மே 31: உலக புகையிலை எதிர்ப்பு தினம்! கொரோனாவைவிட பயங்கரம் – புகையிலையால் ஆண்டுக்கு 80 லட்சம் பேர் பலி!

-கோ. ஜெயலெட்சுமி  

World No Tobacco Day 2020: History, theme, 5 reasons to quit smoking

மார்க் ட்வைன் சிகரெட் பிடிப்பதில் மிகவும் ஆர்வம் உடையவர். ஒருமுறை எந்தவிதக் கெட்ட பழக்கமும் இல்லாத ஒருவன் மார்க் ட்வைனைப் பார்த்து “என்னய்யா, இதை ஒரு தரம் விடக் கூடாதா?” என்று கேட்டானாம். உடனே அவர், “ஒரு தரம் அல்ல, நூறு தரம் விட்டுவிட்டிருக்கிறேன்” என்றார். சிகரெட் புகைப்பதில் வல்லவர்கள் அளிக்கும் பதில் இது.

இதுபோன்ற மார்க் ட்வைன்கள் நம்மிடையே இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள். அவருக்கு அறிவுரை கூறியோரைப் போன்றோரும் ஏராளமாக நம்மிடையே இருக்கிறார்கள். புகையிலையும் நிறையவே இருக்கிறது. நாட்டுக்கு அதிகமான வருவாயையும் தருகிறது. சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்னர் நம் நாட்டிற்கு வந்து, நிலைத்து நின்று நாடு முழுவதும் ஆக்கிரமித்து விவசாயப் பயிராக ஆதரவு பெற்றுக் கொண்டிருக்கும் செடி புகையிலை.

கி.பி. 1492 ஆம் ஆண்டு அமெரிக்காவைக் கண்ட கொலம்பஸ் அந்த நாட்டில் பயணம் செய்தபோது புகையிலைப் பழக்கத்தைக் கண்டு தனது டைரியில் பதிவு செய்துள்ளார். புகையிலையைப் பற்றி நமக்குக் கிடைக்கும் முதல் குறிப்பு இதுதான். இதற்கு முன் எத்தனை ஆண்டு காலம் புகையிலை பயன்படுத்தப்பட்டு வந்தது என்பதை அறிய இயலவில்லை.

புகையிலை போதைப் பொருள்களில் ஒன்று. உலகெங்கும் போதைக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரமும், போதைப் பொருள்களால் ஏற்படக்கூடிய உடல்நலக் கேடுகளும், அத்தகு பொருள்களைப் பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய சமூகக் கேடுகளும் எண்ணில் அடங்காதவை.

ஆயினும் போதைப் பொருள்கள் பல்வேறு வடிவங்களில் உலகெங்கும் பல கோடி மனிதர்களால் பயன்படுத்தப்பட்டுத்தான் வருகின்றன. இப்பொருள்களுக்கான வணிக சந்தை உலகெங்கும் பல மில்லியன் கோடியைக் கொண்டுவந்து குவிக்கிறது.

Anti Tobacco Day | Lifestyle Fitness

கி.பி. 1605 இல் மொகலாய சக்ரவர்த்தி அக்பரிடம் ஆங்கிலேய மருத்துவர் ஒருவர் புகையிலையைக் கொடுத்ததாகவும், அதை ஒரு இழுப்பு இழுத்துப் பார்த்த அவர் அதன் பிறகு தொடவே இல்லை என்றும் வரலாறு கூறுகிறது.

அக்பருக்குப் பின் வந்த ஜஹாங்கீர் மிகவும் கோபமுற்றுப் புகை பிடிப்பதால் மக்கள் மனம் கெட்டு, இளைஞர்கள் தவறான வழிக்குச் செல்வதைக் கண்டு மனம் நொந்து கி.பி. 1617இல் மக்கள் யாரும் இனி புகையிலையை நுகரக் கூடாது என அரசகட்டளையாக அறிவித்தார். மீறுபவருக்கு தண்டனை அளித்தார்.

முதல் தடவை குற்றம் செய்தால் குற்றம் செய்தவன் மீது கரிபூசி கழுதை மேல் ஏற்றி ஊர்வலமும், இரண்டாம் முறை செய்தால் உதடுகள் துண்டிக்கப்படும் என்றார். இவருடைய சட்டத்தால் இந்தியாவில் வேலை பார்த்த ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி வேலையில் இருந்த ஆங்கிலேயர்கள் பட்டபாடு கொஞ்சநஞ்சமல்ல என்பது அவர்கள் எழுதிய கடிதங்களின் வாயிலாகத் தெரிகிறது.

வில்லியம் ஈடன் என்பவர் ஜப்பானில் உள்ள தம் நண்பர்க்கு கடிதம் எழுதுகிறார். அரசாங்கக் கட்டளையால் மாளிகையில் இருந்த புகையிலையினைக் கொளுத்திவிட்டார்கள். புகையிலை வியாபாரம் செய்த 150 ஆள்களையும் சிறைப்படுத்தி விட்டார்கள்.

இதேபோன்று ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியில் பணி செய்த தாமஸ் ஆல்பர்ட் வில்லியம் பெம்பர்டன், மேஜர் யூல் போன்றவர்கள் எழுதிய கடிதங்களின் வழியாக புகையிலை கிடைக்காத அவர்களின் ஏக்கம் தெரிந்தது.

பிறகு கால மாற்றத்தில் ஆனைமலைக் காடுகளில் வசித்த காடர் இனப் பழங்குடி மக்களிடையே சென்று அங்குள்ள செடிகொடிகளைப் பற்றி ஆராய்ச்சி செய்யச் சென்றபோது மெல்ல மெல்ல அவர்களிடையே பீடி புகைக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி புகையிலை விதையைத் தந்து பயிரிடச் செய்து ஆறுமாதம் கழித்து அங்கு சென்று பார்த்தபோது புகை பிடிப்பதில் ஆண்களும் பெண்களும் நிபுணர்களாய் மாறியிருந்தனர். அருகில் இருந்த உறவினர்களையும் புகை பிடிக்கும் பழக்கத்திற்குக் கொண்டு வந்திருந்தனர்.

கிழக்கிந்திய கம்பெனியார் முதன்முதலில் சூரத்தில்தான் புகையிலை விவசாயத்தில் இறங்கினர். இவ்வாறு புகையிலையை மெல்லமெல்ல மூன்று விதமாக மென்றும், புகைத்தும், மூக்குப்பொடியாகவும் பயன்படுத்தத் தொடங்கினர்.

முதன்முதலாகப் புகையிலையை வெளிநாடுகளுக்கு அறிமுகம் செய்தவன் டி.ஓ. வீடியோ என்பவர். 1919ஆம் ஆண்டு விஸ்பானியோலாவிலிருந்து ஸ்பெயினுக்குக் கொண்டுவந்தார். அதன் பிறகு நூறாண்டுகளுக்குள் புகையிலையானது வட அமெரிக்கா, ஐரோப்பா, வட ஆப்பிரிக்கா, ஆசிய நிலப்பரப்புகளை வென்றுவிட்டது.

புகையிலையின் வரலாறு விசித்திரமானது. கால் வைத்த இடமெல்லாம் விருப்பையும் வெறுப்பையும் சம்பாதித்துக்கொண்டது. இதனால் சிலர் சண்டையிட்டனர். சிலர் அமைதி அடைந்தனர். மகன் கெட்ட வழியில் செல்கிறான் என தந்தை கவலையுற்றார். மக்கள் கெட்ட பழக்கத்திற்கு ஆளாகிவிட்டார்களே என்று அரசாங்கம் கவலைகொண்டது.

நின்று கொல்லும் புகை: சர்வதேச ...

இதனால் 1620ஆம் ஆண்டிலே இங்கிலாந்து அரசு புகையிலை தடுப்புச் சட்டங்களை அறிவித்து புகையிலை உபயோகத்திற்குத் தடை விதித்தது. போப் 7 ஆம் அர்பன் சர்ச்சில் பொடி போடுபவர்கள் மதத்தில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று 1624 ஆம் ஆண்டிலேயே அறிவித்தார். அதன் பிறகு 10 ஆண்டுகள் கழித்து ரஷியாவில் புகையிலை தடை செய்யப்பட்டது. பொடி போடுபவர்களின் மூக்கு அரியப்பட்டது.

17 ஆம் நூற்றாண்டில் ஜெர்மனியில் புகையிலைப் பழக்கத்திற்கும் விபசாரத்திற்கும் ஒரே தண்டனை வழங்கப்பட்டது. இதுபோன்ற சட்டங்களாலும் அரசாங்க அறிவிப்புகளாலும் புதிய விதிமுறைகளாலும் அதைத்தான் தடுக்க முடிந்தது. இதில் உண்மையில் வெற்றி யாருக்கென்றால் புகையிலைக்கே எனலாம்.

புகையிலைப் பழக்கம் காற்று வேகத்தில் நான்கு திசைகளிலும் வேகமாகப் பரவியது. அரசாங்கம் நிரந்தரமாக யோசித்து கடைசியாக ஒரு முடிவிற்கு வந்து புகையிலை மேல் வரி, வரி என வரிக்கு மேல் வரி போட்டது. இதன் மூலம் அரசுக்கு ஏராளமான வருவாய் கிடைத்தது.

வௌ்ளையர்கள் அமெரிக்காவில் கால் வைப்பதற்கு முன்பே அமெரிக்க மக்கள் புகையிலைச் செடிக்கு பயத்துடனும் பக்தியுடனும் மரியாதை கொடுத்தனர். இது ஒரு தெய்விகச் செடி, நோயினைத் தீர்க்கும். இதன் புகையால் பூதமும் பிசாசும் தாக்காது, புகையிலை மந்திரத்தால் எதிரி தோற்று ஓடுவான். புகையிலைச் சாரம் பூசிய கணையால் தாக்கினால் விலங்குகள் இறந்துபோகும். தெய்வ தரிசனத்துக்குப் புகையிலையே வழிகாட்டி என்ற ஏராளமான நம்பிக்கை கொண்டிருந்தனர்.

இதுபோலவே தமிழ்நாட்டிலும் நாட்டுப்புற தெய்வங்களுக்கு சுருட்டு வைத்து வழிபாடு செய்யக்கூடிய நிலைமை இன்றும் உள்ளது.

இப்புகையிலைச் செடியில் ஐம்பதுக்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. இருப்பினும் இரண்டு வகையான புகையிலையே புகை பிடிப்பதற்காகப் பயிரிடப்படுகின்றன. 1. நிகோடியானா டபாகோ, 2. நிக்கோடினா ரஸ்டிகா. முதல் வகைச் செடியின் பூக்கள் இளஞ்சிவப்பு நிறமாக இருக்கும். இரண்டாம் வகைச் செடியின் பூக்கள் மஞ்சள் நிறத்தில் காணப்படும். இந்தியாவில் இந்த இரண்டு வகைப் புகையிலைப் பயிர்களும் பயிரிடப்படுகின்றன. முதல் வகை நாட்டின் எல்லா பகுதிகளிலும் காணப்படுகிறது. இரண்டாவது வகைக்கு குளிர்ந்த தட்பவெப்பநிலை தேவைப்படுவதால் அத்தகு பகுதிகளில் மட்டும் பயிரிடப்படுகிறது. உலகில் அதிகமாகப் புகையிலை விளையும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அதற்கு அடுத்த நிலையிலேயே அமெரிக்க ஐக்கிய நாடுகள், சீனா போன்றவை உள்ளன. சிகரெட், புகையிலை பொருத்தவரை இந்தியாவில் பயிர் செய்யத் தொடங்கி 85 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றன. பல லட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் பயிராகி வருகிறது. புகையிலைச் செடியில் ஐந்து அல்லது ஆறு தடவை பறிக்கலாம்.

சுருட்டுக்காகவும் சுவைப்பதற்காகவும் பயன்படும் புகையிலை தமிழகத்தில் பயிரிடப்படுகிறது. சுருட்டுத்தொழில் தமிழகத்தில் திருச்சி, திண்டுக்கல், சென்னை போன்ற பல மாவட்டங்களில் நடைபெறுகிறது. கோதாவரி, கிருஷ்ணா போன்ற ஆற்றிடைப் பகுதிகளில் உற்பத்தியாகும் புகையிலை ,எந்திரச்சுருட்டு, கைச்சுருட்டு, குழாய் மூன்றுக்கும் பயன்படுகிறது. இதில் மணம் உள்ளது. அதனால் விலையும் அதிகம். குஜராத் போன்ற பகுதிகளில் பீடி புகையிலையும், பஞ்சாப், உத்தரப் பிரதேசத்தில் குட்கா புகையிலையும் பயிரிடப்படுகிறது.

இருபத்தாறு நிறுவனங்களில் தயாரிக்கப்படும் புகையிலை வகைகள் புழக்கத்தில் உள்ளன. சொலனேசி குடும்பத்தைச் சார்ந்த நிக்கோடினா என்னும் பேரினத்தில் அடங்கும் பல புகையிலை இனங்களும் உண்டு. பிரான்ஸ் நாட்டிற்கான தூதுவர் ஜூன் நிக்கோடின் வில்லமெய்ன் என்பவரை கௌரவிப்பதற்காக இப்பெயர் சூட்டப்பட்டது.

இத்தகு பழக்கத்திற்கு அடிமையானவர் உடல்நிலை முதலில் பாதிக்கப்படுகிறது. மன அமைதி கெடுகிறது. குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சி இல்லாமல் போகிறது. சமூகத்தில் அவருடைய புகழ் மங்குகிறது. மனித உடலில் உள்ள ஊன்மத்தை பாதிக்கும் வேதியியல் கலவை போதை மருந்து எனப்படுகிறது.

புகையிலை புகைப்பதால், புகையிலை போடுவதால் பல்வேறு உடல் நோய்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக, புற்றுநோய், அதிலும் வாய்ப் புற்றுநோய் ஏற்படுவதற்குப் புகையிலைப் பழக்கமும் காரணமாக அமைகின்றது.

கல்வி நிறுவனங்களுக்கு அருகே புகையிலைப் பொருள்கள் விற்பது தடை செய்யப்பட்டுள்ளது. பொது இடங்களில் புகை பிடித்தலையும் எச்சில் உமிழக் கூடியதையும் தடைசெய்யும் சட்டம் 2002இல் தமிழக அரசு கொண்டு வந்தது. இருப்பினும் இத்தடை பெயரளவிலேயே இருப்பதால் அதனைத் தடுக்கும் விதமாக புதிய செல்லிடப் பேசி செயலியை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை டாக்டர் உ. சாந்தா அறிமுகப்படுத்தியுள்ளார்.

உலகில் போதைப்பொருள் பயன்படுத்துவோர் எண்ணிக்கையில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது. போதைக்கு எதிராக அரசு சட்டம் இயற்றி ஒரு பக்கம் செயல்பட்டு வருகிறது. அதுபோல தன்னார்வ தொண்டுத் நிறுவனங்களும் போதைப்பொருளை ஒழிப்பதற்காக பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றன.

1987 ஆம் ஆண்டு மே 31 ஆம் தேதியன்று உலக சுகாதார நிறுவனம் இந்த நாளை புகையிலை எதிர்ப்பு தினமாக அறிவித்தது.

உலகம் முழுவதும் ஓராண்டில் 80 லட்சம் பேர் புகையிலைப் பயன்பாடு காரணமாக உயிரிழக்கின்றனர். இவர்களில் 70 லட்சம் பேர் நேரடியாகப் பயன்படுத்துவதாலும் 12 லட்சம் பேர் புகையிலை பயன்படுத்துவோரின் அருகே இருப்பதாலும் உயிரிழக்கின்றனர் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது (பெருந்தொற்று நோயான கொரோனாவால் உலகம் முழுவதும் இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 3.72 லட்சம் மட்டுமே!).

DocRoSh Health on Twitter: "Anti-Tobacco Day – Tobacco Kills ...

உலகத்தில் ஆண்கள் 47% பேரும் பெண்களில் 12% பேரும் புகைப் பழக்கத்திற்கு அடிமை கொண்டுள்ளனர். வளர்ந்த நாடுகளில் 42% ஆண்களும் 24% பெண்களும் இப்பழக்கத்திற்கு அடிமையாக உள்ளனர். வளரும் நாடுகளில் 48% ஆண்களும் 7% பெண்களும் புகைக்கின்றனர். இந்தியாவில் 53% ஆண்களும் 3% பெண்களும் புகையிலைக்கு அடிமையாக உள்ளதாக விவரங்கள் கூறுகின்றன.

எச்.ஐ.வி, காசநோய், வாகனத்தால் ஏற்படும் விபத்து, தற்கொலைகள், கொலைகள் போன்றவற்றால் ஏற்படும் மரணத்தைவிட புகையிலையால் ஏற்படும் மரணம் அதிகம் உள்ளது.

புகைப்பதனால் வாய், சிறுநீரகம், மார்பகப் புற்றுநோய் போன்றவற்றுடன் மலட்டுத்தன்மை, செவிட்டுத்தன்மை, ருசியறியாத் தன்மை போன்ற பல்வேறு பிரச்சினைகளும் உண்டாகின்றன.

இந்தியாவில் சட்டம் என்னதான் இருந்தாலும் பெரும்பாலான வணிகர்கள் தங்கள் வருமானத்தை மட்டுமே பார்க்கின்றனர். எந்த ஒரு வருமானமும் நேர்மையானதாக இருக்க வேண்டும் என வியாபாரிகள் நினைத்தால் மட்டுமே இப்பிரச்சினை தீர வழியுண்டு. புகைப்பழக்கத்தை நிறுத்துவது என்பது மிகவும் சிரமமான காரியம் அல்ல. மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. புகை பிடிக்க வேண்டு்ம் என்ற எண்ணம் ஏற்படும்போது யோகா, தியானம், கோயில் போன்றவற்றில் தங்கள் மனதைச் செலுத்தலாம்.

புகை பிடிக்கும் ஒருவர் ஒருமுறை புகை பிடிக்கும்போது தன் வாழ்நாளில் ஐந்து நிமிடத்தை இழக்கிறார். வாழ்நாள் முழுவதும் புகைபிடித்துக்கொண்டிருப்பவர் தன் ஆயுளில் பத்தாண்டுகளை இழந்து விடுகிறார் என்றும் உலகம் முழுவதும் ஒவ்வொரு எட்டு விநாடிக்கும் ஒருவர் இறக்கிறார் என்கிறது உலக சுகாதார நிறுவன அமைப்பின் அறிக்கை.

ஒருவர் புகைபிடிக்கும்போது உள்ளே விடும் புகையைவிட வெளியே விடும் புகையே அதிகம். இதில் நிக்கோடின் போன்ற நச்சுப் பொருள் ஏராளமாக உள்ளது. புகையிலையில் நிகோடின் கலந்துள்ளது பற்றி நாம் அறிவோம். ஆனால், ஆர்சனிக், ஹைட்ரஜன் சயனைடு, நாப்தலின், கந்தகம், ஈயம் போன்ற உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் 4000-க்கும் அதிகமான இரசாயனங்கள் அதில் கலந்துள்ளன. அதில் 69 இரசாயனங்கள் புற்றுநோய்க்கு காரணமாய் அமைந்துள்ளன.

புகையிலை மெல்லும்போது சிகரெட் புகைப்பதைவிட மூன்று மடங்கு நிக்கோடின் அதிகமாக நம் உடலில் கலக்கிறது. இதனால் கன்னம், நாக்கு, உணவுக்குழாய், சுவாசக்குழாய் உள்ளிட்ட இடங்களில் வெள்ளைத் திட்டுக்கள் ஏற்பட்டு நாளடைவில் புற்றுநோயாக மாறுகின்றது. அதுமட்டுமன்றி பல்வேறு வகையான நோய்களையும் இது ஏற்படுத்துகின்றது.

எல்லா போதைப் பொருள்களுமே மனித குலத்துக்கு எதிரானவையே. அதனை உணர்ந்து அத்தகு பழக்கத்திற்கு ஆட்பட்டவர்களை மீட்பது நம் அனைவரின் கடமையாகும். புகையிலை இல்லாத – போதைப் பழக்கம் இல்லாத பெருவாழ்வு வாழ இந்தப் புகையிலை எதிர்ப்பு நாளான மே 31 இல் உறுதியேற்போம்.

[கட்டுரையாளர்- பட்டதாரி ஆசிரியர், தஞ்சாவூர்]

Tags: