இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம் நடாத்திய தோழர் மு. கார்த்திகேசன் ஜனன நூற்றாண்டு தின வைபவம்

டபுலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னோடியானவரும், கல்வியின் கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்தவருமான தோழர் மு. கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு வைபவம், கடந்த ஞாயிறு தினம் ஒக்டோபர் 6, 2019, இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றத்தினால் நடாத்தப்பட்டது. இது இல 3, பகத்தல வீதி (Bagatale Road), கொழும்பு 03 எனும் கட்டடத்தின் கூரை மேல் (Roof top) அமைந்த மண்டபத்தில் மாலை 5.45 மணியளவில் ஆரம்பித்து நடைபெற்றது.

இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம் “தோழர் கார்த்திகேசன் 100” எனும் வெளியீடு ஒன்றினை எம். கார்த்திகேசன் B.A. “கல்வி-வர்க்க சமுதாயத்தில் அதன் அடிப்படையும் நோக்கமும்” எனும் தலைப்பில் முன்பு வரைந்த கட்டுரை, நீர்வை பொன்னையன், அமரர் எம் குமாரசாமி ஆகியோர் எம். கார்த்திகேசன் பற்றி எழுதி ஏற்கனவே பிரசுரிக்கப்பட்ட கட்டுரைகளின் மறுபதிப்புகள் உள்ளடக்கமாகக் கொண்டு வெளியிட்டிருந்தது. அதன் சிறப்பம்சமாக 1970 ஒக்டோபரில் வெளியிடப்பட்ட, புதுவை இரத்தினதுரை அவர்களின் “வானம் சிவக்கிறது” எனும் கவிதைத் தொகுதிக்கு மு. கார்த்திகேசன் எழுதிய மதிப்புரையும் அதில் மறுபிரசுரமாகியிருந்தது.

கார்த்திகேசன் ஞாபகார்த்த நிகழ்ச்சி சபாபதி சிவகுருநாதன் அவர்களின் தலையுரையுடன் ஆரம்பமாகி, கலாநிதி செல்வி அவர்களின் உரையுடன் தொடர்ந்தது. செல்வி அவர்கள் முன்னாளில் பிரபலமான அமரர் ஹன்டி பேரின்பநாயகம் அவர்களின் புத்திரி ஆவர். செல்வியின் உரை ஞாபகார்த்த உரையென்பது எப்போதும் நினைவுகூர்பவரைப் பற்றி மட்டும் அமையாது, அவர்கள் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்த விளைந்த விடயங்களைப் பற்றியதாக இருக்க வேண்டும் என ஆரம்பித்து, சிறீ லங்கா போன்ற நாடுகளில் மார்க்ஸிஸத்தின் போதாமை பற்றி உதாரணங்கள், காரணங்களுடன் எடுத்துக் காட்டப்பட்டு அமைந்திருந்தது. அது ஒரு புதிய கண்ணோட்டத்தையும், சிந்தனையைத் தூண்டுவதாகவும் இருந்தது என்பது நிதர்சனம்.

அன்றைய தின வைபவம் ஈரங்க நிகழ்ச்சியாக முற்போக்கு எழுத்துலகில் ஆறு தசாப்தங்களாக பயணம் செய்து தமிழ்-இலக்கிய வரலாற்றில் சிறப்பான இடத்தை எடுத்தும், அண்மையில் சிறீ லங்கா ஜனாதிபதியின் சாகித்திய அகாடமி விருது பெற்ற நீர்வை பொன்னையா அவர்களின் “சாயல்” எனும் அவரது பன்னிரண்டாவது சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டுடனும் நடந்தேறியது.

நீர்வை பொன்னையா அவர்கள் அத்தொகுப்பை இலங்கையில் இடதுசாரி இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரும், இலங்கை வடபுல கம்யூனிஸ்ட் இயக்க ஸ்தாபகர்களில் ஒருவரும், சிறந்த கல்விச் சிந்தனையாளரும், மக்கள் இலக்கியக் கோட்பாளரும், இறுதி மூச்சுவரை தமது கொள்கையின்படி வாழ்ந்தவருமான தோழர் மு. கார்த்திகேசன் அவர்களின் ஜனன நூற்றாண்டு நினைவாக சமர்ப்பணம் எனக் குறிப்பிட்டு வெளியிட்டிருந்தார்.

சிறுகதைத் தொகுப்பின் பதிப்பில் எம்.கே. முருகானந்தன் அவர்கள் முன்னுரையும், திக்குவல்லை கமால் அணிந்துரையும் வழங்கியிருந்தனர். மண்டபத்திலும், பதிவிலும் வசந்தி தயாபரன் அவர்கள் அறிமுக உரை வழங்கினார். அவரது அறிமுகவுரை எழுத்தாளரின் இருபது வயதுகளில் அனுபவங்கள் எவ்வாறு இருந்திருக்குமென அச்சிறுகதைகள் எடுத்துரைப்பதாக விபரித்தார். மேலும் சுரேன் என்பவர் சிறுகதைத் தொகுதி இந்நாள் இளைஞர் மீது நல்ல தாக்கங்களை ஏற்படுத்த முடியுமெனத் திடமாகக் கூறினார்.

Image may contain: 2 people

இறுதியாக நீர்வை பொன்னையா அவர்களது தனது சிறுகதைத் தொகுதிக்கு அடிப்படையான கல்கத்தாவில் தனது மேற்கல்வி தொடர ஆரம்பித்த, கல்வியைத் தொடர்ந்த அனுபவபகிர்வுகளுடன் வைபவம் நிறைவு பெற்றது.

இவ்வைபவத்தின் ஒழுங்குகளை நீர்வை பொன்னையா அவர்களது நலிந்த உடல்நிலைக்கும் மத்தியிலும், அவரது குடும்பத்தினரே ஏற்று நடத்தினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

-ஜானகி கார்த்திகேசன் பாலகிருஸ்ணன்
08/10/2019

Tags: