உலகத் திருடர்களில் முதலிடம் பிடித்த அதானி!

-ச.அருணாசலம்

உலகப் புகழ் பெற்ற “தி கார்டியன்” பத்திரிக்கையும், ‘ஃபைனான்சியல் டைம்ஸ்’ ம் பிரதமர் மோடியின் நண்பர் அதானி குழுமத்தின் மோசடிகளை  சர்வதேசத்திற்கும் அம்பலப்படுத்தி உள்ளன! மோடி பிரதமரான பிறகு 28,14,200 கோடிகள் அதானி சம்பாதித்து உள்ளாராம். அமெரிக்காவின் OCCRP (Organised Crime and Corruption Reporting Project) அதிரடி அறிக்கை!

பிரிக்ஸ் உச்சி மாநாட்டிலிருந்து திரும்பிய கையோடு “சந்திராயன்-3” வெற்றியை ஏதோ தனது வெற்றியாக காட்டிக் கொள்ள தலைகீழாக நின்றார் நமது “விஷ்வ குரு” மோடி. பக்தர்களின் பஜனையில் மயங்கி இருந்த மோடிக்கு ” கோடையிடியாக” நேற்று ஒரு செய்தி வந்தது.

சர்வதேச தரமும், புகழும் வாய்ந்த ”தி கார்டியன்” மற்றும் “ஃபைனான்சியல் டைம்ஸ்” என்ற இரண்டு பத்திரிகைகளில் மோடிக்கு நெருக்கமான அதானி குழுமத்தின் மோசடிகளை அம்பலப்படுத்தி ஆதாரபூர்வ செய்திக் கட்டுரைகள் வந்து மோடியின் தூக்கத்தை கெடுத்தன.

‘ஹிட்டன்பர்க்’ அறிக்கையை சுட்டிக்காட்டி , மோடிக்கும் அதானிக்கும் இடையிலான கள்ள உறவை கேள்வி கேட்ட ராகுல் காந்தியை அவதூறு வழக்கு மூலம் தண்டித்து, பதவி நீக்கம் செய்து தப்பித்தோம் என்று எண்ணியிருந்த மோடிக்கு, மீண்டும் தலைவலியாக சமீபத்திய செய்தி வந்துள்ளது.

அதானி குழுமம் ஏறத்தாழ 8,000 கோடிகளை (1 பில்லியன் டொலர்) இந்தியாவிலிருந்து வெளியேற்றி  மொரீஷியஸ் போன்ற தீவுகளில் பதிவு செய்த பல்வேறு போலி (ஷெல் கம்பெனிஸ்) நிறுவனங்கள் மூலம் மீண்டும் இந்தியாவிற்குள் கடத்தி வந்து அதானி குழும பங்குகளில் முதலீடு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ‘ஆர்கனைஸ்டு கிரைம் மற்றும் கரப்ஷன் ரிப்போர்ட்டிங் ப்ராஜெக்ட்’ (ஒருங்கிணைந்த குற்றச் செயல் மற்றும் ஊழல் குறித்த அறிக்கை)  என்ற அமைப்பு இந்த மோசடிகளை ஆதாரபூர்வமாக வெளிக் கொண்டு வந்துள்ளது.

மொத்தம் 13 போலி கம்பெனிகள் அல்லது அதானி குழுமத்தின் பினாமி கம்பெனிகளது நிதி முதலீட்டையும் அதன் போக்கையும் பல ஆண்டுகளாக செபி அமைப்பு “விசாரித்துக்கொண்டு” இருக்கையில், அவற்றில் இரண்டே இரண்டு பினாமிகளான துபாயைச் சார்ந்த நாசர் அலி என்பவரும் சீனத்தை சார்ந்த சாங் சுங்-லிங் என்பவரும் இந்திய ஒழுங்குமுறை நிறுவனங்கள் கண்ணில் மண்ணைத் தூவி விட்டு, அதானி குழுமத்தில் முதலீடு செய்து சட்டத்திற்கு புறம்பாக ‘ஆப்ஷோர்’ அக்கவுண்ட்கள் மூலம் பங்குகளை வாங்கி உள்ளனர். இதன்மூலம் இந்திய சட்டங்களை மீறியும், போலியாக பங்கு விலையேற்ற மோசடிகளை செய்தும் கொள்ளையடித்தது ஆதாரங்களுடன் அம்பலத்திற்கு வந்துள்ளது.

நாசர் அலி, சாங் சுங்-லிங் ஆகிய இவ்விருவரும் கௌதம் அதானியின் மூத்த சகோதரான வினோத் அதானியின் கைப்பாவைகள் என்பதும் பல்வேறு ஆதாரங்களுடன் இந்த அமைப்பு வெளியிட்டுள்ளது. ‘மோடிக்கு  நெருக்கமான அதானியின் முறைகேடுகள்’ என்று “தி கார்டியன்” பத்திரிக்கையும், ‘பிரதமர் மோடி சம்பந்தப் பட்ட அதானி குழுமத்தின் மோசடி’ என்று ஃபைனான்சியல் டைம்ஸ் பத்திரிக்கையும் இந்தியாவில் முடைநாற்றமெடுக்கும் ஊழலையும், ஆட்சியாளர்களின் சார்பு நிலையையும் பட்டவர்த்தனமாக்கி செய்தி வெளியிட்டுள்ளன.

எடுத்தற்கெல்லாம் தனக்கு வேண்டாத எதிர்கட்சிகள் மீதெல்லாம் அமுலாக்கத் துறையையும், வருமான வரித்துறையையும், சி.பி ஐ அமைப்பையும் ஏவி விடும் மோடி அரசு, கண்முன்னே பல்லாயிரம் கோடிகளை இந்தியாவிலிருந்து கடத்தி, பின்பு பினாமிகள் மூலம் மீண்டும் இந்தியவிற்குள் நுழைப்பது மணி லாண்டரிங் இல்லையா? இவர்கள் மீது கடுமையான அமுலாக்கத் துறை பாயாதா? பி.எம்எல்ஏ சட்டங்கள் எல்லாம் வழிக்கு வராத எதிர்க்கட்சி தலைவர்கள் மீதுதான் பாயுமா? அயோக்கிய சிகாமணி அதானி மீது பாயாதா என்ற பல கேள்விகள் நாட்டினர் மனதில் தோன்றுவது இயற்கை.

நினைத்ததை எல்லாம் வாங்கி குவிக்கும் அதானியின் வளர்ச்சி “வீக்கம்” யாரால் வந்தது? இதற்கு உதவி செய்வது யார்? என்பது ஊர் உலகத்திற்கே தெரிந்திருக்கும் பொழுது, அதைப் பற்றி இந்திய ஊடகங்கள் பேச மறந்தன! ஒழுங்கு முறை அமைப்புகள் கண்டும் காணாமல் காலம் தாழ்த்தின!, உச்ச நீதி மன்றம் உப்பு சப்பில்லாத குழுவை அமைத்தது! அந்த குழுவும் வழா வழா அறிக்கையை அளித்தது எல்லாம் விஷ்வ குருவிற்கு ” சாதகமாக” அமைந்து விட்டதால்  ஆற்றைக் கடந்து விடலாம் என்ற நப்பாசையில் இருந்தார் . ஆனால்,  இன்று இந்த கார்டியன் மற்றும் ஃபைனான்சியல் டைம்ஸ் பத்திரிக்கைகளில் வந்த செய்தியால் உலகத்தின் வாயை மூட முடியாது என்ற உண்மையை உணர்ந்திருப்பார்.

துறைமுகங்களையும், விமான தளங்களையும், சுரங்க உரிமைகளையும் “நண்பனின்” தயவால் இலகுவாக பெற்று வீங்கும் அதானி பிற நாடுகளிலும் சலுகைகள் பெற அதே நண்பனின் சிபாரிசும் தேவைப்படுவதை அன்று ஆஸ்திரேலியாவில் கண்டோம், இலங்கையில் கண்டோம், வங்க தேசத்திலும் கண்டோம், இரண்டு நாட்களுக்கு முன்பு கிறீஸ் நாட்டிற்கு மோடி சென்றதன் மூலம் காண்கிறோம். இதிலுள்ள வலைப் பின்னல்களை இந்திய ஊடகங்கள் மறைத்து விடலாம். இங்குள்ள சூழல் அனைவருக்கும் ஏதுவான சமமான ஆடுகளமாக இல்லாமல் மோடிக்கு நெருக்கமான அதானிக்கு சாதகமாக உள்ளதை – இந்திய அரசும் ஒழுங்குமுறை அமைப்புகளும் அதானிக்கு வெண்சாமரம் வீசுவதை – அகில உலக ஊடகங்கள் கவனித்துக் கொண்டு தான் உள்ளன என்பதற்கு இந்த வெளியீடு ஓர் உதாரணமாகும்.

இந்தியாவில் நிலவி வரும் மொக்கையான வணிகச் சூழலில், அரசு பாரபட்சமாக நடந்து கொள்வது என்ற நிலையை உலகம் கவனித்து கொண்டிருக்கிறது.

ஹிட்டன்பர்க் அறிக்கையின்படி கிட்டதட்ட 37 பினாமி நிறுவனங்களை அதானி சகோதர கும்பல் நடத்துகிறது. இதில் 13 நிறுவனங்களின் நிதி இந்தியாவிற்குள் நுழைந்ததை பற்றி தான் செபி நிறுவனம் விசாரித்து வருகிறது. கடந்த வாரம் உச்ச நீதி மன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் செபி, ”தங்களால் விசாரணையை முழுமையாக நடத்த முடியவில்லை, ஏனெனில் அந்த 13 நிறுவனங்களும் மொரீஷியஸ் தீவுகளில், வெர்ஜின் ஐலண்ட தீவுகளில் பதிவு செய்துள்ள பலம் வாய்ந்த நிறுவனங்கள், அவர்கள் வலைப் பின்னலை பிரித்து உண்மை நிலை அறிய இன்னும் அவகாசம் வேண்டும்’’ என செபி கூறியுள்ளது.

இந்த 13 நிறுவனங்கள் தவிர மேலும் 24 நிறுவனங்கள் மூலமாக பலாயிரங்கோடி பணம் இந்தியாவிலிருந்து வெளியேறி, மீண்டும் இந்தியாவிற்குள் நுழைந்துள்ளதை செபி கண்டு கொள்ளவில்லை, அவர்களும் இதில் உடந்தை என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அதானி மீதான குற்றச்சாட்டை விசாரித்து, அதானிக்கு நற்சான்று பட்டம் வழங்கிய செபியின் முன்னாள் இயக்குனர் இன்று அதானி வாங்கியுள்ள என்.டி.டி.வி (NDTV)  ல் இயக்குனராக பொறுப்பேற்றுள்ளார்.

இந்தச் சூழலில் இந்திய ஆட்சியாளர்கள் தாங்கள் ஒரு சார்புடையவர்கள் அல்ல, ஊழலை சகித்துக் கொள்பவர்கள் அல்ல என்று  நாடகமாட வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளனர் என காங்கிரஸ் தலைவர் ராகுல்  காந்தி கூறியுள்ளார். உலக ஊடகங்கள் முன்னால் மோடி தன்னை உத்தமராக காட்டிக் கொள்ளவதை முறியடிக்க  ஒரே வழி,  நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடவடிக்கையே என்றும் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

மணிப்பூர் பற்றி எரியும் பொழுது சபைக்கு வர அஞ்சிய மோடி- பண மதிப்பிழப்பின் போதோ அல்லது கொரோனா பரவிய போதோ விசேட நாடாளுமன்ற கூட்டத்தை கூட்டாத மோடி – இன்று விசேட ஐந்து நாள் கூட்டத்தை – கூட்டியுள்ளார்.

ஜி 20 மாநாடு நடக்கும் பொழுது ‘மோடி புகழ்’  பாட, இக் கூட்டத்தை மோடி அவசர அவசரமாக கூட்ட விழைந்துள்ளார் . இதற்கு முன்னால், நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடைபெற வேண்டும் என்பது எதிர்கட்சிகள் மட்டுமல்ல, நடுநிலையாளர்களின் எண்ணமும் அதுதான் .

ஆனால் அது நடக்குமா?

Tags: