பாரதிய ஜனதாக்கட்சி வென்றது எப்படி ?

கிராமத்து டீ கடை பெஞ்சுகளில் உட்கார்ந்து அரசியல் பேசுபவர்கள் கூட ஓட்டிங் மெஷின்ல என்னமோ ப்ராடு பன்னிருக்காம்பா, எலெக்‌ஷன் கமிஷனோட கூட்டணி வச்சி தான் ஜெயிச்சிருக்கான் என்றெல்லாம் பேசிக்கொள்கிறார்கள். ஆனால் மார்க்சிய கண்ணோட்டத்தில் கட்டுரை எழுதுவதாக கூறிக்கொள்பவர்களும் முற்போக்காளர்களும் வடமாநிலத்தவர்களை முட்டாள்களாகவும் தென்மாநிலத்தவர்களை அறிவாளிகளாகவும் சித்தரித்து இனவெறியூட்டும் கருத்துக்களை பரப்புகிறார்கள்.

பான்பராக் வாயன்கள் என்றும், இந்துத்துவ அரசியலுக்கு பலியாகிவிட்டார்கள் என்றும், பாலாகோட் தாக்குதலில் மயங்கிவிட்டார்கள் என்றும், இந்துத்துவ நஞ்சு அவர்களின் மனதில் வேரோடியிருக்கிறது என்றும் எழுதுகிறார்கள்.

வட இந்தியாவிலிருந்து தென்னிந்தியா தன்மை ரீதியில் வேறுபட்டது தான், குறிப்பாக தமிழகத்தின் தன்மை முற்றிலும் வேறுபட்டது என்பது உண்மை தான்.

என்ன வேறுபாடு ?

அரசியல் விழிப்புணர்விலும், கல்வியறிவு, பழக்கவழக்கம், உள்ளிட்ட பண்பாட்டு தளத்திலும் வட இந்தியா தென்னிந்தியாவை விட அதிலும் குறிப்பாக தமிழகத்தை விட 20 ஆண்டுகளுக்கு மேல் பின்தங்கியிருக்கிறது.

இது தான் அவர்களுக்கும் நமக்குமான அடிப்படை வேறுபாடு.

பின்தங்கிய சமூக அமைப்பில் வாழ்வதாலேயே அம்மக்களின் மனதில் இந்துத்துவ நஞ்சு வேறோடிப்போயிருக்கிறது என்று கூறுவதும், இவர்களால் தான் பாஜக வெற்றிபெற்றுவிட்டது என்று கூறுவதும் மார்க்சிய அரசியலா சீமான் பாணியிலான இனவெறி அரசியலா ?

வடஇந்தியாவின் சமூக நிலைமையும் கள நிலவரமும் என்னவென்றே தெரியாமல் வடமாநிலங்கள் என்றாலே இப்படித்தான் என்கிற முன்முடிவுடன் அம்மக்களை சித்தரிப்பது பச்சையான இனவெறியாகும்.

மோடிக்கு வாக்களித்தவர்கள் பாஜகவின் பாசிச அரசியலை ஏற்றுக்கொண்டவர்களும் அல்ல, பெரும்பாண்மை மக்கள் வக்களித்து மோடி வெற்றி பெறவும் இல்லை. அப்படி கருதினால் அது அறியாமை.

தேர்தல் ஆணையத்தின் ஒத்துழைப்பு, வாக்கு இயந்திரங்களில் முறைகேடு, பாஜக ஐடி செல்கள் பரப்பிய பொய் செய்திகள், போலி வாக்குறுதிகள், போலியான கவர்ச்சி திட்டங்கள் கோடிக்கணக்கான முறைகள் பகிரப்பப்பட்டிருக்கிறது. மற்றொரு பக்கம் எதிர்கட்சிகளை பல்வேறு வழிகளில் பிளவுபடுத்தியது, ஐடி ரெய்டு விட்டு மிரட்டியது, அனைத்து கட்சிகளையும் போல ஓட்டுக்கு பணம் கொடுத்தது என அனைத்து வேலைகளையும் செய்து தான் பாஜக வெற்றி பெற்றிருக்கிறது.

ஆட்சியை பிடிக்க இந்துத்துவ அரசியலே கைகொடுக்கும் என்றால் இவற்றை எல்லாம் அவர்கள் செய்திருக்க வேண்டியதில்லை. வெற்றிக்கான வேறு காரணங்களும் இருக்கின்றன அவை என்னென்ன என்பது ஆராயப்ப்பட வேண்டியவை.

உண்மையை அறிய அத்தகைய முயற்சிகள் எதையும் மேற்கொள்ளாமல் மார்க்சிய கண்ணோடம் என்கிற பெயரில் வட இந்தியர்களை குற்றவாளிகளாக்குவதற்கும் பான்பராக் வாயன்கள் என்று சீமான் தம்பிகள் மீம் போடுவதற்கும் எந்த வேறுபாடும் இல்லை. இரண்டும் முட்டாள்த்தனம், அறியாமை இனவெறி அரசியல் தான்.

-முகநூல்: மார்க்சிய படிப்பு வட்டம்

Tags: