டொலர் உலகப் பணமானதும், இந்தியா சோசலிசத்திற்கு மாறியதும் எப்படி? -பகுதி 4

பாஸ்கர் செல்வராஜ்

ரிபொருள், தொலைத்தொடர்பு, போக்குவரத்து, மின்னணு தொழில்நுட்ப உள்கட்டமைப்புகளில் நிலவும் முற்றொருமையும் இவற்றின் விலைகளைத் தெரிவிக்கும் நாணயங்களின் மதிப்பைத் திரிப்பதும்தான் இந்தச் சுரண்டல் பொறிமுறையின் மையம் என்பது நமது துணிபு.

பத்தில் ஒருவருக்கே முறையான வேலை!

அதுதான் நாட்டில் நிலவும் விலைவாசி உயர்வுக்கும், வேலைவாய்ப்பின்மைக்கும் கடன் பிரச்சனைகளுக்கும் காரணமாக இருக்கிறது. (தற்போதைய வேலைவாய்ப்பின்மை 7.8%. பத்தில் ஒருவர்தான் முறையான வேலையில் இருக்கிறார், ஜிடிபியில் குடும்பங்களின் கடன் 35% (2021) அது 1998 இல் 2%, வாங்கும்திறனுள்ள மத்தியத்தர வர்க்கம் 5-10%, மற்ற 90% தொழிலாளர்களின் சம்பளம் 25000க்கும் குறைவு)

ஒரு நாணயத்தின் மதிப்பு எப்படித் திரிக்கப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டுமானால் அது எப்படி உருவாகி வளர்ந்தது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. எந்தவொரு அளவை முறையும் பொருள் அல்லது மனிதரின் ஏதாவதொரு பண்பையும் பயனையும் பொறுத்து அதனை அளக்க உருவாக்கப்படுவது. பின்பு அப்பண்பும் பயனுமுடைய ஒருவரை அல்லது பொருளைத் தேர்ந்தெடுத்து மற்றவற்றில் உள்ள அதே பண்பை அதனுடன் ஒப்பிட்டு அளவிடுவது வழக்கம்.

உதாரணமாக உலகின் பெரும்பாலான பொருட்களை உற்பத்தி செய்யப் பயன்படுவதும் அதிக அடர்த்தி (density) கொண்டதுமான இரும்பை அளவியாகக் கொண்டு மற்ற பொருட்களின் எடையை அதனுடன் ஒப்பிட்டு அளவிடுகிறோம்.

இதன்மூலம் இரும்பை ஒப்பிடும்போது இந்தப் பொருளின் அடர்த்தி இவ்வளவு என்பதை அடர்த்தியின் அளவைத் தெரிவிக்கும் கிலோகிராமில் சொல்கிறோம். இப்படி உருவாக்கப்படும் அளவைமுறை அறிவியல் வழிப்பட்டதாகவும் அனைவருக்கும்      பயனுள்ளதாகவும் பொதுவானதாகவும் இருக்கவேண்டும்.

அப்படியான முறைகளைத்தான் சமூகத்தில் உள்ளவர்கள் ஏற்பார்கள். சமூக ஏற்பில்லையெனில் அது நடைமுறைக்கு வராது. ஆகவே இங்கே தீர்மானகரமானது சமூக ஏற்பு என்னும் சமூகக்காரணி.

தங்கம் சர்வதேச சமதை!

பல்லாயிரமாண்டு பொருளுற்பத்தி வளர்ச்சியில் தங்கம் சமூகத்தால் விரும்பப்படுவதாகவும், அரிதில் கிடைப்பதாகவும் அதிக மதிப்புமிக்கதாக உருவானது. தங்கத்துடன் மற்ற பொருட்களை ஒப்பிட்டு தங்கத்தின் பெயரால் மதிப்பைத் தெரிவிக்கும் முறை ஏற்பட்டது.

பத்து கிலோ இரும்பு = ஒரு தங்கக்காசு என்பதைப்போல. உலகின் பெரும்பாலான சமூகங்கள் இதனை ஏற்றுக்கொள்ள தங்கம் சர்வதேச சமதை (universal equivalent) ஆனது. சமூகத்தில் அதனைக் கொடுத்தால் எவரும் பொருளைக் கொடுக்க ஒப்புக்கொண்டதால் அது சுற்றிச்சுழலும் பணமானது. அப்படிச் சுழலாமல் போனது செல்வக்குவிப்பானது (hoard).

இரண்டாம் உலகப்போரின் இறுதியில் அமெரிக்கா உலகின் நான்கில் மூன்று பங்கு தங்கத்தைத் தன்னிடம் வைத்திருந்தது. தங்கத்தின் மதிப்பை இத்தனை டொலர்கள் (1 அவுன்ஸ் (28.35 கிராம்)= 35 டொலர்கள்) என்றும் அந்த டொலருக்கு எதிராக மற்றவர்களின் நாணயத்தை அளவிடுவது என்றும் பிரிட்டன்வுட்ஸ் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

போரில் உருக்குலைந்து கிடந்த உலகை மீளமைக்க உலக பொருளுற்பத்தியில் கிட்டத்தட்ட பாதியை தன்னிடம் வைத்திருந்த அமெரிக்கா, பொருட்களை ஏற்றுமதி செய்தது. அதனை வாங்கத் தேவையான டொலர் உலகம் முழுக்கப் பாய்ந்தது. அந்த உற்பத்திக்குத் தனது உழைப்பை விற்ற அமெரிக்கத் தொழிலாளர்கள் வாங்கும்திறனுடைய வளமிக்கவர்கள் ஆனார்கள்.  

அதன்பிறகு போரில் வீழ்ந்த ஜப்பான், ஜெர்மனி, பிரான்சு நாடுகள் மீண்டெழுந்து போட்டிக்கு வந்தன. பொதுவாகப் போட்டி ஏற்பட்டால் பொருட்களின் விலையை வீழ்த்தி லாபத்தைக் குறைக்கும்.

சந்தைகளைப் பிடிக்க போர்கள்!

அது முதலிட்டு உருவாக்கிய தொழிற்துறையின் மதிப்பைக் குறைக்கும். இதனைத் தவிர்க்க ஒன்று போட்டியில்லாத புதிய பொருட்களை உருவாக்கி அதிக விலையில் விற்று இலாபத்தைத் தொடர்ந்து பெருக்கவேண்டும், இல்லையேல் இருக்கும் பொருட்களுக்குப் புதிய சந்தையைப் பிடிக்கவேண்டும்.

ஓரிரவில் ஒரு புதிய பொருளை உருவாக்கி சந்தைப்படுத்திவிட முடியாது. புதிய சந்தையைப் பிடிக்கலாம் என்றால் அதற்குத் தடையாக கம்யூனிசம் நின்றது.

அதனை உடைத்து சந்தையை விரிவாக்கச் செய்த வியட்நாம் உள்ளிட்ட போர்கள் தோல்வியில் முடிந்தன. போட்டியும் போரும் அமெரிக்காவின் இழப்பைக் கூட்டியது. அதனைச் சமாளிக்க ஒப்புக்கொண்ட (1அவுன்ஸ் = $35) அளவைவிட அதிக பணத்தை வெளியிட்டது.

அதாவது பணத்தின் மதிப்பை மாற்றியது. கடுப்பான பிரான்ஸ் நேட்டோ படையை வெளியேற்றி டொலருக்குப் பதிலாகத் தங்கத்தைக் கேட்டது. இப்போது அமெரிக்கா தங்கத்தைக் கொடுத்துவிட்டு உலகத்தலைமையை விடவேண்டும் இல்லையேல் தங்கம் கேட்பவர்களின் தலையில் கைவைக்கவேண்டும்.

டொலர் தந்தால்தான் எண்ணெய்

அப்போதிருந்த நிலக்கரி, பெட்ரோல், மின்சாரத்தில் உற்பத்தியாகி இயங்கும் இரும்பு உள்ளிட்ட உலோகங்களினாலான பொருளுற்பத்திக்கு முக்கியமான தொழில்நுட்பம், இரும்பு, நிலக்கரி ஆகியவை எங்கும் நிறைந்திருந்தது.

எரிபொருளோ சோவியத் ரசியா, அமெரிக்கா மற்றும் மேற்கு ஆசியாவில் குவிந்திருந்தது. மேற்கு ஆசிய நாடுகளைத் தன்னுடன் இணைத்துக்கொண்டு டொலர் தந்தால்தான் எண்ணெய் தருவோம் என்றது அமெரிக்கா.

இதனால் தங்கத்தைக் கொடுத்தாலும் எரிபொருள் கிடைக்காத நிலை. எரிபொருளுக்காக முதலாளித்துவ அணியில் உள்ளவர்கள் எதிரணியான சோசலிச சோவியத்துடன் இணையும் வாய்ப்பின்றி பிரான்சு உள்ளிட்ட நாடுகள் டொலரை ஏற்று இதற்கு அடிபணிந்தன.

டொலர் வேண்டாமென்றவர்கள் இப்போது டொலர் கடனைப் பெற்று அவர்களுக்குத் தேவைப்படும் பொருட்களை உற்பத்திசெய்து கொடுத்து டொலரை ஈட்டி அந்தக் கடனை அடைக்கவேண்டும். எழுபதுகள் வரையிலும் நிதி, மூலதனம் உள்ளிட்ட சேவைத்துறைசார் இறக்குமதிகளைச்  செய்துகொண்டு பொருட்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்துவந்த அமெரிக்கா, இப்போது பொருட்களை இறக்குமதி செய்துகொண்டு சேவைத்துறை (மூலதனம்) ஏற்றுமதியை அதிகரித்தது(படம் காண்க).

தனது நெருக்கடிக்குத் தீர்வு காணும் வகையில் “பெட்ரோ டொலர்” என்னும் புதிய சேவைத்துறை பொருளைக் கண்டறிந்தது. அதன் தேவைக்கு ஏற்ப அந்த டொலர் மூலதனப் பொருளை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்ய ஆரம்பித்தது.

இந்த காகிதப்பணம் தங்கத்தைப்போல அரிதாகக் கிடைப்பதோ மிக அதிக உழைப்பைச் செலுத்தி உற்பத்தி செய்யும் பொருளோ அல்ல. ஒரு கையசைப்பில் வங்கிக்கணக்கில் வரவாகவோ கடனாகவோ உருவாக்கப்படும் எண். அதனைக் காகிதத்தில் அச்சிட்டுக் கண்காணித்துக் கட்டுப்படுத்தினால் போதுமானது. இதற்கான ஒரே நிபந்தனை சமூகம் இதனை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

டொலர் இல்லையேல் எரிபொருள் இல்லை, எரிபொருள் இல்லையேல் இயக்கமில்லை என்பதால் அனைவரும் ஏற்கவேண்டிய நிர்பந்தம். டொலர் காகிதம் உலகம் ஒப்புக்கொண்ட பணமானது.

முன்பு அமெரிக்கப் பொருட்களை வாங்க டொலர் என்று தொடங்கிய டொலர் சுழற்சி இப்போது அதனைக் கொடுத்தால்தான் எரிபொருள் கிடைக்கும் என்று மாறி டொலரைக் கொண்டு எந்தப் பொருளை வேண்டுமானாலும் வாங்கலாம் என்ற தங்கத்துக்கு இணையான நிலையை எட்டியது. இந்த டொலர் இல்லையென்றாலும் எரிபொருளும் தொழில்நுட்பமும் கிடைக்கும் என்றால் அத்தப்பக்கமும் பலரும் சென்று போட்டி உருவாகும் இல்லையா?

சோவியத் ரசியா என்னும் மாற்று

அப்படி நாங்கள் தருகிறோம் என்றது சோவியத்ரசியா. அன்றைய இரும்பை முதன்மையாகக் கொண்டு உற்பத்தியாகி மின்சாரம், பெட்ரோலினால் இயங்கும் பொருட்களை உற்பத்தி செய்யத் தேவையான மூலப்பொருட்களையும் அவற்றை செய்யும் நுட்பங்களையும் வைத்திருந்தது. அமெரிக்க டொலரை மறுத்து அதற்கு மாற்றான உற்பத்தி உள்கட்டமைப்புகள் அதன்மூலம் உருவாகும் பொருட்களின் மதிப்பைத் தெரிவிக்கும் நாணயங்கள் என்ற மாற்றுக் கட்டமைப்பை ஏற்படுத்தியது. உலகம் முதலாளித்துவ ஏகாதிபத்திய அணி, மாற்று சோவியத் அணி என இரண்டாகப் பிரிந்தது.

ஒரு நாட்டில் உற்பத்தித் தொழில்நுட்ப உள்கட்டமைப்பையும் அவற்றின் மதிப்பைத் தெரிவிக்கும் மூலதனத்தையும் கைப்பற்றும் சிறுகும்பல், அதனை உலகம் முழுக்க ஏற்றுமதி செய்யக் கிளம்புவதை ஏகாதிபத்தியம் என்று வரையறுக்கிறார் லெனின். முன்பு மிகச்சிலருக்கு மட்டுமே தெரிந்திருந்த உற்பத்தித் தொழில்நுட்பங்களைக் கொண்டு அவர்கள் போட்டிபோட்டுக் கொண்டு பொருட்களை உற்பத்தி செய்தது போட்டி முதலாளித்துவ காலம் (free market); மூலதனமும் தொழில்நுட்பமும் ஒருசிலரிடம் குவிந்து தனியுடைமையாகி அவர்கள் திறனுள்ள மனிதர்களைக் கூலிக்காரர்களாக வைத்துக்கொண்டு சுரண்டும் இந்தக்காலம் ஏகாதிபத்திய காலம் என்றார்.

புரட்சி செய்து ஆட்சிக்கு வந்த அவர் அந்த ஏகாதிபத்திய கட்டமைப்புக்கு மாற்றாக உற்பத்திக் கருவிகளை சமூகமயமாக்கி அரசின்கீழ் கொண்டுவந்தார். அவற்றைப் பயன்படுத்தி திறனுள்ள அனைவரும் போட்டிபோட்டுக் கொண்டு உற்பத்தி செய்யும் அரச முதலாளித்துவக் கட்டமைப்பை (state capitalism) நிறுவினார். அது பகுதியளவு சோசலிசம் பகுதியளவு முதலாளித்துவம் என்பதாக மாறியது. அது சோவியத்தில் பல பத்தாண்டுகள் விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை பிரச்சனையின்றி அதன் பொருளாதாரத்தை வளரச்செய்தது.

ஏகாதிபத்தியம், சமூக ஏகாதிபத்தியம்

அது மென்மேலும் வளர்ந்து சோசலிசத்தின் அளவு கூடி முதலாளித்துவத்தின்  அளவு குறைந்திருக்க வேண்டும். கெடுவாய்ப்பாக, ஸ்டாலின் இறப்புக்குப்பிறகு சமூகத்தின் சொத்தாக இருந்த உற்பத்திக் கருவிகளை தனிநபர்கள் கைப்பற்றிக்கொண்டு சோசலிசப் போர்வையில் மற்ற நாடுகளைச் சுரண்டக் கிளம்பினார்கள்.

இதனை ஒரு சமூகத்தின் பெயரால் சுரண்டும் சமூக ஏகாதிபத்தியம் என்று வரையறுத்தார் மாவோ. ஏகாதிபத்தியத்திற்கு மாற்றாக உருவாகப்பட்ட அமைப்பும் சுரண்டலுக்கான கட்டமைப்பாக மாறியது. சமூகமயமாக்கப்பட்ட உற்பத்திக் கருவிகளும் ஓரிடத்தில் குவிக்கப்படக்கூடாது என்ற பாடத்தைக் கற்றுத்தந்தது. அதனிடம் பாடம் கற்காத நாம் இதோ ஒன்றிய பார்ப்பனியத்தின் பிடியில் சிக்கி சீரழிகிறோம்.

இப்படி எழுபதுகளில் முதலாளித்துவ ஏகாதிபத்திய அணி, சமூக ஏகாதிபத்திய அணி என இருதுருவமாகப் பிளவுபட்டது உலகம். நிலவுடைமை காலம்தொட்டுச் சமூகத்தைச் சாதியாகப் பிளந்து அந்தச் சமூகக் கட்டமைப்பின்மூலம் இந்தியத் துணைக்கண்ட சமூகங்கள் அனைத்தையும் சுரண்டும் சமூக ஏகாதிபத்தியமாக வாழ்ந்துவந்த பார்ப்பனியம் அப்போது சோவியத் சமூக ஏகாதிபத்தியவாதிகளுடன் கைகோர்த்ததில் ஆச்சரியமில்லை.

நிலத்தில் இருந்து தொழிற்துறைக்கு மாறிவிட்ட மூவர்ண இந்துக்கள் வங்கிகளை அரசுடைமையாக்கி தொழிற்துறையை சமூகமயமாக்கினார்கள். மக்களின் பசி பஞ்சத்திற்குத் தீர்வாக மன்னர்கள் நிலவுடைமையாளர்களின் நலனைப் பலிகொடுத்து அவர்களின் நிலங்களைப் பிரித்துக் கொடுக்கச் சொன்னார்கள்.

இந்தியாவில் சமூக ஏகாதிபத்தியம்!

சோவியத்தைப் பின்பற்றி அந்த அணியிடமிருந்து எரிபொருளையும் தொழில்நுட்பங்களையும் பெற்று உற்பத்தி உள்கட்டமைப்புகளை ஏற்படுத்தி அரச முதலாளித்துவத்தை நிறுவியது ஒன்றியம்.

இவற்றைப் பயன்படுத்தி உருவாகும் பொருட்களின் விலையைத் தீர்மானிக்கும் ஆற்றலை பெற்று ரூபாயின் மதிப்பை அரசே நிர்ணயித்தது. ஆனால் சோவியத்தில் இருந்ததைப்போல இந்தக் கட்டமைப்புகளைப் பயன்படுத்தி திறனுள்ள எவரும் உற்பத்தி செய்ய அனுமதிக்காமல் லைசன்ஸ் ராஜ்ஜியம் நடத்தி அவற்றை டாட்டா, பிர்லாக்களுக்கானதாக்கியது பார்ப்பனிய-பனியா கும்பல்.

அதன்மூலம் அரசின் மூலதனம் தொழில்நுட்ப உள்கட்டமைப்பைப் பயன்படுத்தி தொழிற்துறை பொருட்களை இவர்கள் மட்டுமே உற்பத்தி செய்து சந்தைப்படுத்தும் முற்றொருமையைப் பெற்றார்கள். மற்றவர்கள் அரசு பிரித்துக் கொடுத்த நிலத்தில் உழுது உருவாக்கிய விளைச்சலை சந்தைப்படுத்தி ரூபாயை ஈட்டி இவர்களிடம் பொருட்களை வாங்க வேண்டும்.

இது அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் மூலதனம், எரிபொருளில் போட்டியற்ற முற்றொருமையை ஏற்படுத்திக் கொண்டதைப் போன்றது. அங்கே அவை நேரடியாகத் தனியுடைமையாக இருக்கிறது. இங்கே சோவியத்தைப்போல சமூகத்தின் பெயரால் தனிநபர்களுக்கானதாக மாற்றப்படுகிறது அவ்வளவே!

இந்த விவாதத்தின் சாரம் போட்டி உற்பத்தியைப் பெருக்கும்; பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்து விலைவாசியைக் குறைத்து வேலைவாய்ப்பைக் கூட்டும்; போட்டி வளர்ந்து மூலதனம், உற்பத்தித் தொழில்நுட்பக் கட்டமைப்பு ஓரிடத்தில் குவியும்; அது வளர மற்றவரை ஒடுக்கி உலகையாளக் கிளம்பும்; அதற்குத் தீர்வு அதனை சமூகமயமாக்கி போட்டியை நிலைநாட்டும் அரச முதலாளித்துவம்; அதில் இருக்கும் ஆபத்து அதுவும் ஓரிடத்தில் குவிந்தால் தனிநபர்கள் கைப்பற்றி ஆதிக்கத்துக்கு வழிவகுக்கும் என்பது.

அமெரிக்க முதலாளித்துவ ஏகாதிபத்திய அணி, சோவியத் சமூக ஏகாதிபத்திய அணி என இரண்டாகப் பிரிந்து உலகை ஆக்கிரமிக்கப் போட்டியிட்ட அந்தக் காலத்திய உலகப்போட்டி உற்பத்தியில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தியது? அது எப்படி சோவியத்தை வீழ்த்தி ஒற்றைத்துருவ உலகம் உருவாகக் காரணமானது?

தொடரும்….

பகுதி 1: இந்தியாவைக் கட்டுப்படுத்தும் ஐந்து பெரிய நிறுவனங்கள்

பகுதி 2: இந்தியாவைக் கட்டுப்படுத்தும் ஐந்து பெரிய நிறுவனங்கள்

பகுதி 3: விலையை உயர்த்தி உழைப்பை உறிஞ்சும் பொறிமுறை என்ன? 

Tags: