“கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் சுற்றுச் சூழலுக்கு எதிரானது”

water chennai

சென்னை நகரத்தில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் நிலத்தடி நீர் முற்றிலுமாக தீர்ந்துபோகும் நிலை இருப்பதாக சமீபத்தில் நிதி ஆயோக் (Niti Aayog) அறிக்கையில் வெளியிடப்பட்ட தகவலை எச்சரிக்கை மணியாக எடுத்துக்கொள்ள வேண்டும் என நீர்வள மேலாண்மை நிபுணர் எஸ்.ஜனகராஜன் தெரிவித்துள்ளார்.

நிதி ஆயோக் அறிக்கை தொடர்பாக பிபிசி தமிழுக்கு ஃ பேஸ்புக் நேரலையில் விரிவாகப் பேசிய ஆய்வாளர் ஜனகராஜன், நிலத்தடி நீர் தட்டுப்பாட்டிற்கான முக்கிய காரணங்கள் என்ன?, மத்திய மாநில அரசுகளின் திட்டங்கள் எந்த விதத்தில் பயனளிக்கின்றன?, உடனடியாக எடுக்கப்படவேண்டிய நீர் சேமிப்பு நடைமுறைகள் பற்றி பேசினார். அந்த பேட்டியின் தொகுப்பு இது.

கேள்வி: நிதி ஆயோக் அறிக்கையில் கூறியுள்ளபடி சென்னையில் 2020ல் நிலத்தடி நீர் தீர்ந்துபோய்விடுமா? இந்த அறிக்கை மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பதில்: நிதி ஆயோக் அறிக்கையில் கூறியுள்ளது உண்மையா பொய்யா என்று ஆராய்வதை விட, அந்த அறிக்கையை ஒரு எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ளவேண்டும். நிலத்தடியில் உள்ள நீர் என்பது பயன்பாட்டிற்கு உகந்த நீராக இருக்கவேண்டும். தற்போதுள்ள நிலையில் சென்னையில் பல இடங்களில் நிலத்தடி நீரை அதிக அளவில் பயன்படுத்திவிட்ட காரணத்தால், நீர் காலியான இடங்களில் கடல்நீர் புகுந்துவிட்டதை பலரும் அறிவர். இந்த நிலை சென்னை நகரம் முழுவதும் ஏற்படும் என்று நாம் புரிந்துகொள்ளவேண்டும். நிலத்தடியில் முற்றிலுமாக நீர் இல்லாமல் போகாது, அங்குள்ள நீர் உப்புநீராக இருக்கும். நீர் இருந்தாலும் அதைப் பயன்படுத்தமுடியாது.

water chennai

நீர்வள மேலாண்மை நிபுணர் எஸ்.ஜனகராஜன்

கேள்வி: நிலத்தடி நீர் தீர்ந்துபோவதற்கான முக்கிய காரணங்கள் என்ன? நிலத்தடி நீர்ப் பயன்பாட்டை எவ்வாறு நாம் ஒழுங்குப்படுத்திக்கொள்ளவேண்டும்?

பதில்: நிலத்தடி நீர் காணமல்போய்விட்டது என்பது ஒரு குற்றம். இதை ஏன் குற்றம் என்று நான் கருதுகின்றேன் என்றால், நாம் வாழும் இந்த சென்னை நகரம் மழை பெய்யாத பிரதேசம் அல்ல. சென்னையில் மட்டும் சராசரியாக 1300-1350 மில்லிமீட்டர் மழை பெய்கிறது. இந்த அளவு மழை பெய்யும் நகரத்தில் தண்ணீர் பஞ்சம் வரவேகூடாது. அத்தகைய நிலை ஏற்படுகிறது என்றால் அதற்கு நாம் செய்த பிழைகள்தான் காரணம், அது குற்றம். மக்கள் மட்டுமே குற்றவாளிகள் அல்ல. அரசாங்கமும் சேர்த்துத்தான். கடந்த நாற்பது ஆண்டுகளாக இந்த பிரச்சனையைப் பற்றி தெரிந்தும் எந்த முன்னேற்பாடும் செய்யவில்லை. இதற்கு முக்கிய காரணம் வருங்காலத்தைப் பற்றி எந்தவிதமான அக்கறையும் இல்லாமல் செயல்பட்டதுதான். தீர்க்கமாக யாரும் யோசிக்கவில்லை. அதனால்தான் நாம் தற்போது துன்பப்படுகிறோம்.

2015ல் சென்னையில் வெள்ளம் வந்தபோது பெய்த மழை நீர் சுமார் 300 டிஎம்சி (TMC). இந்த நீரை முழுவதுமாக நாம் கடலில் விட்டோம். தற்போது சென்னை மாநகரத்தின் ஒரு மாதத்தின் தேவை ஒரு டிஎம்சி மட்டுமே. அப்படிப் பார்த்தால், ஒரு ஆண்டுகே நமக்கு தேவை வெறும் 12 டிஎம்சி தண்ணீர் மட்டுமே. ஆனால் 2016ல் வரலாறு காணாத வறட்சியைச் சென்னை சந்தித்தது. இது குற்றமில்லையா? தண்ணீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு சோம்பேறித்தனமான தீர்வைதான் சொல்லுகிறார்கள். கடல்நீரை குடிநீராக்கிவிடலாம் என்பதுதான் அது. இந்த திட்டத்தால் எவ்வளவு சுற்றுச்சூழல் ஆபத்து ஏற்படும் என்பதை புரிந்துகொள்ளாமல் இது நடத்தப்பட்டுவருகிறது.

கேள்வி: சென்னை நகரில் வெள்ள நீர் வடிகால் ஏற்படுத்தப்பட்டுள்ள இடங்களில், மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகளை செய்யவேண்டும் என சென்னை மாநகராட்சியிடம் கடந்த வாரம் பல குடியிருப்போர் நலச் சங்கங்கள் புகார்கள் கொடுத்தன. இதுபோல மழைநீரைச் சேமிக்க வேறு என்ன கட்டமைப்புகள் செய்யப்படவேண்டும்? மழைநீர் சேகரிப்பு, நிலத்தடி நீர் பயன்பாடு போன்ற விஷயங்களில் நாம் செய்யும் தவறு என்ன?

பதில்: வெள்ளநீர் வடிகால் கட்டுவது என்பதே ஒரு பெரிய மோசடி.

ஊழல் செய்வதற்காகவே பிறந்த திட்டம் அது என்று நான் கருதுகிறேன். வெள்ளநீர் வடிகால் என்பது தூய்மையான மழைநீரை வெளியேற்றுவதற்கான ஒரு கட்டமைப்பு. மழைநீர் தூய்மையான நீராக உள்ளது. அதை ஒரு இடத்தில் சேகரிக்கவேண்டும். ஆனால், தற்போது உள்ள வெள்ளநீர் வடிகாலில் சேரும் நீரானது முழுவதுமாக பக்கிங்கம் கால்வாய்,கூவம் அல்லது அடையார் ஆற்றைச் சென்று சேருகின்றது. ஒரு சொட்டு நீரைக்கூட நாம் சேகரிப்பதில்லை. வெள்ளநீர் வடிகாலில் மழைநீரை சேமிக்கும் வசதி முறையாக அமைக்கப்படவில்லை. அமைக்கப்பட்ட வெள்ளநீர் வடிகாலும் சரியாக பராமரிக்கப்படுவதில்லை. பல இடங்களில் வெள்ளநீர் வடிகாலில் கல், மண், செடிகள், பிளாஸ்டிக் பைகள் நிரம்பி வழிகின்றன.

சில இடங்களில் வடிகால் மீது கடைகள்,வீடுகள் அமைந்துள்ளன. வடிகால் கட்டப்பட்ட பின்னர், பராமரிக்கப்படுவதில்லை. இதுபோன்ற ஒரு கட்டமைப்பை பணத்தை செலவு செய்வதற்காக மட்டுமே கட்டுகிறார்கள் என்று நான் எண்ணுகிறேன். பயன்பாடற்ற, பராமரிப்பில்லாத ஒரு கட்டுமானத்தை ஏன் அமைத்து மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கிறார்கள்?

water chennai

கேள்வி: நீங்கள் சொல்வதைப் பார்த்தால், வெள்ள நீர் வடிகால் கட்டமைப்புகள் மூலமாக எந்தப் பயனும் இல்லையா? வடிகால் என்பது தண்ணீர் சேகரிக்கமுடியாத கட்டமைப்பா?

பதில்: நிச்சயமாக. வெள்ளநீர் வடிகாலில் சேரும் மழைநீர், கழிவுநீரோடு சேர்ந்து கடலில் போய் சேர்கிறது. இந்த திட்டத்தால் எந்த நன்மையும் இல்லை.

கேள்வி: தண்ணீர் தட்டுப்பாடு என்று வரும்போது, கடல்நீரைக் குடி நீராக்கும் ஆலைகள் பற்றி அரசு சொல்கிறது. ஏற்கனவே இரண்டு ஆலைகள் செயல்படுகின்றன. மேலும் இரண்டு ஆலைகள் திறக்கப்படும் என்று அறிவிப்பு வந்துள்ளது. இது தண்ணீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு இல்லையா?

பதில்: கடல் நீரை குடிநீராக்கும் இந்த திட்டம் ஒரு கொடுமையான திட்டம். மனித இனத்திற்கு எதிரானது, கடலோரச் சுற்றுச்சூழலுக்கு எதிரானது.

கேள்வி: தற்போது சென்னை நகரத்தின் பெருமளவு குடிநீர் தேவையை கடல்நீரைக் குடிநீராக்கும் ஆலைகள்தான் தீர்த்துவருகின்றன. இது எப்படி குற்றமாகும்?

பதில்: கடல் நீரை குடிநீராக்கும் ஆலைகள் தேவையற்றவை. முதலில் அந்த ஆலைகளின் இயங்குதிறனைப் பற்றி பார்ப்போம். தற்போது சென்னைக்கு தண்ணீர் தரும் ஆலைகள் நெமேலி மற்றும் மீஞ்சூரில் அமைந்துள்ளன. இந்த இரண்டும் தினமும் சுமார் பத்துகோடி லிட்டர் குடிநீரை தரும் ஆலைகளாக அறிவிக்கப்பட்டன. ஆனால் இரண்டும் முழுமையான இயங்குதிறனில் செயல்படுவதில்லை.

இரண்டு ஆலைகள் செயல்படுவதற்கு பெருமளவு மின்னாற்றல் செலவிடப்படுகிறது. ஆயிரம் லிட்டர் தண்ணீர் தயாரிக்க ரூ.46செலவாகிறது. செலவே இல்லாமல் பெய்யும் மழையை சேகரிப்பதைவிட இந்த திட்டம் சிறந்ததா? மழை நீர் சேகரித்தால் மக்களுக்கும் நல்லது, கடலோர சுற்றுச்சூழலுக்கும் நல்லது.

மேலும் இரண்டு ஆலைகள் வரவுள்ளன. அதாவது ஒரு நாளைக்கு சுமார் 750மில்லியன் லிட்டர் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை அரசு முன்னெடுக்கிறது. நல்ல மழை பெய்யும் நகரத்தில், மழை நீரை சேகரிக்காமல், கடல் நீரைக் குடிநீராக்குவது எந்த விதத்தில் நியாயம்?

மழை நீர் சேகரிக்க இடமா இல்லை? சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் உள்ள சுமார் 4,000 ஏரிகள் உள்ளன. இதில் நீரைச் சேகரிக்காமல், வீணாக்குவது குற்றமில்லையா?

ஏரிகளில் நீரைச் சேமித்தால், ஒவ்வொரு ஏரியும் அந்தந்த இடத்தில் உள்ள நிலத்தடி நீரின் அளவை உயர்த்தும், அங்குள்ள பல்லுயிர்களுக்கு பாதுகாப்பு தரும். இயற்கை வளமாக இருந்தால், மீண்டும் மழை. இத்தனை நன்மைகளை விடுத்து கடல்நீரைக் குடிநீராக்க நாம் என்ன சௌதி அரேபியா அல்லது குவைத் போன்ற நாடுகளிலா இருக்கிறோம்? மழை மிககுறைவாக பெய்யும் இந்த நாடுகளும் நாம் வாழும் நாடும் ஒன்றா?

கடல் நீரைக் குடிநீராக்கும் ஆலையில் தயாரிக்கும்போது, நூறு லிட்டர் கடல்நீரில் வெறும் இருபது லிட்டர் மட்டுமே குடிநீராகும். எண்பது லிட்டர் அதிக உப்பு நிறைந்த, ரசாயணங்களைக் கொண்ட கழிவு நீராகும். அதையும் கடலில் கொட்டுவதால், கடலோர சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படும். தொடர்ந்து கழிவுநீரை கடலில் கொட்டினால், ஆமைகள் கரைக்கு வராது, மீன்கள் பாதிக்கப்படும். சுமார் பத்து லட்சம் மீனவர்கள் பாதிக்கப்படுவார்கள். இத்தனை அழிவை ஏற்படுத்தி தண்ணீரை தயாரிப்பதற்கு பதிலாக இயற்கையாக பெய்யும் மழையை ஏன் சேகரிக்கக்கூடாது?

பிரமிளா கிருஷ்ணன்
பிபிசி தமிழ்
24 ஜூன் 2018

(1 TMC = 28.3 மில்லியன் கன மீற்றர். 1 கன மீற்றர் = 1000 லீற்றர்)

குறிப்பு: குடிநீர்ப்பிரச்சனை தொடர்பான சென்னை நிலைமைகள், யாழ் குடாநாட்டு நிலைமைகளுக்கும் பொருந்தி வருவதால் இக்கட்டுரை வெளியிடப்படுகின்றது.

Tags: