தேர்தல் பத்திரங்கள் இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிரானது

-விவேகானந்தன்

தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கில் ஒரு மிக முக்கியமான தீர்ப்பினை உச்ச நீதிமன்றம் 15.02.204 அன்று வழங்கியுள்ளது.

தேர்தல் பத்திரங்கள் இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு ஒருமித்த குரலில் தீர்ப்பினை பதிவு செய்துள்ளது.

இந்த தீர்ப்பின் முக்கிய விவரங்களை தெரிந்து கொள்வதற்கு முன்பு தேர்தல் பத்திரங்கள் என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்வது முக்கியம்.

தேர்தல் பத்திரங்கள் என்றால் என்ன?

தேர்தல் பத்திரங்கள் என்பவை அரசியல் கட்சிக்கு நிதி அளிக்கக் கூடிய ஒரு வகையான வழிமுறையாகும். இந்த நிதி பத்திரங்கள் பாரத ஸ்டேட் வங்கிகளில் வழங்கப்பட்டு வந்தது.

1000 ரூபாய் தொடங்கி 10000 ரூபாய், 1 இலட்சம் ரூபாய், 10 லட்சம் ரூபாய் மற்றும் 1 கோடி ரூபாய் என்று பல மதிப்பிலான தேர்தல் பத்திரங்கள் உள்ளன. இந்த தேர்தல் பத்திரங்களை ஒரு தனிநபரோ அல்லது நிறுவனமோ எஸ்.பி.ஐ (State Bank of India) வங்கியில் பணம் செலுத்தி வாங்கிக் கொண்டு அதனை அரசியல் கட்சிகளுக்கு தனது அடையாளம் இல்லாமலேயே வழங்க முடியும்.

அதாவது ஒரு கட்சிக்கு தேர்தல் பத்திரத்தை வழங்குபவர் யார் என்ற விவரம் தேர்தல் ஆணையத்திற்கோ, மக்களுக்கோ தெரிவதற்கான வழி இல்லை.

பாரதிய ஜனதாக்கட்சி அரசு செய்த சட்டத்திருத்தம்

அடையாளம் தெரியாத வகையில் கோடிக்கணக்கான பணத்தினை கட்சிகளுக்கு கொடுக்க வழிவகை செய்யும் இந்த திட்டமானது பாரதிய ஜனதாக்கட்சி அரசாங்கத்தினால் கடந்த 2017 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டு 2018 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது.

அப்போது பெருநிறுவனங்கள் தங்களுடைய மூன்று ஆண்டு இலாபத்தின் சராசரியில் 7.5% சதவீதத்திற்கு மேல் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்க முடியாது என்று இருந்த வரம்பும் நீக்கப்பட்டது.

பா.ஜ.க அரசு தேர்தல் பத்திரங்களை அறிமுகப்படுத்தியபோதே இதனால் பல பிரச்சினைகள் ஏற்படும் என்று ரிசர்வ் வங்கி மற்றும் தேர்தல் ஆணையம் எதிர்ப்பு தெரிவித்தன.

குறிப்பாக இதில் வெளிப்படைத்தன்மை இல்லாததால் வெளிநாடுகளில் உள்ள ஷெல் கம்பெனிகள் மூலம் கட்சிகளுக்கு மறைமுகமாக பணம் கொடுக்கப்பட்டு நிதி முறைகேடு நடைபெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

ஆனால் பா.ஜ.க அரசின் சார்பில் நிதி அமைச்சராக இருந்த அருண் ஜெட்லி ரிசர்வ் வங்கி மற்றும் தேர்தல் ஆணையத்தின் கருத்துகளை மறுத்து இத்திட்டம் கருப்புப் பணத்தை ஒழிக்கும் நடவடிக்கை என்று வாதிட்டார்.

தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிக நிதி பெற்ற பாரதிய ஜனதாக்கட்சி

தேர்தல் பத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட 2018 ஆம் ஆண்டின் காலத்திலிருந்து 2022 ஆம் ஆண்டு வரையிலான 5 ஆண்டு காலக்கட்டத்தில் அரசியல் கட்சிகள் அனைத்து வகையான நன்கொடைகள் மூலமாகப் பெற்ற தங்கள் வருமானமாக கணக்கில் காண்பித்தது 16,437 கோடி ரூபாய்.

அவற்றில் தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்ற பணம் மட்டும் 9,188 கோடி எனும் மிக முக்கியமான தகவலை தேர்தல் பத்திரங்கள் குறித்த ஆய்வை மேற்கொள்ளும் ADR (Association for Democratic Reforms) எனும் நிறுவனம் வெளிக்கொண்டு வந்தது.

அதாவது இந்தியாவின் கட்சிகளுக்கு பெறப்பட்ட மொத்த நன்கொடையில் 56% சதவீத பணம் மறைமுகமான முறையில் அடையாளம் இல்லாத தேர்தல் பத்திரங்கள் மூலம் பெறப்பட்டுள்ளது.

இந்தியாவின் கட்சிகளிலேயே தேர்தல் பத்திரங்கள் மூலம் அடையாளம் இல்லாத மறைமுக நன்கொடையினை சட்டப்பூர்வமாக அதிகம் வாங்கிக் குவித்த கட்சியாக பா.ஜ.க இருக்கிறது.

2018 துவங்கி 2022 வரையிலான கடந்த 5 ஆண்டு காலத்தில் பா.ஜ.க அனைத்து வகையான நன்கொடைகள் மூலம் பெற்ற மொத்த பணமானது 10,122 கோடி ரூபாய். அதில் தேர்தல் பத்திரங்கள் மூலம் மட்டும் பெற்ற பணமானது 5271 கோடி ரூபாய் ஆகும்.

அதாவது பா.ஜ.க பெற்ற மொத்த நன்கொடையில் பாதிக்கும் மேல் 52% சதவீத பணம் என்பது அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து பெறப்பட்டதாகும். அதாவது இவ்வளவு பணத்தை பா.ஜ.கவிற்கு யார் கொடுத்தார்கள் என்பது இந்தியாவில் யாருக்குமே தெரியாது.

அதேபோல், கட்சிகள் வாரியாக பார்த்தோமென்றால் இந்தியாவில் உள்ள அனைத்து தேசிய மற்றும் மாநில கட்சிகளும் சேர்ந்து தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்ற பணத்தை விட பா.ஜ.க என்ற ஒரே கட்சி பெற்ற பணம் அதிகமானதாகும். அனைத்து கட்சிகளும் சேர்ந்து பெற்ற 9,188 கோடி ரூபாய் பணத்தில் பாஜக மட்டும் 5271 கோடி ரூபாயைப் பெற்றுள்ளது.

முக்கிய கட்சிகள் பெற்ற நிதி

தேர்தல் பத்திரங்கள் மூலம் 2017-18 நிதி ஆண்டிலிருந்து 2021-22 வரை தேர்தல் பத்திரங்கள் மூலம் கட்சிகள் பெற்ற நிதி விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பா.ஜ.க – 5271 கோடி
காங்கிரஸ் – 952 கோடி
திரிணாமுல் காங்கிரஸ் – 767 கோடி
பிஜூ ஜனதா தளம் – 622 கோடி
திமுக – 431 கோடி
பி.ஆர்.எஸ் – 383 கோடி
ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் – 330 கோடி

இந்தியாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPM) தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி பெற மாட்டோம் என்று வெளிப்படையாகவே அறிவித்து, அதற்கு எதிராக வழக்கு தொடரவும் செய்தது. ADR அமைப்பும், சி.பி.எம் (CPM) கட்சியும் இணைந்து நடத்திய வழக்கில்தான் தற்போது தீர்ப்பினை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது.

மேலே குறிப்பிட்ட விவரங்கள் 2022 வரையிலான தகவல்கள். அதன்பிறகு கடந்த 2022-23 ஒரு ஆண்டில் மட்டும் பார்க்கும்போது பா.ஜ.க 1294 கோடி ரூபாயினை பெற்றுள்ளது. அதற்கு அடுத்து பிரதான எதிர்கட்சியாக இருக்கக் கூடிய காங்கிரஸ் கட்சி 171 கோடி ரூபாயினைப் பெற்றுள்ளது.

அதாவது கடந்த ஒரு ஆண்டில் மட்டும், பிரதான எதிர்கட்சியை விட 8 மடங்கு அதிக பணத்தினை அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து ஆளுங்கட்சியான பா.ஜ.க பெற்றுள்ளது என்று தேர்தல் ஆணையத்தின் தரவுகள் மூலம் தெரிய வந்துள்ளது.

ஒரு நாட்டில் மக்களின் பிரதிநிதியாக வருவதற்கு போட்டியிடக் கூடிய அரசியல் கட்சிகளுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் பணம் யாரிடமிருந்து வருகிறது என்பதனை தெரியாமல் மறைப்பதென்பது மக்களின் தகவல் அறியும் உரிமைக்கு எதிரானது என்று தொடர்ச்சியான விமர்சனங்கள் வந்தபோதும் இத்திட்டத்தினை பா.ஜ.க அரசு தொடர்ந்து கொண்டே இருந்தது. மேலே குறிப்பிட்ட தகவல்களின் அடிப்படையில் பார்த்தால் இத்திட்டத்தினால் மறைமுகமாக நிதிபெற்று பெரும் பலனடைந்த கட்சியாக பா.ஜ.க இருந்து வந்திருக்கிறது. தற்போது இந்தியா நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள இருக்கிற சூழ்நிலையில் இந்த தீர்ப்பு வெளிவந்திருப்பது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு என்ன சொல்கிறது?

தேர்தல் பத்திரங்களுக்கு எதிரான வழக்கினை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து வந்தது. ஏற்கனவே அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் எவ்வளவு நன்கொடைகள் வந்திருக்கிறது எனும் விவரத்தினை வெளியிடச் சொல்லிக் கேட்டிருந்தது. இந்நிலையில் தேர்தல் பத்திரங்கள் எனும் நடைமுறையினை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன் முக்கிய அம்சங்களாவன.

* தேர்தல் பத்திரங்கள் நடைமுறை அரசியல் சாசனத்திற்கு எதிரானது.

* தேர்தல் பத்திரங்கள் நடைமுறையானது அரசியல் சாசனத்தின் அடிப்படை உரிமையான பிரிவு 19(1)(a)வினை மீறுவதாக உள்ளது.

* கம்பெனிகள் சட்டத்தில் அவர்களின் நன்கொடை வரம்பில் திருத்தங்களை மேற்கொண்டது அரசியல் சாசனத்திற்கு முரணானது.

* எஸ்.பி.ஐ (SBI) வங்கி தேர்தல் பத்திரங்களை விநியோகிப்பதனை நிறுத்த வேண்டும்.

* இன்னும் பணமாக மாற்றப்படாமல் தேர்தல் கட்சிகள் கையில் வைத்திருக்கும் பத்திரங்களை உடனடியாக திருப்பி அளிக்க வேண்டும்.

* மார்ச் 13, 2024 திகதிக்கு உள்ளாக தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை அளித்தவர்களின் விவரங்களை வெளியிட வேண்டும்.

இப்படிப்பட்ட தீர்ப்பினை உச்சநீதிமன்றம் அளித்துள்ளது. இதுநாள் வரையில் மறைமுகமான வழியில் பணப் பெறுதலை, ஒரு சட்டத்திருத்தத்தின் மூலமாக சட்டப்பூர்வமாக செய்துவந்த பா.ஜ.கவின் நடைமுறையானது சட்டவிரோதம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அனைத்து கட்சிகளுக்கும் இத்தீர்ப்பு பொருந்துமென்றாலும், தேர்தல் பத்திரங்கள் விவகாரத்தில் பெரும் பணத்தினைப் பெற்று வந்தது பா.ஜ.க தான் என்பதால் அவர்களுக்கு எதிரான ஒரு கடிவாளமாக இத்தீர்ப்பு இருக்கும் என்றே பார்க்கப்படுகிறது.

Tags: