மோடியின் நாசகாரப் பேச்சு! நடு நிலை தவறும் தேர்தல் ஆணையம்!

-ஹரி பரந்தாமன்

க்கிரமமான பேச்சுக்கள்! பொய், வெறுப்பு, பித்தலாட்டம் செய்யும் பிரதமர்! தொடர்ந்து நடுநிலை தவறி செயல்பட்டுக் கொண்டிருக்கும் தேர்தல் ஆணையம். குஜராத்தின் சூரத்திலோ எதிர்த்து போட்டியிட்ட எல்லோரையும் விலைபேசி, தேர்தலுக்கு முன்பே தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ஜ.க எம்.பி..? என்ன தான் நடக்கிறது நாட்டில்..? – ஹரி பரந்தாமன்.

ராஜஸ்தானில் பிரதமர் மோடி பேசிய வன்ம பேச்சு விவாத பொருளாக ஆகி உள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தின் பன்ஸ்வாடாவில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய  பிரதமர் மோடி, நிதானமின்றி, தன் உள்ளத்தின் அடி ஆழத்தில் உறைந்திருக்கும் வெறுப்பு அரசியலை  வெளிப்படுத்தி உள்ளார்.

மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது இந்த நாட்டின் சொத்துகளில் முதன்மை உரிமை முஸ்லிம்களுக்குத்தான் உள்ளது என்று சொன்னாராம்! இப்படி கதைவிட்டுள்ள மோடி, இதற்கு விளக்க உரையும் நல்கியுள்ளார்!

”இதற்கு அர்த்தம் என்ன? காங்கிரஸ் யாருக்கு சொத்துகளை பிரித்துக் கொடுப்பார்கள்?

யார் அதிகமான குழந்தைகளைப் பெற்றுக் கொண்டிருக்கிறார்களோ, யார் இந்த நாட்டின் மீது படையெடுத்து ஆக்கிரமித்தார்களோ அவர்களுக்கு சொத்துகளை பிரித்துக் கொடுப்பார்கள்;

நீங்கள் கடினமாக உழைத்து ஈட்டிய பணத்தையெல்லாம் ஆக்கிரமிப்பாளர்களுக்கு தருவதை ஏற்றுக் கொள்கிறீர்களா? வேடிக்கை பார்க்கப் போகிறீர்களா?

இந்த நகர்ப்புற நக்சல்கள், நமது தாய்மார்களின், சகோதரிகளின் தாலிக் கொடிகளில் உள்ள தங்கத்தைக் கூட விட்டு வைக்கமாட்டார்கள். அவற்றையும் பறித்து முஸ்லிம்களுக்கு தந்து விடுவார்கள்…”

என்றெல்லாம் மிகவும் கொந்தளிப்பாக பேசியிருக்கிறார்.

2006 ஆம் ஆண்டில் தேசிய வளர்ச்சி குழுவில் அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் உண்மையில் பேசியது இது தான்;

“நமது கூட்டு முன்னுரிமைகள் மிகத் தெளிவாக உள்ளன. விவசாயம், நீர்வளங்கள், கல்வி, கிராமப்புற முதலீடுகள். ஆகியவற்றுடன் தலித், பழங்குடி, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மக்கள் மற்றும் பெண்கள், குழந்தைகளின் நலன்களே நமது முன்னுரிமை. வளர்ச்சியின் பலன்கள் சிறுபான்மை மக்களுக்கும் சேரும் வகையில் பொருத்தமான முறையில் திட்டங்கள் தீட்டப்பட வேண்டும். இவர்கள் நமது வளங்களில் முன்னுரிமை பெறுகின்றனர்”  என்று தான் பேசி இருக்கிறார்.

அன்று  மன்மோகன் சிங் பேசியதைத் தான் தற்போது இப்படி திரித்துக்கூறியுள்ளார் மோடி. நாட்டின் வளர்ச்சியின் பயன்கள் அனைத்து பிரிவினருக்கும் சேர வேண்டும். இந்தியாவின் வளங்களில் இந்த எளியோருக்கே முன்னுரிமை உண்டு என்று தான் மன்மோகன் சிங் பேசி இருக்கிறார்.

ஆனால், இந்தியாவின் அனைத்து வளங்களிலும் இஸ்லாமியருக்கே முன்னுரிமை இருக்கும் என்று மன்மோகன் சிங் பேசியதாக  அவரது பேச்சை திரித்து முழு பொய்யை பேசியுள்ளார் மோடி.

இப்படி தொடர்ந்து அவர் மதத்தை மையமாக வைத்து தேர்தல் பிரச்சாரம் செய்தாலும் தேர்தல் ஆணையம் கண்டு கொள்ளவில்லை. தேர்தல் ஆணையத்தின் மூன்று ஆணையர்களும் இந்த அக்கிரம பேச்சை கண்டிக்கவில்லை. எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பிரதமரின் இச் செயல் சட்ட விரோதமானது. மக்கள்  பிரதிநிதித்துவ சட்டத்திற்கு விரோதமானது. இந்திய தண்டனைச் சட்டத்தின் படி அவரது பேச்சு – இரு மதப் பிரிவினர் இடையே பகைமையை உண்டாக்கும் அவரது பேச்சு – குற்றச் செயலாகும். இதை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று தண்டிக்க முடியும்.

இதனால் தான் பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையாகி உள்ளது. ”பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்தும் இது வரை நடவடிக்கை இல்லை. அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது. புகார் அளித்த பின்  அந்த குழுவில் இருந்த அபிஷேக் சிங்வி  ஊடகங்களிடம் பேசினார். ”இந்த புகாரின் மீது தேர்தல் ஆணையம் எடுக்கும் நடவடிக்கையை பொறுத்தே தேர்தல் ஆணையம் நடுநிலையுடன் செயல்படுகிறதா என்பதை தீர்மானிக்க இயலும்” என்றார்.

காங்கிரஸின் அகில இந்திய தலைவர் மல்லிகாஜுன கார்கே, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் காங்கிரஸ் இயக்கத்தின் தலைவர்களின் ஒருவரான வேணுகோபால் ஆகியோர் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் சொல்லாததை எல்லாம் எவ்வாறு பொய்யாக மோடி பேசி உள்ளார்  என்பதை விவரமாக ஊடகங்களிடம்  கூறியுள்ளனர். மேலும் 2006 இல் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் பேசியதை திரித்து, மதவாத அரசியலை -குறிப்பாக வெறுப்பு அரசியலை – மோடி பேசி உள்ளார் என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

இது சம்பந்தமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய செயலாளர் சீதாராம் எச்சூரி அவர்களும் தேர்தல் ஆணையத்துக்கு புகார் செய்துள்ளார் .மேலும், அக்கட்சியின்  பொலிட்பீரோ உறுப்பினர்  பிருந்தா காரத் டெல்லியில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மற்ற அரசியல் கட்சிகளும் மோடியின் மதவாத வெறுப்பு அரசியல் பேச்சை கண்டனம் செய்துள்ளன.

பிரதமர் மோடியிடமும், பா.ஜ.க விடவும் வெறுப்பு அரசியலை தவிர்த்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும் என்ற கேள்வியை பொருளாதார நிபுணர் பரகால பிரபாகர் எழுப்பியுள்ளார்? அவர் சமீபத்தில் சென்னையில் பேசிய ஒரு கூட்டத்தில், ”மோடியின் அமைச்சரவையில் ஒரு இஸ்லாமியர் கூட இல்லை. மேலும், பா.ஜ.க ஆட்சி செய்யும் குஜராத்திலும், உத்தரப்பிரதேசத்திலும் அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக இஸ்லாமியர் எவரும் இல்லை. இந்த மாநிலங்களில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் இஸ்லாமியர் எவரும் பா.ஜ.கவின் சார்பில் வேட்பாளராகவே கூட நிறுத்தப்படவில்லை” என்பதை எல்லாம் சுட்டிக்காட்டினார்.

மோடியின் பத்தாண்டு கால ஆட்சியில் மக்கள் தொகையில் 1%  பேர்  22% தேசிய வருமானத்தை பெறுவதும், மக்கள் தொகையில் 1%  பேர் இந்திய சொத்து  மதிப்பில் 44% சொத்து மதிப்பை வைத்துள்ள நிலையும் இருப்பதாக சுட்டிக்காட்டினார் பரகலப்பிரபாக்கர். எனவே, பட்டியலினத்தவரும் பழங்குடியினரும், பிற்படுத்தப்பட்டவர்களும், சிறுபான்மையினரும், பெண்களும் குழந்தைகளும் நாட்டின் வளர்ச்சியில் பெரும்பங்கு  வகிக்க வேண்டும் என்ற மன்மோகன் சிங்கின் பேச்சை திரித்துப் பேசாமல் எப்படி இருப்பார் மோடி.?

மேலும், பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு பல்வேறு கட்சித் தலைவர்களும், பல தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் ஆணையத்துக்கு காங்கிரஸ் தரப்பில் மட்டுமின்றி பல தரப்பில் இருந்தும் புகார் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால், தேர்தல் ஆணையம் நடுநிலையுடன் செயல்படும் என்ற எண்ணம் பொதுவாக இல்லை.

தமிழக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடி பேசியதை பகிர்ந்து, “தேர்தல் ஆணையத்துக்கு இரங்கல்” என்று சூசகமாக பதிவிட்டுள்ளார்.

பொதுவாக கிராம பஞ்சாயத்து நகராட்சி மற்றும் மாநகராட்சிகளின்  வார்டுகளுக்கான தேர்தலில் கூட எவரும் போட்டியின்றி வெற்றி பெறுவது அரிதிலும் அரிது. ஆனால், குஜராத் மாநிலத்தில் சூரத் பாராளுமன்ற தொகுதியில் எந்த போட்டியும் இன்றி பா.ஜ.கவின் வேட்பாளர்  முகேஷ் தலால் வெற்றி பெற்றதாக  சான்றிதழை மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அதிகாரியும் அவருக்கு வழங்கியுள்ளனர்.

அந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ் குர்பானியின் வேட்பு மனுவும், அவருக்கு டம்மியாக காங்கிரஸ் தரப்பிலானவரின் வேட்பு  மனுவும் நிராகரிக்கப்பட்டதாலேயே பா.ஜ.க வேட்பாளரின் வெற்றி  சாத்தியமானது. அந்த வேட்பு மனுக்களை முன்மொழிந்தவர்கள், அவர்களின் கையொப்பங்களை  போடவில்லை என்று தேர்தல் அதிகாரியின் முன் அபிடவிட் தாக்கல் செய்த காங்கிரஸ் வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

அதுமட்டுமின்றி, பகுஜன் சமாஜ் கட்சி உட்பட நான்கு கட்சிகளின் வேட்பாளர்களும் அவர்களின் வேட்பு மனுக்களை திரும்பப் பெற்றனர்!.  சுயேச்சைகள் 4 பேரும் கூட வேட்டுமனுக்களை திரும்ப பெற்றனர்!.

எதிர்க்கட்சியின் சட்டசபை உறுப்பினர்களையும் பாராளுமன்ற உறுப்பினர்களையும் விலை கொடுத்து வாங்குவது பா.ஜ.கவின் கடந்த பத்தாண்டு கால ஆட்சியில் சர்வ சாதாரணமான நிகழ்வாக இருந்தது.

சூரத்தில் தேர்தலுக்கு முன்னரே  குதிரை பேரம் நடந்திருக்கலாம் என்பது பொதுவான கருத்து. இல்லையென்றால் போட்டியிலிருந்து எட்டு நபர்கள் விலகுவார்களா என்பதை சிந்தித்தாலே உண்மை விளங்கும். காங்கிரஸ் வேட்பாளர்களின் வேட்பு மனுக்களை முன்மொழிந்தவர்கள் அடித்த அந்தர்பல்டிக்கு பின்னால் என்ன நடந்தது என்பதை எவரும் யூகித்து அறியலாம்.

அதாவது, ‘அறமற்ற வழியில் தேர்தலில் வெற்றி பெற பா.ஜ.க தயங்காது’ என்பதற்கான சான்றாகவே சூரத் நிகழ்வை பார்க்கலாம்.

தமிழ்நாட்டை எடுத்துக் கொள்ளுங்கள். பா.ஜ.க அணியில் போட்டியிட்ட பா.ம.கவிற்கு  மாம்பழம் சின்னம், டிடிவி தினகரனின்  அ.ம.முகவிற்கு குக்கர் சின்னம், வாசனின் தமாகா விற்கு சைக்கிள் சின்னம் என்று சின்னங்களை ஒதுக்கிய தேர்தல் ஆணையம், தி.மு.க தலைமையிலான எதிர் அணியில் இருந்த ம.தி.மு.க விற்கு பம்பரம் சின்னத்தையும்  விசிக-வினருக்கு பானை சின்னத்தையும் ஒதுக்கவில்லை. தனித்துப் போட்டியிட்ட சீமானின் நாம் தமிழர் கட்சிக்கும் விவசாயி சின்னத்தை ஒதுக்கவில்லை தேர்தல் ஆணையம்.

தேர்தல் ஆணையம் பானை சின்னம் அளிக்க மறுத்தாலும், விசிக – வின் திருமாவளவன் போட்டியிட்ட சிதம்பரத்தில் வேறு எந்த வேட்பாளரும் பானை சின்னத்தை கேட்காததால் அவருக்கு பானை சின்னம் கிடைத்தது. அதேபோல, விசிக சார்பில் விழுப்புரத்தில்  ரவி குமாருக்கும் பானை சின்னம் கிடைத்தது. மதிமுகவும், விசிக-வும் நீதிமன்றம் சென்றும் அவர்களுக்கான சின்னத்தை தேர்தல் ஆணையம் மூலம் பெற இயலவில்லை.

தேர்தல் ஆணையம் நடுநிலைமையுடன் செயல்படுகிறதா? என்பதற்கு மேற் சொன்ன நிகழ்வு உரிய பதிலாக அமையும்.

வெறுப்பு அரசியலை தொடர்ந்து பிரதமர் மோடி பா.ஜ.கவின் தேர்தல் பிரச்சார மேடைகளில் பேசி வந்தாலும் அவர் பேரில் எந்த நடவடிக்கையும் எடுக்க தேர்தல் ஆணையம் முன் வரவில்லை. எனவே, அவர் வெறுப்பரசியலை தொடர்ந்து பேசி வருகிறார்.

தமிழ்நாட்டில் சேலம் நகரில் 18.3.2024 அன்று தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய மோடி, காங்கிரசும் தி.மு.கவும்  இந்துமதத்தை அவமரியாதை செய்வதாகவும், ஆனால் மற்ற மதங்கள் விவகாரங்களில் வாய்மூடி இருப்பதாகவும் வெறுப்பரசியலைப் பேசினார்.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை, ”முஸ்லிம் லீக் தேர்தல் அறிக்கை” என்று பேசினார் மோடி.

”பா.ஜ.கவிற்கு எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸ் அயோத்தி ராமருக்கும் எதிராக இருப்பது ஏன்?’’ என்று மதவாத வெறுப்பரசியலை தொடர்ந்து பேசினார் மோடி அவர்கள் .அதாவது பாபர் மசூதியை இடித்த இடத்தில் ராமர் கோயில் கட்டி அரசியல் செய்த பா.ஜ.கவின் செயலுக்கு காங்கிரஸ் ஆதரவு தராததையே ராமருக்கு  எதிரானவர்களாக காங்கிரசை சித்தரித்து மதத்தை மையமாக வைத்து தேர்தல் பிரச்சாரம் செய்கிறார் பிரதமர் மோடி.

நாடாளுமன்றத்துக்கான ஏழு கட்ட தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தவுடன் மாடல் கோட் ஆப் கான்டக்ட்  (model code of conduct) அமுலுக்கு வந்தது. அதன்படி அனைத்து  மாநிலங்களின் மாவட்ட ஆட்சியர்கள் உட்பட அனைத்து மாநில அரசு இயந்திரங்களும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. தேர்தல் ஆணையம் பல அதிகாரிகளை -மாவட்ட ஆட்சியர்களையும் காவல்துறைய அதிகாரிகளையும்- மாற்றல் செய்து உத்தரவிட்டது.

ஆனால் ஒன்றிய அரசின் அமைப்புகளான வருமான வரித்துறை அமுலாக்கத்துறை சி.பி.ஐ ஆகிய அமைப்புகளை கட்டுக்குள் வைக்க தேர்தல் ஆணையம் தவறிவிட்டது . இந்த அமைப்புகள் எதிர்க்கட்சியினரை  தேர்தல் நேரத்திலும் வேட்டையாடுகிறது என்பதும் குறிப்பாக  டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதும் இதை தெளிவாக்கும் தேர்தல் ஆணையம் -மோடி அரசால் நியமிக்கப்பட்ட மூன்று தேர்தல் ஆணையர்கள் – நடுநிலையுடன் செயல்பட்டு ஜனநாயகத்தின் மீது இந்திய மக்களுக்கு நம்பிக்கை வரும் வகையில் நடப்பார்களா..? என்பது கேள்விக் குறியே!

Tags:

Leave a Reply