்களின் இன்றைய நிலை

சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் பொதுவாக ஊடகங்கள் அரசிற்கு ஆதரவாகவே செயல்பட்டு வந்துள்ளன. இந்திராகாந்தி ஆட்சிக் காலத்தில் அறிவிக்கப்பட்ட நெருக்கடி நிலையின் போது இந்தியன் எக்ஸ்ப்ரஸ் உள்ளிட்ட சில பத்திரிக்கைகள் அரசை எதிர்த்து செய்திகளை வெளியிட்டன. இந்திய ஊடக வரலாற்றில் இது போன்ற விதிவிலக்குகளும் உண்டு என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. ஆனால் 2014-க்கு பிறகு நிலைமை முற்றிலும் வேறுமாதிரியாக உள்ளது. பிரதான ஊடகங்களைத் தனிமைப்படுத்தும் முயற்சியை முழு பாய்ச்சலுடன் இந்த அரசால் மேற்கொள்ளப்படுகிறது. ஆட்சிக்கு வந்த சில நாட்களிலேயே அமைச்சகத்தின் எந்தக் கோப்புகளும் பத்திரிக்கைகளுக்கு அனுப்பக்கூடாது என்று பிரதமர் அலுவலகத்தில் இருந்து சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டதாக ஸ்க்ரோல் இணையதளம் செய்தி வெளியிட்டது.

அதேபோல் வழக்கமாக அரசின் முக்கியமான முடிவுகள் அனைத்தும் பத்திரிக்கைகள் வழியாக தெரிவிக்கப்படும் ஆனால் பிரதமர் உள்ளபட அமைச்சர்கள் பலரும் சமூக ஊடகத்தின் வழியாகத்தான் செய்திகளை வெளியிடுகின்றனர். திட்டக்குழுவைக் கலைத்து விட்டு நிதி அயோக் என்கிற அமைப்பை உருவாக்கியது போன்ற விடயங்களைப் பிரதமரின் சமூக ஊடகத்தில் வந்த பிறகே ஊடகங்கள் செய்தி வெளியிடும் நிலையை இந்த அரசு உருவாக்கியுள்ளது. இது போன்று தகவல்களைத் தர மறுப்பதின் மூலம் மக்களுக்கு இருக்கும் பிரதான ஊடகத்தின் மீதான நம்பிக்கையைச் சிதைத்து கொண்டிருக்கிறது இந்த அரசு. அதேபோல் பல்வேறு வழிமுறைகளைப் பின்பற்றி பெரும்பாலான பிரதான ஊடகங்களை அரசின் ஊதுகுழல்களாக மாற்றுவதில் பெரிதும் வெற்றி பெற்றுள்ளது இந்த அரசு.

இதில் இருந்து மாறுபட்டு செயல்படும் ஊடக நிறுவனங்களும் பத்திரிக்கையாளர்களும் பெறும் சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இப்படி இந்த அரசை விமர்சித்து செய்தி வெளியிட்டதற்காக நேரடியாகவோ அல்லது நெருக்கடி கொடுத்தோ பலரும் வெளியேற்றப்பட்டுள்ளனர். ஹிந்துஸ்தான் டைம்ஸ்-ல் எடிட்டராக இருந்த பாபி கோஷ் 2017-ல் இந்திய சீன எல்லை பகுதியில் நடந்த உரசல்கள் தொடர்பாக அரசை விமர்சித்து செய்தி வெளியிட்டபோது நிர்வாகம் அவரை எச்சரித்தது. அதற்குப் பிறகும் அரசை விமர்சிக்கும் வகையில் சில செய்திகளை வெளியிடுகிறார் இதனால் அவர் வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்பது தெரிகிறது.

கொரோனா இரண்டாம் அலையின் போது அரசு செயல்படவில்லை என்பதை விமர்சிக்கும் வகையில் காணவில்லை என்கிற தலைப்பின் கீழ் தேடப்படும் நபர் இந்திய அரசாங்கம் என்றும், அதன் வயது 7 என்றும், அதை தேடுபவர்கள் இந்திய குடிமக்கள் என்கிற அட்டைப் படத்துடன் அவுட்லூக்கின் இதழ் ஒன்று மே மாதம் 2021-ம் ஆண்டு வெளியிடப்பட்டது. இதன் காரணமாக அப்பத்திரிக்கையின் எடிட்டர் ரூபன் பானர்ஜியை வேலையில் இருந்து நீக்கியது அவுட்லூக் நிர்வாகம். கடந்த எட்டு ஆண்டுகளில் இப்படி பாதிக்கப்பட்ட பத்திரிக்கையாளர்களின் பட்டியில் நீண்டு கொண்டே செல்கிறது. அரசின் மிகவும் நெருக்கமான பத்திரிகையாகக் கருதப்பட்ட தைனிக் பாஸ்கரும் (Dainik Bhaskar) கொரோனா இரண்டாம் அலையின் பொழுது அரசைக் கடுமையாக விமர்சித்தது. அதன் எதிரொலியாக சில நாட்களுக்குப் பிறகு அந்நிறுவனத்தில் ரைடு நடத்தப்பட்டது. அரசை விமர்சித்து செய்திகளை வெளியிட்ட நியூஸ் கிளிக் இணையதளத்தின் அலுவலகத்திலும் இது போன்ற ரைடு ஒன்று நடத்தப்பட்டது.

அதேபோல் என்டிடிவியில் இந்தியா பாகிஸ்தான் எல்லையில் நடந்த சண்டை தொடர்பாக வெளியிட்ட செய்திகள் தேசப்பாதுகாப்பிற்கு எதிராக இருந்ததாக சொல்லி என்டிடிவியின் இந்தி சேனலின் ஒரு நாள் ஒளிபரப்பைத் தடை செய்தது இந்த அரசு. இதே கால கட்டத்தில் நிதி முறைகேடு தொடர்பாக ராய் இணையரின் வீடுகளில் சிபிஐ சோதனையும் நடத்தப்பட்டது. எனவே இந்த அரசை விமர்சித்து செய்திகளை வெளியிடும் நிறுவனங்கள் கடுமையான அச்சுறுத்தலுக்கு நடுவிலேதான் செயல்படும் நிலை உள்ளது என்பதுத் தெளிவாகிறது.

இறுதியாக

என்டிடிவிக்கும் ஆளும் வர்க்கத்திற்கும் தொடக்க காலம் தொட்டே நெருக்கமான உறவே இருந்து வந்துள்ளது. 1998-ம் ஆண்டு நடந்த என்டிடிவி செய்தி நிறுவனத்தின் தொடக்க நிகழ்வு அப்போதைய பிரதமராக இருந்த ஐகே குஜராலின் அலுவலகத்தில் நடைபெற்றது. மேலும் என்டிடிவியின் 25-ம் ஆண்டு விழா ஜனாதிபதியின் அலுவலகமான ராஷ்டிர பதி பவனில் நடைபெற்றது இதுவே அந்த அலுவலகத்தில் நடந்த முதல் தனியார் நிறுவனத்தின் நிகழ்வாகும்.

ஆனால் தற்போதைய அரசுக்கும் ராய் இனையருக்கும் இடையிலான உறவு அவ்வளவு இணக்கமானதாக இல்லை என்பதை நாம் எளிதாகப் புரிந்து கொள்ளமுடிகிறது. 2002-ம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரங்களை என்டிடிவி காட்டிய விதங்களை அன்றைய ஆளும் அரசாக இருந்த மோடி அவர்கள் தலைமையிலான பாரதிய ஜனதா அரசாங்கம் கடுமையாக விமர்ச்சித்ததுடன் அதனுடைய ஒளிபரப்பையும் தற்காலிகமாகக் குஜராத்தில் நிறுத்திவைத்தது. பிரதமர் ஆவதற்கு சில மாதங்களுக்கு முன் நடந்த நிகழ்வு ஒன்றில் பேசிய மோடி அவர்கள் அரசு புலிகளைப் பாதுகாக்க ஒதுக்கிய நிதியில் தான் சில சேனல்கள் நடத்தப்படுகின்றன என்கிற குற்றச்சாட்டு ஒன்றையும் வைத்தார். அதே காலகட்டத்தில் என்டிடிவி புலிகளைப் பாதுகாப்போம் என்கிற நிகழ்ச்சி ஒன்றை நடத்திவந்தது. இந்நிகழ்ச்சி தனியார் நிறுவனம் ஒன்றின் ஸ்பான்சர் செய்ப்பட்ட நிகழ்ச்சி என்றாலும் மோடி அவர்கள் மறைமுகமாக என்டிடிவியையே விமர்சித்தாக பலரும் கூறுகின்றனர்.

மேலும் 2014-ம் ஆண்டு தேர்தலின் போது பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு பெரும்பாலான முன்னனி செய்தி நிறுவனங்களுக்குப் பேட்டி அளித்த மோடி என்டிடிவிக்கு மட்டும் பேட்டி அளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து 2014-ம் ஆண்டு மோடி அவர்கள் தலைமயிலான அரசு பொறுப்பேற்ற பிறகு என்டிடிவி பலவகைகளில் தொடர்ந்து புறக்கணிக்கப்படும் ஒரு செய்தி நிறுவனமாக உள்ளது. அதேபோல் அரசின் சில விடயங்களை விமர்சனப்பூர்வமாக அணுகியதற்காகக் கடந்த எட்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து பல சிக்கல்களை என்டிடிவியும் அதில் பணிபுரியும் பல பத்திரிக்கையாளர்களும் சந்தித்து வருகின்றனர். இதில் பணிபுரியும் பத்திரிக்கையாளர் ரவிஸ் குமார் போன்றவர்கள் சந்தித்த இன்னல்கள் ஏராளம்.

இந்தப் பின்னணியில் இருந்து பார்க்கும் பொழுது என்டிடிவியை ராய் இணையர் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெற வாய்ப்புகள் மிக குறைவாகவே உள்ளன என்றே சொல்ல தோன்றுகிறது. என்டிடிவியின் செயல்பாடுகளில் நமக்கு ஆயிரம் விமர்சனங்கள் இருப்பினும் இன்னும் அது அகில இந்திய அளவில் நம்பத்தகுந்த ஒரு செய்தி நிறுவனமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் வெளியான ராய்ட்டர்ஸ் (Reuters) நிறுவனத்தின் ஆய்வு அறிக்கையிலும் இந்தியாவில் அதிகமான நபர்களால் (76%) நம்பத்தகுந்த ஊடகமாக என்டிடிவி திகழ்கிறது. இந்நிலையில் தற்போதைய ஆளும் அரசின் மிகவும் நெருக்கமாகக் கருதப்படுகிற அதானியின் கட்டுப்பாட்டிற்கு என்டிடிவி செல்லும் பட்சத்தில் அதனுடைய அணுகுமுறையில் பெரும் மாற்றம் ஏற்படும் என்பதுதான் அனைவரையும் கவலையடையச் செய்துள்ளது.

Tags: