ராமர் கோவிலும், இந்திய எதிர்கட்சிகளின் தடுமாற்றங்களும்!

-சாவித்திரி கண்ணன்

பாரதிய ஜனதாக்கட்சி கட்டமைக்க விரும்பும் ராம ராஜ்யம் குறித்த புரிதலின்றி, ராமர் கோவில் விவகாரத்தில் எதிர்கட்சிகள் தடுமாறுகின்றன! ராமர் கோவில் உருவாக்கம் என்பது எதிர்கால இந்தியாவின் அரசியல், சமூகத் தளத்தில் ஏற்படுத்தப் போகும் மாற்றங்கள் என்ன? பா.ஜ.கவின் வெற்றிகளுக்கும், எதிர்கட்சிகளின் பின்னடைவிற்கும் இதோ விடை:

ராமர் கோவிலை நிராகரித்தால், இந்துக்களால் நாம் நிராகரிக்கப்பட்டு விடுவோமோ என்ற அச்சம் எதிர்கட்சி தலைவர்களின் அடிமனதை ஆட்டுவிக்கிறது! இந்த 32 ஆண்டுகளில் எதிர்கட்சிகள் மனதில் இப்படி ஒரு பயத்தை தோற்றுவித்திருப்பது தான் இந்துத்துவ அரசியலின் வெற்றியாகும்!

பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது வருத்தமும், கோபமும் கொண்ட முஸ்லீம் அல்லாத தலைவர்களின் குரலும், அதன் தொனியும் அதில் வெளிப்பட்ட அறச்சீற்றமும் தற்போது காணாமல் போய்விட்டன!

இது எதிர்கால இந்துத்துவ இந்தியாவை கட்டமைப்பதற்கான அடித்தளமாகும். இது ஆதிக்க சமூகம் கட்டமைக்க விரும்பிய சர்வாதிகார, சனாதன இந்தியாவிற்கான ஆரம்பப் புள்ளியாகும். பெரும்பாலான மக்களை என்றென்றும் அடிமைகளாகவும், தங்களுக்கான ஏவலாளாகவும் வைத்துக் கொள்ள விரும்பும் ஆதிக்க சக்திகளின் வெற்றியாகும்.

ஆகவே, அயோத்தி ராமர் கோவில் என்பது ஒரு புனித தளமல்ல, அது தெய்வீகத்திற்கும், ஆன்மீகத்திற்கும் சம்பந்தமே இல்லாத ஒரு இடமாகும்! எந்த ஒரு ஆன்மீகத் தளத்தையும் வன்முறையாளர்களால் உருவாக்க முடியாது. ஆன்மீகத் தளத்தை முற்றும் துறந்த துறவிகளும், அர்ப்பணிப்புள்ள பெரியோர்களுமே கட்டி எழுப்ப முடியும்!

ஆனால், அயோத்தி ராமர் கோவில் எப்படி உருவானது? அங்கிருந்த பாபர் மசூதியை இடிக்க நடத்தப்பட்ட ரத யாத்திரையின் வழித் தடங்களில் சிந்திய ரத்தம் எவ்வளவு? பலியான உயிர்கள் எத்தனை? நிர்மூலமான குடும்பங்கள் எத்தனை? அதன் மூலம் சிறைப்பட்ட சிறுபான்மையினர்கள் எண்ணிக்கை கொஞ்ச, நஞ்சமா? பரப்பட்ட வன்மம், வெறுப்புணர்வின் வீரியம் தான் என்ன..?

சரியாகச் சொல்ல வேண்டும் என்றால், இந்த ராமர் கோவில் கட்டப்படுவதற்கு முன்பு அயோத்தி என்ற ஊர் உண்மையிலேயே ஒரு ஆன்மீகத் தளமாகத் தான் திகழ்ந்தது! அந்த ஆன்மீக பூமியை சிதைத்து தான் இன்று படாடோபமான ராமர் கோவில் எழுந்துள்ளது! ராமர் கோவில் என்பது ஆர்.எஸ்.எஸ் மற்றும் விஹெச்.பியின் உருவாக்கம்! அதனால் தான் கோவில் திறப்பில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பிரதமருக்கு இணையாக பங்கு பெற்றார்.

ஏதோ பாபர் மசூதி மட்டும் இடிக்கப்பட்டு உருவாகி இருப்பதல்ல, இந்த ராமர் கோவில்! இந்த ஒற்றைக் கோவிலுக்காக அயோத்தியில் இருந்த சுமார் 15 கோவில்களும், ஏராளமான பாரம்பரிய மடங்களும், மேலும் ஒரு மசூதியும் கூட இடிக்கப்பட்டுள்ளன! இவற்றைக் காப்பாற்ற நீதிமன்ற சட்டப் போராட்டங்களை நடத்தி இவர்கள் தோற்றனர். இதைக் காட்டிலும் இந்துக்கள் தங்கள் வீட்டையும், நிலத்தையும் எவ்வளவு போராடியும் காப்பாற்ற முடியாமல் பறி கொடுத்தனர்! இதனால் உள்ளூர் இந்துக்கள் ராமர் கோவில் ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னணியில் தாங்கள் எதிர்கொள்ள நேர்ந்த வலியை நன்கு உணர்ந்துள்ளனர்!

உலக சுற்றுலா தளமாக உருவெடுத்துள்ள அயோத்தி ராமர் கோவில்!

உண்மையில் அயோத்தியில் வசிக்கும் இந்துக்கள் அங்கு பாபர் மசூதி இடிக்கப்பட்டதையோ, சிறுபான்மையினர் அச்சுறுத்தப்படுவதையோ விரும்பவில்லை. ஏனெனில், அன்றைய தினம் அங்கிருந்த பல இந்து கோவில்களுக்கு வெளியே பூ,பழம் மற்றும் பூஜைப் பொருட்களை விற்போராக அங்கு இஸ்லாமியர்கள் இருந்தனர். ஆனால், இன்றைக்கோ அயோத்தியில் இருந்த பல இஸ்லாமியக் குடும்பங்கள் இடம் பெயர்ந்துவிட்டன! இருக்கும் ஒரு சிலரையும் வெளியேறும்படி நிர்பந்தங்கள் தரப்படுகின்றன! இன்று அயோத்தியில் இஸ்லாமியர்களுக்கு உருவாகியுள்ள அச்சுறுத்தல் நாளை அகில இந்தியாவிற்கும் விரிவடையாது என்பதற்கு என்ன உத்திரவாதம்?

ஆக, மாற்று நம்பிக்கையுள்ள சக மனிதர்களை நேசிக்க முடியாத இந்தியாவை கட்டி எழுப்பவே, இந்த ராமர் கோவில் ஒரு தொடக்கமாகிறது!

இந்தச் சூழலில் ராமர் கோவில் திறப்பு விவகாரத்தில் இங்கு எதிர்கட்சிகள் கொண்டுள்ள தடுமாற்றத்தை சற்று பார்ப்போம்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சி விடுத்துள்ள அறிக்கையில், ”ராமர் கோவில் “2019 உச்ச நீதிமன்றத் தீர்ப்பைக் கடைப்பிடித்து, ராமரை வணங்கும் மில்லியன் கணக்கான மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, ஸ்ரீ மல்லிகார்ஜுன் கார்கே, சோனியாகாந்தி மற்றும் ஆதீர்ரஞ்சன் சவுத்திரி ஆகியோர் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க விடுத்த ராமர் கோவில் திறப்பு நிகழ்ச்சிக்கான அழைப்பை மரியாதையுடன் நிராகரித்துள்ளனர் ” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரசின் மற்றொரு முக்கிய தலைவரான சசிதரூரோ, ”நான் திறப்பு விழாவிற்கு போக மாட்டேன்.ஆனால், பிறகொரு நாள் போவேன். ராமர் கோவிலுக்கு போவது என்பது தனி நபர் விருப்பம்” என தெரிவித்துள்ளார். இன்னுமொரு காங்கிரஸ் மூத்த தலைவரான ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணம், ”ராமர் இந்தியாவின் ஆன்மா! எதிர்க்கட்சிகள் கோவில் திறப்பில் கலந்து கொள்ள மறுப்பது துரதிர்ஷ்டவசமானது. ராமர் கோவில் அழைப்பை நிராகரித்தது இந்தியாவின் நாகரிகம் மற்றும் கலாச்சாரத்தை அவமதிப்பதாகும். இது இந்தியாவின் பெருமைக்கும், இருப்புக்கும் சவால் விடுவது போன்ற ஒரு செயல்” என பேசியுள்ளார்!

தனக்கு தரப்பட்ட அழைப்பிதழுக்கு நன்றி தெரிவித்த சரத்பவார்,  “ராமரின் பக்தர்கள் மூலம் இந்த விழாவின் மகிழ்ச்சி என்னை அடையும். இந்த கோவில் உருவானதற்கு அனைவரும் பஙக்ளித்துள்ளனர். ஜனவரி 22-ம் திகதி விழா முடிந்த பிறகு,  நான் அயோத்திக்கு செல்ல திட்டமிட்டுள்ளேன். அந்த நேரத்தில், நான் மிகவும் பக்தியுடன் ராமருக்கு மரியாதை செலுத்த முடியும்’’ என்கிறார்!

டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், திறப்பு விழாவிற்கு என்னை முறையாக அழைக்கவில்லை. ஆகவே, பின்பொரு நாள் குடும்பத்துடன் செல்வேன்…ராமரின் பாதையில் நமது தேசம் சென்றால், இந்தியா உலகின் நம்பர் 1 நாடாக மாறுவதை யாராலும் தடுக்க முடியாது’’ என்கிறார்!

உ.பி.யைச்சேர்ந்த சமாஜ்வாதி கட்சித் தலைவரான அகிலேஷ் யாதவ், பிரான பிரதிஷ்டா நிகழ்ச்சி முடிந்ததும், ராமரை தரிசிக்க குடும்பத்துடன் அயோத்திக்கு செல்லப் போவதாக கூறியிருக்கிறார். மாயாவதியும் செல்வார் என்பதை சொல்ல வேண்டியதில்லை. இந்த அரசியல் தெளிவின்மையால் உ.பியை பா.ஜ.க வசம் இவர்கள் இழந்துள்ளனர்.

சென்னை கோபாலபுரத்தில் மறைந்த முதல்வர் கருணாநிதி வீட்டுக்குச் சென்று ஆர்.எஸ்.எஸ், வி.ஹெச்.பி நிர்வாகிகள் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழ் வழங்கியதோடு, அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்குமாறு தமிழக முதல்வர் முக ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலினுக்கும் அழைப்பு விடுத்துள்ளனர் என்பதை எப்படி புரிந்து கொள்வது? துர்கா ஸ்டாலினோ, ‘நான் பிரிதொரு நாள் வருகிறேன்’ எனக் கூறியதாக அழைப்பு விடுத்த நிர்வாகிகள் மீடியாவிற்கு பேட்டி தந்தனர்! முதலமைச்சரும் திராவிட அரசியல் இயக்கத்தின் தலைவருமான ஸ்டாலினோ ராமர் கோவில் என்று பேசவே அஞ்சுகிறார்! துர்கா ஸ்டாலின் அயோத்தி ராமர் கோவில் சென்றால், அது தமிழக பெண்கள் மத்தியில் ஒரு மறைமுக ராமர் தாக்கத்தை வலுவாக உருவாக்கும்.

உதயநிதியோ, ”ராமர் கோவில் குறித்து ஒரு வரியில் ராமர் கோவிலை நாங்கள் எதிர்க்கவில்லை. அது மசூதியை இடித்து கட்டப்பட்டுள்ளதை ஏற்கவில்லை” என ஒற்றை வரியில் கூறி கடந்துள்ளார்!

மற்றொரு திராவிட அரசியல் கட்சியான அ.தி.மு.க தலைவர் எடப்பாடியோ, ”எனக்கு கால் வலி ஆகவே, நான் திறப்பு விழாவிற்கு போகவில்லை” எனக் கூறியுள்ளார்! ஓ.பி.எஸ்சோ, ”ராமர் கோவில் திறப்புக்கு தமிழக அரசு விடுமுறை அறிவிக்க வேண்டும்” என பா.ஜ.கவின் குரலாக ஒலித்துள்ளார்! மற்ற சில கட்சிகளின் தலைவர்களான ராமதாஸ், கிருஷ்ணசாமி உள்ளிட்ட சிலரோ அழைப்பிதழை மகிழ்ச்சியுடன் வாங்கிக் கொண்டு, நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு போவது பற்றி யோசிக்கலாம் என காத்துள்ளனர்.

மக்கள் நீதி மையம் தலைவர் கமலஹாசனோ “நான் 30 ஆண்டுகளுக்கு முன்பே இதுபற்றி பேசிவிட்னே். அதே கருத்து தான். இப்போதும் அதில் மாற்றம் இல்லை” என்றார். அவர் நடிகராக மட்டும் 30 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த போது பேசியது என்ன? என்பது இன்றைய தலைமுறைக்கு எப்படி தெரியும்? அந்தக் கருத்தை ஏன் தற்போது மீண்டும் சொல்ல அச்சப்படுகிறார்..? எனத் தேடுதலில் இறங்கிய போது தெரிய வந்தது.

அப்போது  அவர், “பாபர் மசூதியை அழிக்க யாருக்கும் உரிமை இல்லை. தஞ்சை கோயிலும், வேளாங்கண்ணி தேவாலயமும் என்னுடையது போல இதுவும் என்னுடைய கட்டிடம்” எனத் தெரிவித்துள்ளதை அறிய முடிந்தது. ஆனால், ஓர் அரசியல் தலைவராக இன்று பரிமாணம் அடைந்திருக்கும் கமலஹாசன் அப்போதை விடவும் இந்த கருத்தை இப்போது தான் மேலும் வலுவாக பேசி இருக்க வேண்டுமல்லவா? எது அவரைத் தடுக்கிறது!

இவர்களுக்கெல்லாம் ஒரு பிரதியட்சமான உண்மை தெரியவில்லை. இந்தியாவில் இந்துக்களுக்கு ராமர் மட்டுமே கடவுள் இல்லை! தமிழ் நாட்டில் ராமர் வழிபாடே அனேகமாக இல்லை என்பது மட்டுமல்ல, சிவன் வழிபாடும், அம்மன் வழிபாடும் பெருமாள் வழிபாடுமே அதிகமாக உள்ளன! தெருவுக்கு தெரு அம்மன் கோவில்கள், முருகன் கோவில்கள்..! இன்னும் பல சிறுதெய்வங்கள், குல தெய்வ வழிபாடுகள் எல்லாம் உள்ளன. இதுவே, இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் அந்ததந்த மண்ணுக்கு ஏற்ப வேறுபடுகிறதே அன்றி, ராமர் எல்லா இந்துக்களுக்குமான கடவுள் அல்ல. தெளிவாக சொல்வதென்றால், அவர் பிராமணர்களுக்கும், அவர்களை அண்டி பிழைப்பவர்களுக்குமான கடவுள் மட்டுமேயாகும்!

”மீண்டும் ராம ராஜ்ஜியத்தை உருவாக்கப் போகிறோம்” என்கிறதே பா.ஜ.க. அந்த ராமராஜ்ஜியம் என்பது என்ன?

தவம் செய்த சம்பூகனின் தலையை வெட்டி வீழ்த்திய ராமர்

ராமாயணத்தில் ஒரு சம்பவத்தை இதற்கு எடுத்துக்காட்டாக சொல்லலாம்; சம்பூகன் என்பவர் வேத மந்திரங்களை உச்சரித்து கடும் தவம் புரிந்து கொண்டிருக்கிறார்! அந்த ஊருக்கு ராமர் வருகிறார்! அப்போது அங்கு ஒரு பிராமணக் குழந்தை இறந்த செய்தி கேள்விப்பட்டு விசாரிக்கிறார்! அப்போது அந்த பிராமணரக்ள் சாஸ்திர விதிகளுக்குப் புறம்பாக கடும் தவம் புரிந்து ஸ்வர்கத்தை அடைய முயல்கிறான் ஒரு சூத்திரன். அதனால் தான் இந்த குழந்தை இறந்தது என்கிறார்கள். உடனே ராமர் தவம் செய்து கொண்டிருந்த சம்பூகரை வெட்டி வீழ்த்துகிறார்! சம்பூகன் தலை பூமியில் வீழ்ந்த அடுத்த நொடியே இறந்து போன பிராமணக் குழந்தை உயிர் பெற்றதாம்!

ஹிரண்யகசிபு, இராவணன் செய்த தவத்தையும் கூட பிராமணர்கள் அரக்கர்கள் தவ வலிமை பெறுவதா? என்ற கோணத்திலேயே பார்க்கின்றனர். ’பிராமணர்களைத் தவிர ஆன்மீகத்தில் முக்கியத்துவம் பெறுவதை முளையிலேயே கிள்ளுதல் அவசியமானதானது’ என வாதிடுகின்றனர்.  ஆக, பா.ஜ.க அமைக்க விரும்பும் ராம ராஜ்ஜியத்தில் சூத்திரர்களின் நிலை எப்படி இருக்கும் என்பதற்கு இதுவே உதாரணம்! இந்த தண்டனையைத் தான் வடலூர் வள்ளலார் விஷயத்திலும், சிவ பக்தன் சிதம்பரம் நந்தன் விஷயத்திலும் அரங்கேற்றினர்.

மேலும் மனித குலத்தில் சரிபாதியாக இருக்கும் பெண்களை இவர்கள் எப்படி நடத்துவார்கள் என்பதற்கு அன்றைய ராமன் தன் மனைவி சீதையை சந்தேகப்பட்டு, தீக்குளிக்க வைத்து நடத்திய விதமே சாட்சியாகும்! இன்றைய பிரதமர் மோடி, ‘தன் மனைவியை புறக்கணித்து வாழ்வது’ ஒரு நிகழ்கால நிதர்சனமாகும்!

இப்படியே எதிர்கட்சித் தலைவர்கள் இருக்கும் பட்சத்தில் பா.ஜ.க மேன்மேலும் வலிமை பெறும்! பா.ஜ.கவின் அரசியலுக்கு பலிகடாவாகத் தான் ஆக முடியும்.

Tags: