இந்தியாவில் மோடியின் ஆட்சி முடிவுக்கு வருகிறது?

ந்தியாவில் பொதுத்தேர்தல் நடந்து கொண்டிருக்கிற இந்தச் சூழலில் தேர்தல் முடிவுகள் குறித்து பல்வேறு ஆரூடங்கள் கூறப்பட்டு வருகின்றன.

எல்லா ஆரூடங்களினதும் பொதுவான கணிப்பு இம்முறை தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆளும் பாரதீய ஜனதா கட்சி மண் கவ்வும் என்பதாகவே இருக்கின்றது. கருத்துக்கணிப்புகளும் பெரும்பாலும் அவ்வாறே இருக்கின்றன. ஆனால் அதேநேரத்தில் காங்கிரஸ் கட்சிக்கும் மத்தியில் தனித்து ஆட்சி அமைக்கும் வகையில் அறுதிப்பெரும்பான்மை கிடைக்காது எனவும் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், மோடியின் வீழ்ச்சியை முன்கூட்டியே உறுதிப்படுத்துவது போல மேற்கத்தைய ஊடகங்களும் கட்டுரைகள், செய்திகள் என்பனவற்றை வெளியிட்டு வருகின்றன. இது அவர்களது வழமையான பாணியாகும்.

அமெரிக்காவின் பிரபல சஞ்சிகையான ‘ரைம்’ (Time)  ஐரோப்பா, மத்திய கிழக்கு, ஆபிரிக்கா, ஆசியா மற்றும் தென் பசுபிக் நாடுகளுக்கான சர்வதேசப்பதிப்பில் தனது ஆகப்பிந்திய இதழில் (May 20, 2019) மோடியின் அட்டைப்படத்துடன் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. பிரித்தானியாவில் பிறந்து, இந்தியாவில் கல்விகற்ற Aatish Taseer (இவர் இந்தியப்பெண் பத்திரிகையாளர் Tavleen Singh இற்கும் பாகிஸ்தானிய அரசியல்வாதியும் தொழிலதிபருமான Salmaan Taseer இற்கும் பிறந்த புதல்வர்) என்பவரால் எழுதப்பட்ட அந்தக் கட்டுரைக்கு ‘இந்தியாவின் பிரித்தாளும் தலைவர்’ (India’s Divider in Chief) எனத் தலைப்பிடப்பட்டுள்ளது.

அக்கட்டுரையில்,

‘2014ல் மோடி ஊழல் மற்றும் சுரண்டல்களில் தவிக்கும் மக்களின் மீட்பராக தன்னை முன்னிறுத்தி வளர்ச்சியை நோக்கி நாட்டை செலுத்தும் ஒரு நம்பிக்கையை உருவாக்கப் போவதாக பிரச்சாரத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். ஆனால் 2019ல் பிரச்சாரம் முற்றிலும் வேறுமாதிரி திசைதிரும்பியுள்ளது. வளர்ச்சித் திட்டங்கள் மூலம் பொருளாதார வேறுபாடுகளை களையப் போவதாக ஆட்சிக்கு வந்தவர்கள் மத வேறுபாடுகளோடு வாழ்வதற்கான பிரச்சாரங்களை செய்து வருகிறார்கள்.

இந்து மத மறுமலர்ச்சியின் ஒரு பகுதியாக, வருங்காலத்தில் பிரகாசமான எதிர்காலத்தை அளிக்கப்போகும் ஒரு தூதுவராக அவர் இப்போது வலம் வரத் தொடங்கியுள்ளார். அதேவேளை, ஓர் அரசியல்வாதியாக மோடி ஏற்கெனவே சொன்ன வாக்குறுதிகளை காப்பாற்றத் தவறிவிட்டார். இதன்மூலம் மீண்டும் ஒரு தேர்தலில் போட்டியிடும் நம்பிக்கையை அவர் இழந்துவிட்டார்.

மோடியின் பொருளாதார அதிசயம் செயல்படுத்த முடியாமல் தோல்வியில் முடிந்தது மட்டுமில்லை, இந்தியாவில் நச்சுகலந்த ஒரு மதவாத தேசிய ஒரு மோசமான சூழ்நிலை உருவாகவும் அவர் உதவி புரிந்துள்ளார்’
எனத் தெரிவிக்கப்ட்டுள்ளது.

இதே இதழில் Aatish Taseer எழுதிய ‘உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தில் மோடி அரசாங்கம் ஐந்து ஆண்டுகளுக்கு நீடித்திருக்க முடியுமா? (Can the World’s Largest Democracy Endure Another Five Years of a Modi Government?) என்ற தலைப்பில் இன்னொரு கட்டுரையும் வெளியாகியுள்ளது.

இதேநேரத்தில், பிரித்தானியாவில் இருந்து வெளியாகும் ‘த எக்கோனமிஸ்ற்” (The Economist) சஞ்சிகையும் மோடியை விமர்சித்து கட்டுரை வெளியிட்டுள்ளது.

அதேபோல, அமெரிக்காவில் இருந்து வெளியிடப்படும் பிரபல்யமான ‘வோல்ஸ்றீற் ஜேர்னல்’ (Wall Street Journal) பத்திரிகையும் மோடி பற்றி கட்டுரையை வெளியிட்டுள்ளது.

பொதுவாக, மேற்கத்தைய ஊடகங்கள் பல்வேறு வழிகளில் தகவல்களைத் திரட்டுவதில் வல்லவை. அவை அமெரிக்க அரசின் புலனாய்வுத்துறையின் தகவல்களில் மட்டும் தங்கியிருப்பதில்லை. அரசசார்பற்ற நிறுவனங்கள் முதல் பல்வேறு தனிநபர்கள் வரை அவைகளுக்கு தகவல் வழங்கும் சக்திகளாக இருக்கின்றனர்.

இப்பொழுது இந்தப் பத்திரிகைகள் இந்தியத் தேர்தல் முடிவதற்கு முன்பாகவே மோடியை விமர்சித்து எழுதுவதில் இருந்து தேர்தல் முடிவுகள் மோடிக்கு பாதகமாக அமையப்போகின்றது என்பதை அவை மோப்பம் பிடித்துவிட்டன என்பதை ஊகித்துக் கொள்ளலாம்.

2015 இல் இலங்கை ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதற்கு ஒருவாரம் முன்னதாக வெளியான ‘த எக்கோனோமிஸ்ற்’ சஞ்சிகையில், ‘ராஜபக்ச யுகம் முடிவுக்கு வருகிறது?’ என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று வெளியாகி இருந்தது. பின்னர் அவ்வாறே நடந்தது என்பதை இங்கு குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.

Tags: