முஸ்லீம்களை எதிரியாக்காமல் இந்து அடையாளத்தை உருவாக்க முடியுமா?

ராஜன் குறை கிருஷ்ணன்

டைபெற்று வரும் தேர்தல் பிரச்சாரத்தில் பாரதப் பிரதமர் தொடர்ந்து முஸ்லிம்களை இந்து அடையாளத்திற்கு எதிராக நிறுத்தி பேசுவது மனசாட்சியுள்ள, நாகரிகமான குடிமக்கள் பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. இந்தியாவிலுள்ள சிறுபான்மையினரான முஸ்லிம்கள் பெரும்பாலும் சமூக, பொருளாதார நிலையில் பின்தங்கி இருப்பவர்கள். அவர்களால் இந்துக்களின் அதிகாரத்திற்கு எந்த அச்சுறுத்தலும் கிடையாது. முஸ்லிம்களின் வாக்குகள் எங்களுக்குத் தேவையில்லை என்று ஒரு பா.ஜ.க தலைவர் பேசுமளவுக்குத்தான் அவர்கள் எண்ணிக்கையும், அரசியல் பலமும் உள்ளது. முஸ்லிம்கள் கணிசமாக உள்ள உத்தரப்பிரதேசத்திலேயே அதன் முதல்வர் யோகி ஆதித்யநாத் தேர்தல் 20% மக்களுக்கும், 80% மக்களுக்கும் இடையிலான போட்டி என்று கடந்த முறை முஸ்லிம்களின் சிறுபான்மை எண்ணிக்கையைச் சுட்டிக்காட்டி பேசினார்.  

இந்த முஸ்லிம் எதிர் மன நிலையை வலுப்படுத்த ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்று பாகிஸ்தானியர்கள் விரும்புவதாக மோடி பேசியுள்ளார். பாகிஸ்தான் இந்தியாவின் அண்டை நாடு அல்ல, எதிரி நாடு என்ற கருத்தில் தேர்தலில் எதிர் அணியினரை அந்த எதிரி நாட்டுடன் இணைத்துப் பேசுவதன் மூலம் தேர்தல் களத்தை போர்க்களமாக உருவகிக்கிறார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக புல்வாமா என்ற இடத்தில் தீவிரவாதிகள் தாக்கியதில் ராணுவத்தினர் இறந்ததும், அதைத் தொடர்ந்து பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று பாலாகோட் என்ற இடத்திலிருந்த முகாமை சர்ஜிகல் ஸ்டிரைக் என்ற பெயரில் இந்திய விமானப்படை தாக்கியதும், பாரதீய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சிக்கு வருவதற்குப் பெரிதும் உதவியது.

இந்த முறை அத்தகைய சம்பவங்கள் நடக்காதது மட்டுமல்லாமல், அப்போது நடந்த புல்வாமா தாக்குதல் அரசின் அலட்சியத்தால்தான் நடந்தது என்று அன்றைய காஷ்மீர் கவர்னர் சத்யபால் மாலிக் கூறியதும் பா.ஜ.க-வின் பரபரப்பு அரசியலை சாத்தியமற்றதாகச் செய்துள்ளது. ஆனாலும் முஸ்லிம்களையும், பாகிஸ்தானையும் எதிரிகளாக சித்தரிக்காமல் தேர்தல் பிரச்சாரம் செய்வது பா.ஜ.க-வுக்கு கடினமாகவே உள்ளது. ஏன் இந்த நிலை உருவாகிறது என்பதை நாம் கவனமாக பரிசீலிக்க வேண்டும்.

இந்தியர்களின் அடையாளங்களின் பன்மைத்துவம்

இந்தியர்களின் அடையாளங்கள் அளப்பரிய பன்மை கொண்டவை. ஒரு தேசத்தின் குடிமக்கள் என்ற அளவில் இந்தியர்கள் கடந்த எழுபத்தைந்து ஆண்டுகளாக இந்த குடியரசை வெற்றிகரமாக செயல்படச் செய்துள்ளார்கள். ஆனால், அதற்காக அவர்கள் தங்களது பல்வேறு அடையாளங்களை இழக்கவில்லை. அப்படி இழக்காமல் இந்தியர்கள் என்ற பொது அடையாளத்தை ஏற்பதில் அவர்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்கவில்லை.

இது சாதாரணமாக வெகுஜன திரைப்படங்களிலேயே வலியுறுத்தப்பட்ட ஓர் உண்மைதான். அமர், அக்பர், ஆண்டனி (1977) போன்ற பெரும் வெற்றி பெற்ற திரைப்படங்கள் சகோதரர்களே வெவ்வேறு மதங்களில் வளர்வதாகக் காட்சிப்படுத்தின. அப்படி தேசத்தில் சகோதரத்துவத்தை வலியுறுத்தியதாலேயே பெரும் வெற்றிப் படங்களாயின. தமிழிலும் பல படங்கள், பாவ மன்னிப்பு (1961) போன்ற திரைப்படங்கள் மத ஒற்றுமையை வலியுறுத்துவதற்காக புகழ் பெற்றவை.

ஆனால் மதம் என்பது மட்டுமல்லாமல், வேறு பல அடையாளங்களும் மக்களுக்கு உண்டு. உதாரணமாக மொழி. ஒரு மொழியைப் பேசும் மக்கள் அனைவரும் ஜாதி, மதம் கடந்து ஒன்றுபட்டு சிந்திப்பது இயல்பு. மலையாளம், தமிழ், தெலுங்கு, வங்காளம், பஞ்சாபி என்று மொழிகள் மக்களிடையே கூட்டுறவை வளப்படுத்தும்.

இதையெல்லாம் கடந்து மக்கள் ஜாதிகளாக அடையாளங்களை ஏற்பவர்களாக இருந்தார்கள். ஏழைகளாகவும், பணக்காரர்களாகவும், படித்தவர்களாகவும், படிக்காதவர்களாகவும் இருந்தவர்கள் ஜாதி என்ற அடையாளத்தில் தனி வாழ்க்கையை, உறவு முறைகளை அமைத்துக் கொள்பவர்களாக இருந்தார்கள். ஜாதிக்குள்ளேயே பிரிவுகள் இருக்கும். பிரிவுகளுக்குள்ளேயே ஒற்றுமையும் இருக்கும்.

இப்படியாக ஒரு தனிநபருக்கு பொருளாதாரம், பணி, ஜாதி, மொழி, மதம் எனப் பல்வேறு அடையாளங்கள் இருப்பதும் அந்தந்த அடையாளங்களின் இணைத்தும் கடந்தும் சமூகம் சார்ந்த செயல்பாடுகளை மேற்கொள்வதும், அனைவரும் இந்திய குடிமக்கள் என்ற அடையாளத்தை ஏற்பதும் கடந்த எழுபத்தைந்து ஆண்டுகளின் நிதர்சனமான உண்மை என்றால் மிகையாகாது.

ஒரு விளையாட்டு அணியில், கலைக்குழுவில், பத்திரிகையில், பல்வேறு அலுவலகங்களில், தொழிற்சாலைகளில், வர்த்தக நிறுவனங்களில் பல்வேறு ஜாதி, மொழி, மத அடையாளங்களை கொண்டவர்கள் சேர்ந்து பணியாற்றுவதும் நட்பும், சகோதரத்துவமும் கொண்டு வாழ்வதும் இயல்பான செயல்பாடுகளாகவே இருந்துள்ளன. ஓர் இந்துவும், முஸ்லிமும் கவிஞர்களாக சேர்ந்து இயங்குவார்கள். இந்தி பேசுபவரும், தமிழ் பேசுபவரும் சேர்ந்து ஹாக்கி விளையாடுவார்கள். இப்படி எத்தனையோ உதாரணங்களைச் சொல்லிக்கொண்டே செல்லலாம். பகுத்தறிவுள்ள மானுட சமூகம் அப்படித்தான் இயங்கும்.

முரண்பாடுகளும், அரசியல் அணிகளும்

சமூகத்தில் நிலவும் பன்மை அடையாளங்கள் என்பது வேறு, நலன்களின் முரண்பாடுகள் என்பது வேறு. உதாரணமாக முதலாளிகளுக்கும், தொழிலாளிகளுக்கும் லாபத்தை பங்கிட்டுக் கொள்வதில் முரண்பாடு இருக்கும். உற்பத்திக்கான முதலீட்டை செய்ததால் முதலாளியும், உற்பத்திக்கான உழைப்பை செலுத்தியதால் தொழிலாளியும் லாபத்தில் பங்கு கோரும்போது, முதலாளி உழைப்புக்கு குறிப்பிட்ட ஊதியம்தான் தர முடியும் என்று கூறி அதிக லாபத்தை அடைய முயற்சி செய்யும்போது முரண்பாடு உருவாகும்.

அதே போலத்தான் நில உடைமையாளர்களுக்கும், நிலத்தில் உழுபவர்களுக்கும் முரண்பாடு தோன்றும். வர்த்தக நிறுவனங்களை நடத்துபவர்களுக்கும், அதில் பணியாற்றுபவர்களுக்கும் முரண்பாடு தோன்றும். இவையெல்லாம் பொருளாதார நலன்களை முன்வைத்த முரண்பாடுகள்.

இந்திய சமூக அமைப்பில் வேலைப்பிரிவினை என்பதையே பிறப்பின் அடிப்படையிலான பிரிவினையாக மாற்றியதுதான் ஜாதீய கட்டமைப்பு ஆகும். அண்ணல் அம்பேத்கர் கூறியபடி வேலைப்பிரிவினை என்பதை வேலை செய்பவர்களிடையேயான பிரிவினையாக மாற்றியது ஜாதீயம் (not just division labor but division of laborers).  

இதனால் இந்தியாவில் சமத்துவ சமூகம் உருவாக வேண்டுமானால், அனைவருக்கும் சம வாய்ப்பு என்ற சமூக நீதி உருவாக வேண்டுமானால், பொருளாதார ஏற்றத்தாழ்வு, சமூக ஏற்றத்தாழ்வு இரண்டையும் களைய வேண்டும் என்பது முற்போக்கு அரசியலின் அடிநாதமாக மாறியது. இயற்கையின் பொதுவான வளங்களை எந்த அளவு பகிர்ந்தளிக்கிறோம் என்பது சார்ந்த கொள்கைகளே கருத்தியல் எனப்படும். அரசியல் கட்சிகள் என்பவற்றின் கொள்கைகள் என்பவை எந்த அளவு கட்சிகள் தனியுடமைக்கோ, பொதுவுடமைக்கோ ஆதரவானவை என்பதைப் பொறுத்துதான் அமையும். இது புரியாதவர்கள்தான், கொள்கை என்னவென்று கேட்டாலே தலைசுற்றுவதாகக் கூறுபவர்கள்.

இடதுசாரி அரசியல் அல்லது சோஷலிசம் என்பது கூடியவரை தனியுடமையைக் கட்டுப்படுத்தி, முதலாளிகளுக்கு அதிக வரி விதித்து நலன்களை பொதுவாக அனைவருக்கும் பங்கிட வேண்டும், பொதுத்துறை சார்ந்த நிறுவனங்கள், தொழில்களை அதிகரிக்க வேண்டும் என்று நினைக்கும் தன்மையானது ஆகும். வலதுசாரி அரசியல் அல்லது கேப்பிடலிஸம் என்பது தனியார் முதலாளிகளை ஊக்குவித்து அதன் மூலம் பொருளாதாரத்தை வளர்க்க வேண்டும் என்று முயற்சி செய்வதாகும்.

இந்தியா போன்ற தேர்தல், வெகுஜன அரசியல், பிரதிநிதித்துவ மக்களாட்சி சார்ந்த நாட்டில் கலப்பு பொருளாதாரம் நிலவுவது போலவே கட்சிகளிடையேயும் கருத்தியல் கலவைகள், தேர்தல் கூட்டணிகள் ஏற்படுவது இயல்பு. பல்வேறு சமூக தொகுதிகளின் நலன்களுக்கிடையே தொடர்ந்து பேரம் இருக்கும். அவை பல்வேறு அரசியல் அணிகளிலும், முரண்களிலும் வெளிப்படும்.

மத அடையாளத்தை வைத்து அரசியல் செய்ய முடியுமா?

குறைந்த எண்ணிக்கையில் உள்ள மதத்தினருக்கு அவர்கள் சிறுபான்மை நிலை சார்ந்து அரசியல் அச்சம் உருவாகும் வாய்ப்பு இருக்கிறது. உதாரணமாக முஸ்லிம் மக்கள் தொகை 15% என்று வைத்துக்கொள்ளுங்கள். அப்போது 85% ஆக உள்ள பெரும்பான்மை இந்துக்கள் தங்கள் உரிமைகளைப் பறிப்பார்களோ, தங்கள் வாழ்க்கை முறையில் தலையிடுவார்களோ என்ற அச்சம் ஏற்படும். அப்போது அவர்கள் ஜாதி அடையாளக் கட்சிகள் போல, மத அடையாளக் கட்சிகளை உருவாக்கிக் கொள்வது இயல்பு.

ஆனால், பெரும்பான்மை மத அடையாளம் என்று ஒன்று இருந்தால் அதற்கு சிறுபான்மை மத அடையாளத்தால் நெருக்கடி ஏற்படுவது கடினம். மேலும், பெரும்பான்மை மத அடையாளத்தினுள் பொருளாதார, சமூக முரண்பாடுகள் இருக்கும் என்பதால் அதனை ஒற்றை மத அடையாளத்தினுள் அணி திரட்டுவது கடினம்.

இந்து மதத்தில் குறிப்பாக ஆதிக்க சாதிகள், பார்ப்பனர்கள், அவர்களுக்கு அடுத்த நிலையில் இருந்த நிலவுடமை ஜாதிகள் ஆகியவை, முன்பு சூத்திரர்கள் என்று அறியப்பட்ட பிற்படுத்த சமூகத்தினரையும், வர்ணமற்றவர்களாகவும், தீண்டப்படாதோராகவும் இருந்த தலித் சமூகத்தினரையும் பல்வேறு விதங்களில் ஒடுக்குபவர்களாகவும், சுரண்டுபவர்களாகவும் இருந்துள்ளனர் என்பதால் சுதந்திர இந்திய அரசியலில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் நலன் சார்ந்த அரசியல் என்பது முக்கியத்துவம் பெற்றது. குறிப்பாக கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீடு சார்ந்த அரசியலாக இது கூர்மை பெற்றது.

மேலும், மதம் என்ற அளவிலேயே இந்து மதத்தில் பல பிரிவுகள் உண்டு. உதாரணமாக பார்ப்பனர்களிடையே சைவமும், வைணவமும் இரு பெரும் பிரிவுகள். தமிழ்நாட்டில் வைணவர்களுக்குள் வடகலை, தென்கலை என்ற பிரிவுகளுக்கிடையே கடும் சச்சரவும் கோயில்களை நிர்வகிப்பதில் பெரும் போராட்டமும் உண்டு. கர்நாடகாவில் லிங்காயத்துகள் என்ற தனித்த பிரிவினர் உண்டு. இப்படி ஒவ்வொரு பிரதேசத்திலும் பல தனித்த அடையாளங்கள் கொண்ட பிரிவுகளைக் கொண்டதுதான் பொதுவாக இந்து மதம் என்று நிர்வாக வசதிக்காக அழைக்கப்படுகிறது.

இந்துத்துவம் என்ற இந்து அரசியல் அடையாளம்

பாரதீய ஜனதா கட்சியின் பிரச்சினை என்னவென்றால் அது நாடு முழுவதும் உள்ள கிட்டத்தட்ட நூற்றுப் பத்து, நூற்று இருபது கோடி இந்துக்களையும் ஒரே அரசியல் அடையாளமாக்கிவிட்டால், அவர்கள் ஆதரிக்கும் அரசியல் கட்சியாக நாம் மாறிவிட்டால் பின்னர் நம்மை யாரும் வெல்ல முடியாது என்று நினைக்கிறது.

இந்தக் கட்சியினை உருவாக்கிய இந்துமகா சபை, ராஷ்டிரிய சுயம் சேவக் சங் போன்ற அமைப்புகள் பழைய மன்னர் கால மனப்பான்மை கொண்டவை. அப்போது இந்து மன்னர்கள், முஸ்லிம் மன்னர்கள் எனப் பிரிந்து இருந்தார்கள். போரிட்டுக் கொண்டார்கள். இந்து – முஸ்லிம் மன்னர்கள் கூட்டணி அமைத்து போரிட்ட சந்தர்ப்பங்களும் உண்டு என்றாலும், அந்தந்த மன்னர்கள் மதம் சார்ந்தவர்களாகவே இருப்பார்கள். அதே போலவே நவீன அரசும் ஒற்றை மத அடையாளம் கொண்டதாக இருக்க வேண்டும் என்ற மனப்பான்மை கொண்ட அமைப்புகள் இவை. அதனால்தான் ராகுல் காந்தி இந்து மன்னர்களை இழிவுபடுத்துவதாக பிரதமர் பேசுகிறார். என்றோ வாழ்ந்த ஒளரங்கசீப்பை ஆதரிப்பவர்களுடன் காங்கிரஸ் கூட்டணி வைப்பதாகக் கூறுகிறார்.

முஸ்லிம்கள் பாகிஸ்தான் என்ற தனி நாட்டை ஆங்கிலேயர்களின் ஆதரவுடன் கோரிப் பெற்றதால், இந்தியா இந்து ராஷ்டிரமாக இருக்க வேண்டும், குடிமக்களாக இந்துக்களுக்கு தனித்த உரிமைகள் இருக்க வேண்டும் என்றெல்லாம் நினைக்கும் பழக்கம் உள்ளவர்கள் இந்துத்துவர்கள். அதனால் தொடர்ந்து முஸ்லிம்கள் குறித்தும், பாகிஸ்தான் குறித்தும் ஒரு விரோத பாவத்தை பிரச்சாரம் செய்வார்கள். அதில் முக்கியமான ஒன்று மக்கள் தொகையில் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அவர்கள் பெரும்பான்மையாகி நாட்டைக் கட்டுப்படுத்துவார்கள் என்ற முற்றிலும் உண்மைக்கு மாறான அபாண்டமான வதந்தியாகும்.

சுருங்கச் சொன்னால் இந்துக்களை ஒரே அரசியல் அணியாக்க நேர்மறையான காரணங்களை சொல்வது சாத்தியமில்லை. ஏனென்றால் அப்படி ஓர் ஒற்றை மக்கள் தொகுதியே எதார்த்தத்தில் இல்லை. எல்லா இந்துக்களுக்கும் நன்மையினை தரும் திட்டம் என்று எதையும் செயல்படுத்த முடியாது. உயர்ஜாதி ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு அளித்தால் அது பிற்படுத்தப்பட்டோரின் ஆதரவைப் பெற முடியாது. லிங்காயத்துக்களுக்கு அரசியல் அதிகாரத்தில் முக்கியத்துவம் அளித்தால், அது பிற பிரிவினருக்கு உகந்ததாக இருக்காது.

இதற்கு மாற்றான உதாரணங்களைப் பார்ப்போம். திராவிட முன்னேற்றக் கழகம் இந்தி திணிப்புக்கு எதிராகவும், பார்ப்பனரல்லாதோர் நலன்களுக்காகவும் உருவானது என்பதால் திராவிட-தமிழர் என்ற மக்கள் தொகுதியைக் கட்டமைத்தது. அதன் அடிப்படையில் மாநில நலன், தமிழ் மொழி வளர்ச்சி, சமூக நீதி, இட ஒதுக்கீடு என்ற பல நன்மைகளை அதனால் செயல்படுத்திக் காட்ட இயல்கிறது. அது வளர்ச்சியில் அனைவரையும் உள்ளடக்க முயற்சி செய்வதால் பரந்துபட்ட மக்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்துகிறது.

அப்படிப் பார்த்தால் தங்களுக்குள் முரண்பாடு கொண்ட இந்தியாவின் அனைத்து இந்துக்களையும் நேர்மறையாக ஒரே அரசியல் தொகுதியாக்குவது சாத்தியமில்லை. அதனால் முஸ்லிம்களை எதிரிகளாக கட்டமைத்தால்தான் இந்து அடையாளம் என்ற ஒன்றைப் பேச முடியும். அதனால் பிரதமரே வெறுப்பரசியல் பேச்சுகளைப் பேச வேண்டியுள்ளது.

இன்னும் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டுமென்றால், அயோத்தி பிரச்சினையையே எடுத்துக் கொள்ளலாம். பாபர் மசூதி இருந்த இடம்தான் ராம ஜென்ம பூமி என்று பிரச்சாரம் செய்யும் வரை அதற்கு அரசியல் மதிப்பு இருந்தது. கர சேவை, ரத யாத்திரை என்று அணி திரட்ட முடிந்தது. அதை இடித்த போதும்கூட ஒரு வெற்றியாகக் காட்ட முடிந்தது. ஆனால், அந்த இடத்தில் ராமருக்கு கோயில் கட்டியதால் எந்த அரசியல் அணியாக்கத்தையும் செய்ய முடியவில்லை. ஏனெனில் இந்து மதத்தில் ராமர்தான் ஒரே கடவுள் என்று கிடையாது. எத்தனையோ கிராம, உள்ளூர் தெய்வங்கள் நிறைந்தது இந்து மதம். நாடெங்கும் கோயில்கள்தான். புனிதத்தலங்கள்தான்.

இதுதான் பிரதமரின், பா.ஜ.க-வின் பிரச்சினை. அவர்களுடைய இந்துத்துவத்தின், இந்து அடையாளத்தின் சாராம்சம் எதிர்மறையானது. அது முஸ்லிம் எதிர்ப்புதான்; வெறுப்பரசியல்தான். இந்து என்ற அரசியல் அடையாளத்திற்கு நேர்மறையான சாராம்சத்தையோ, மக்கள் நலனையோ கற்பிக்க முடியாது.

ஆனால், அரசியல் அடையாளமாக இல்லாமல், ஒரு பண்பாடாகக் கருதும்போது காந்தியைப் போல, கபீர்தாஸ் போல இந்து ஆன்மிகத்தையும், முஸ்லிம் ஆன்மிகத்தையும், கிறிஸ்துவ ஆன்மிகத்தையும் இணைத்து இந்தியாவை உண்மையிலேயே ஒன்றுபட்ட குடியரசாக, மக்கள் நலனில் சிறந்த குடியரசாக, அனைவரையும் உள்ளடக்கிய குடியரசாக மாற்றாமல் இந்தியா கூட்டணி முன்வைக்கும் இந்த பன்முகப் பார்வையை பா.ஜ.க-வால் ஏற்க முடியாமல் அது பழைய வெறுப்பிலும், விரோதத்திலும் கட்டுண்டு இருப்பதே இன்றைய சிக்கல்.    

Tags:

Leave a Reply