பாரதிய ஜனதாக்கட்சியின் அரசின் விருப்பமே ஹரியானா கலவரம்!

-சாவித்திரி கண்ணன்

ந்தியாவில் ஒவ்வொரு மாநிலமாக கலவரங்களை உருவாக்கத் திட்டமிட்டுவிட்டார்கள் போலும்! மணிப்பூர் உச்சபட்ச விவாதமாகி வருவதை தவிர்க்க, ஹரியானாவில் கலவரத்தை உருவாக்கியுள்ளனர் என்றே தோன்றுகிறது. உளவுத் துறை எச்சரித்தும் உதாசீனப்படுத்தி, கலவரத்தால் கட்சி வளர்க்கிறதா பா.ஜ.க!

ஹரியாணாவின் குருகிராம் பகுதியில் முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் ஏரியாவில் ஹிந்து வெறி அமைப்புகளான விஸ்வ ஹிந்து பரிஷத் (Vishva Hindu Parishad – VHP), பஜ்ரங்தள் (Bajrang Dal) ஆகிய அமைப்புகளுக்கு பேரணி நடத்துவதற்கு எப்படி அனுமதித்தார்கள் என்பது ஒரு கேள்வி என்றால், அதை மாநிலத்தை ஆளும் பா.ஜ.கவின் மாவட்டத் தலைவரே துவக்கி வைப்பது அதைவிட மோசம்.

அதுவும், இந்த பேரணிக்கு முன்பு காவல்துறையால் தேடப்படும் குற்றவாளியும், பல கொலைகளில் சம்பந்தப்பட்டவருமான மோனுமானேசர் (Monu Manesar) தான் கலந்து கொள்ளப் போவதாக காணொளி வெளியிட்டதை மாநில அரசு எப்படி வேடிக்கை பார்த்தது? அது இஸ்லாமியர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது சமூக வலைத்தள பதிவுகளில் வெளிப்பட்டது. இதன் பிறகாவது, ”அப்படி அவர் வந்தால் கைதாவார்” என மாநில முதல்வரோ அல்லது காவல்துறைத் தலைவரோ ஒரு அறிக்கையை முன் கூட்டியே வெளியிட்டு இருந்தால் இந்த கலவரத்திற்கே வாய்ப்பில்லை. உளவுத் துறையும் அரசை எச்சரித்துள்ளது. ஆனால், ‘கலவரம் நடக்கட்டும்’ என்ற மனநிலையில் ஒரு அரசே காத்திருந்தால் அவர்கள் ஏன் தடுக்கப் போகிறார்கள்!

இந்த கலவரத்தின் கதாநாயகனான மோனுமனேசரை பற்றி இங்கு சொல்லியாக வேண்டும். வன்முறைக்கு பேர் போன இவர் கடந்த பத்தாண்டுகளாக பா.ஜ.காவால் வளர்த்தெடுக்கப்பட்டு வருகிறார். இவருக்கு அரசின் பசு பாதுகாப்பு கமிட்டியில் பதவியும் தரப்பட்டுள்ளது. இவர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ள ஏதேனும் ஒரு வீடியோவை பார்த்தவர்கள் கூட குலை நடுங்கிப் போவார்கள்! ஏ.கே 47 ராணுவம் பயன்படுத்தும் உள்ளிட்ட நவீன இயந்திரத் துப்பாக்கிகளோடோ அல்லது விலை உயர்ந்த கார்களோடோ தான் இவர் தன்னை விளம்பரப்படுத்தி கொள்வார்.

யாரேனும் ஒரு இளைஞன் அவரது காலடியில் அடிபட்ட முகத்துடன் கதறி அழுது கொண்டிருப்பது போலவும், இவர் தன் நண்பர்களுடன் ஆவ்ன் தலைமயிரை இழுத்துப் பிடித்தவாறும் ஸ்டைலாக போட்டோவுக்கு போஸ் கொடுப்பார். இன்னும் சில காணொளிகளில் மோனுமனேசரின் நண்பர்கள் யாரேனும் ஒரு இளைஞரை அடித்து நையப் புடைப்பார்கள்!

மோனுமானேசர் ஒரு காணொளி பதிவில் இவ்வாறு பேசுகிறார்:

சகோதாரர்களே நாம் இந்தப் பிரச்சினைக்கு ஒரு முடிவு கண்டாக வேண்டும். எனக்கு லவ் ஜிகாத் பண்றவங்களோட லிஸ்டைக் கொடுங்க. நானும், என் நண்பர்களும் அவர்களை உதைப்போம். நாங்க போலீசுக்கு பயபடுறவங்க இல்லை. ஏன்னா எங்க பெரிய அண்ணன் அங்க உட்கார்ந்திருக்காரு. அவர் பேர் தேவையில்லை. ஆனா, அவரு எங்க பின்னணியில இருக்கார். ( இதற்கு சில நாட்களுக்கு முன்பு தான் அமித்ஷாவுடன் தான் இருப்பதை டிவிட்டரில் போட்டார் மோனுமனேசர்) எவன் லவ் ஜிகாத் பண்றவன்..? எவன் நம்ம பொண்ணுங்களை கிண்டல் பண்றவன் சொல்லுங்க பின்னி எடுத்திடுவோம். நாங்க இதுல சமரசமே செய்ய மாட்டோம். நம்ம மதத்தின் மேல கைய வைக்கிறவன் மேல நமக்கு சமரசமே இல்லை. ஒரே வழி உதைக்கிறது தான். பேச்சு பிரயோஜனமில்லே. அவங்க உதைபாட் வேண்டியவங்க..என பகிரங்கமாக வன்முறையாக அவர் பேசும் காணொளிகள் தொடர்பாக பாஜக அரசு இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதே போல இவர் மீதான எந்த கொலை வழக்கையும் ஹரியானா போலீஸ் பதிவு செய்யாது.

மதவெறியன் மோனுமனேசர்

இந்த நிலையில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இவர் எல்லை தாண்டி ராஜஸ்தான் மாநிலத்தின் பரத்பூரைச் சேர்ந்த இரண்டு இஸ்லாமிய இளைஞர்களான நசீர், ஜீனைத் ஆகியோரை சந்தேகத்தின் பேரில் கடத்திச் சென்று பிவானி  என்ற இடத்தில் காரில் வைத்தே எரித்துவிடுகிறார். இது ராஜஸ்தானில் பெரும் அதிர்வை உருவாக்கி மக்கள் கொந்தளிக்க, அங்குள்ள காங்கிரஸ் அரசு மோனுமனேசரை கைது செய்ய உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து தலைமறைவானார் மோனு.

எரிக்கப்பட்ட கார். இரண்டு இஸ்லாமிய இளைஞர்கள், மோனு மனேசர், அவருக்கு ஆதரவாக நடந்த ஹிந்து மகா சபை கூட்டம்.

இவரை கைது செய்ய வேண்டும் என ‘Arrest monu manesar’ என்ற வாசகம் வட இந்தியாவில் டிரெண்ட் செய்யப்பட்டது. ஆனால், ஹரியானாவிலோ ஹிந்து மகா சபை பா.ஜ.க அரசின் ஆதரவுடன் மோனுமனேசருக்கு ஆதரவாக பெரிய கூட்டம் நடத்தி அவரது வன்முறையை நியாயப்படுத்தியது. மத்திய, மாநில  பா.ஜ.க அரசின் பக்கபலத்தால் எந்த பதட்டமும் இல்லாமல் காணொளிகளை வெளியிட்டவாறு இருந்தார் மோனு. இவரது எட்டு காணொளிகள் வன்முறையைத் தூண்டுவதாக யூடியுப் நிறுவனமே அழித்துள்ளது.

இந்தச் சூழலில் தான் ஜுலை 31 அன்று வி.ஹெச்.பி (VHP) யும்,பஜ்ரங்தளும் இணைந்து நடத்திய, ‘பிரிஜ் மண்டல் ஜலாபிஷேக் யாத்ராவில்’ (Brajmandal Jalabhishek Yatra) தான் கலந்து கொள்ள உள்ளதாகவும், தலைமறைவாக உள்ள தன் நண்பர்களையும் கலந்து கொள்ளச் சொல்லியும் பல கொலைகளில் சம்பந்தப்பட்ட மோனுமனேசர் காணொளி வெளியிடுகிறார். பெரும் கொந்தளிப்பு மனநிலைக்கு இஸ்லாமியர்கள் தள்ளப்பட்டனர். மாநில பா.ஜ.க அரசும், காவல்துறையும் அந்த பதட்டத்தை தணித்து நம்பிக்கை தர முன்வரவில்லை என்பது தான் கவனத்திற்கு உரியதாகும். ஆக, ‘கலவரம் நடக்கட்டும், மணிப்பூரை மக்கள் மறக்கட்டும்’ என நினைத்தார்களோ, என்னவோ!

எதிர்பார்த்தது போலவே, இந்த ஊர்வலத்தில் மோசமான கோஷங்கள் எழுப்பட்டுள்ளன. ”ஹிந்து மத துரோகிகளை சுட்டுக் கொல்வோம்” என்ற மோனுமனேசரின் பிரபல முழக்கத்தை அவரது நண்பர்கள் எழுப்பி அணிவகுத்து வந்துள்ளனர். ஓரிடத்தில் இஸ்லாமிய இளைஞர்கள் இதை தட்டிக் கேட்டதும் இது கலவரமாகிவிட்டது. பெருந்திரளான இந்து இளைஞர்கள் இருந்ததால் இஸ்லாமியர்கள் உதைபட வேண்டியதாகிவிட்டது.

இஸ்லாமிய வியாபாரத் தளங்கள், கடைகள் தள்ளுவண்டி கடை உட்பட எரித்து சாம்பலாக்கப்பட்டுள்ளன. எரிக்கப்பட்ட கார்களுக்கு எண்ணிக்கையே இல்லை. இது வரை இரு போலீசார் உட்பட ஆறு பேர் இறந்துள்ளனர். இரு நூறுக்கும் மேற்ப்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். கலவரம் ஹரியானாவில் ஐந்து மாவட்டங்களுக்கு பரவியதோடு, டெல்லியிலும் பதட்டத்தை தோற்றுவித்துள்ளது. மாநில பா.ஜ.க அரசு வன்முறை சம்பவங்களை தவிர்ப்பதற்கு முனைப்பு காட்டி இருந்தால், இதற்கு வாய்ப்பே இல்லை. ஆனால், ஹரியானா முதல்வர்  மனோகர் லால் கட்டார் ”இது ஏதோ சதிச் செயல்” எனப் பேசுகிறார்.

‘பா.ஜ.க ஆட்சியின் கீழ் வாழும் மக்களுக்கு எந்த பாதுகாப்பும் இருக்காது’ என்பதை குஜராத், மணிப்பூர், ஹரியானா என ஒவ்வொரு மாநிலமாக கலவரத்தை நிகழ்த்தி மீண்டும், மீண்டும் நிரூபித்து வருகிறார்கள்! மக்கள் விழிப்படைந்தால் மட்டுமே தீர்வு கிடைக்கும்.

Tags: