இந்தியாவைக் கட்டுப்படுத்தும் ஐந்து பெரிய நிறுவனங்கள் – பகுதி 2

பாஸ்கர் செல்வராஜ்

நாட்டில் நிலவும் விலைவாசி உயர்வுக்கும் மக்களின் வருமான இழப்பிற்கும் காரணம் பெருநிறுவனங்களின் ஏகபோகம். இதனை ஏற்படுத்தியதில் பெரும்பங்கு வகிப்பவை ஒன்றியத்தின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையும் கொரோனாவால் ஏற்பட்ட முடக்கமும். இந்த ஏகபோகம் இருவகை. ஒன்று அமேசான், வால்மார்ட், கூகிள், மெட்டா உள்ளிட்ட அமெரிக்க முதலாளித்துவ ஏகாதிபத்திய பெருநிறுவனங்களின் முற்றொருமை.

இரண்டாவது டாட்டா, பிர்லா, அம்பானி, அதானி, மிட்டல் ஆகிய இந்திய பார்ப்பனிய சமூக ஏகாதிபத்திய பெருநிறுவனங்களின் முற்றொருமை. இந்த இருவகை முற்றொருமைகள் உடையாமல் சந்தையில் போட்டி உண்டாகி விலைவாசி குறைந்து வேலைவாய்ப்பு பெருக வாய்ப்பில்லை. இதனை உடைப்பதற்கு இது உருவான விதம், அதற்கான நோக்கம் ஆகியவற்றைப் புரிந்துகொள்வதும் உடைத்து எதனை உருவாக்கப் போகிறோம் என்ற தெளிவை அடைவதும் மிக அவசியம்.

ட்ரில்லியன் கணக்கில் அச்சிடப்பட்ட பணம்

2008இல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மற்றும் கொரோனா முடக்கத்தால் உலகப் பங்குவர்த்தக மூலதன சுழற்சி முடங்கியது. அரசுகளின் இடையீடு இன்றி அதன் போக்கில் விடும் பட்சத்தில் அதுவரையிலும் சுற்றிக்கொண்டிருந்த பெயரளவு மூலதனம் (fictitious capital) அல்லது பெயரடை வர்த்தகம் (derivative trade) காற்றாக மறைந்து பங்குச் சந்தைகளும் வங்கிகளும் திவாலாகி இருக்கும். அதனைத் தடுக்க டிரில்லியன் கணக்கில் பணத்தை அச்சிட்டு சந்தையில் கொட்டின மேற்குலக நாடுகள் (படம் காண்க).

வங்கிகளில் குவியும் இந்தப் பணத்திற்கு வட்டி கொடுப்பதில் இருந்து காக்க மேற்குலக மத்திய வங்கிகள் சுழிய வட்டி விகிதத்தை அறிவித்தன. இந்த வட்டிவிகித குறைப்பிற்கு தாராளமயவாதிகள் முன்வைக்கும் தர்க்கம் வட்டியில்லாமல் பணம் கிடைப்பதால் பலரும் இந்தப் பணத்தை வாங்கி தொழில்களில் ஈடுபடுவார்கள். மக்களும் சேமிப்பதற்கு பதிலாகச் செலவு செய்வார்கள். அதன்மூலம் வேலைவாய்ப்பு பெருகும். அது ஒரு பொருளாதார சுழற்சியை ஏற்படுத்தும் என்பது. உண்மையிலேயே அப்படி ஒரு பொருளாதார சுழற்சியை ஏற்படுத்தியதா? என்று கேட்டால் ஆம் ஒவ்வொரு ஆண்டும் ஜி.டி.பி வளர்ந்திருக்கிறதே என்று பதில் சொல்வார்கள்.

பணம் சுழன்றதா குவிந்ததா? 

(புள்ளிவிவரங்கள் அமெரிக்க மத்திய வங்கி இணையதளத்தில் இருந்து எடுத்து உருவாக்கபட்டது)

மேலேயுள்ள படத்தை உற்றுநோக்கினால் உலகமயத்திற்குப் பிறகான அமெரிக்கப் பொருளாதார வளர்ச்சிக்கும் பணத்திற்குமான விகிதம் குறைவாக இருக்கிறது. அதேசமயம் பணம் எத்தனை கைகளுக்கு மாறி பொருளாதார நடவடிக்கையில் பங்கேற்றது என்பதைத் தெரிவிக்கும் பணசுழற்சியின் வேகம் (velocity of money) இரண்டுக்கும் அதிகமாக இருக்கிறது. 2008 நெருக்கடிக்குப் பிறகு சந்தையில் இருக்கும் பணத்தின் அளவு கிடுகிடுவென உயர்ந்து ஜிடிபியைத் தாண்டுகிறது. பணசுழற்சி வேகம் கிட்டத்தட்ட ஒன்றாக வீழ்கிறது.

இதன்படி பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு உருவாக்கப்பட்ட  பணம் உற்பத்தியில் பெருமளவு ஈடுபடவில்லை. அப்படி ஈடுபட்டிருந்தால் மென்மேலும் புதிதாக இவ்வளவு பணத்தை உருவாக்கவேண்டிய தேவை வந்திருக்காது. குறைவான பணம் ஒன்றுக்கும் மேற்பட்ட கைகளுக்கு மாறி உற்பத்தி சுழற்சியில் ஈடுபட்டிருக்கும். அப்படியென்றால் இது பொருளாதார நடவடிக்கையில் ஈடுபட்டு சுழலாமல் சிலரிடத்தில் குவிந்திருக்கிறது (hoard) என முடிவுக்கு வரலாம். 

ஜிடிபி உயர்கிறது வேலையின்மை பெருகுகிறது

பிறகு ஜிடிபி எப்படி உயர்ந்து கொண்டிருக்கிறது என்று கேட்பீர்களானால்  மிகையாக உருவாக்கப்பட்டு மலிவாகக் கிடைக்கும் டொலரை உள்ளூரிலும் உலகம் முழுவதிலும் இருக்கும் மதிப்புமிக்க வருமானம் தரும் சொத்துக்களை வாங்கக் கிளம்புகிறார்கள்.

அது சந்தையில் இருக்கும் சொத்துக்களுக்குக் கிராக்கியை ஏற்படுத்தி மதிப்பைக் கூட்டுகிறது. செயற்கையாக மதிப்புக் கூட்டப்பட்ட அந்த நிறுவனங்கள் மதிப்புக்கேற்ற வருவாயைக் கூட்ட போட்டியாளர்களை ஒழித்துக்கட்டி பொருட்களின் விலையைக் கூட்டுகிறார்கள். முன்பு பத்து பொருளை நூறு ரூபாய்க்கு விற்றவர்கள் இப்போது பன்னிரண்டு பொருட்களை நூற்றைம்பது ரூபாய்க்கு விற்று ஜிடிபி வளர்வதாகக் கணக்குக் காட்டுகிறார்கள். இந்த விலைவாசி உயர்வு மக்கள் உழைப்பை உறிஞ்சி வாங்க வழியற்றவர்களாக ஆக்குகிறது. குறையும் தேவையால் வீழும் விலையைக் காக்க நிறுவனங்கள் உற்பத்தியைக் குறைத்து இப்போது பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறன. ஜிடிபி உயரும் அதேவேளை வேலையின்மைப் பெருகுகிறது.

இந்தியாவின் அந்நிய முதலீடுகதவுக்குப் பின்னால்! 

மேற்கில் இப்படி உருவாக்கப்பட்ட மிகை மூலதனம் முதலிடவும் சொத்துக்களை வாங்கவும் அப்போது இந்தியாவின் அந்நிய முதலீட்டுக்கான வரம்பு தடையாக நின்றது. இந்த வரம்பை நீக்க முன்பிருந்த காங்கிரஸ் அரசுக்கு அழுத்தம் கொடுத்தார்கள். அப்போது எழுந்த போராட்டங்களை எல்லாம் மீறி காங்கிரஸ் அரசு சந்தையைப் பகுதியளவு அந்நிய முதலீட்டுக்கு திறந்துவிட்டது. எஞ்சியிருந்த தடையை முகநூல், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களின் துணையுடன் ஆட்சிக்கு வந்த பாஜக நீக்கியது. சில்லறை வர்த்தகத்தில் அமெரிக்கப் பெருநிறுவனங்களை அனுமதித்தது.

பெருநிறுவனங்களுக்காக பண மதிப்பிழப்பு! 

(வலப்புற படத்திற்கான புள்ளிவிவரங்கள் உலகவங்கி இணையதளத்தில் இருந்து எடுக்கப்பட்டது)

இந்தியாவின் டொலர் கையிருப்பு கிடுகிடுவென உயர்ந்தது. அதேசமயம் பலர் கைகளில் சுழன்று பொருளாதார நடவடிக்கையில் ஈடுபட்டு இரண்டுக்கும் மேலாக இருந்த ரூபாய் பணசுழற்சியின் வேகம் குறைந்து 1.25 ஆக வீழ்ந்தது. அதாவது பணம் பலரின் கைகளுக்கும் மாறவில்லை. அப்படியென்றால் உள்ளே நுழைந்த இவ்வளவு பணமும் என்ன செய்தது என்று கேட்டால் அது இந்திய நிறுவனங்களின் சொத்துக்களை வாங்கி அதன் மதிப்பைக் கூட்டியது. இது கோரும் சந்தை விரிவாக்க தேவைக்குத் தடையாக வங்கி மூலதனத்துக்கு வெளியில் பண நோட்டுகளின் வழியாக இயங்கிய முறைசாராப் பொருளாதாரம் நின்றது. பணமதிப்பிழப்பு இதனை முடக்கி அதனை வங்கிகளின் கீழும் பெருநிறுவனங்களின் கைகளிலும் கொண்டுபோய்ச் சேர்த்தது.

டொலர் மிகைமூலதனம் பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுப்பாட்டிலும் இலட்சக்கணக்கான வர்த்தகர்களிடமும் இருந்த பசையான இலாபம் தரும் சேவைத்துறைகளான வங்கி, காப்பீடு, வர்த்தகம், சுற்றுலா, மருத்துவம், கல்வி ஆகிய துறைகளைத் தனது மின்னணு வர்த்தகக் கட்டமைப்பின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது.  இந்திய கூட்டுக்களவாணிகள் பொதுத்துறை வங்கிகளில் இருந்த மூலதனத்தைக் கொண்டு நாட்டின் அடிப்படை கட்டமைப்புகளையும் உற்பத்தி நிறுவனங்களையும் வாங்கி குவித்தார்கள். எல்.ஐ.சியை இவர்களின் பங்குகளில் முதலீடு செய்யவைத்து சொத்து மதிப்பைக் கூட்டிக் கொண்டார்கள்.

வரிச் சலுகையும் எண்ணெய் விலை கூடலும் 

இப்படி இவர்கள் போட்டிபோட்டுக் கொண்டு மூலதனம், உற்பத்தி, உள்கட்டமைப்பு, சந்தை, வர்த்தகத்தைத் தங்களிடம் குவித்துப் போட்டியாளர்களை வெளியேற்றியதற்குச் சான்றாக வாங்கவும் இணைக்கவுமான (M&A) நடவடிக்கைகளை ஆச்சார்யா முன்வைக்கிறார் (படம் காண்க). மூலதனம், தொழில்நுட்ப வலிமையுடன் உள்ளே நுழைந்த அமெரிக்கப் பெருநிறுவனங்களின் போட்டியை ஊரார் பணத்தில் உண்டு கொழுக்கும் கூட்டுக்களவாணிகள் சமாளிக்க அவர்களுக்கு வரிச் சலுகையை அறிவித்தது ஒன்றியம். அதனால் ஏற்படும் இழப்பை எண்ணெயில் தனக்கிருக்கும் ஏகபோகத்தைப் பயன்படுத்தி விலையையும் வரியையும் கூட்டி சமாளித்தது.    

இப்படி அமெரிக்கப் பெருநிறுவனங்கள், இந்திய கூட்டுக்களவாணிகள், ஒன்றியம் ஆகிய மூவரும் சந்தையில் தங்களது ஏகபோகத்தைப் பயன்படுத்தி விலைகளைக் கூட்டி வருமானத்தையும் இலாபத்தையும் பெருக்கி வந்தார்கள். உயர்ந்த விலைவாசியால் கையில் இருந்த காசை இழந்த மக்கள் தேவையைக் குறைக்கிறார்கள்; பற்றாக்குறைக்கு கடன் வாங்குகிறார்கள். இந்தத் தேவைக் குறைவினால் ஏற்படும் விலைவீழ்ச்சியைத் தடுக்க முற்றொருமைவாதிகள் உற்பத்தியைக் குறைத்து லாபத்தைக் குறையாமல் காக்கிறார்கள்.

பெரு நிறுவனங்கள்ஒன்றியம் கூட்டணி!

இப்படிப் பெருகும் இலாபம் இவர்களின் சொத்துகளுக்கு மேலும் கிராக்கியைக் கூட்டி இந்தியப் பங்குச்சந்தையை அறுபதாயிரம் புள்ளிகளைத் தாண்ட வைக்கிறது. ஆக இந்த விலைவாசி உயர்வுக்குக் காரணம் அமெரிக்க, இந்தியப் பெருநிறுவனங்கள் மட்டுமல்ல ஒன்றியமும் இதில் கூட்டு. அதனால்தான் இவர்களைக் கூட்டுக்களவாணிகள் என்கிறோம். இப்படி இந்த மூன்று முற்றொருமைவாதிகளும் பொருட்களின் விலைகளை உயர்த்தி நாம் உழைத்து உருவாக்கும் செல்வத்தை உறிஞ்சிக் கொழுக்கிறார்களே என்று தொடர்ந்து விளக்கி விவாதித்துக் கூப்பாடு போடுவதில் எந்த அர்த்தமும் இல்லை.

மாறாக விலைகளைத் தீர்மானிக்கும் காரணிகள் என்ன? அதனைப் பயன்படுத்தி நம் உழைப்பை எப்படி உறிஞ்சுகிறார்கள் என்ற பொறிமுறையைக் (mechanism) கண்டறிந்து தடுப்பதுதான் இப்போது தேவையானது.

தொடரும்….

Tags: