பதவி விலகுவதில் ராகுல் பிடிவாதம்: சமாதானப்படுத்த தலைவர்கள் படையெடுப்பு
தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று, காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகுவதில், ராகுல் பிடிவாதமாக உள்ளார். இதையடுத்து, கட்சியின் மூத்த தலைவர்கள், அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், காங்கிரஸ், 52 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று, படு தோல்வி அடைந்தது. தேர்தல் பிரசாரத்தின் போது, ‘ரபேல்’ போர் விமானங்கள் வாங்கியதில் ஊழல் நடந்ததாக, காங்., தலைவர் ராகுல், மத்திய அரசு மீது, பரபரப்பான குற்றச்சாட்டுகளை கூறினார்.
பிரதமர் மோடி மீதும், பா.ஜ., தலைவர்கள் மீதும், பல்வேறு புகார்களை கூறினார். கடைசி நேரத்தில், தன் தங்கை பிரியங்காவை, கட்சியின் பொதுச் செயலராக்கி, உத்தர பிரதேசத்தில் பிரசாரம் செய்ய வைத்தார். ஆனாலும், தேர்தலில் காங்கிரஸ், மோசமான தோல்வியை சந்தித்தது.இதையடுத்து, பல்வேறு மாநிலங்களிலும், காங்கிரஸ் தலைவர்கள், தோல்விக்கு பொறுப்பேற்று, தங்கள்
பதவிகளை ராஜினாமா செய்து வருகின்றனர்.
ராஜினாமா
ஜார்க்கண்ட் மாநில தலைவர், அஜோய் குமார்; பஞ்சாப் மாநில தலைவர், சுனில் ஜாகர்; அசாம் மாநில தலைவர், ரிபுன் போரா; மஹாராஷ்டிர மாநில தலைவர், அசோக் சவான் ஆகியோர், தங்கள் ராஜினாமாகடிதங்களை, கட்சி மேலிடத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர்.உ.பி., ஒடிசா மாநிலங்களின், காங்., தலைவர்கள், ஏற்கனவே தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். மேலும், கர்நாடகா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில், காங்., கூட்டணி ஆட்சி கவிழும் ஆபத்தும் ஏற்பட்டுள்ளது. இதனால், ராகுலுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் நடந்த, காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில், தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று, தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக, ராகுல் அறிவித்தார். காரிய கமிட்டி, அதை நிராகரித்து விட்டது. தலைவர் பதவியில் தொடரும்படி அறிவுறுத்தியுள்ளது. ஆனாலும், ராகுல் சமாதானம் அடையவில்லை. தலைவர் பதவியை ராஜினாமா செய்வதில், அவர் உறுதியாகவும், பிடிவாதமாகவும் உள்ளார். இதனால், காங்கிரஸ் மேலிட தலைவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
வலியுறுத்தல்
அஹமது படேல், கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட தலைவர்கள், நேற்று முன்தினம் இரவே, ராகுல் வீட்டுக்கு சென்று, அவரை சமாதானப்படுத்த முயன்றனர்.
இந்நிலையில், நேற்றும் தலைவர்கள் படையெடுப்பு தொடர்ந்தது. காங்., பொதுச் செயலர், பிரியங்கா; செய்தி தொடர்பாளர், ரண்தீப் சுர்ஜேவாலா; ராஜஸ்தான் முதல்வர், அசோக் கெலாட்; துணை முதல்வர், சச்சின் பைலட் ஆகியோர் நேற்று, டில்லியில் உள்ள ராகுலின் வீட்டுக்கு சென்று, ராஜினாமா முடிவை கைவிடும்படி வலியுறுத்தினர். ஆனாலும், ராகுல் தொடர்ந்து பிடிவாதமாக உள்ளதாக, காங்., வட்டாரங்கள் தெரிவித்தன.
தெலுங்கானாவில் ஆதரவு
தெலுங்கானா மாநில காங்கிரஸ் தலைவர், உத்தம் குமார் கூறியதாவது: ராகுலின் தலைமை மீது, எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. காங்கிரஸ் தலைவர் பதவியில், அவர் தொடர வேண்டும் என்பதே, எங்கள் விருப்பம். தலைவர் பதவியை ராஜினாமா செய்வது குறித்து, அவர் முடிவு எடுத்திருந்தால், அதை திரும்ப பெற வேண்டும். இது தொடர்பாக, கட்சித் தலைமைக்கு கடிதம் எழுதியுள்ளோம். தெலுங்கானா மாநில காங்கிரஸ் தொண்டர்கள், எப்போதும் தலைமைக்கு விசுவாசமாக இருப்போம். இவ்வாறு, அவர் கூறினார்.
–தினமலர்
மே 28, 2019