காங்கிரஸ் கட்சியின் பரிதாப நிலை!
மக்களவைத் தேர்தலில் 18 மாநிலங்களில் காங்கிரஸ் ஓரிடம் கூட பெறவில்லை
மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட 2-வது படுதோல்வி இதுவாகும். கடந்த 2014 தேர்தலிலும் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. அப்போது 44 இடங்களை மட்டுமே பெற்றது.
தற்போதைய தேர்தலில் ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், சண்டிகர், தாதர் மற்றும் நாகர் ஹவேலி, டாமன் டையூ, குஜராத், ஹரியாணா, இமாச்சல பிரதேசம், ஜம்மு காஷ்மீர், லட்சத் தீவுகள், மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து, டெல்லி, ராஜஸ்தான், சிக்கிம், திரிபுரா, உத்தராகண்ட் ஆகியவற்றில் காங்கிரஸ் முழு தோல்வி அடைந்துள்ளது. இது தொடர்பாக பாஜக தலைவர் அமித் ஷா கூறும்போது, “17 மாநிலங்களில் பாஜக 50 சதவீதத்துக்கு மேல் வாக்குகள் பெற்றுள்ள நிலையில் 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் காங்கிரஸ் பூஜ்யம் பெற்றுள்ளது” என்றார்.
காங்கிரஸ் கட்சியின் உ.பி. மாநிலத் தலைவர் ராஜ் பப்பர், ஒடிசா மாநிலத் தலைவர் நிரஞ்சன் பட்நாயக் ஆகியோர் தங்கள் மாநிலங்களில் கட்சியின் தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலகுவதாக அறிவித்துள்ளனர்.
காங்கிரஸ் கட்சியில் முடிவு எடுக்கும் உயர் அமைப்பான காரிய கமிட்டியின் கூட்டம் இன்று சனிக்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இக்கூட்டத்தில் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது பதவியை ராஜினாமா செய்ய முன்வருவார் எனத் தெரிகிறது.
கடந்த முறையை போலவே எதிர்க்கட்சித் தலைவர் இல்லாத மக்களவை
கடந்த முறையை போலவே, 17-வது மக்களவையும் எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் அமையும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
நாடாளுமன்ற மக்களவையில் ‘எதிர்க்கட்சித் தலைவர் பதவி’ என்பது அரசியல் சாசனத்தின் அடிப்படையில் செய்யப்படும் நியமனம் ஆகும். மக்களவையில் மொத்தமுள்ள இடங்களில் 10 சதவீதம் அதாவது 55 இடங்களை பெறுகின்ற கட்சியே ‘எதிர்க்கட்சி’ என்ற அந்தஸ்தை பெறும்.
கடந்த 2014 மக்களவைத் தேர்தலிலும் மேற்குறிப்பிட்ட எண்ணிக்கையை எந்தக் கட்சியும் பெறவில்லை. இதன் காரணமாக, எதிர்க்கட்சித் தலைவர் பதவி யாருக்கும் வழங்கப்படவில்லை.
அதேபோல், தற்போது நடந்து முடிந்த 17-வது மக்களவைக்கான தேர்தலிலும் எந்தக் கட்சிக்கும் 55 இடங்கள் கிடைக்கவில்லை. மிகப்பெரிய தேசியக் கட்சியாக கருதப்படும் காங்கிரஸுக்கு 52 இடங்கள் மட்டுமே கிடைத்திருக்கின்றன.
எனவே, தற்போது அமையப் போகும் புதிய மக்களவையிலும் எதிர்க்கட்சித் தலைவர் என்ற பதவி இருக்கப் போவதில்லை எனத் தெரிகிறது.
ராகுல் காந்தியை போல் புஸ்வாணமான பிரியங்கா அலை: உ.பி.யில் 2-ல் இருந்து ஒன்றாகக் குறைந்த தொகுதிகள்
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை போல், பிரியங்கா காந்தி வதேராவின்(47) அலையும் புஸ்வாணமாகி உள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிரியங்காவால் காங்கிரஸுக்கு எந்த லாபமும் கிடைக்காததுடன் உ.பி.யில் ஏற்கெனவே காங்கிரஸ் பெற்றிருந்த 2 தொகுதிகள் தற்போது ஒன்றாகக் குறைந்துள்ளது.
1999-ல் நடந்த மக்களவை தேர்த லில் கர்நாடகாவின் பெல்லாரி மற்றும் உபியின் அமேதியில் போட்டியிட்டார் காங்கிரஸ் தலைவ ராக இருந்த சோனியா காந்தி. இவருக்காக முதன்முதலாக பிரச்சாரக் களம் இறங்கிய பிரியங்கா, பெல்லாரி தொகுதியில் சோனியாவின் தேர்தல் பொறுப் பாளராகவும் இருந்தார். இங்கு பாஜக சார்பில் போட்டியிட்ட சுஷ்மா ஸ்வராஜை வென்றார் சோனியா. பிறகு அடுத்து வந்த தேர்தல்களில் அமேதியில் சகோதரர் ராகுலுக் கும், ரேபரேலியில் தாய் சோனியா வுக்கும் பிரச்சாரம் செய்தார் பிரியங்கா.
எனினும், எதிர்பார்த்த அளவில் ராகுலின் அரசியல் நுழைவு காங்கிரஸுக்கு பலன் தரவில்லை. தன் கோபத்தை அடிக்கடி வெளிக் காட்டி விடுவதாக ராகுல் காந்தி மீது குறை கூறப்பட்டது. எனவே, பிரியங்காவின் வருகையை காங்கிரஸார் ஆர்வமுடன் எதிர் பார்த்து காத்துக் கொண்டிருந்தனர். அவ்வப்போது பலமுறை பிரியங்கா தீவிர அரசியலில் நுழைந்து போட்டியிடப் போவதாக செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. இதை 2012-ல் ஒருமுறை பிரியங்காவே மறுத்தார். தனது பாட்டியான இந்திரா காந்தியின் முகஜாடை மற்றும் உடல்மொழியை அப்படியே கொண்டுள்ளதால், பிரியங்காவின் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. எனவே, பிரியங்காவை ஒரு துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தி அரசியல் களம் இறக்க காங்கிரஸ் சரியான நேரம் பார்த்துக்கொண்டு இருந்தது.
2014-ல் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடியை சமாளிக்க காங்கிரஸின் கடைசி ஆயுதமாக கருதப்பட்டும் பிரியங்கா களம் இறக்கப்பட வில்லை. அந்த தேர்தலில் தனக்கு சாதகமாக வீசிய அலையால் மோடி முதன்முறையாக பிரதமரானார். அப்போது முதல் பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா மீது நிலமோசடி, சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவானது.
இவற்றின் விசாரணையை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையும் கையில் எடுக்க, ராபர்ட் கைது செய்யப்படும் நிலையும் வந்தது. இதனால், கைதில் இருந்து தப்ப முன் ஜாமீன் பெற்றார் ராபர்ட். அதேசமயம், நெருங்கி விட்ட மக்களவை தேர்தலில் தன் சகோ தரரை போலவே திடீர் என கடந்த ஜனவரி 23-ம் தேதி அரசியலில் குதித்தார் பிரியங்கா. இந்த நுழைவு, காங்கிரஸை காக்கவா அல்லது தன் கணவரின் கைதை தடுக்கவா? எனும் சந்தேகம் பலருக்கு இருந்தது. ஏனெனில், பொதுச்செயலாளரான பிரியங்கா உபி கிழக்கு பொறுப்பாளரான சில நாட்களில் அவர் லக்னோ வருவதாக இருந்தது.
இதை ஒத்தி வைத்தவர், ராஜஸ் தானில் கணவர் ராபர்ட் வதேராவி நிலமோசடி வழக்கின் விசாரணக்கு ஆஜரானதால் அவருடன் சென் றிருந்தார்.
எனினும், பிரியங்காவின் அமைதியான பிரச்சாரத்தின்போது, பிரதமர் மோடி மற்றும் பாஜகவினர் மீது கடுமையான விமர்சனங்களை அவர் முன்வைத்தார். அவருக்காக உ.பி.யில் குவிந்த மக்கள் அலையால் பிரதமர் மோடியை வாரணாசியில் எதிர்க்கத் தயார் எனவும் அறிவித்தார் பிரியங்கா. அதற்கு மற்ற கட்சிகள் ஒத்துழைப்பு கிடைக்காமல் போக வாரணாசியின் போட்டி ரத்து செய்யப்பட்டது.
இரண்டு தொகுதிகளில் ராகுல் வெல்லும்போது, ராகுலின் அமேதி யில் பிரியங்கா போட்டியிடுவது என முடிவாகி இருந்தது. பிரியங்கா வின் தீவிரப் பிரச்சாரம் 2009-ல் காங்கிரஸ் உ.பி.யில் பெற்ற 21 தொகுதிகளை மீட்கும் என்ற நம்பிக் கையையும் அளித்தது. ஆனால், காங்கிரஸின் அனைத்து திட்டங் களும் பாஜகவின் மகத்தான வெற்றி யால் தவிடுபொடியாகி விட்டன. ராகுலை போல் பிரியங்காவின் அரசியல் நுழைவும் புஸ்வாணமாகி உள்ளது.
மேலும் உ.பி.யில் காங்கிரஸுக்கு கடந்த தேர்தலில் 2 தொகுதிகள் கிடைத்திருந்தன. இது தற்போது ஒன்றாகக் குறைந்து விட்டது. பிரியங் காவின் பொறுப்பில் உள்ள கிழக்கு உ.பி.யில் ராகுல் காந்திக்கு, அமேதி யில் தோல்வி கிடைத்தது. மேலும் உ.பி.யின் கிழக்கில் உள்ள மற்றொரு தொகுதியான ரேபரேலி யில், சோனியா தோல்வியில் இருந்து தப்பினார். உ.பி. தவிர பஞ்சாப், டெல்லி, இமாச்சலபிர தேசம், அசாம், ஹரியாணா மற்றும் மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங் களிலும் பிரியங்கா பிரச்சாரம் செய் திருந்தார். அம்மாநிலங்களின் மொத்தம் 14 தொகுதி பிரச்சாரங்களில் காங்கிரஸுக்கு 11-ல் தோல்வி ஏற்பட்டுள்ளது. இதை பிரியங்கா முன்கூட்டியே எதிர்பார்த்தாரோ என்னவோ அவர், ‘நான் ஒன்றும் மேஜிக் செய்து வெற்றியை தந்து விட மாட்டேன். உ.பி.யில் காங்கிரஸ் கட்சியை அடிமட்டம் முதல் பலப்படுத்துவது முக்கியம். 2022-ல் உ.பி. சட்டப்பேரவையில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும்’ எனக் கூறி இருந்தார். அதுதான் தற்போது உண்மை என்றாகி உள்ளது.
-தமிழ் இந்து, மே 25, 2019