மே 31-ம் தேதி, உலக புகையிலை தினமாக கடைப்பிடிக்கப்படுகின்றது
உலக சுகாதார அமைப்பின் (World Health Organization – WHO) உறுப்பு நாடுகள் சேர்ந்து இந்நாளை 1987-ம் ஆண்டில் சிறப்பு நாளாக அறிவித்தது.
உலகில் மனித இறப்புகளைத் தோற்றுவிக்கும் முக்கிய காரணிகளில் புகையிலை இரண்டாவது இடத்தை வகிக்கிறது.
உலக சுகாதார அமைப்பு ஒவ்வொரு ஆண்டு மே மாதம் 31ம் தேதி புகையிலை ஒழிப்பு தினமாக கடைபிடித்து, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. புகைத்தல் பாவனையைக் கட்டுகோப்பிற்குள் கொண்டு வருவதினை நோக்கமாகக் கொண்டு உலக சுகாதார ஸ்த்தாபனமானது, வருடாந்தம் ஒரு தொனிப்பொருளை முன்வைத்து மக்களைக் விழிப்புணர்வடையச் செய்வது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இம்முறை “புகையிலை மற்றும் நுரையீரல் ஆரோக்கியம்” என்பதே தொனிப்பொருளாகும்.
ஒரு சிகரெட்டில் 7000 வகையான இரசாயனப் பொருட்கள் இருக்கின்றன. இவற்றில் 69 இரசாயனப் பொருட்கள் புற்றுநோயிற்கு நேரடிக் காரணமாக அமைகின்றன.
தனிமனித பொருளாதார அபிவிருத்திக்கும், நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கும் பாரிய தடையாக புகைத்தல் பாவனை அமைகின்றது. இதனால் சுகாதார சீர்கேடு, பொருளாதார குறைவிருத்தி, தனிமனித வறுமை, குடும்ப உறவுகளின் சிதைவு என பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆளாகுகின்றனர். நாட்டின் ஏனைய அபிவிருத்திகளை மேற்கொள்ளக் கூடிய பெருந்தொகையை நாடளாவிய ரீதியிலும், சர்வதேச ரீதியிலும் புகைத்தல் பாவனையினால் ஏற்படும் பாதிப்புக்களில் இருந்து மீட்பதற்கு அரசாங்கங்கள் செலவிடவேண்டி உள்ளது.
மேலும் புகைத்தலின்போது கார்பன் மோனாக்சைடு (Carbon Monoxide) உடலில் செல்லுவதால் இதயமும் கடுமையாக பாதிக்கப்பட்டு நுரையீரலுக்கு மற்றும் கை கால்களுக்கு தேவையான ஒட்சிசன் கிடைக்காது. இதனால் நுரையீரல், இதயச் செயலிழப்பு ஏற்படலாம் மேலும் உடலில் ஊனமும் ஏற்படலாம்.
சிகரட் புகைத்து புற்று நோய்கள் மரணங்கள் ஏற்படுவதற்கு முன்னரே உதடுகள் கறுத்து கன்னங்களில் குழிவிழுந்து, கண்கள் சிவந்து கலங்கி அவலட்சணமான தோற்றத்தை அடைவதுடன் வாய்த்துர்நாற்றம், பாலியல் பலவீனம் போன்ற அசௌகரியங்களும் ஏற்படுகின்றன. அதுமட்டுமன்றி வாழ்க்கை மட்டுப்படுத்தப்பட்ட வாழ்க்கை வாழ நேரிடுவதும் கொடுமையாகும்.
சிகரட் புகைப்பவர்களில் இருவரில் ஒருவர் இறப்பதற்கு, நேரடி பிரதானமான காரணமாக அமைவது புகைத்தல் பாவனையாகும். சர்வதேச ரீதியாக வருடமொன்றிற்கு கிட்டத்தட்ட 7 மில்லியன் பேர் புகைத்தல் பாவனையினால் மரணிக்கின்றனர். இத்தொகை 2030 ஆம் ஆண்டளவில் 8 மில்லியன்களாக அதிகரிப்பதற்கு வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளன. எனவே புகை பிடித்தலை பற்றி நல்ல விழிப்புணர்வு வேண்டும். முடிந்தவரை புகை பழக்கத்தை முற்றாக நிறுத்திக் கொள்வது நல்லது.
இதில் 2ஆம் நிலை புகைத்தலினால் வருடமொன்றிற்கு கிட்டத்தட்ட 60 இலட்சம் பேர் இறக்கின்றமை குறிப்பிடத்தக்கது. சிகரட் புகைப்பவர்களில் 80 சதவீதமான பாவனையாளர்கள் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உடைய நாடுகளில் வாழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையர்கள் கஷ்டப்பட்டு உழைக்கும் பணத்தில் வருடாந்தம் 350 மில்லியன் ரூபாய் புகைத்தல் பாவனைக்கு செலவழிக்கின்றனர். சிகரட் நிறுவனங்களின் இலாபத்தின் 92 சதவீதமான பங்குகள் பிரிட்டிஷ், அமெரிக்க நாடுகளுக்கு சொந்தமானது என்பதும் குறிப்பிடத்தக்கது.
புகையிலை உற்பத்திக்கு அதிகமான இரசாயனங்கள் பாவிக்கப்படுகிறது. இதனால் மண் வளமற்று போவதுடன், அரியவகை உயிரினிங்கள் அம்மண்ணில் வாழ்வதும் குறைவடையும்.
சர்வதேச ரீதியாக வருடமொன்றிற்கு 4.3 மில்லியன் ஹெக்டேயர் நிலம் புகையிலை உற்பத்திக்குப் பயன்படுத்தப்படுவதுடன், 2 வீதம் தொடக்கம் 4 வீதத்திற்கும் இடையிலான காடழிப்புகளும் இடம்பெறுகின்றன.