அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் பதவி விலகினர்

னைத்து முஸ்லிம் அமைச்சர்களும் தங்களது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினரும் , ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

அலரி மாளிகையில் தற்போது இடம்பெற்றுவரும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டுள்ள ரவூப் ஹக்கீம் இதனை தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் , இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் என அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் தங்களது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர் என ரவூப் ஹக்கீம் மேலும் தெரிவித்தார்.

இதற்கமைய, நான்கு அமைச்சர்கள், நான்கு இராஜாங்க அமைச்சர்கள், ஒரு பிரதியமைச்சர் என ஒன்பது முஸ்லிம் அமைச்சர்கள் தமது அமைச்சுப் பதவிகளில் இருந்து விலகியுள்ளனர்.

அமைச்சர்கள் ரவூப் ஹக்கீம், ரிசாட் பதியுதீன், எம்.எச்.ஏ.ஹலீம், கபீர் ஹாசீம் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் எச்.எம்.எம். ஹரீஸ், அலிசாஹீர் மௌலானா, பைசல் காசீம், அமீர் அலி ஆகியோரே இவ்வாறு பதவி துறந்தனர்.

அமைச்சர் ரிசாட் பதியுதீன் , ஆளுநர்களான அசாத் சாலி மற்றும் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் ஆகியோரை பதவியில் இருந்து விலகுமாறு கோரி நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர் கடந்த 31ம் திகதி முதல் கண்டி ஶ்ரீ தலதா மாளிகைக்கு முன்னால் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார்.

இதன் பயனாக இன்றைய தினம் ஆளுநர்களான அசாத் சாலி மற்றும் ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் தங்களது பதவி விலகளுக்கான இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையிலேயே , அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொண்ட அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் தங்களது பதவியில் இருந்து விலகியுள்ளனர் என ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

Tags: