வடக்கிலும் பெரியார் தேவை!

img

பெரியாரின் சமூக மாற்றத்திற்கான தத்துவம் வடமாநிலங்களுக்குத் தேவைப்படும் காலகட்டம் இது என, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கி.வீரமணி மே 24ந் திகதி (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “17-வது மக்களவைத் தேர்தல் முடிவுகள் நேற்று இரவு வரை அறிவிக்கப்பட்டன.

எதிர்பார்த்ததற்கு மேலாகவே கூடுதல் இடங்களைப் பிரதமர் மோடி – பாஜக தலைவர் அமித் ஷா கூட்டு வகுத்த வியூகம், அவர்களுக்கு வடக்கு, கிழக்கு, மேற்கு – இந்திய மாநிலங்களில் பெருத்த வெற்றியைத் தந்துள்ளது. பிரதமர் மோடியின் இந்த வெற்றிக்குப் பின்னே அடித்தளம் அமைத்தது ஆர்எஸ்எஸ் என்பதை எதிர்க்கட்சிகள், முற்போக்கு சக்திகள் உணரவேண்டும். நோய் நாடி நோய் முதல் நாடத் தவறக்கூடாது.

2014-ல் ஆளுங்கட்சியாகி, பிரதமர் மோடியின் பண மதிப்பிழப்பு, 10 கோடி பேருக்கு 5 ஆண்டில் வேலை – விவசாயிகள் ஆண்டு வருமானம் இரட்டிப்பாக உயருதல் – விலைவாசி குறைத்தல் போன்ற வாக்குறுதிகள் செயல்படுத்தப்படாமையை எதிர்த்துப் பிரச்சாரம் நடைபெற்றாலும், அது எதிர்பார்த்த விளைவுகளை எதிர்க்கட்சிகளுக்குச் சாதகமாக பயன் தரவில்லை.

காங்கிரஸ் மற்றும் பல மாநிலக் கட்சிகளாக யதார்த்தத்தில் இருந்த தேசியக் கட்சிகள் உள்பட வலுவான – வேர் பிடித்த – கொள்கைக் கூட்டணியையும் அமைக்கவில்லை. ஒருங்கிணைப்புப் போதிய அளவில் ஏற்படவில்லை.

பொது எதிரி பற்றிய புரிதல் இன்மை

பொது எதிரியைப் பற்றி சிந்தித்து அதற்கேற்ற வியூகம் வகுக்காமல், தங்கள் பதவிக் கனவுகளையே முன்னிலைப்படுத்தி, யார் வரக்கூடாது என்பதைப் பின்னால் தள்ளினார்கள். பல வடநாட்டுத் தலைவர்களையும், ஏன் தென் மாநிலங்களில் ஒரு சில மாநிலங்களின் தலைவர்களையும்கூட இந்தக் கனவு ஆட்கொண்டு விட்டது – தோல்வியில் முடிந்தது!

தமிழ்நாடு பெரியார் மண்தான்

சமுக நீதிக் கொடி, மதச்சார்பின்மை, மாநில உரிமை – மொழி – பண்பாட்டுப் படையெடுப்புக்கு எதிரான நிலை – இவற்றில் விழிப்போடு உள்ள மாநிலம்தான் என்பதை, தனித்தன்மை வெற்றி வாகை சூடி, உலகத்திற்கே அறிவித்துவிட்டது! இது திராவிட மண் என்பதால்தான் தமிழ்நாட்டில் இப்படி ஒரு தனிச் சிறப்பு வாய்ந்த வெற்றியை பல செய்தித்தாள்கள், ஊடகங்களின் எதிர்ப்பையும், தவறான பிரச்சாரத்தினையும் தாண்டி திமுக கூட்டணி இந்த வெற்றியைக் குவித்திருக்கிறது.

மதவாத அரசியலுக்குப் பாடம் கற்பித்த தமிழ்நாடு

“இங்கே பெரியார் இல்லை, அண்ணா இல்லை, காமராஜர் இல்லை, கருணாநிதி போன்ற அரசியல் முதிர்ச்சி அடைந்த தலைவர்கள் இல்லை. எனவே, உள்ளே ஊடுருவி விடலாம்” என்ற மதவாத பாஜகவின் முயற்சியை படுதோல்வி அடையச் செய்து, தக்க பாடம் புகட்டி விட்டனர் தமிழ்நாட்டு வாக்காளர்கள்.

அவர்களை எப்படி வாழ்த்துவது, பாராட்டுவது, நன்றி கூறுவது என்றே தெரியாத அளவுக்கு நாம் மகிழ்கிறோம். பெரியார் என்பது பிம்பம் அல்ல; தனி மனிதரல்ல – சகாப்தம், காலகட்டம், திருப்பம், என்றென்றும் வாழும் வளர் தத்துவம் என்பதை தமிழ்நாடு கலங்கரை வெளிச்சம்போல், எஞ்சிய இந்தியாவுக்கும், ஏன் உலகத்திற்கும் காட்டிவிட்டது இந்த முடிவுகள்!

பெரியார் சிலையைச் சிதைத்தவர்களுக்கும், தந்தை பெரியாரை இழிவுபடுத்திப் பேசும் நச்சு ‘நாவழகர்’களுக்கும் வட்டியும் முதலுமாகத் தண்டனை அளித்துவிட்டது தமிழ்நாடு!

வடக்கிலும் பெரியார் தேவை!

சமுக நீதி வரலாறு சொல்லிக் கொடுக்கப்படவேண்டும். இன்னும் சொல்லப்போனால், பெரியார் தம் சமூக மாற்றத்திற்கான தத்துவம் வடமாநிலங்களுக்குத் தேவைப்படும் காலகட்டம் இது. 1951-ல் முதல் அரசியல் சட்டத் திருத்தம் மூலம் இட ஒதுக்கீட்டைக் காப்பாற்றிட அன்று பெரியார் தலைமையில் எப்படி வழிகாட்டப்பட்டது போன்ற வரலாற்றுப் பாடங்கள் மீண்டும் தேவை. செய்வோம் நாம்!

உதாரணம், 10 சதவீதம் உயர் சாதியினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியோர் இட ஒதுக்கீடு என்ற அரசியல் சட்டத்திருத்த வித்தை – எவ்வாறு மற்ற இட ஒதுக்கீட்டின் தத்துவத்தின் வேரையே வெட்டிச் சாய்ப்பது என்பதை காங்கிரஸும் சரி, இடதுசாரிகளில் மார்க்சிஸ்ட்டுகளும் கூட புரிந்துகொள்ளாமல், தலையாட்டல் போன்றவை சரியானவையல்ல.

கல்வி மற்றும் மாநில உரிமைகள் பற்றி அடிப்படைத் தெளிவு தமிழ்நாட்டில் உள்ளதைப் போல் இல்லை. இனி வட இந்தியத் தலைவர்களும், இடதுசாரித் தலைவர்களும் மீள் பார்வையோடு அணுக வேண்டும்.

பாஜகவிடம் அடகுபோன அதிமுக!

தமிழ்நாட்டில் உள்ள அதிமுக ஆட்சியும், கட்சியும் பாஜகவிடம் அடகு வைக்கப்பட்ட அவலத்தினால் அவர்கள் இவ்வளவு அதிக விலையைக் கொடுக்க வேண்டியதாயிற்று. மாயையில் மிதந்தார்கள்; ‘பலம் பொருந்திய கூட்டணி எங்கள் கூட்டணி’ என்று மார்தட்டினார்கள். விளைவு பல கூட்டணிக் கட்சிகள் காணாமல் போய்விட்டன! படுதோல்வியே மிஞ்சியது! ஏற்கெனவே பலமுறை சுட்டிக்காட்டியும், மூழ்கும் கப்பல் பாஜக தமிழ்நாட்டில் – அதில் ஏறினால் உள்ளதும் போகும் – இதைப் புரிந்ததினால்தான் ஜெயலலிதாவே பாஜகவை விருந்தோடு நிறுத்தினார்!

-தமிழ் இந்து, மே 24, 2019

Tags: